Language Selection

புதிய ஜனநாயகம் 2010

.""இந்த பட்ஜெட் விவசாயிகள், தொழில் முனைவோர், முதலீட்டாளர்களுக்கு உரியது'' என 2010 11ஆம் ஆண்டுக்கான மைய அரசின் வரவுசெலவு அறிக்கைபற்றி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார். இதில் ஒரு பாதி உண்மை இன்னொரு பாதியோ திரித்துக் கூறப்பட்டிருக்கிறது.

விவசாயிகள் என அவர் குறிப்பிடுவது நமக்குத் தெரிந்த குப்பன், சுப்பன் போன்ற சிறு, நடுத்தர விவசாயிகளையோ, விவசாயக் கூலித் தொழிலாளர்களையோ குறிக்கவில்லை. ஏற்றுமதியைக் குறிவைத்து விவசாயத்தில் குதித்துள்ள புதுப் பணக்கார விவசாயிகளையும்; ஒப்பந்த விவசாயத்திலும், விவசாய விளைபொருட்கள் கொள்முதலிலும் இறங்கியுள்ள. டி.சி.,ரிலையன்ஸ், பிர்லா, பெப்சி போன்ற முதலாளித்துவ நிறுவனங்களையும் தான் குறிப்பிடுகிறார்.

 

விவசாய உற்பத்தியைப் பெருக்குவதற்காக இந்த பட்ஜெட்டில் நான்கு அம்சத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும் வங்கிக் கடன் 3.75 இலட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும் என்பது அத்திட்டத்திலுள்ள கவர்ச்சிகரமான அம்சமாகும். 2000ஆம் ஆண்டு தொடங்கி 2006ஆம் ஆண்டு முடிய பொதுத்துறை வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ள விவசாயக் கடன் பற்றி நடத்தப்பட்டுள்ள ஆய்வில், ""25,000 ரூபாய்க்கும் குறைவாக வழங்கப்படும் கடன்களின் எண்ணிக்கை இந்த ஆறு ஆண்டுகளில் சரிபாதியாகக் குறைந்துவிட்டதாகவும், அதேபொழுதில், தனிப்பட்ட "விவசாயிகளுக்கு' 10 கோடி, 20 கோடி என வழங்கப்படும் கடன்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதாகவும்'' தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வறிக்கையை அளவுகோலாகக் கொண்டு பார்த்தால், இந்த 3.75 இலட்சம் கோடி ரூபாய் கடனைச் சுருட்டப் போகும் "விவசாயிகள்' யாராக இருப்பார்கள் என்பது எளிதாக விளங்கிவிடும்.

 

விவசாய விளைபொருட்கள் அழுகிப் பாழாவதைக் குறைக்க வேண்டும் என்றால், அரசே கிராமப்புறங்களில் குளிர்பதனக் கிடங்குகளைக் கட்டித் தர வேண்டும். ஆனால், குளிர்பதன கிடங்குகளைக் கட்டிக்கொள்ளக்கடன் தரப் போவதாக பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார், நிதியமைச்சர். வீடு தேடி வந்து கொடுத்தால்கூட இந்தக் கடனை சாதாரண விவசாயிகள் வாங்கிக் கொள்வார்களா? காய்கறிகளையும் பழங்களையும் விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்துவரும் ரிலையன்ஸ், கோத்ரேஜ், ஐ.டி.சி., ஹெரிடெஜ், நீல்கிரிஸ் முதலாளிகள்தான் விவசாயிகள் என்ற போர்வையில் இந்தக் கடனை அனுபவிப்பார்கள்.

 

இது மட்டுமின்றி, விவசாய விளைபொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் பொருத்தப்படும் குளிர்பதன இயந்திரங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு முழுச் சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகையால் பலனடையப் போவது அம்பானியா? அல்லது வாங்கிய கந்துவட்டிக்கடனை அடைக்க முடியாமல் தூக்குக் கயிறைத் தேடிக்கொண்டிருக்கும் கிராமத்து விவசாயியா? உணவு பதப்படுத்தும் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போவதாகவும் பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார், நிதியமைச்சர். நெல்லையும் கோதுமையையும் பயிரிடும் விவசாயி இனி, அதை மாவாக்கி, இட்லியாக்கி, ரொட்டியாக்கி விற்க வேண்டும் என நிதியமைச்சர் எதிர்பார்க்கிறாரா? அப்படியென்றால், கரும்பு விவசாயி இனி சாராயம் தான் காய்ச்ச வேண்டும். இந்த அறிவிப்பால் விவசாயிகளைவிட, உருளைக்கிழங்கு சிப்ஸ், குர்குரே போன்ற நொறுக்குத் தீனிகளைத் தயாரித்து விற்பனை செய்யும் முதலாளிகள்தான் மகிழ்ச்சிகொள்வார்கள்.

 

விவசாயிகளை மட்டுமல்ல, பிற அடித்தட்டுமக்களை வாட்டும் பிரச்சினைகள் பற்றியும் இந்த பட்ஜெட் கண்டு கொள்ளவில்லை. மாறாக, இலட்சக்கணக்கில் சம்பாதிக்கும் "மேன்மக்கள்', தமக்குப் பிடித்தமான கோக்கையும், பெப்சியையும், பர்கரையும், பிற ஆடம்பர நுகர்பொருட்களையும் வாங்க முடியாமல் திண்டாடி நின்றுவிடக்கூடாதே எனக் கரிசனம் காட்டியிருக்கிறார், பிரணாப் முகர்ஜி.

 

வருடத்திற்கு மூன்று இலட்சரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் நடுத்தர மேல்தட்டு வர்க்கத்தினர் கட்டி வரும் வருமான வரியில் சலுகைகளை அளித்து, அவர்களின் "பணத் திண்டாட்டத்தை'த் தீர்த்து வைத்திருக்கிறார், நிதியமைச்சர். இதன்படி வருடத்திற்கு 5 இலட்ச ரூபாய்வரை சம்பாதிப்பவர்களுக்கு 20,600 ரூபாய்வரை வரிச் சலுகை கிடைக்கும்; 8 இலட்சரூபாய், அதற்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு 51,500 ரூபாய் வரை வரிச் சலுகை கிடைக்கும். இப்படியாக, இந்த பட்ஜெட்டில் வருமான வரி கட்டும் கனவான்களுக்கு 26,000 கோடி ரூபாய் வரிச் சலுகை அளிக்கப்பட்டு, அந்தப் பணம் அவர்களின் கோட்டு பாக்கெட்டுகளில் திணிக்கப்பட்டுள்ளது. ""அவர்கள் இந்தப் பணத்தைக்கொண்டு தமக்குத் தேவையான பொருட்களை வாங்குவார்கள்; பங்குச்சந்தையில் முதலீடு செய்வார்கள்; அதன் மூலம் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடையும்'' எனக்கூறி, இந்தச் சலுகை நியாயப்படுத்தப்படுகிறது.

 

 மேல்தட்டு மக்களின் நுகர்விற்காக 26,000 கோடி ரூபாயை மானியமாகத் தூக்கிக் கொடுத்திருக்கும் மைய அரசு, அடித்தட்டு மக்களை விலைவாசி உயர்விலிருந்து பாதுகாக்க இந்த பட்ஜெட்டில் அளித்திருக்கும் சலுகை என்ன தெரியுமா? உணவுமானிய வெட்டு!

 

உணவுப் பொருட்களின் விலைகள் விஷம் போல ஏறுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால், குறைந்தபட்சம் பொது விநியோகத் திட்டத்தைப் பலப்படுத்தவேண்டும். அதாவது, அரிசி, கோதுமை மட்டுமின்றி, மற்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் ரேஷன்கடைகளின் மூலம் வழங்குவதோடு, அவற்றின் அளவையும் அதிகரிக்க வேண்டும். இதைச் செய்வதற்கு பட்ஜெட்டில் உணவு மானியத்தை அதிகரித்திருக்கவேண்டும். ஆனால், நிதியமைச்சரோ, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு உணவு மானியத்திற்கு 500 கோடி ரூபாய் குறைவாகத்தான் நிதி ஒதுக்கியிருக்கிறார். மேலும், தனது கையிருப்பில் உள்ள உணவுப் பொருட்களை அதிக அளவில் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்ய மறுத்திருப்பதோடு, ரேஷன் கடைகளின் மூலம் வழங்கப்படும் அரிசி, கோதுமையின் விலைகளை அதிகரிக்கவும் திட்டம் போட்டுவருகிறது, மைய அரசு.

 

மன்மோகன் சோனியா கும்பலின் வக்கிரத்திற்கு இன்னொரு உதாரணத்தையும் குறிப்பிடலாம். பெட்ரோல் டீசல் விலைகளையும், இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது விதிக்கப்படும் கலால் வரிகளையும் உயர்த்தியிருப்பதன் மூலம் ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய்க்கு மேல் மக்களிடமிருந்து பறித்துக் கொண்டுள்ளது, அக்கும்பல். வருமான வரி கட்டும் கனவான்களுக்கு 26,000 கோடி ரூபாயை மானியமாக வாரிக்கொடுக்காமல் இருந்திருந்தால், பெட்ரோல் டீசல்விலையை உயர்த்த வேண்டிய அவசியமே இருந்திருக்காது. ஆனால், மன்மோகன் சிங் கும்பலோ இந்த உயர்வின் மூலம் இரண்டு மாங்காய்களை வீழ்த்திவிட்டது. ஒருபுறம், அவர்களுக்கு மானியம் கொடுத்து அவர்களின் மனங்களைக் குளிரவைத்துள்ள மைய அரசு, அதனால் தனக்கு ஏற்படும் வருமான இழப்பை, பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கோடிக்கணக்கான மக்களின் மீது சுமத்தி ஈடுகட்டிவிட்டது. இது மட்டுமின்றி, இந்த பட்ஜெட்டில் 46,000 கோடி ரூபாய் அளவிற்கு மறைமுகவரிகளும் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

 

தனிப்பட்ட கனவான்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வருமான வரிச் சலுகை ஒருபுறமிருக்க, தரகு அதிகாரவர்க்க முதலாளிகளுக்கும், ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகளைக் கேட்டால், நாம் அதிர்ச்சியில் உறைந்தே போய்விடுவோம். இந்த பட்ஜெட்டில் முதலாளித்துவ நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் கம்பெனி வரி உள்ளிட்ட நேரடி வரிவிதிப்புகளில் அளிக்கப்பட்டிருக்கும் சலுகைகள் மூலம் 80,000 கோடி ரூபாய் முதலாளிகளுக்கு மானியமாக வாரிக் கொடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட சலுகையைவிட 14,000 கோடி ரூபாய் அதிகம்; அதற்கு முந்தைய ஆண்டு அளிக்கப்பட்ட சலுகையைவிட 18,000 கோடி ரூபாய் அதிகம். அதாவது, கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் தரகு அதிகார வர்க்கமுதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள நேரடி வரிச் சலுகை மட்டும் 2,08,000 கோடி ரூபாய்.

 

மேலும், இந்த பட்ஜெட்டில் கலால் வரி, சுங்க வரிவிதிப்புகளில் அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் மூலம் முதலாளித்துவ நிறுவனங்களுக்குக் கிடைக்கக்கூடிய கூடுதல் இலாபம் மட்டும் 4,19,786 கோடி ரூபாய். இதோடு முதலாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள நேரடிவரிச் சலுகையையும் சேர்த்துக் கணக்கிட்டால், இந்த ஆண்டு பட்ஜெட்டின் மூலம் மட்டும் முதலாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள மானியம் 4,99,786 கோடி ரூபாய். நாளொன்றுக்கு வெறும் 20 ரூபாய் கூலியைப் பெற்று வாழ்க்கையை ஓட்டி வரும் கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டில், தரகு அதிகார வர்க்க முதலாளிகளுக்கும் அவர்களது எஜமானர்களான பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஒவ்வொரு நாளும் 1,369 கோடி ரூபாய் மானியமாக வாரிக் கொடுக்கப்படுகிறது. இதைவிட அருவெறுக்கத்தக்க வக்கிரம் வேறெதுவும் இருக்க முடியுமா?

 

அதேசமயம், கல்வி, மருத்துவ வசதி, போக்குவரத்து போன்ற பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் இந்தளவிற்குத் தாராளமாக நடந்துகொள்ளவில்லை, பிரணாப் முகர்ஜி. இத்திட்டங்களுக்குக் கூடுதலாக நிதி ஏன் ஒதுக்கவில்லை எனக்கேட்டால், பற்றாக்குறை பெருத்துவிடும் என பொருளாதாரநிபுணர்களும், முதலாளித்துவப் பத்திரிகைகளும் கூப்பாடு போடுகின்றன. தரகு அதிகார வர்க்க முதலாளிகளுக்கும், மேல்தட்டு வர்க்கத்துக்கும் 5 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மானியமாக வழங்குவதைக்கண்டு கொள்ள மறுக்கும் இக்கும்பல், உணவிற்கும், பெட்ரோலுக்கும், மண்ணெண்ணெய்க்கும் வழங்கும் "மானியத்தை' நிறுத்தச் சொல்லுகிறது. இந்த ஓரவஞ்சனையைவிட வேறென்ன வக்கிரம் இருந்துவிடமுடியும்?

 

இந்தப் பணச் சலுகைகள் ஒருபுறமிருக்க, 40,000கோடி ரூபாய் பெறுமான பொதுத்துறை பங்குகளைத் தனியாருக்கு விற்பதற்கும், நிதி நிறுவனங்கள் என்ற பெயரில் பிளேடு கம்பெனிகளை நடத்தி வரும் முதலாளிகள் வர்த்தக வங்கிகளைத் திறந்துகொள்ளவும் பட்ஜெட்டில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

பட்ஜெட் நெருங்கிவிட்டாலே, அது ஏதோ நாட்டின் தலையெழுத்தையே மாற்றிவிடும் மந்திரக்கோல் போல, அது பற்றி வீணான பரபரப்பையும் கவர்ச்சியையும் முதலாளித்துவ ஊடகங்களும் நிபுணர்களும் வலிந்து உருவாக்கி வருகிறார்கள். போலி கம்யூனிஸ்டுகளும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்லர்.

 

நாட்டின் வளங்களையும், வருமானத்தையும் முதலாளித்துவக் கும்பலுக்கு மடை மாற்றிவிடும் சட்டபூர்வ ஏற்பாடுதான் பட்ஜெட். தனியார்மயம் தாராளமயம் திணிக்கப்பட்ட பிறகு, கடந்த 19ஆண்டுகளில் போடப்பட்டுள்ள பட்ஜெட்டுகளை ஒரு புரட்டு புரட்டினாலே இந்த உண்மை பச்சையாகத் தெரியும். சமூக நலத் திட்டங்களுக்குக் கூடுதலாத நிதி ஒதுக்குவதால் நரி பரியாகி விடாது. அப்படிபட்ட கவர்ச்சிகரமான பட்ஜெட்டை பிரணாப் முகர்ஜி ஏன் தயாரிக்கவில்லை என்பதுதான் போலி கம்யூனிஸ்டுகளின் அங்கலாய்ப்பு!·