ஆதிக்க சாதிவெறியர்களின் மனம் குளிரும்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது, உச்ச (அ) நீதிமன்றம். சுஷ்மா திவாரி என்ற இளம் பெண்ணின் கணவர், மாமனார் உள்ளிட்ட நான்கு பேர் பார்ப்பன சாதி கௌரவத்திற்காகக் கொல்லப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, அநீதியானது மட்டுமல்ல தீண்டாமைக்கும், ஆதிக்க சாதித் திமிருக்கும் வக்காலத்து வாங்கக் கூடியது. சமத்துவத்திற்கும், பெண்ணுரிமைக்கும் எதிரானது.

 

 

உ.பி. மாநிலத்தில் கட்டுக்கோப்பான பிராமணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சுஷ்மா திவாரி, மும்பையில் தங்கிப் படித்து வந்தபொழுது, ஈழவச் சாதியைச் சேர்ந்த (கேரள மாநிலத்திலுள்ள பிற்படுத்தப்பட்ட சாதிப் பிரிவுகளுள் ஒன்று) பிரபு கிருஷ்ணன் என்ற இளைஞரைக் காதலித்தார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தின் கண்ணீர், அச்சுறுத்தல் உள்ளிட்ட அனைத்துத் தடைகளையும் மீறி, பிரபுவைத் திருமணம் செய்து கொண்டார், சுஷ்மா. சிறு வயது முதற்கொண்டே முற்போக்கான, சுதந்திரமான எண்ணங்களோடு வளர்ந்து வந்த சுஷ்மா, சாதிக் கட்டுமானத்தை மீறித் திருமணம் செய்து கொண்டதை, தனது விருப்பம், உரிமை என்பதோடு மட்டுமின்றி, அதனை நியாயமானதாகவும் இயற்கையானதாகவும் கருதினார்.

 

ஆனால், சுஷ்மாவின் குடும்பத்தினரோ, இதற்குப்பழி தீர்த்துக் கொள்ளும் சதித் திட்டத்தைத் தீட்டி வந்தனர். மே 17, 2004 அன்று, பிரபுவின் வீட்டிற்குள் திடீரெனப் புகுந்த சுஷ்மாவின் அண்ணன் திலீப் திவாரியும், அவனது இரு நண்பர்களும் சுஷ்மாவின் கணவர் பிரபு, அவரது மாமனார் கிருஷ்ணன் நோச்சில், மாமியார் இந்திரா கிருஷ்ணன், பிரபுவின் தங்கை தீபா கிருஷ்ணன், 13 வயதான பிரபுவின் உறவுக்கார சிறுவன் பிஜித்பாலன், அச்சிறுவனின் நண்பன் அபய் ராஜ் ஆகியோரைக் கொலைசெய்யும் வெறியோடு மாறிமாறிக் கத்தியால் குத்தினர். இத்தாக்குதலில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணன் நோச்சில், பிஜித் பாலன், அபய் ராஜ் ஆகிய மூவரும் இறந்து போனார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரபுவும், அவரது அம்மாவும், தங்கையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். எனினும், சிகிச்சைப் பலனளிக்காமல், தாக்குதல் நடந்த சில மணிநேரத்திற்குள்ளாகவே பிரபு இறந்து போக, மற்ற இருவரும் உயிர் பிழைத்தனர். அச்சமயத்தில் ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த சுஷ்மா, சம்பவம் நடந்த நேரத்தில் தனது உறவினரைப் பார்க்க வெளியே சென்றிருந்ததால், மரணத்தின் வாயிலிருந்து தப்பித்துக் கொண்டார்.

 

தனது பெற்றோர் தன் மீதும், தனது கணவர் மீதும் தாக்குதல் தொடுக்கக் கூடும் என சுஷ்மா, சம்பவம் நடப்பதற்கு முன்பே மும்பை போலீசிடம் புகார் அளித்திருந்தார். மும்பை போலீசு அப்புகாரை உதாசீனப்படுத்தியதோடு மட்டுமின்றி, சம்பவம் நடந்த பிறகும் கூட உரிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்கவில்லை.

 

சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த மகளிர் மற்றும் இளைஞர் அமைப்புகளும், மும்பையில் வாழும் கேரள ஈழவ மக்களும் இணைந்து போராடிய பிறகு, போலீசின் மெத்தனம் குறித்து, அப்பொழுது மகாராஷ்டிரா மாநில முதல்வராக இருந்த தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சுஷில்குமார் ஷிண்டேயிடம் நேரடியாகப் புகார் அளித்த பிறகுதான், மும்பை போலீசு முறையாக வழக்குப் பதிவுசெய்து, குற்றவாளிகளைக் கைது செய்தது.

 

இவ்வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்றம் சுஷ்மாவின் சகோதரன் திலீப் திவாரிக்கும் அவனது இரு நண்பர்களுக்கும் மரண தண்டனை அளித்தாலும், போதிய ஆதாரமில்லை என்று கூறி சுஷ்மாவின் பெற்றோர்களை விடுதலை செய்துவிட்டது. விரைவு நீதிமன்றம் அளித்த மரண தண்டனை மும்பய் உயர் நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டது.

 

இவ்வழக்கு மேல்முறையீட்டிற்காக உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட பின், அதனை விசாரித்த பார்ப்பனரான வீ.எஸ்.சிர்புர்கர், மேல்சாதியைச் சேர்ந்த தீபக் வர்மா என்ற இரு நீதிபதிகள், அச் சாதிவெறி பிடித்த கொலைகாரர்களுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனைøய, 25 ஆண்டு கால சிறை தண்டனையாகக் குறைத்துத் தீர்ப்பளித்தனர். அக்கொலைகாரர்களுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. கைதிகளுக்கு வழங்கப்படும் நன்னடத்தை சலுகையினைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், இக்கொலைகாரர்கள் அடுத்த பத்து, பதினைந்து ஆண்டுகளுக்குள் விடுதலையடைந்து விடக்கூடும். இந் நீதிபதிகள் இத்தண்டனைக் குறைப்பை ஏதோ கருணையின் அடிப்படையில் அறிவிக்கவில்லை. மாறாக, ஆதிக்கசாதிவெறியை மறைமுகமாக, நரியின் தந்திரத்தோடு நியாயப்படுத்தும் விதத்தில் இத்தண்டனைக் குறைப்பை அறிவித்திருக்கிறார்கள்.

 

""இந்த வழக்கில்..... இதுவொரு இரகசிய காதல் மற்றும் கலப்புத் திருமணம். சமூகம், இந்த உறவைத் தடுத்து நிறுத்தாத குற்றத்தை மூத்த சகோதரன் மேல்தான் சுமத்தும்.

 

""அவன் (திலீப் திவாரி), தவறானது என்றாலும், தனது சாதிய உணர்வுகளுக்குப் பலியாகிவிட்டதால், மரண தண்டனை அளிப்பது நியாயமாகப்படவில்லை. சமூகத்தைப் பிடித்தாட்டும் சாதிமத கட்டுக்கோப்பினை நியாயப்படுத்த முடியாதென்றாலும், அதுவொரு வெளிப்படையான எதார்த்தமாகவும் இருக்கிறது."" இவையெல்லாம் நீதிபதிகள் தீர்ப்பில் உதிர்த்திருக்கும் முத்துக்கள். அரியானா மாநிலத்தில் சாதிப் பஞ்சாயத்துக்களை நடத்தி சாதிக் கட்டுக்கோப்புகளைக் காப்பாற்றி வரும் நாட்டாமைகள், இனி இம் முத்துக்களை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்..

 

இத்தீர்ப்பை அளவுகோலாகக் கொண்டால், ஆதிக்கசாதிவெறியோடு கொலை பாலியல் வன்புணர்ச்சி போன்ற குற்றங்களைச் செய்யும் கிரிமினல்களுக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கவே முடியாது. ஏனென்றால், அக்குற்றவாளிகள் இனி தங்களின் மனதை ஆட்கொண்டுள்ள சாதி உணர்வை நீதிமன்றம் கணக்கில் கொள்ள வேண்டும் எனப் பச்சையாகவே கூறத் தொடங்குவார்கள்.

 

ஆந்திராவைச் சேர்ந்த இரு தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்குத் தூக்கு தண்டனையை உறுதி செய்தபொழுது, அப்சல் குரு உள்ளிட்ட முசுலீம் "பயங்கரவாதிகளுக்கு' தூக்கு தண்டனையை உறுதி செய்தபொழுது, சமூக எதார்த்தத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாத உச்ச நீதிமன்றம், திலீப் திவாரி என்ற பார்ப்பன பயங்கரவாதிக்குத் தண்டனை தரும்பொழுது மட்டும் சமூக எதார்த்தத்தைக் கணக்கில் கொள்ள வேண்டும் என உபதேசிக்கிறது.

 

கடுமையான தண்டனைகள் அளிப்பதன் மூலம் மட்டுமே, நக்சல் பயங்கரவாதம், இசுலாமியப் பயங்கரவாதம் போன்றவற்றை ஒழிக்க முடியும் எனச் சாமியாடும் உச்சநீதி மன்றம், ஆதிக்க சாதிவெறி பயங்கரவாதிகளைத் தட்டிக் கொடுத்தும், தடவிக் கொடுத்தும் தண்டிக்கவேண்டும் எனக் கூறுவது என்ன வகை நியாயம்? அவர்கள் வர்க்கம், அவர்கள் சாதி என வரும்பொழுது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சட்ட விதிகளைத் தூர ஒதுக்கி வைத்துவிடுவார்கள் என்பதற்கு இந்த வழக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு.

 

இந்தத் தண்டனை குறைப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார், சுஷ்மா திவாரி. கொல்லப்பட்டவர்கள் தனது கணவர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் என்ற சுயநல உணர்வின் அடிப்படையில் அவர் இந்தத் தண்டனை குறைப்பை எதிர்க்கவில்லை. ""ஆதிக்க சாதி உணர்வும், கீழ்சாதி வெறுப்பும் தன்னளவிலேயே குற்றமிக்கவை. சாதிக் கட்டுக்கோப்பை மீறித் திருமணம் செய்து கொள்ள முயலுபவர்களுக்கு இத்தண்டனை குறைப்பு எதிர்மறையான கருத்தையே ஏற்படுத்தக் கூடும். சமூக நலனைக் கருதியாவது, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உறுதிசெய்யப்பட வேண்டும்'' எனக் குறிப்பிடுகிறார், அவர். உச்சிக்குடுமி மன்றத்தின் மீது சம்மட்டி அடியாக விழுந்திருக்கும் வார்த்தைகள் இவை.·

குப்பன்