என்னைத் தெரிந்தவர்கள் எனதருகில் வந்தனர். தமது உறவினர் பற்றி விசாரிக்கத் தொடங்கினர். பலர் தமது தாய் தந்தை சகோதரர்களையே விசாரித்தனர். சிலர் தமது காதலியைப்பற்றியும்,........ விசாரித்தனர்.

இதற்கு அடிப்படைக் காரணம் இவர்களில் பலர் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பால் உந்தப்பட்டோ, விடுதலை விரும்பியோ வரவில்லை மாறாக பலர் காதலில் தோல்வியுற்றவரும் பெற்றொருடன் கோவித்து கொண்டு இயக்கத்திற்கு வந்தவர்களும் அல்லது தன்னை தனது சமுதாயத்தில் அடையாளப்படுத்துவதற்காக வந்தவர்களுமே பலர். இவர்களிடம் குறித்த அரசியல் இல்லை. ஏன் மக்கள் பற்றிய பார்வை கூட சரியாக இருக்கவில்லை. மாறாக தாம் வந்த இடத்தில் தமது திறமைகளை காட்டவும், முகாம் பொறுப்பாளர்களுக்கு விசுவாசமாக இருக்கவுமே செய்தனர்.

 

10.30 மணியளவில் விசில் சத்தம் கேட்டது. எல்லோரும் மைதானத்தில் அணிதிரண்டோம். அங்கே ஒருவர் சத்தம் போட்டவாறு அணிவகுப்பிற்கான ஒழுங்குகளைச் செய்தார். அத்துடன் (இந்தியர்) தோழர் லெனின் அணிவகுத்து நின்றோருக்கு பயிற்சிகளை ஆரம்பித்தார். நாம் அதைப் பார்த்தபடி இருக்கும்போது, என்னுடன் வந்தவர்களில் சிலர் மனம் நொந்தவர்களாக முகத்தை முகம் பார்த்தனர். அப்படியே பலதும் பத்துமாக மெதுவாகக் கதைக்க ஆரம்பித்தோம். நீங்கள் இப்பிடிக் கதைக்க வேண்டாமென, எங்களுக்கு உதவிகள் செய்யவதற்காக அங்கே நின்ற தோழர் சொன்னார். ஏதாவது தவறாகவோ அல்லது நக்கலாகவோ கதைத்தால் தண்டனை கிடைக்கும் என்றார். எனக்கு இந்த தண்டனை என்றால் என்னவென்று விளங்கவேயில்லை. சற்று தூரத்தில் ஒரு தோழர் மைதானத்தைச் சுற்றி குத்துக்கரணம் அடித்துக் கொண்டிருந்தார். அவரைக் காட்டி, இதுதான் தண்டனை (பணிஸ்மன்ற்) என்றதும் எனக்கு பயம் பிடித்தது.

 

பின்னர் மதியம் உணவிற்கு விசில் அடிக்க எல்லோரும் வரிசையாக நின்றனர். உணவு பரிமாறப்பட்டது. சிலர் மிக விரைவாக உண்டனர். ஏனென்று அன்று எனக்குப் புரியவில்லை. அதற்கு காரணம் உணவு உண்டு கொண்டிருக்கும் வேளையில் தீடிர் என அபாய ஒலி எழுப்புவார்கள். உடனேயே உணவை வைத்துவிட்டு, தமக்கு என கொடுக்கப்பட்ட இடங்களில் போய் பதுங்கி இருத்தல் வேண்டும். அபாய ஒலி எழுப்பிய பின்னர் யாராவது தொடர்ந்து உணவு உண்டாலோ அல்லது ஓடும் போது உணவு தட்டுகளை கவணித்து விலத்தி ஒடினாலே அவர்களுக்கும் தண்டனை தான். இது பயிற்சியின் ஒரு பகுதியாக இருந்தது. எனவே தான் எல்லோரும் உணவை விரைவில் உட்கொண்டனர்.


உண்டவர்கள் தமது முகாமிற்குள் (கொட்டிலிற்குள்) சென்று உறங்க முற்பட்டனர். அவ்வேளை முன்பு வந்தவர்கள் சில புத்தகங்களை எடுத்து வாசித்தனர். இங்கு இருந்த புத்தகங்களைப் பற்றி குறிப்பிட வேண்டும் அதாவது மொஸ்கோ பதிப்பக புத்தகங்கள் தான் அதிகமாக காணப்பட்டது. அதைவிட உள்நாட்டு பத்திரிகைகளும், வேறு சில புத்தகங்களும் இருந்தன. இதில் எடுத்து படிப்பவர்கள், மொஸ்கோ பதிப்பக புத்தகங்களை எடுத்து படிப்பது கிடையாது. மாறாக உள்நாட்டு செய்தித் தாள்களையும், கதைப் புத்தகங்களையுமே வாசித்தனர். இதற்கு அடிப்படைக் காரணம், அங்கு பயிற்சியில் ஈட்டவர்களுக்கு அரசியல் வகுப்பு எடுக்கப்படாமையே. அரசியல் அற்ற சுத்த இந்திய இராணுவ முறையிலான பயிற்சியாகவே இருந்தது. இதற்கு அடிப்படைக் காரணம் இங்கு அரசியல் வகுப்பு எடுப்பதற்கு என ஒரு நபர் கூட இல்லாமையாகும்;. இங்கு பயிற்சி கொடுத்த மதன், பாண்டி என இருவரும் இந்திய இராணுவத்தினரால் உத்தரப்பிரதேசத்தில் வைத்து பயிற்சி கொடுக்கப்பட்டவர்கள் என்பதுடன், அன்றைய அனைத்து முகாம்களின் பொறுப்பாளராக இருந்தவர் பரந்தன் ராஜன். இவர்களுக்கோ அல்லது அன்று மத்திய குழுவில் இருந்தவர்களுக்கோ, அரசியல் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. (தேனீ, புதுக்கோட்டை முகாம்களில் அரசியல் கற்பிக்கப்பட்டதாக அறிந்தேன் எந்தளவு உண்மை என்பது எனக்குத் தெரியாது) நான் இங்கு குறிப்பிட்ட முகாம், பீ காம். இது 400க்கு மேற்பட்ட தோழர்களை கொண்டிருந்தது. இதில் எமக்கு ஐந்து மாதங்களுக்கு முன்வந்தவர்கள் உட்பட, ஒவ்வொரு நாளும் வரும் புதியவர்களும் இணைக்கப்பட்டனர். தளத்தில் இருந்து வந்தவர்களுக்கு அரசியல் வகுப்புக்கள் எடுத்து, அதன் பின்னர் ஆயுதப் பயிற்சியை கொடுத்திருந்தால் அரசியல் அறிவு கலந்த ஒரு ஆயுதக் குழுவை உருவாக்கி இருக்க முடியும். மாறாக தளத்தில் முதல் நாள் அடிமட்ட உறுப்பினராக சேர்ந்தவரைக்கூட, இங்கு அனுப்பி வைத்தார்கள்.


அன்றைய காலகட்டத்தில் யார் எந்த இயக்கத்துக்கு போவது என்பதைக் காட்டிலும், எந்த இயக்கத்திலாவது போய் பயிற்றி எடுத்து வரவேண்டும் என்ற ஆர்வம்தான் பலரிடம் காணப்பட்டது. இன்று ஒரு இயக்கம் அவரை ஏற்ற மறுத்தால், மறுநாள் மற்ற இயக்கம் அவரை பயிற்சிக்கு இந்தியாவிற்கு அனுப்பிவிடும். எனவே தளத்தில் விடுதலை இயக்கத்திற்கு ஆட்சேகரிப்பு என்பதிலும் பார்க்க, சும்மா போனவன் வந்தவனை எல்லாம் அனுப்பினர். எந்த அமைப்பில், அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் இருக்கின்றனர் என்று காட்ட முயன்றார்கள். இதன் விளைவே பிற்காலத்தில் எமது போராட்டம் இந்த நிலைக்கு தள்ளப்பட்டது.


அரசியல் அறிவற்ற தோழர்களுக்கு அரசியல் படிப்பிக்க வேண்டும் என்றோ அல்லது ஆயுதப்போராட்டத்தின் உன்னத மகிமையை விளங்கப்படுத்தவோ, எவரும் தயாராக இருக்கவில்லை.

 

மதியத்துக்கு பின்பாக எல்லோரையும் குளிக்க அனுமதித்தனர். எல்லோரும் சென்று குளித்தனர். மாலை 6 மணிக்கு ஒரு விசில். எல்லோரும் மீண்டும் மைதானத்தில் சாரத்துடன் அணி திரண்டனர். அங்கு ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்தவற்றை செய்து காட்டினர். அதன்பின்பு இரவு உணவு. அணைவரும் நித்திரைக்கு சென்றனர். அப்போது என்னுடன் ஒன்றாகப் படித்த நண்பர்கள் சிலர் என்னைச் சந்தித்து, தங்கள் மனந்திறந்து மெதுவாகக் கதைத்தனர். அவர்கள் ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல, எனது மண்டை வெடித்துவிடும் போல் இருந்தது. அவர்கள் என்னைப் பார்த்து, நீ எதற்கும் வாயைத் திறக்காதே என்றனர். ஏனென்று பின்பு ஆறுதலாகக் கதைக்கலாம் எனச் சொல்லி, நித்திரைக்குச் சென்றனர். அன்று நான் தூங்கவில்லை. காரணம் பயம். அடுத்தது தற்போதுதான் முதற் தடவையாக வீட்டாரைப் பிரிந்துவந்த கவலை, என்னைப் பெரிதும் வாட்ட ஆரம்பித்தது.

 

மறுநாள் காலை 4.30 மணிக்கு விசில் சத்தம் கேட்டது. என்னையும் எழுப்பினர். நானும் மற்றவர்களைப் பார்த்து, அவர்கள் என்ன செய்கின்றனரோ அதையே செய்தேன். காலைக்கடன் முடித்து தேனீர் அருந்தியதும் மைதானத்தில் அணிவகுக்கும்படி கூறினார்கள். நாமும் நின்றோம். இன்று உங்களுக்கு பயிற்சி ஆரம்பமாகிறது எனக்கூறி எம்மை மற்றவர்களின் பின்னால் வரும்படி கூறனர். நாமும் அவர்களைப் பின் தொடர்ந்தோம். சற்றுத் தூரம் சவுக்குமரக் காட்டிற்குள்ளால் சென்ற பின்னர், ஒரு திறந்தவெளி மைதானத்தை அடைந்தோம். அங்கே பயிற்றுனர் காத்திருந்தார். அவர் அந்த மைதானத்தைச் சுற்றி ஓடும்படி உத்தரவிட்டார். ஒரு சுற்று ஓடியதும் என்னால் முடியவில்லை. ஒருவாறு இரண்டாம் சுற்றும் ஓடினேன். அதன்பின்பு நான் களைத்து நிற்க, இன்று சரி நாளை ஓடவேண்டும் என பயிற்றுனர் கூறினார். அவரது தமிழ் எனக்கு சரியாக விளங்கவில்லை.

 

நான் பயிற்சி இடைவேளையின் போது எனது நண்பனைக் கேட்டேன். யார் இவர் எனக்கு இவரது கதை விளங்கவில்லையே என்றேன். இவர் தமிழ் நாட்டுக்காரர். இந்திய இராணுவத்தில் முன்பு பணிபுரிந்தவர். இவரது புனைபெயர் லெனின் என்றான். இதனை அடுத்து நாம் பயிற்சியை ஆரம்பித்தோம். இவ்வாறு ஒருசில நாட்கள் கடந்தன. அப்போது ஒரு தோழர் மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் முகாமைச் சுற்றி குத்துக்கரணம் அடித்தபடி இருந்தார். ஏனென்று எனக்கு தெரியவில்லை. உனக்குத் தெரியுமா என, ஒரு நண்பனை விசாரித்தேன். அவன் பயிற்சிக்கு வந்து முகாமை விட்டுத் தப்பிச் சென்றவன். அவனை எமது கழகத்தினர் பிடித்துவந்துள்னர். இப்படிப்பட்டவர்களுக்கு  தண்டனை இது என்றும் கூறினான். (இயக்கப் பயிற்சிக்கு என்று வந்து மனம் சலித்து, பல காரணங்களால் தப்பிச் சென்றாவர்களுக்கு இதுதான் தண்டனை. இதுவே பிற் காலத்தில் மரணதண்டனையாக மாற்ப்பட்டது) அவரின் தண்டனை முடியமுன்னரே அவர் களைத்து விழுந்துவிட்டார். சரி இவ்வாறு தண்டனை கொடுப்பவர் யாரென்றால் இயக்கத்தின் தண்டனை முகாமிற்கு பொறுப்பான மூர்த்தி (மொட்டை மூர்த்தி).

 

அப்போது இயக்கத்திற்கு மூன்றே மூன்று முகாம்கள் மட்டுமே இருந்தது. அதாவது தேனீகாம், புதுக்கோட்டைகாம், பீகாம். நான் இருந்தது பீகாம்பில். இங்குதான் தண்டனைக் கைதிகளும்; இருந்தனர், அது அங்கு வேறு ஒரு பகுதியில் இருந்ததால், நீண்ட நாட்களின் பின்புதான் எனக்கு அது பற்றித் தெரியவந்தது. அப்போது பீகாம்பில் பயிற்சி தருபவர்கள் மதன், பாண்டி (ஊத்தைப்பாண்டி), சங்கர், சாணாக்கியன், இன்னும் ஒருவர் பெயர் ஞாபகத்தில் இல்லை. மற்றது இந்தியப் பயிற்சி தருபவரான லெனின். இவர்களுடன் தண்டனை முகாமிற்கு பொறுப்பாக இருந்தவர் மெட்டை மூர்த்தி. இவருக்கு உதவியாளராக கண்ணாடிச் சீலன் (இவர் பிற்காலத்தில் அமைப்பால் படுகொலை செய்யப்பட்டார்) அத்துடன் சித்திரவதை செய்வதற்கு என்று இடியமீன், சவுதி,.... என்ற தோழர்களும் இருந்தனர்.

 

தண்டனை முகாமை எல்லோரும் ~நாலாம் மாடி| என்பார்கள். இதைப்பற்றி சற்று கவனிக்க வேண்டும். காரணம் இங்குதான் பல கொலைகள் நடந்தேறின. இயக்கத்திற்கு பயிற்சிக்காக வரும் தோழர்கள் பலர் கொன்று குவிக்கப்பட்ட இடம் இதுதான். கழகத்தின் தலைமை உறுப்பினர்களில் சொந்த விருப்பு வெறுப்பிற்கு ஏற்றாற்போல கொலைகள் நடந்தேறின. இதை நடத்தியவர்களில் முன்னணி வகித்தவர் வாமதேவனே. இவரை பொறுத்தவரையில், ஒரு போராளி என்ற சொல்லுக்கே அறுகதையற்றவர். ஏன் சாதாரண மனிதப்பண்புகளே இல்லாத ஒருவர். இங்குதான் சித்திரவதைகள் நடத்தப்படும். சித்திரவதை என்பது பலரும் சிறிலங்கா இராணுவத்தின் சித்திரவதையை நினைப்பீர்கள். ஆனால் அதைவிட பலமடங்கு வக்கிரமானது. அவற்றின் விபரம்


1. தாம் களைக்கும்வரை அடிப்பது குறிப்பாக குதிக்கால் முதுகொலும்பு


2. கண்ணுக்குள் மிளகாய் தூள் போடுவது


3. பச்சை முளகாய் ஒரு கோப்பை சாப்பிடச் செல்லது இல்லையேன்றால் மயங்கும் வரை அடி பின்னரும் சாப்பிடவே வேண்டும்.


4. நிர்வாணமாக்கி தலைகீழாக தொங்கவிட்டு தலையில் தமது காலால் உதைவது


5. கைகள் கால்கள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் உளண்றியில் (கப்பியில்) தொங்கவிடுவது


6. விரல் நிகங்களைப் பிடுங்குவது


7. கையிலோ தொடையிலோ பிளேட்டால் வெட்டி, அந்தக் காயத்தின் உள் மிளகாய் துள் போடுவது.


8. அதே காயத்தில் பின்னர் வெடிமருந்து அடைந்து, அதைக் கொழுத்தி விடுவது


இவை எனது ஞாபகத்தில் உள்ளவை. இன்னும் பல. இவ்வாறு நடப்பதற்குள் பலர் இறந்து விடுவார்கள்.


போலியாக மாக்சியத்தையும் பாட்டாளி வர்க்க நலனையும் பற்றி மக்கள் மத்தியில் கதைத்தபடி உலாவிய இவர்களின் முகம் இதுதான். தளத்தில் இருந்து எதையுமே சிந்திக்காது, பலிக்கடாக்களாக இளைஞர்களை சேர்த்து அனுப்பும் ஒருகூட்டம் இயங்கியது. இவர்களுக்கு தாம் யாரையாவது பிடித்து அனுப்பிவிட்டால் போதும் என்ற எண்ணத்தில் அனுப்பியது. ஆனால் அவர்களுக்கு நடங்கும் கதி இதுவாகத்தான் இருந்தது. பல நூற்றுக்கணக்கானோரை அனுப்பிளோம். எல்லோருக்குமா இப்படி நடந்தது என்று கோட்கலாம். எறத்தாள அனேகமானோருக்கு எதொரு விதத்தில் பாதிக்கப்பட்டவர்களே. எனது தொடரில் தொடர்ந்து ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

 

தொடரும்

3.மூன்றே மாதத்தில் பயிற்சியை முடித்துக்கொள்ளும் கனவுடன்… (புளாட்டில் நான் பகுதி - 03)