Language Selection

செங்கொடியின் சிறகுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

குரானை, அது இறை வேதம்தான் என மெய்ப்பிக்கும் மற்றொரு திட ஆதாரமாக இஸ்லாமியர்களும் மதவாதிகளும், பிர் அவ்னின் சடலத்தைப்போலவே ஆயுதமாக கையாளும் மற்றொன்றுதான் நூஹின் கப்பல்.

 

 

நூஹ் என்பவர் மக்களை திருத்துவதற்காக இறைவனால் நியமிக்கப்பட்ட தூதர்களில் ஒருவர். இவரின் போதனைகளை மக்கள் ஏற்க மறுக்கவே அவர்களை அளித்துவிடுமாறு இறைவனை வேண்டுகிறார், இறைவனும் கருணை உள்ளங்கொண்டு நூஹையும் அவரின் சீடர்களையும் ஒரு கப்பலைக்கட்டி அதில் உலகின் விலங்குவகைகளை சதை சதையாகவும் (ஜோடி ஜோடியாகவும்) நம்பிக்கை கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளுமாறு பணிக்க அதன் பின் வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் நீர் பெருக்கெடுக்க உலகம் மூழ்கியது. நூஹுவையும் அவரது இறைவனையும் நம்பியவர்கள் காப்பாற்றப்பட்டனர், ஏனைய அனைவரும் நீரில் அழிந்தனர். பின்னர் அந்தக்கப்பல் ஜூதி எனும் மலையின் மீது தங்குகிறது. பின்னர் அதிலிருந்து வெளிவந்து தான் மக்கள் உலகம் முழுவதும் பரவினர். இது தான் குரானில் சொல்லப்பட்டிருக்கும் நூஹின் கப்பல் குறித்த கதை. இந்த கதையில் வரும் நூஹின் கப்பல் துருக்கியின் கிழக்குப் பகுதியிலுள்ள அராராத் என்னும் மலையின் மீதி பரவியிருக்கும் பனிப்படிவங்களுக்கிடையே புதைந்து கிடப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துச்சொல்ல குரான் இறைவேதம் தான் என்பது மற்றுமொருமுறை மெய்ப்பிக்கப்பட்டிருப்பதாக கூறிக்கொள்வதற்கு மதவாதிகளுக்கு ஏதுவாகியது.

இது குறித்த குரான் வசனங்கள் “நாம் அவரையும் கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம், மேலும் அதை உலக மக்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்” குரான் 29:15. இதை இன்னும் விரிவாக 11:44; 54:10-17 வசனங்களும் குறிப்பிடுகின்றன. இங்கு உலக மக்களுக்கு அத்தாட்சியாகவும் ஆக்கினோம் எனும் சொற்களில் தான் இதன் முக்கியத்துவமே தங்கியிருக்கிறது. அதாவது 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முகம்மதுவுக்கு பின்னர் இப்படி ஒரு கப்பல் கண்டுபிடிக்கப்படும் என்பது எப்படி தெரியும்? பின்னர் நடக்கப்போவதை முன்னமே அறிந்த இறைவனால் தானே பின்னர் வெளிப்படுத்தப்படும் என்பதை அறிந்து அத்தாட்சியாய் ஆக்கினோம் என பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறமுடியும் என வியக்கிறார்கள். ஆனால் இந்தக்கதை குரானில் மட்டும் இடம்பெற்ற ஒன்றல்ல. நூஹ் என்பவர் மூசாவிற்கும் காலத்தால் முற்பட்டவர் எனவே யூதர்களின் தோராவிலும், கிருஸ்தவர்களின் பைபிளிலும் கூறப்பட்டிருக்கும் கதைதான். அந்தக்கப்பல் பின்னர் கண்டுபிடிக்கப்படும் என்பது அந்த மக்களின் நம்பிக்கை அதைத்தான் முகம்மதுவும் தன்னுடைய குரானில் வசனமாக்கியிருக்கிறார்.

இது ஆபிரஹாமிய மதங்களான யூத, கிருஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் மட்டும் கூறப்படும் கதையல்ல. சுமேரிய மரபுப்படி சுயூசுத்ரா எனும் மன்னன் என்கி எனும் கடவுளால் இது போன்ற ஊழிப் பெருவெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்படுகிறான். பாபிலோனிய மரபுகளில் இது கில்காமோஸ் ஐ உட்னபிசிதம் எனும் கடவுள் இதுபோன்ற ஊழிப் பெருவெள்ளத்திலிருந்து காப்பாற்றுகிறார். இந்துப்புராணங்களில் மன்னன் மனுவை மச்சாவதாரம் பெருவெள்ளத்திலிருந்து காப்பாற்றுவதாக மச்சபுராணம் குறிப்பிடுகிறது. உலகம் முழுவதிலும் பண்டைய புராணங்கள் அனைத்திலும் இது போன்ற ஊழிப் பெருவெள்ளக் காட்சிகளும் கடவுளால் காப்பாற்றப்படுதலும் எதோ ஒரு வகையில் இருக்கின்றன. ஆனால் கடவுளோடும் மதங்களோடும் தொடர்புபடுத்தப்படாத ஊழிப்பெருவெள்ளக் காட்சிகள் தமிழ் இலக்கியங்களில் கிடைக்கின்றன. தமிழர்களின் தலை நிலம் அடுத்தடுத்த கடல்கோளால் அளிக்கப்பட்ட விதம் குறித்து தமிழ் இலக்கியங்கள் விரிவாகவே விளக்குகின்றன. கபாடபுரம், மதுரை, துவாரை என்று அழிந்து போன நகரங்களும் மக்களின் நகர்வும் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இது மட்டுமன்றி கடவுளோடு தொடர்புகொண்ட காட்சிகளெல்லாம் காப்பாற்றப்பட்டவர்களின் கோணத்திலிருந்து சொல்லப்பட்டிருக்க, தமிழ் இலக்கியங்களில் அழிந்துபோன மக்களின் கோணத்திலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடி என்று தமிழில் ஒரு சொலவடை நீண்ட நெடுங்காலமாக வழக்கில் இருக்கிறது. இதற்கு புறப்பொருள் வெண்பாமாலையில்  ஐயனாரிதனார் எனும் புலவர் அளிக்கும் விளக்கம், கடல்கோளிலிருந்து தப்பிப் பிழைக்க மக்கள் மலைகளில் ஏறுகின்றனர். மலை உச்சிக்கு சென்றவர்களைதவிர ஏனையவர்கள் அழிந்துவிட வெள்ளம் வடிந்தபின் தரை தெரியாமல் அதாவது மண் தெரியாமல் மலைகளின் பாறைகளில் தப்பிப் பிழைத்த மக்களிலிருந்து தோன்றியது தான் தமிழ்க்குடி என்பது. தமிழில் பெருங்கப்பல்களை குறிப்பிட நாவாய் என்ற சொல் ஆளப்படுகிறது. இந்த நாவாய் எனும் சொல்தான் கப்பலோடு தொடர்புடைய கதை நாயகனுக்கான பெயராய் நோவா என்று மருவியது. அதுவே பின்னர் நூஹ் என்று திரிந்திருக்க கூடுமோ

இந்த நூஹ் 950 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்திருந்ததாக குரான் குறிப்பிடுகிறது. இவ்வளவு காலம் வாழும் அளவுக்கு மனிதன் இருந்தானா? மனிதனின் செல் அமைப்புகள் எலும்புகளின் ஆர்கானிக் பொருட்கள் இவ்வளவு காலம் தாங்கி நிற்கும் அளவுக்கு திறனுடன் மனிதனிடம் இருந்ததா? மனிதனின் வாழ்நாள் இப்போது இருப்பது தான் அதிகம், தோராயமாக எழாயிரம் ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த மக்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழும் அளவிற்கு வலுவுடன் இருந்தார்கள் என்பதை எந்த அடிப்படையில் புரிந்து கொள்வது, புராணக்குப்பைகள் என்பதல்லாது.


நூஹ்வின் கப்பலுக்கு திரும்புவோம், 1959ல் லிஹான் துரிப்பினார் எனும் ராணுவ அதிகாரி ராணுவ நில அளவை குறித்த பணியில் ஈடுபட்டிருந்த போது விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட நிலைப்படம் ஒன்றிலிருந்து அராராத் மலையின் ஒருபகுதியில் கப்பல் போன்ற வடிவமுள்ள ஒன்று தெரிவதை கண்டுபிடித்தார். அதிலிருந்து அந்த பகுதி மிகவும் புகழ்பெற்ற இடமாகியது. நோவாவின் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி பரவியது.(ஆம் நூஹ்வின் கப்பலாக அல்ல நோவாவின் கப்பலாகவே கண்டுபிடிக்கப்பட்டது) இன்றும் அந்தப்பகுதி துரிப்பினாரின் பெயராலேயே அழைக்கப்பட்டுவருகிறது. 1960ல் ஜார்ஜ் வன்டேமன், டான் லாவரிட்ஜ் எனும் இரு அறிவியலாளர்கள் ராணுவ அனுமதியுடன் அந்த இடத்தை ஆராய்ந்தனர். கப்பல் வடிவிலான அந்த இடத்தை தோண்டியும், டைனமேட்கள் கொண்டு வெடித்தும் பார்த்துவிட்டு, அந்த இடத்தின் வடிவம் கப்பல் போல இருக்கிறதேயன்றி கப்பல் ஒன்றுமில்லை என்று அறிவித்தனர். பின்னர் எண்பதுகளின் தொடக்கத்தில் ரான் யாட் என்பவரும் டேவிட் ஃபசோல்டு என்பவரும் இணைந்து துரிப்பினார் பகுதியில் பல சோதனைகளை மேற்கொண்டு நோவாவின் கப்பலை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்ததோடு “இழந்த நோவாவின் கப்பல்” எனும் நூலையும் எழுதினர். இது தான் இறைவனின் அத்தாட்சியாக கூறப்படும் நூஹ்வின் அல்லது நோவாவின் கப்பல் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு. ஆனால் கப்பலை கண்டு பிடித்தவர்களில் ஒருவரான  டேவிட் ஃபசோல்டு பின்னர் அதில் தமக்கு ஐயமிருப்பதாக கூறி மிண்டும் ஆய்வுகளை தொடர்ந்தார். இறுதியில் அது நோவாவின் கப்பலல்ல என்று கூறி அதை நோவாவின் கப்பல் என்ற பெயரில் நூலாகவும் வெளியிட்டார்.

அந்த இடத்தில் நோவாவின் கப்பல் புதைந்து கிடக்கிறது என்பதற்கு காட்டபப்படும் ஆதாரங்கள் என்ன? கப்பல் வடிவமுள்ள அந்த இடத்தின் நீளம் பைபிளில் குறிப்பிடும் நீளத்தோடு ஒத்திருக்கிறது என்பதும், கப்பலில் பயன்படுத்தப்பட்ட நங்கூரம் போன்ற கல் கண்டெடுக்கப்பட்டதும் தான். இந்த இரண்டும் தவறு என்று நிரூபித்துவிட்டனர் இருந்தாலும் நோவாவின் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பரவிய வதந்தி மட்டும் இன்னும் உயிரோடு இருக்கிறது. அந்த கப்பல் வடிவின் அகலம் 138 அடியாக இருக்கிறது. கடல் மிதவை அளவீடுகளின் படி அந்தக்கப்பல் சீராக மிதந்திருக்கவேண்டுமென்றால் அதன் நீளத்துடன் ஒப்பிடும் போது 86 அடியாக இருந்திருக்கவேண்டும். அதாவது நீளத்தோடு ஒப்பிடும் போது அதன் அகலம் சற்றேறக்குறைய ஒருமடங்கு அதிகமாக இருக்கிறது. இந்த அளவீடுகளின் படி ஒரு கப்பல் பல நாட்கள் சீறாக மிதந்திருக்க முடியாது என்கிறார் ஜான் டி மோரிஸ். அராராத் மலை ஒரு எரிமலையாகும், கடைசியாக அது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கடைசியாக வெடித்திருக்க வேண்டும் என்கிறார்கள், அப்படி வெடித்து வெளிவந்த லாவா குளம்பு ஒரு கப்பல் வடிவில் படிந்திருக்கிறது என்பதை தவிர அதில் ஒன்றுமில்லை.

அடுத்த ஆதாரமான நங்கூர கற்பலகை என்பதும் திட்டமிட்டு திணிக்கப்பட்டது தான். கப்பல் வடிவிலான அந்தப்பகுதியிலிருந்து 14 மைல் தூரத்தில் தான் நங்கூர கற்பலகை கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வலவு தூரம் கப்பலைவிட்டு நங்கூரம் நகர்ந்தது எப்படி என்பதற்கு ஒரு விளக்கமும் இல்லை. பழங்காலத்தில் அந்தப்பகுதியில் வாழ்ந்த மக்களால் நடப்பட்ட ஒரு நடுகல்தான் அது என்பதும் கயிறு கட்டும் ஓட்டை என்று குறிப்பிடப்பட்டது விளக்கு ஏற்றுவதற்கானது என்பதாகவும் இருக்கலாம். அதோடு ஒரு கப்பலின் நங்கூரம் என்றால் கப்பல் புறப்பட்ட இடத்தில் கிடைக்கும் கல்லாகத்தான் இருக்கவேண்டும் ஆனால் இந்தக் கல் கப்பல் தரை தட்டி நின்ற இடத்திலுள்ள கல்லாக இருக்கிறது. எப்படியென்றால் அராராத் மலை எரிமலைக் குளம்புகளால் ஆனது. அதில் பசால்ட் வகை கற்களே காணப்படுகிறது. நங்கூரமாக காட்டப்படும் கற்பலகையும் பசால்ட் வகை கல்லே. அதாவது ஒருகாலத்தில் அந்தப்பகுதியில் வாழ்ந்த மக்கள் அந்தப்ப்குதியில் கிடைத்த கல்லைக்கொண்டு நடுகல்லாக செய்துவைத்து வணங்கியிருக்கவேண்டும், அதைத்தான் நங்கூரமாக காட்டி நம் மனதில் அவர்களின் கருத்தை நங்கூரமாக இறக்க முயல்கிறார்கள்.

தொல்லியலாளர்கள் நிலத்தை அகளும் போது முக்கியமான காலங்காட்டியாக டோபா எரிமலை படிவுகளை கொள்கிறார்கள். அதாவது இன்றைக்கு 74,000 ஆண்டுகளுக்கு முன்னர் சுமத்திரா தீபகற்பத்திலுள்ள கோட்டா டம்பான் பகுதியில் இருக்கும் எரிமலை இரண்டு வாரங்களுக்கு குமுறி வெடித்தது. இதன் படிவுகள் ஆசியப்பகுதிகளைத்தாண்டி ஐரோப்பாவரை பரவியது. இந்தப்படிவுகள் ஒரு முக்கியமான காலங்காட்டியாக பயன்படுகிறது. இதேபோல் பண்டைய டெதிஸ் கடலின் படிவுகள் இயமமலையின் பாறைகளில் காணப்படுகின்றன. இப்படி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான நிகழ்வுகளெல்லாம் காலங்காட்டியாக பதிந்திருக்கும் போது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்ட உலகம் முழுவதையும் சூழ்ந்த இந்த வெள்ளம் பற்றிய தயங்களோ பதிவுகளோ எதுவும் காணப்படவில்லையே ஏன்? ஆக அப்படி ஒரு பிரளயம் ஏற்படவே இல்லை என்பதுதான் உண்மை.

ஆதாரம் என்ற பெயரில் எதையாவது காட்டி என்னவாவது செய்து தங்கள் இறைவனின் இருப்பை தக்கவைப்பதற்கு கடும் முயற்சிகளைச் செய்யும் மதவாதிகளிடமிருந்து நாம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்பதைத்தான் இவைகளெல்லாம் நமக்கு உணர்த்துகின்றன.

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

 

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13.  கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9.  பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்


http://senkodi.wordpress.com/