Language Selection

புதிய ஜனநாயகம் 2010

அனைத்துலக மகளிர் தினமான மார்ச் 8ஆம் நாளன்று, திருச்சியில் செயல்பட்டுவரும் பெண்கள் விடுதலைமுன்னணி, ""விலைவாசி உலகத்தரம்! பட்டினியே இனி நிரந்தரம்!'' எனும் தலைப்பில் திருச்சி ஜங்சன் காதிகிராப்ட் அருகில் விண்ணதிரும் முழக்கங்களோடு எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. பெண் தொழிலாளர்களின் போராட்டத்தால் உருவான மகளிர் தினத்தை, உழைக்கும் பெண்களின் அரசியல் ஆர்ப்பாட்ட நாளாக நடத்துவதில்தான் அதன் முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது என்பதையும், நமது நாட்டில் பெண்கள் பாலியல் நுகர்பொருளாகவும் உரிமைகளற்ற அடிமைகளாகவும் இருப்பதை அம்பலப்படுத்தியும், இன்றைய மறுகாலனியத் தாக்குதலுக்கு எதிராகப் பெண்கள் அணிதிரண்டு போராட வேண்டிய அவசியத்தை விளக்கியும் முன்னணியாளர்கள் சிறப்புரையாற்றினர். புரட்சிகரப் பாடல்களும், ம.க.இ.க. மையக்கலைக்குழுத் தோழர்களின் ""துயரம் பருப்பு'' எனும் நாடகமும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றன.

சென்னையில், மார்ச் 8ஆம் நாளன்று மாலை குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகில், மாவட்ட அமைப்பாளர் தோழர் உஷா தலைமையில், பெண்கள் விடுதலை முன்னணியினர் மறுகாலனியாதிக்கத்துக்கும் இந்துவெறி பாசிசத்துக்கும் எதிரான அரசியல் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். பெண்கள் விடுதலையும், மறுகாலனியாதிக்கத்துக்கும் இந்துவெறி பாசிசத்துக்கும் எதிரான போராட்டமும் பிரிக்கப்பட முடியாதவை என்பதை விளக்கியும், காவியுடைக் கயவாளி நித்யானந்தனைக் கைதுசெய்து அவனது சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான போராட்டத்துக்கு அணிதிரள அறைகூவியும் பு.ஜ.தொ.மு. மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமார் சிறப்புரையாற்றினார்.

 

விருத்தாசலத்தில், அனைத்துலக மகளிர் தினத்தில் இப்பகுதிவாழ் உழைக்கும் பெண்களைத் திரட்டி பெண்கள்விடுதலை முன்னணி அரங்கக் கூட்டத்தை நடத்தியது. தோழர் துரை.சண்முகம் சிறப்புரையாற்றிய இக்கூட்டத்தில், பீங்கான் தொழிலில் ஈடுபடும் பெண்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள்  என உழைக்கும் பெண்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

 

தருமபுரியில், மார்ச் 8ஆம் நாளன்று பெரியார் மன்றத்தில் பெண்கள் விடுதலை முன்னணியினர் அரங்கக் கூட்டத்தை நடத்தினர். தோழர் பட்டு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சேலத்தைச் சேர்ந்த தோழர் திலகவதி, பெங்களூரைச் சேர்ந்த தோழர் கலைச்செல்வி ஆகியோர் பெண்கள் மீதான கொடுமைகள் அதிகரித்து வருவதையும் அதற்கெதிராகப் பெண்கள் போராட வேண்டிய அவசியத்தை விளக்கியும் சிறப்புரையாற்றினர்.

 

மதுரையில், அனைத்துலக உழைக்கும் மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 14ஆம் தேதியன்று ம.க.இ.க பு.மா.இ.மு. ஆகிய அமைப்புகளின் சார்பில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது. இன்றைய வாழ்க்கைச் சூழலும் சமூக சூழலும் உழைக்கும் வர்க்கப் பெண்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் நோயாளிகளாக மாற்றி வருவதையும், பெண்களின் உரிமைகள் பற்றிய சட்டங்கள் வெறும் காகிதக் குப்பைகளாக இருப்பதையும், ஊடகங்கள் பெண்களை இழிவாகச் சித்தரித்துவரும் கயமைத்தனத்தையும் விளக்கி, இவற்றுக்கெதிராக உழைக்கும் பெண்கள் அமைப்பு ரீதியாக அணிதிரண்டு போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தியும் மருத்துவர் அம்பிகா, வழக்குரைஞர் வாஞ்சிநாதன், ம.க.இ.க. மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் ஆகியோர் உரையாற்றினர். புரட்சிகரப்பாடல்களும் மீனவர்கள் பழங்குடியினர் வாழ்வுரிமை பறிக்கப்படுவதை எதிர்க்கும் நாடகமும் திரளாகப் பங்கேற்ற பார்வையாளர்களிடம் போராட்ட உணர்வைத் தட்டியெழுப்பின.

— பு.ஜ.செய்தியாளர்கள்