Language Selection

புதிய ஜனநாயகம் 2010

போபால் யூனியன் கார்பைடு ஆலை ""விபத்தை'' இந்திய மக்களும், உக்ரைனின் செர்னோபில் அணுஉலை விபத்தை உலக மக்களும் மறந்துவிடக் கூடாதவை. ஒவ்வொன்றும் ஜந்தாயிரம் மக்களைக் கொன்றதோடு, பல ஆயிரம் பேரை ஊனமுற்றோராக்கி, பிறக்கும் குழந்தைகளையும் தலைமுறை தலைமுறையாக ஊனமுறச் செய்து விட்டன. செர்னோபில் விபத்துக்கு அப்போது அங்கு இல்லாத கம்யூனிச அரசைக் காரணமாக்கிய அமெரிக்க ஏகாதிபத்திய ஏகபோகங்கள், போபால் பேரழிவுக்கு நட்ட ஈடும் கிரிமினல் குற்றத்துக்குத் தண்டனையும் இல்லாமல், பாசிச காங்கிரசு இராஜீவ் கும்பலின் உடந்தையோடு நழுவிக்கொண்டன. இதிலிருந்து பாடங்கற்றுக் கொண்டு இந்த நாட்டு மக்களின் உயிருக்கும் உடமைக்கும் உத்திரவாதம் செய்யும் நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதில், முழுக்க முழுக்க இலாபவெறியோடு அலையும் அமெரிக்க அணுசக்தி கம்பெனிகளுக்கு ஊழியஞ் செய்யும் வகையில் இந்திய அரசு செயல்படுகிறது.

ரஷ்யா, பிரான்சு போன்ற நாடுகளிடமிருந்து கடும் நிபந்தனைகள் இல்லாமல், ஒப்பீடுரீதியில் குறைந்த விலையில் அணுஉலைகளும் அணுசக்தி கச்சாப்பொருட்களும் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றபோதும் கடும் நிபந்தனைகளோடு, கூடுதலான விலையும் கொடுத்து அவைகளை அமெரிக்காவிடமிருந்து வாங்குவதற்குப் பேரம் பேசி முடித்துள்ளது, சோனியா மன்மோகன் கும்பல். தீவிர எதிர்ப்பிருந்தும் ஆட்சிக்கே அச்சுறுத்தலாக இருந்தும் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவது என்ற பிடிவாதத்தோடு முதல் தவணையாக 60,000 கோடி ரூபாய்க்கு அணுஉலைகளை அமெரிக்க ஏகாதிபத்திய ஏகபோகங்களிடமிருந்து வாங்கவுள்ளது. அதற்கு முன்பாக, அணுஉலை விபத்துக்கான இழப்பீடு குறித்த துரோகத்தனமான, நயவஞ்சகத்தனமான சட்டம் ஒன்றை நிறைவேற்றி, தமக்கு உத்திரவாதமளிக்குமாறு அமெரிக்க கம்பெனிகளும் அரசை நிர்பந்திக்கின்றன.

 

அமெரிக்க கம்பெனிகளிடமிருந்து அணுஉலைகளை வாங்கி இயக்கும் இந்திய அரசும் தனியார் தரகு முதலாளிகளும்தான் அந்த அணுஉலை விபத்துக்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும். அவர்களும் கூட விபத்தில் ஏற்படும் பாதிப்பு என்னவாக இருந்தாலும் அதிகபட்சம் போனால் 500 கோடி ரூபாய்க்குத்தான் இழப்பீடு தர முடியும். பாரிய பாதிப்பாக இருந்தால், மேலும் ஒரு 1500கோடி ரூபாய் இந்திய அரசு நட்டஈடு கொடுக்கும். சர்வதேச அணுசக்தி ஆணையத்துடன் ஒப்பந்தமிடுவதால் மேலும் ஒரு 300 கோடி ரூபாய், ஆக மொத்தம் 2,300 கோடி ரூபாய் தான் கோர முடியும். இச்சட்டத்தின் மிக முக்கியமான கூறு, வாங்கப்படும் அணு உலைகளின் தரம், பாதுகாப்பு, உத்திரவாதம் ஆகியவற்றுக்கு அதை வடிவமைப்பவர்களும் விற்பவர்களும் பொறுப்பேற்கமாட்டார்கள். அதனால் பாதிக்கப்படுபவர்கள் நேரடியாக அமெரிக்க நீதிமன்றங்களுக்குப் போக முடியாது. இங்குள்ள இயக்குநர்கள் அமெரிக்கக் கம்பெனிகளுடன் பேரம்பேசி பெற்றுத் தரும் நட்டஈட்டைப் பெற்றுக் கொண்டு வாய் மூடிக் கொள்ளவேண்டும்.

 

அமெரிக்கர்கள் அணுசக்தி அறிவியலில் கரை கண்டவர்கள்; விபத்தெல்லாம் நடக்காது என்று அக்கிரகாரத்து ஆசாமிகள் கூறுகிறார்கள். ஆனால், உலகில் இதுவரை நடந்த மொத்த அணுஉலை விபத்துக்களில் 71 சதவீதமானவை அமெரிக்காவில்தான் நடந்தன. ஏற்கெனவே அமெரிக்கா உட்பட மேலை நாடுகளில் இருந்து நச்சு இரசாயனங்களும், அறுவைச் சிகிச்சையில் வெட்டியெறியப்பட்ட உறுப்புகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகளும், மின்னணு அணுக்கழிவுகளும் இந்த நாட்டில் இரகசியமாகக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது, பல ஆண்டுகளாக இயக்கப்படாமல் துருப்பிடித்துப் போன அணுஉலைகளை விலைக்கு வாங்கி வந்து இங்கே கொட்டப் போகிறது, மன்மோகன் சோனியா கும்பல். அதனால் ஏற்படும் சாவுக்கும் இழப்பீடு கோர முடியாதவாறு, ஒரு துரோகத்தனமான சட்டம் வேறு கொண்டு வரப்படுகிறது.