வீட்டுப் படலையை தட்டிய தேவை முடிந்தது
கோட்டுச்சூட்டுடன் கொழும்பே கதியாகப் போகினம்
உல்லாசவாழ்வாய் உலகை வலம்வருவர்
அரசியல் நகர்வென அறிக்கைகள் விடுவினம்
அடித்துப் பாராளுமன்ற மேசையில் தட்டியதாயும்
பிடித்த பிள்ளையளை பெரும்பாடுபட்டு
விடுவிக்கக் குரல் எழுப்பியதாயும் சொல்லுவினம்
கொழுத்த ஊதியத்துடன் வெளிநடப்பும் செய்வினம்
பேரம்பேசுவதாய் சோரம் போவினம்
பெரும்பொதியொன்றை வெல்வதாய் சொல்லி
பேரினவாதக் கதிரையே கதியாவர்
போர் குதறிய அவயவங்கள்
புண் ஆறாவலியொடு ஏ ஒன்பது இருமருங்கும்
தோள் கிடக்கும் குழந்தை தாய்ப்பாலுக்கு அழுகிறது
காடழிந்து வெளிகளாய் காக்கிகளால் நிறைகிறது
வீடிழந்து கூடயிருந்த பிள்ளைகள் கொடுசிறைக்குள்
வாடிக்கிடக்கும் வயிறெரிவு காதுகளையெட்டாது
எம்பிள்ளை உறங்குகிறது மண்மீட்க மடிந்துபோய்
மாவீரரெனச்சொல்லி- கதறியழுத இல்லம்
நெஞ்சை வதைக்கும் நினைவுகளில் எஞ்சியதை
மீள எழுப்பென இடித்துரைக்க எவனிருக்கான்
இளசுகளின் இறப்பில் கூத்தடித்தோர்
எரியுண்டதேசத்து பெருநெருப்பில் மீளவும் குளிர்காய்வர்
http://www.psminaiyam.com/?p=4389