Language Selection

புதிய ஜனநாயகம் 2010

நாமெல்லோரும் இந்துக்கள் என்று கூறிக்கொண்டு இந்துவெறி பயங்கரவாத ஆட்சியை நிறுவியுள்ள மோடியின் அரசுக்கு எதிராக, இப்போது குஜராத்தின் "இந்துக்களே' போராடத் தொடங்கியுள்ளனர். இந்துவெறி பயங்கரவாத மோடியின் கட்சியைச் சேர்ந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களும் முன்னாள் பா.ஜ.க. அமைச்சர்களும், மோடி அரசுக்கு எதிராக உழைக்கும் மக்களுடன் இணைந்து போராட்டக் களத்தில் நிற்கின்றனர்.

குஜராத்தின் பவநகர் மாவட்டத்தில் உள்ள மாகுவா பகுதியில், பிரபல சோப்புக் கம்பெனியான நிர்மா நிறுவனம், சிமெண்ட் ஆலை நிறுவுவதையும் சுண்ணாம்புக் கல் தோண்டுவதற்காக விளைநிலங்களைப் பறிப்பதையும் எதிர்த்து அப்பகுதிவாழ் விவசாயிகள் கடந்த ஓராண்டு காலமாகப் போராடி வருகின்றனர்.

 

சோப்பு மட்டுமின்றி பல்கலைக்கழகம், தனியார் மின்நிலையம் என விரிவடைந்துள்ள மிகப் பெரிய ஏகபோக நிர்மா நிறுவனத்துக்கு, சிமெண்ட் ஆலை தொடங்குவதற்காக 288 ஹெக்டேர் நிலம் மற்றும் சுண்ணாம்புக் கல் சுரங்கம் தொடங்க 3000 ஹெக்டேர் நிலம் அளிக்க குஜராத் அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. மாகுவா பகுதியில் உள்ள நிலம், முப்போகம் சாகுபடியாகும் நல்ல விளைச்சல் நிலமாகும். இங்கு வெங்காயமும் தென்னையும் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன. இப்பகுதியிலுள்ள பஞ்சாலை, வெங்காயப் பதப்படுத்தும் ஆலை முதலானவற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். விவசாயம் சார்ந்த சிறுதொழில் நிறுவனங்களில் 3000க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். மக்களின் வரிப்பணத்தில் உருவான சிறிய நீர்த்தேக்கங்கள் மூலம், இப்பகுதியில் உப்புநீர் பரவாமல் தடுத்து விவசாயம் செய்யப்படுகிறது. இவை அனைத்தையும் நாசமாக்கும் வகையில் நிர்மா திட்டம் அமைந்துள்ளது. மேலும், சிமெண்ட் ஆலையால் 50,000 விவசாயிகளின் வாழ்வுரிமை பறிக்கப்படும். சுற்றுச் சூழல் நாசமாகும். அதேசமயம், நிர்மா உருவாக்கும் ஆலையால் ஏறத்தாழ 500 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கும்.

 

அரசின் கொள்கை முடிவை எதிர்த்தும், நிர்மா நிறுவனத்தின் குண்டர்களையும் போலீசையும் எதிர்த்தும் விடாப்பிடியாக விவசாயிகள் போராடியதைத் தொடர்ந்து, முன்னாள் தலைமைச் செயலரான ஷீலத் தலைமையிலான குழுவை அமைத்து, மக்களின் புகார்களைப் பரிசீலித்து அதனடிப்படையில் நடவடிக்கைஎடுக்கப் போவதாக மோடி அரசு நாடகமாடியது. அதற்கேற்ப இந்தக் குழு, பாதிக்கப்படும் மக்களையோ, அல்லது இந்தப் பகுதியையோ பார்வையிடாமலேயே இத்திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.

 

விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இத்திட்டத்தை எதிர்த்து, கடந்த டிசம்பர் 13ஆம் நாளன்று விவசாயிகள் வன்கார் எனும் கிராமத்தில் பொதுக்கூட்டம் நடத்தத் தீர்மானித்தனர். இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த இப்பகுதியின் எம்.எல்.ஏ. கனுபாய் கல்சாரியா, மூத்த காந்தியவாதியான சுனிபாய் வைத்யா ஆகியோர் போலீசாரால் தடுத்து நிறுத்திவைக்கப்பட்டனர். உள்ளூர் விவசாயத் தலைவர்களை நிர்மா நிறுவனத்தின் அடியாட்கள் தாக்கினர். கூட்டத்துக்கு வந்த விவசாயிகளை போலீசார் அடித்துவிரட்டினர்.

 

கடந்த பிப்ரவரி 20ஆம் தேதியன்று, நிர்மா நிறுவனத்தின் சிமெண்ட் ஆலைத் திட்டத்துக்கு எதிராக அமைதியாக ஊர்வலம் நடத்திய விவசாயிகள் மீதுபோலீசு தடியடித் தாக்குதல் நடத்தி விரட்டியது. பொய்வழக்கு சோடிக்கப்பட்டு முன்னணியாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அதற்கு அடுத்த நாளில் தோலியா கிராமத்துக்குச் செல்லும் வழியில் எம்.எல்.ஏ. கனுபாய் கல்சாரியாவும் அவரது மனைவி மற்றும் உறவினர்களும் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டனர். அவர்களது வாகனங்கள் நாசமாக்கப்பட்டன.

 

அரசின் ஆதரவோடு தொடர்ந்து இத்தகைய தாக்குதல்கள் நடப்பதால், இந்த விவகாரத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி பொதுக் கருத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு, இப்பகுதி விவசாயிகள் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதியன்று, அகமதாபாத்தில் காந்தி உருவாக்கிய சபர்மதி ஆசிரமத்திலிருந்து காந்திநகர் நோக்கி பெருந்திரளாக ஊர்வலம் நடத்தி, அதிகாரிகளிடம் மனு கொடுப்பதற்காகத் திரண்டனர். இந்த மனுவில் பாதிக்கப்படும் விவசாயிகள் 11,111 பேர் தமது இரத்தத்தால் கையெழுத்திட்டுள்ளனர். பெண்கள் குழந்தைகள் என்று கூடப்பாராமல், ஊர்வலம் நடத்திய விவசாயிகள் மீது மிருகத்தனமாகத் தாக்குதல் நடத்திய போலீசார், 5,500க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். மூத்த காந்தியவாதியான சுனிபாய் வைத்யா, இப்பகுதியின் பா.ஜ.க.எம்.எல்.ஏ.வான கனுபாய் கல்சாரியா, முன்னாள் பா.ஜ.க. நிதியமைச்சரான சனத்பாய் மேத்தா, சமூக சேவகி இலாபென் பதக், மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் ஷா ஆகியோர் உள்பட பல பிரமுகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

விவசாயிகள் தமது வாழ்வுரிமைக்காகத் தொடர்ந்து போராடி வருவதால், நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து உள்ளூர் பா.ஜ.க.வினரும் இந்த நியாயமான போராட்டத்தை ஆதரிக்கின்றனர். பயங்கரவாத மோடி அரசோ, இந்த வட்டாரத்தில் மக்களிடமிருந்து  அதாவது, பெரும்பான்மை இந்துக்களிடமிருந்து முற்றாகத் தனிமைப்பட்டு நிற்கிறது. தமது கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராக விவசாயிகளோடு சேர்ந்து பா.ஜ.க.வினர் போராடிய போதிலும், அக்கட்சித் தலைமை அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது. பிற பகுதியிலுள்ள பா.ஜ.க.வினரும் இப்போராட்டத்தை எதிர்க்க முன்வரவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இத்திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநலவழக்கு விசாரணைக்கு வந்தபோது, ""குஜராத்தை விற்பனை செய்வதை நிறுத்துங்கள்!'' என்று எச்சரித்த உயர்நீதி மன்ற நீதிபதி, இத்திட்டத்திற்கு இடைக்காலத்தடை விதித்துள்ளார்.

 

சட்டிஸ்கரின் தண்டேவாடா, மே.வங்கத்தின் லால்கார், மகாராஷ்டிராவின் ஜெய்தாப்பூர், ஒரிசாவின் நாராயணப்பட்னா போலவே இன்று குஜராத்தின் மாகுவா மாறியுள்ளது. போராடும் மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு அவர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது. எந்த ஓட்டுக் கட்சியானாலும் எந்த மாநிலமானாலும் இவற்றில் எந்த வேறுபாடும் இல்லை. மக்களின் வாழ்வுரிமையை விட முதலாளிகளின் சூiறாடல்தான் "வளர்ச்சி'க்கு முக்கியமானது என்பதுதான் அனைத்து ஓட்டுக் கட்சிகளின் ஒரே கொள்கையாகி விட்டது.

 

டாடாவின் நானோ கார் தொழிற்சாலை தொடங்க தாராள சலுகைகளை அள்ளிக் கொடுத்து, தொழில் "வளர்ச்சி'யில் குஜராத் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறுவதாகக் காட்டிக் கொண்ட மோடி அரசு, இப்போது தமது மாநில மக்களின் வாழ்வுரிமையைப் பறித்து, அத்தகைய "வளர்ச்சி'யை அடக்குமுறை மூலம் சாதிக்கக் கிளம்பியிருக்கிறது. இந்துத்துவ ஆட்சி என்றால் அது உள்நாட்டு  வெளிநாட்டு ஏகபோக முதலாளிகளின் சூறையாடலுக்கு விசுவாச சேவை செய்யும் பயங்கரவாத ஆட்சிதான் என்ற உண்மையையும் நாட்டு மக்களுக்குப் புரிய வைத்திருக்கிறது.·

குமார்