Language Selection

செங்கொடியின் சிறகுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

2002ல் குஜராத்தில் நடத்தப்பட்ட கொலைவெறியாட்டம் அவ்வளவு எளிதில் யாருக்கும் மறந்து போயிருக்காது. கோத்ரா ரயில் பெட்டி எரிப்பைத்தொடர்ந்து திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரத்தில் குஜராத்தில் முஸ்லிம்களை குறிவைத்து அவர்களின் உயிரும் உடைமையும் நாசப்படுத்தப்பட்டன.

 

 

இதில் குல்பர்க் சொசைட்டியில் நடந்த சம்பவத்தில் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் இஷன் ஜாப்ரி உட்பட 69பேர் எரித்து கொல்லப்பட்டனர். இதை எதிர்த்து ஜாப்ரியின் மனைவி ஜாஹியாவும், மனித உரிமை ஆர்வலர் தீஸ்தா செதல்வாட்டும் கலவரத்தை தூண்டியதாகவும், கலவரக்காரர்களுக்கு ஆதரவாக நின்றதாகவும் மோடி உட்பட 62பேர் மீது உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதையடுத்து முன்னாள் சிபிஐ இயக்குனர் மாதவன் தலைமையில் ஒரு விசாரணை குழுவை அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டது நீதிமன்றம். இந்த விசாரணைக் குழுவினால் கடந்த மார்ச் 27ம் தேதி மோடி அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

இதே போன்று இன்னொரு சம்பவம். 1992ல் பாபரி பள்ளி இடிப்பில் அத்வானியும் இன்னும் சில பாஜக தலைவர்களும் அதை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை மாறாக இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள் என்று ஐபிஎஸ் அதிகாரி அஞ்சு குப்தா நீதி மன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.

இந்த இரண்டு நிகழ்வுகளையும் வைத்து நீதி மன்றங்களின் மாட்சிமை குறித்தும், எல்லாவற்றையும் விட சட்டம் சக்திவாய்ந்தது என்றும் செய்திகள் வளம் வரத் தொடங்கியிருக்கின்றன.

முதலில் விசாரணைக்குழு மோடியை அழைத்து விசாரிக்கவிருக்கிறது என்று தகவல் வந்ததும், ஒரு மாநிலத்தின் முதல்வரை அழைத்து விசாரிக்க அந்த குழுவுக்கு அதிகாரம் இருக்கிறதா? என்று வினா எழுப்பினார். அதை மீறி  மோடிக்கு சம்மன் அனுப்பியது விசாரணைக்குழு. 21ம் தேதியே விசாரணைக்கு அழைத்ததாகவும் மாலை வரை காத்திருந்தும் மோடி வரவில்லை என்று விசாரணைக்குழு பத்திரிக்கையாளர்களை கூட்டி அறிவித்தது. பின்னர்தான் 27ம் தேதி விசாரணைக்கு சம்மதித்தார் மோடி.

ஏற்கனவே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கரன் தாப்பர் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தண்ணீர் குடித்து வெளியேறினார் மோடி. அதனால் கவனமாக இந்த முறை விசாரணை முடிந்து கிரிக்கெட் பார்க்கப் போனார். பத்திரிக்கையாளர்களை கூட்டி விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்ததாகவும், இதனால் தனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்றார். ஆனால் கவனமாக மாநிலத்தின் முதல்வரான தன்னை விசாரணைக்கு அழைத்ததன் மூலம் நீங்கள் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்திருப்பீர்கள் என்று குஜராத் மக்களைப் பார்த்து கூறுகிறார். அதாவது தன்னை விசாரணைக்கு அழைத்தது குஜராத் மக்களை அவமதிக்கும் செயல் என்று மடைமாற்றுகிறார்.

இந்த விசாரணை நாடகங்களைத்தான் ஏதோ தண்டனை கொடுக்கப்பட்டு விட்டதைப்போல் சித்தரிக்கிறார்கள். சட்டத்தின் கைகளிலிருந்து யாரும் தப்ப முடியாது முதல்வராக இருந்தாலும் கூட என்கிறார்கள். கலவரத்தினால் பாதிக்க்கப்பட்ட மக்கள் இன்னமும் அகதிகள் முகாமில் அல்லல்பட்டுக் கொண்டிருக்கையில், விசாரனைக்கைதிகள் என்ற பெயரில் நாடெங்கும் முஸ்லிம்கள் எந்த விசாரணையும் இன்றி தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்க சில மணி நேரம் விசாரித்ததையே தண்டனையாய் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்த சட்டங்கள், நீதிமன்றங்கள் இவைகளின் மாட்சிமைதான் என்ன? இதுவரை இந்தியாவில் அமைக்கப்பட்ட பல நூறு விசாரணைக் கமிஷன்கள் அனைத்திலும் பதவியில் இருக்கும், ௮ல்லது இல்லாத நீதிபதிகள்தான் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அவைகளில் பிரச்சனைகளை உணர்ந்து சரியான தீர்ப்பை சொன்னவை எத்தனை? அவற்றிலும் செயல்படுத்தப்பட்டவை எத்தனை? அவைகளின் நோக்கம் மக்களை ஏமாற்றுவது தான் என்பது வெளிப்படை ஆனால் அது நீதி மன்றங்களுக்கு மட்டும் தெரியாது. இட ஒதுக்கீடு உட்படஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான எந்த விசயத்திலும் தன் மூக்கை நுழைத்து மனுநீதி பேசும் நீதி மன்றங்கள், மக்களை பாதிக்கும் தனியார்மயம் உள்ளிட்ட அனைத்திலும் ஆளும் வர்க்கங்களின் காவலனாகவே நின்றிருக்கிறது.

போலி மோதல் படுகொலைகள் முதல் சங்கரமட ஆபாசப் படுகொலைகள் வரை குற்றவாளிகளுக்கு சாமரம் வீசும் நீதிமன்றங்கள், குற்றப்பத்திரிக்கையே தாக்கல் செய்யாமல் ஆண்டுக்கணக்காய் சிறைகளில் வதைபடும் மக்களை பாராமல் கண்களை மூடிக்கொள்கிறது.

குஜ்ஜார் இனமக்கள் இட ஒதுக்கீடு கேட்டு போராடுவதைக்கண்டு நாட்டுக்கே அவமானம் என்று குமுறும் நீதிபதிகள், கயர்லாஞ்சி, மேலவளவு போல் தினம் தினம் நடைபெறும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான எந்த வன்கொடுமை குறித்தும் தங்கள் திருவாய் மலர்வதில்லை.

அகஒழுக்கம் குறித்து யோக்கியம் போதிக்கும் நீதிமன்றங்கள் நீதிபதிகளின் ஊழல் முறைகேடுகள் குறித்து பேசினால் நீதிமன்ற அவமதிப்பை நீட்டும்.

விவசாயிகள் தற்கொலை தொடங்கி நடைபாதை வியாபாரிகள் பிரச்சனை வரை அரசின் கொள்கை முடிவு என்று தலையிட மறுக்கும் நீதிமன்றம், ராமர்பாலம் போன்ற பிரச்சனைகளில் அரசின் கொள்கை முடிவை கண்டு கொள்ளாமல் தன் பார்ப்பன பாசத்தை வெளிப்படுத்தும்.

நீதி மன்றங்கள் மட்டுமல்ல சட்டங்களின் நிலையம் இதுதான். விலைவாசி உயர்வு நாட்டின் பெரும்பாலான மக்களை வதைத்துக்கொண்டிருக்க, பிரதமர் அமைச்சர்கள் அனைவரும் பதுக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை என்று மக்களை ஏய்த்துக் கொண்டிருக்க, சட்டமோ 50000 டன் வரை உணவுதானியங்கள் சேமித்து வைத்துக்கொள்ள அனுமதி வழங்குகிறது.

உற்பத்தி செய்யும் விவசாயிகள் விலையை நாங்களே தீர்மானித்துக்கொள்ள அனுமதியுங்கள் என்று அன்றிலிருந்து இன்றுவரை கோரிவருகிறார்கள், அவர்களை புறக்கணிக்கும் சட்டம், மருந்து உற்பத்தியாளர்களுக்கு ஐநூறு மடங்கு லாபம் வைத்துக்கொள்ள அனுமதி வழங்குகிறது.

நமது சமூக, அரசியல், வாழ்வியல் பிரச்சனைகளில் தெளிவாக கோடு கிழித்து ஆளும் வர்க்கங்களுக்கு, அதிகார வர்க்கங்களுக்கு சேவை செய்வதை நோக்கமாக கொண்டுள்ள சட்டமும் நீதி மன்றங்களும் அவ்வப்போது மக்களை ஏமாற்றுவதற்கும் கழிசடை அரசியல் வியாபாரிகளை தூக்கிப் பிடிப்பதற்கும் செய்யும் விசாரணை நாடகங்களை நாம் உணர்ந்து கொண்டு புறந்தள்ளவேண்டும். அதுவே நமக்கான பாதையை கண்டடைவதற்கு நமக்கு உதவும்.


http://senkodi.wordpress.com/2010/04/02/modi-court/