அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென்ற பெரியாரின் கனவை நனவாக்குவதாகக் கூறி சில ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி அரசு ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. இதன் தொடர்ச்சியாக, அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டு, மாணவர்களும் சேர்க்கப்பட்டனர். இதற்கிடையில் மதுரை பட்டர்கள் எனப்படும் மீனாட்சி அம்மன் ஆலயத்தின் பார்ப்பன அர்ச்சகர்கள், இந்த அரசு உத்தரவுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் தடையுத்தரவு பெற்றனர். பார்ப்பனர்களின் நீதிமன்றத் தடையாணையை முறியடிக்க வேண்டிய கருணாநிதி அரசு, நீதிமன்ற ஆணைக்குப் பங்கம் வராமல் நடந்து கொள்கிறது. அர்ச்சகர் பள்ளியில் முதல் அணியாகப் பயிற்சி பெற்று, சைவ வைணவப் பெரியோர்களால் தீட்சை சான்றிதழும் பெற்ற 206 மாணவர்கள், பணிநியமனம் இல்லாமல் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர். இப்போது இந்தப் பள்ளியில் புதியமாணவர்கள் சேர்க்கப்படவில்லை.
இது ஏதோ 206 மாணவர்களின் வேலைவாய்ப்பு பிரச்சினை மட்டுமல்ல, இந்து சனாதன தர்மப்படி பிறப்பால் கீழானவர்கள் என்று இழிவுபடுத்தப்படும் நம் அனைவரின் மானப் பிரச்சினை. தி.மு.க. அரசின் பார்ப்பன அடிமைத்தனத்தை உணர்ந்து, இந்தப் பிரச்சினையை நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் முன்வைத்து மனித உரிமைப் பாதுகாப்பு மையம் போராடி வருகிறது. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களை அணிதிரட்டி சங்கம் அமைத்து வீதியில் இறங்கிய பிறகுதான், அவர்களுக்குரிய சான்றிதழே அளிக்கப்பட்டது. அடுத்து, இந்தப் பிரச்சினையை உச்சநீதி மன்றத்திலும் வாதாட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பார்ப்பன சதியையும் தி.மு.க. அரசின் அடிமைத்தனத்தையும் மக்களிடம் விளக்கி இவ்வமைப்பினர் தொடர் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். இதையொட்டி, கடந்த 10.3.10 அன்று மதுரையில் ஜான்சி ராணி பூங்கா அருகில் அர்ச்சக மாணவர்கள் பங்கேற்ற உண்ணாநிலைப் போராட்டத்தைம. உ.பா. மையம் நடத்தியது.
இந்தப் போராட்டத்தில், ""பார்ப்பானுடைய பிள்ளைகள் பட்டம் பெறாமலேயே, தகுதியில்லாமலேயே அர்ச்சகர்களாகப் பணியாற்றுகிறார்கள். நாங்கள் பயிற்சிப் பள்ளியில் படித்து தகுதி பெற்றும்கூட, முச்சந்தியிலே நின்று போராடிக் கொண்டிருக்கிறோம். அரசாங்கமோ, அனைத்துசாதியினரையும் அர்ச்சகராக்கிவிட்டோம் என்று தனக்குத்தானே பெருமைப்பட்டுக்கொண்டிருக்கிறது '' என்று பல மாணவர்கள் குமுறினர். பிறப்பால் தாழ்த்தப்பட்டவரான ஒரு மாணவர், சமஸ்கிருதத்திலும் தமிழிலும் மந்திரங்களை மிக இனிமையாகப் பாடியதோடு, தான் எத்தனையோ திருமணங்களையும் குடமுழுக்குகளையும் நடத்தி வைத்துள்ளதாகவும், இவற்றை கடவுள் ஏற்கும்போது, கருவறைக்குள் மட்டும் எங்களை பார்ப்பனர்கள் அனுமதிக்க மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
இப்போராட்டத்தின் நிறைவாக, ம.உ.பா.மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜு தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்து அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் திரு. வி.வி. சாமிநாதன், மதுரை வழக்குரைஞர் சங்கச் செயலாளர் திரு. ஏ.கே.இராமசாமி, குச்சனூர் ஆதீன நிர்வாகி குச்சனூர் கிழார், திராவிடர் கழகத்தின் மாநில சட்டத்துறைத் தலைவர் வழக்குரைஞர் திரு.கி.மகேந்திரன், தமிழ்நாடு வழக்குரைஞர் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.சின்னராஜா, ம.க.இ.க. தோழர்கள் கதிரவன், எழில்மாறன், வி.வி.மு. தோழர் குருசாமி மற்றும் பலர் உரையாற்றினர்.
போராட்டத்தின் இறுதியில் கோரிக்கைகள் முழங்கப்பட்டன. அதன்பின் மாலை 5மணியளவில், தில்லை நடராசர் கோயிலில் பார்ப்பன ஆதிக்கத்தை வீழ்த்தும் போராட்டத்தில் முன்னோடியாக நின்ற போராளியான சிவனடியார் ஆறுமுகசாமி இப்போராட்டத்தை முடித்து வைத்தார். அர்ச்சக மாணவர்கள், ""வான்;முகில் வழாது பெய்க மதிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க'' என்ற பெரியபுராணப் பாடல் வரிகளைப் பாடி உண்ணாநிலைப் போராட்டத்தை நிறைவு செய்தனர்.
இந் நியாயமான போராட்டத்தை ஆதரித்தும், உச்சநீதி மன்றத்தில் மதுரை மீனாட்சி அம்மன் ஆலய அர்ச்சகர்கள் பெற்றிருக்கும் தடையாணையைத் திரும்பப் பெறக் கோரியும், ஆலயத் தீண்டாமைக்கு முடிவுகட்டும் போராட்டத்துக்கு அறைகூவியும், இதே நாளில் திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்
.— பு.ஜ.செய்தியாளர்கள்