Language Selection

ரூபன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முதலில் இந்த முரண்பாடுகள் ஏன் என்னுள் எழுகிறது? என்பதைச் சொல்லி விடுகிறேன்...

ஜயா எழுதும் பதிவுகள் நடக்கும் போது சிறுவர்களாக இருந்தோம். பாடசாலையில் இச்சம்பவங்களைப் பேசிப் பேசி மகிழ்ந்தோம் . ஆனாலும் இது எம்மைப் பாதித்தது. உணர்ச்சி வசப்பட்டோம். இந்தத் 'திறில்' இளைஞர்களைத் பார்த்து விடுவதற்கு தேடித் தேடி அலைந்தோம். அவர்களைப் பார்க்கவே முடியவில்லை.

நாம் அவர்களைப் பார்த்தபோது, இந்தச் சம்பவப் பதிவுகள் அவர்களிடம் விவாதப் பொருளாகவேஇருந்தது. நாம் சந்தித்த அண்ணன்மார்கள், இது தேசியவிடுதலைப் போராட்டமே அல்ல! எனச் சொன்னார்கள். எமக்கு அப்பொழுது பெரும் குழப்பமாகவே இருந்தது. இச்சம்பவங்களின் விளைவு எந்த அரசியலில் இருந்து பிறக்கிறது என்று அவர்கள் விவரித்தார்கள். அதைப் புரிந்து கொள்வதற்கும் சில காலங்கள் சென்றது..

 

இந்தச் சம்பவங்களின் ஊடாகவும் எமக்கு ஓர் அரசியலை அவர்கள் போதித்தார்கள். அந்த அண்ணன்மார்களில் ஜயாவும் ஒருவராக இருந்தார்! இவ்வாறு அரசியலோடு கற்ற இந்த வரலாறு இன்று அரசியல் அற்று (மறைமுகமான அரசியல் தேவையாக) வெறும் சம்பவங்களாகப் பதியப்படுகிறது.

 

நாம் கற்ற அரசியலும் உருப்படியாக எதையும் செய்துவிடவில்லைத் தான்! பல்வேறு அரசியல் போக்கைப் பேசிக் கொண்டு, போராடி வந்த இந்த வரலாறு நெடுகலும் முரண்பாடுகள் கொலைகளாலேயே தீர்க்கப்பட்டுள்ளது. முரண்பாடுகள் எழுவதையோ இப்பொழுதும் நாம் விரும்பத் தயாரில்லை. முரண்பாடுகள் இருந்ததையே அழித்துவிடும் வரலாற்றுப் போக்கே எம்மிடம் இறுதியாக எஞ்சிக் காணப்பட்டது. நடந்து முடிந்த மனிதக் கொலைகளை இவர்தான் செய்தார் அவர்தான் செய்தார் என்று சொல்லி விட்டு, சும்மா கடந்து செல்லப் பார்க்கிறோம். ஈழப் போராட்டத்தின் எல்லா அரசியல் போக்கின் பக்கங்களிலும் (தனிமனிதப் படுகொலையை விமர்சித்த அமைப்புக்களிலும் கூட) இந்தக் கொலைகள் நிகழ்ந்தனவே ஏன்? இந்த முரண்களும், தற்பொழுது பதியப்படும் பதிவுகளின் புதிய முரண்பாடுகளும் தான் எனக்குள் முரண்பாடாக எழுகிறது...

 

நான் எழுதுவது வரலாறோ அல்லது வரலாற்றுக் குறிப்போ அல்ல! இவர்களிடம் கற்ற, எழுதப்பட்ட, பதியப்பட்ட வரலாற்றுக்களின் ஊடாக எழுகின்ற முராண்பாடுகளே!! (ஏனெனில் எமது வரலாறு மக்களிடம் இருந்து, மக்கள் பங்களிப்பாக எழவில்லை! )

 

இனி, ஜயாவின் பதிவுகளிலுள்ள முரண்பாட்டை எழுதுவதிலுள்ள பிரச்சினை...

 

ஜயாவின் பதிவுகளின் சம்பவங்கள் ஒழுங்கான கால அடுக்கில் எழுதப்படவில்லை. முன்னுக்குப் பின்னாக எழுதி இருப்பதாலும், ஒரு பதிவில் ஏற்படும் முரண் வேறு பதிவுகளிலும் தொற்றி நிற்பதனால் ஒரு தனிப் பதிவாக எடுத்து எனது முரணைச் சொல்ல முடியவில்லை.

 

அதனால் இதில் ஏற்படும் முரண்களை கால ஒழுங்கில் தொகுத்து அதன் பின்னால் உள்ள அரசியலையும், அன்றைய சமூக நிலவரங்களையும் அதன் விளைவான சம்பவங்களையும் அதன் முரண்களையும் சொல்லுவது தவிர்க்க முடியாததாகிறது.

 

இந்த வடிவத்திலேயே இதை எழுதுகிறேன். இதில் வாசகருக்கு மேலும் சிரமம் (ஏனெனில் எனது முதற்கட்டுரையின் வடிவம், வாசகர்கள் விளங்கிக் கொள்ள கடினமாகவே இருந்ததாகச் சொன்னார்கள்.) இருப்பின் புதிய வடிவத்தை அவர்களின் சிரமத்துக்கான காரணத்தில் இருந்து காணமுயல்கிறேன்...

 

அடுத்து ஜயாவின் பதிவின் முரணுக்குள்  செல்கிறேன்...


எனது முதலாவது கட்டுரையில்...ஆக, பிரபாகரனுக்குச் 'செட்டி' அறிமுகமாக முன்னரே, செட்டி ஐஜயர் ஆட்களுடன் தொடர்பில் இருந்தார். ஆதாரம்: ( ''எம்முடன் தங்கியிருந்த செட்டியும் இந்தியா செல்கிறார். அவ்வேளையில் செட்டி பிரபாகரனைச் சந்திக்கிறார்''. - (பதிவு: இரண்டில்)

 

ஜயாவின் இதுவரையான கருத்தின் படி...

 

துரையப்பாவின் கொலையையே 'புதிய தமிழ் புலிகளின்' முதலாவது நடவடிக்கையாகக் காட்டியுள்ளார். ( இது புலிகளால் வெளியிடப்பட்ட பழைய வரலாறுதான்!) இதற்கு முன்னர் 'புதிய தமிழ் புலிகளின்' எந்த நடவடிக்கையையும்  (அதன் பெயரில்) இவர் பதியவில்லை, ஏன்? கொலைகளையும், கொள்ளைகளையும், இப்பொழுதும் தனிமனிதனுடையதாக காட்டவே விரும்புகிறோம். இது ஓர் அமைப்பினது ( ஓர் அரசியலினதும்) செயல் என்றும், அது தோன்றியதற்கான அரசியல் சமூகப் பின்புலங்களை பகுத்தாராய நாம் விரும்பவில்லை என்பது தான் பொருள்!

 

இதனால் பிரபாகரன் இதற்கு முன்னர் இயங்கவில்லையா? என்ற கேள்வி எழுகிறது.

 

கண்ணாடி கொல்லப்பட்டது, புதிய புலிகளின் தோற்றத்தின் பின் இல்லையா?

 

இந்தக் குழுவுக்கும் தமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று சொன்னால்...

 

தனி ஒருவராகத் தேடிவந்த பிரபாகரனை வைத்துக் கொண்டு, புதிய தமிழ் புலிகளின் பெயரை, 'தமிழீழ விடுதலைப் புலிகளாக' எப்படி நீங்கள் மாற்றினீர்கள்? ஏன் அந்தத்தேவை? நீங்கள் வேறுபெயரில் இயங்கியதாக வெளிப்படுத்தி இருக்கவும் இல்லை, புதிய தமிழ் புலிகளுக்கு முன்னரே செட்டி உங்களுடன் தங்கி இருந்தார். துரையப்பாவின் கொலைக்கு பின் உங்களைச் சந்தித்த பிரபாகரன் என்ற ஒருவரின் 'பனரை' ஏன் நீங்கள் பாவித்தீர்கள்? செட்டியும், பிரபாகரனும் தான் புதிய தமிழ் புலிகளாக, 72 இல் இருந்து துரையப்பாவின் கொலை முடியும் வரை இயங்கினார்களா?

 

இந்த முரண்பாடுகளில் தொடக்கத்தில் இருந்து  வாசகர்களுக்கு பூடகத்தைத் திறந்து நான் வாசித்துக் கேட்டு, கற்று அறிந்ததை இங்கே  முன் வைக்கிறேன்.... (இதில் முரண்பாடுகளும், ஆதாரங்களும் வரவேற்கத் தக்கது)
...............................

 

1972 ஆம் ஆண்டு யூன் மாதத்தில் 'தமிழ் புதிய புலிகள் ' என்ற அமைப்பு உருவாகியது. இப்பெயரை  இராஜரட்ணம் என்பவரின் போதனையிலும், ஆலோசனையின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டதாக ஜயாவின் பதிவும் உறுதிப்படுத்தியுள்ளது.

 

இந்த இராஜரட்ணம் என்பவர் ஓர் எழுதுவினைஞராக (அரசாங்க) இருந்தவர். தமிழரசுக் கட்சியில் அமீரைத் தலைவராகக் கொண்ட 'வாலிபர் முன்னணி'யில் தீவிரமாக இயங்கியவர். இக்காலத்தில் இவரை வாலிபமுன்னணியினர் 'ஈழத்தின் சந்திரபோஸ்' என்று பட்டம் சூட்டி அழைத்தனர். அவ்வளவுக்கு இவர் தீவிர செயற்பாட்டாளராக இருந்தவர். பின்னர் இவர் சென்னையில் 75ம் ஆண்டு இயற்கை மரணமடைந்தார்.

 

இவர்போல தனிநாட்டுக் கோரிக்கையில் ஆர்வமும் தீவிரமும் கொண்ட  'திருமலை நடராஜன்' 57 ம் ஆண்டு இலங்கைப் பொலீசால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  (1957 தேசிய தினத்தை எதிர்த்தபோது) இவரே முதல் பலி!

 nadarayan-2.jpg

nadarayan04021957-1.jpg

அரசினது இப்படுகொலையின் பாதிப்பு இளைஞர்களுக்கிடையே பிரிவினைக் கோரிக்கைக்கு மேலும் உந்துதலைக் கொடுத்தது!

 

 

1962 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட இராணுவச் சதியை முடியடித்த சிறிமாவின் அரசு, 1962 - 07 -22 நள்ளிரவில் இருந்து 'அவசரகாலச் சட்டத்தை'ப் பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து பலர் தலைமறைவாகினர். இக்காலகட்டத்தில் தென்னிந்தியாவில் இயங்கிய 'நாம் தமிழர்' இயக்கத்தின் தலைவர் ஆதித்தனார், தமிழகம், இலங்கை, பர்மா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட்ட நாடுகளைக் கொண்ட  (தமிழ் இராச்சிய  கொள்ளையைக் கொண்ட) தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

 

இவ் இராணுவச் சதியைத் தொடர்ந்து, இலங்கையில் இயங்கிய இலங்கை திராவிட முன்னேற்ற கழகமும் தடைக்குள்ளானது.

 

இக்காலகட்டத்தில் தமிழரசுக் கட்சியில் இருந்த இராஜரட்ணம் போன்ற தீவிரவாத இளைஞர்களைத் தக்கவைக்க 'புலிப்படை' என்ற இரகசிய அமைப்பை (தமிழரசுக் கட்சிக்குள் இரகசியமாக) உருவாக்கினர். இக்காலத்தில் சட்டக் கல்லூரியில் உருவான 'மாணவர் மன்ற' தில் இருந்த இளைஞர்களைக் கொண்டு அமீர் சில துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டார்.

 

இவர்களைப் போல இன்னும் ஒருவரான கே.சிவஞானசுந்தரம் என்பவரும் அன்று இருந்தார். தமிழரசுக் கட்சியால் மலையகத்தில் உருவாக்கப்பட்ட 'இலங்கைத் தொழிலாளர் கழகத்துக்கு' இவரே தலைவராகவும் இருந்தார். இவர் பின்னர் இந்திய ''அமைதிப்படை'' காலத்தில், இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய இராணுவக் குழுக்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார் (ஈ.பி.ஆர்.எல். எவ் இன் 'மண்டையன் குழு'வால் -1988).

 

தனிநாட்டுக் கோரிக்கையை முதன் முதலாக முன்வைத்தவர்களில் ஒருவரான  நவரத்தினம் (எம்.பி),  தமிழரசுக் கட்சியில் இருந்து பிரிந்து 1969 களில் 'சுயாட்சி கழக'த்தை உருவாக்கினார். இவரின் பிரிவின் போது தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணியும் உடைந்தது. சுயாட்சிக் கழகத்தை ஆதரித்த இளைஞர்கள் தம்மை 'தமிழ் தாய் இயக்கம்' என அழைத்தனர்.

 

இப்பிரிவின் பின்னர் பலவீனமான வாலிபர்முன்னணியிலிருந்தும், உதிரியாக இருந்த இளைஞர்களில் பலரும் நாட்டைவிட்டு வெளியேறத்  தொடங்கினர்.  இக்காலத்தில் நடந்த தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டமும், குடியுரிமை மற்றும் குடியிருப்புப் போராட்டமும் நடந்தது. இதன் எதிர்முனையில் இருந்த தமிழரசுக் கட்சியின்,  வாலிப முன்னணியில் இருந்த தீவிரவாத போக்குக்கொண்டோரும் மற்றும் பலரும் வெளியேறினர். தமிழரசுக் கட்சியின் கடிதத்துடனும், கள்ள 'றிசல்ச் சீற்'றுடனும் இவர்கள் வெளியேறினர்....

 

தமிழரசுக் கட்சிக்கு வெயியே, எஞ்சியிருந்த ஏனைய இளைஞர் சக்தியிடம் இருந்து 'தமிழீழக் கோரிக்கைக்கான' கருக்கட்டலும் அதற்கான கோரிக்கைகளும் வெளிப்பட்டன.

 

1970இல் சிறிமாவின் கூட்டு முன்னணி ஆட்சிக்கு  வந்தது...

1970ம் ஆண்டு, ஓகஸ்ட் 16ம் நாள் தமிழ் நூல்கள் செய்தித்தாள்கள் தடை,  இலங்கை வானொலிக்கு இந்திய புதிய பாடல்கள் படங்கள் கட்டுப்பாடு, வெளிநாட்டுக் கல்விக்குத் தடை, தரப்படுத்தல், புதிய அரசியல் கொள்கை, மட்டுப்படுத்தப்பட்ட ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கை, பன்முகப்படுத்தப்பட்ட அபிவிருத்தி, புதிய காணிக் கொள்கை... போன்றவை கொண்டு வரப்பட்டது.

 

இதனால் தமிழ் நகர்ப்புற மக்கள் முதலில் பாதிக்கப்பட்டார்கள்.

 

இதில் தரப்படுத்தலின் எதிரொலி வெளிப்படையாக போராட்டமாக வெடித்தது...

 

இந்தத் தரப்படுத்தலுக்கு எதிராக சுயாதீனமாக, சத்தியசீலனின் தலைமையில் ' மாணவர்பேரவை' உருவாகி  - தமிழீழக் கோசத்துடன்- போராட்டம் வெடித்தது!

 manavarperavai.jpg

( இந்தப் பின்னணியில் தமிழ் அதிகார வர்க்கத்தின் அக்கால அரசியல் தேவைகளின் முன்னோட்டம்...)

 

 - 70 பதுகளில் இருந்து ஆறுவருடங்கள் நடந்த ஆட்சியில்.... (1970 -1976 - சுருக்கம்)

 

அரசில் இருந்த சிங்கள தொழிற்துறைத் தரகு முதாலாளித்துவ வர்க்கம் மற்றும் இதன் தெழில் தரகில் பங்கெடுத்த புதிய மற்றும் கட்சிதாவிய பழைய வணிகத்தரகர்களுக்கும்: எதிராக - சிங்கள, தமிழ் வணிகத்தரகர்கள் ஒன்று சேர்ந்தனர்.

 

ஜே.ஆர் இன் யூஎன்பியும் - மலையகத் தொண்டாவும் சேர்ந்து, மலையகத்திலும் - தென்னிலங்கையிலும் போராட்டத்தை நடத்தினர். வடகிழக்கில் தமிழ் வணிகத் தரகுகள்  தமக்குள் கூட்டுப்போட்டு ('தமிழர் கூட்டணி') வடகிழக்கில், புதிய மற்றும் கட்சிதாவிய (தமது கட்சிகளில் இருந்து பிரிந்த ) வணிகத் தரகர்களை 'துரோகிகள்' எனப் பட்டியலிட்டனர். சிறிமாவின் புதிய அரசியல் அமைப்பை தமது வர்க்கத் தேவைக்காக முன்னின்று எதிர்த்து,  இந்த மாணவர் இளைஞர்களை அணிவகுக்க முயன்றனர்.

அரசுக்கு எதிரான குட்டிபூர்சுவா மாணவ, இளைஞர்களின் போராட்டத்தை அவர்களின் தமிழீழம் என்னும் கனவை,  - இனவாதம் என்னும் கூரிய கத்தியின் முனையில் - எலுமிச்சம் பழமாகக் குத்தி , தமக்கு எதிரான வடகிழக்கு தொழிற்துறை தரகர்களை வேட்டையாடச் சொன்னார்கள்.

 

''தமிழர்களின் ஒற்றுமையைக் கெடுக்கவேண்டாம்'' என்று இளைஞர்களுக்கு இடையிலும், ''துரோகிகளை'' நோக்கியும் எச்சரித்து உசுப்பிவிட்டனர். '' தம்பிமார் படிக்க வேண்டும்'' என்று தம் காலைச் சுற்றிவர வைத்தனர். ''மார்க்சியத்தில் மனந்தோய்ந்தவன்'' என்று, இளைஞர்களுக்கிடையிலான அரசியல் முரண்பாட்டை 'துரோகமாக' ஏமாற்றினர். ''நான் இளைஞனாக இருந்த காலத்தில்'' ... என்று கூறிக் கூறியே ''அமீர் அண்ணா'' ஆகினார். இப்படியே குட்டிபூர்சுவா வர்க்க தமிழீழக் கோரிக்கையை, தமிழ் வணிக தரகுமுதலாளித்துவம் ''தளபதியாக'' கையில் எடுத்தது.

 

வணிகத்தரகுகளின் கூட்டான 'தமிழர் கூட்டணி'  இளைஞர்களின் வளர்ந்துவரும் 'விடுதலை' என்ற வேட்கையைக் கட்டுப்படுத்த முடியாமல், தம் கூட்டை 'தமிழர் விடுதலைக் கூட்டணி' என மாற்றி 'வட்டுக்கோட்டைக்குள்' இவர்களைச் சுற்றிச்சுற்றி வர வைத்தனர்.

 

76 வட்டுக்கோட்டையில் நிறைவேற்றிய தீர்மானத்தில் ஒன்று....

 

- 1977 இல் பொதுத்தேர்தல் திட்டமிட்டபடி வரவிருக்கிறது. ''இந்தமுறைத் தேர்தல் தமிழீழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பு'' -

 

77 தேர்தல் விஞ்ஞாபனம் இப்படிச் சொல்லுது...

 

'' எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்நாட்டில் தமிழ் பேசும் மக்கள் பாரம்பரியமாக வாழும் தொடர்பான பிரதேசம் முழுவதையும்( ?! ) உள்ளடக்கியதான சுதந்திர இறைமையுள்ள, மதசார்பற்ற சமதர்ம தமிழீழ அரசை நிறுவுவதற்கு தமிழ்த்தேசிய இனத்தின் கட்டளையைத்  தமிழர் கூட்டணி நாடி நிற்கிறது. ''

 

குட்டிபூர்சுவா வர்க்கம் விதைத்து முன்னெடுத்துச் சென்ற காவிய தனியரசுப் பிரச்சாரத்தை, தமிழ் வணிகத்தரகு முதலாளித்துவம் அறுவடை செய்ய நினைத்தது. நினைத்தபடி வெற்றியும் கண்டது. இந்த வணிகத்தரகின் வெற்றிக்கும், அதைத் தக்கவைப்பதுக்குமான  'சதுரங்க ஆட்டத்தின்' காய் நகர்த்தலின் அரசியல் விளைவால் பிறந்ததே - ஜயா எழுதிய சம்பவங்கள்!


தமிழீழக் கோரிக்கையை பாராளுமன்ற சமஸ்டிக் கோரிக்கையாக்கி கையகப்படுத்தியது இந்த வணிகதரகு முதலாளித்துவம்.

 

ஆனால், அன்று தமிழ் மக்களின் தேசிய (இன) பிரச்சனைக்கான: 'தமிழீழக் கோரிக்கை'   சுய பொருளாதாரத்தில் அடிவேர் கொண்டு, முழுச் சமுதாயத்தினதும் (இலங்கை முழுவதற்கும்) நாளாந்த ஜீவாதாரங்களை முழுமையாக நிறைவு செய்து நிற்கின்ற உரிமையைக் கோரும் அரசியல் கோரிக்கையாகும்!

 

மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட போது 'தமிழரசுக் கட்சிக்கு' இருந்த தீர்க்க தரிசனம், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் போது, கொட்டாவி ஆகிப்போய்விட்டது!.....

 

இளைஞர்களின் சுயாதீனமான போராட்ட உணர்வை உணர்ச்சி ஊட்டி, தமது தரகு வர்க்கத் தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்ய முனைந்தனர் எனவும், இந்த விளையாட்டின் அரசியல்  - சமூகநிலவரங்களின் உண்மைகளில் இருந்து ஜயாவின் பதிவிலுள்ள சம்பவங்களின் முரண்களை விரிவாகப் பார்ப்போம்....


தொடரும்....


 - ரூபன் -
   120410

 

ஜயாவின் பதினொரு பதிவுகளும், எனது பின்னூட்ட முரண்களும்...01

 

( பி.கு: முதல்கட்டுரையில் - 'எழுதப்படாத வரலாறு'  என்ற புத்தகத்தை... என்று வருவதில் தவறுள்ளது. இப்புத்தகத்தின் பெயர்: 'எழுதாத வரலாறு என்பதே சரி. தவறுக்கு மனம் வருந்துகிறேன். )