Language Selection

புதிய ஜனநாயகம் 2010

இந்தியப் போலி கம்யூனிச இயக்கம் இன்னுமொரு தலைமைப் பூசாரியை இழந்துவிட்டது. "வங்கத்துசிங்கம்' என்று சி.பி.எம். கட்சியினரால் சித்தரிக்கப்பட்ட அக்கட்சியின் மூத்த தலைவரான திருவாளர் ஜோதிபாசு, கடந்த ஜனவரி 17ஆம் நாளன்று தனது 95வது வயதில் மறைந்து விட்டார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்)யின் நிறுவனர்களில் ஒருவரான ஜோதிபாசுவுக்கு, 1977 முதல் 2000வது ஆண்டுவரை, மே.வங்கத்தில் தொடர்ந்து 23 ஆண்டுகளாக ஆட்சி செய்து சாதனை படைத்த முதல்வர் என்ற பெருமையும் உண்டு. போலி கம்யூனிஸ்டுகள் மட்டுமின்றி, கட்சி வேறுபாடின்றி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர் என்று எல்லா ஓட்டுக் கட்சியினரும் அவரைப் பாராட்டுகின்றனர். முதலாளித்துவ அரசியல்வாதிகள் மட்டுமின்றி, முதலாளித்துவ ஊடகங்களும் அவரை மாபெரும் தலைவர் என்றும், பொதுவுடமை இயக்கத்துக்கு மட்டுமின்றி நாட்டுக்கே பேரிழப்பு என்றும் ஒப்பாரி வைக்கின்றன.

இதர மாநிலங்களை ஒப்பிடும்போது, நிலச் சீர்திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரேமாநிலம் தான் மே.வங்கம் என்று ஜோதிபாசுவின் ஆட்சியைப் போலி கம்யூனிஸ்டுகள் பெருமையாகக் குறிப்பிடுகின்றனர். இந்நிலச் சீர்திருத்தத்தால் சி.பி.எம். கட்சி ஊழியர்களே ஆதாயமடைந்தனர். குத்தகை விவசாயிகளுக்கு நிலப்பட்டா கிடைத்ததைத் தவிர, வேறொன்றையும் இது சாதிக்கவில்லை. குத்தகை விவசாயிகள் விவசாயம் செய்வதற்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல், போலி கம்யூனிஸ்டுகள் கொண்டுவந்த இந்தப் பெயரளவிலான சீர்திருத்தம், கடைசியில் விவசாயிகளுக்கு ஒரு மண்ணும் செய்யாமல் தோல்வியில் முடிந்தது.

வறுமையிலும் பட்டினியிலும் நிற்கும் மாநிலங்களில் முன்னணியில் நிற்கும் மாநிலமாக மே.வங்கம் புதிய சாதனை படைத்தது. இதன் தொடர்ச்சியாகவே 2004ஆம் ஆண்டில் ஜங்கல் மகால் மாவட்டம், பன்ஷ்பகாரி பஞ்சாயத்தைச் Nசுர்ந்த அம்லாஷோல் எனும் கிராமத்தில் பழங்குடியினரான 5 பேர் பட்டினியால் மாண்டுபோயினர். காங்கிரசின் பாசிச கிரிமினல் அரசியலுக்கு எதிராக, அமைதியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டப்போவதாக வாக்குறுதி அளித்து 1977இல் ஆட்சிக்கு வந்த சி.பி.எம். கட்சியும் பாசுவின் ஆட்சியும், அடுத்த சில ஆண்டுகளிலேயே கிரிமினல்மயமாகிப் போனது. மே.வங்கத்தின் நாதியா மாவட்டத்தில் மட்டும் 1977லிருந்து 1991வரை 200க்கும் மேற்பட்ட நக்சல்பாரி புரட்சியாளர்களும் காங்கிரசு கட்சியினரும் சி.பி.எம்.குண்டர்களால் கொல்லப்பட்டுள்ளனர். இன்றைய மத்திய அமைச்சரான மம்தா பானர்ஜி 1991இல் கொல்கத்தா நகரில் பட்டப்பகலில் சி.பி.எம்.

குண்டர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். போலி கம்யூனிஸ்டுகளின ;ஊழல் கொள்ளைகளை அம்பலப்படுத்திய குற்றத்திற்காக 1988இல் "உத்தர் பங்க சம்பத்"என்ற நாளேட்டின் அச்சகத்தைச் சூறையாடி நாசப்படுத்திய சி.பி.எம். குண்டர்கள், திபகார்மண்டல் என்ற ஊழியரைக் கொன்றொழித்தனர்.அரசியல் செல்வாக்கையும் மக்களின் ஆதரவையும் இழக்கத் தொடங்கிவிட்ட பிறகு,சி.பி.எம். கட்சி தனது குண்டர் பலத்தில்தான் தேர்தல் வெற்றியைச் சாதித்து வருகிறது. பாசுவின் ஆட்சியில் 1990இல் நடந்த கொல்கத்தா நகராட்சித் தேர்தல்களின் போது குண்டுவீச்சு, கைத்துப்பாக்கி ஏந்தி மிரட்டல் என சி.பி.எம். குண்டர்கள் வன்முறை வெறியாட்டங்களில் இறங்கி தேர்தல் வெற்றியைச் சாதித்ததைக் கண்டு நாடே கைகொட்டிச் சிரித்தது. அதன் பிறகு நடந்த எல்லாத் தேர்தல்களிலும் இந்த வழியில்தான் வெற்றிகள் சாதிக்கப்பட்டன. தேர்தல் மட்டுமல்ல, எந்தவொரு மக்கள் போராட்டமானாலும் இக்குண்டர் படை தாக்குதலை ஏவியது. எதிர்க்கட்சிகளின் பல போராட்டங்கள் மிருகத்தனமாக போலீசாலும் சி.பி.எம்.

குண்டர்களாலும் கொடுரமாக நசுக்கப்பட்டன. இதன் பரிணாம வளர்ச்சிதான், சிங்கூரிலும் நந்திகிராமத்திலும் நடந்தவெறியாட்டங்கள்."டாட்டாபிர்லா கூட்டாளி, பாட்டாளிக்குப்பகையாளி!" என்று காங்கிரசை எதிர்த்து முழக்கமிட்டு வந்த சி.பி.எம். கட்சி, ஆட்சிக்கு வந்தபின்னர் டாடா, பிர்லா முதலான பெருமுதலாளிகள் மட்டுமின்றி, அந்நிய ஏகாதிபத்திய முதலாளிகளின் நம்பகமான கூட்டாளியாக மாறிப்போனது. இந்தத் திருப்பணியைத் தொடங்கிவைத்து புதிய சாதனை படைத்தவர்தான் திருவாளர் ஜோதிபாசு. 1991இல் தனியார்மயதாராளமயக் கொள்கைகள் புகுத்தப்பட்ட பிறகு, மாநிலத்தைத் தொழில்மயமாக்குவது என்ற பெயரில் திருவாளர் பாசு மேலை நாடுகளுக்குப் பறந்து, அங்கு வாழும் இந்திய மேட்டுக்குடியினரையும் ஏகாதிபத்திய முதலாளிகளையும் மே.வங்கத்தில் முதலீடு செய்ய அழைத்தார். ஆனால் போலி கம்யூனிஸ்டுகளின் ஆட்சியில் முதலீடு செய்ய ஏகாதிபத்தியவாதிகள் தயக்கம் காட்டினர்.

அந்தத் தயக்கத்தைப் போக்கும் வகையில், மே.வங்கத்தில்தொழிலாளர் பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள உறுதியளித்தார் பாசு. வேலைநிறுத்தங்களும் முற்றுகைப் போராட்டங்களும் அடுத்தடுத்து நடந்து வந்த மே.வங்கத்தில், தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்கியும் மிரட்டியும் மாநிலத்தை "அமைதிப்பூங்கா'வாக அவர் மாற்றினார். உழைக்கும் மக்களின்நலன் காக்கும் புரட்சிகர ஆட்சியை நிறுவியுள்ளதாகப்பீற்றிக் கொள்ளப்படும் பாசுவின் ஆட்சியில், தொடர்ச்சியாக ஆலைமூடலும் ஆட்குறைப்பும் நடந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீதியில் வீசியெறியப்பட்டனர். போலி கம்யூனிஸ்டு முதல்வராக பாசு ஆட்சிக்கு வந்த பிறகு, 163 பெரிய ஆலைகளும் 22,733 சிறுதொழில் நிறுவனங்களும் மூடப்பட்டன. 1983 லிருந்து 1992 வரை ஆலை மூடல் காரணமாக பிழைக்க வழியின்றி 903 தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

அந்நிய ஏகாதிபத்திய மூலதனத்துக்கு அனுசரணையாக நடந்து கொள்வதைப் பற்றி 1984இல் கட்சித்தலைமை அவரிடம் விளக்கம் கேட்டது. அதற்கு பாசு, "நாம் ஒரு முதலாளித்துவ கட்டமைவில் இயங்குகிறோம். எனவே நாம் அதற்கு எதிராகச் செல்ல முடியாது . சோசலிசம் இப்போதைக்கு சாத்தியமில்லை" என்று அந்நிய முதலீடுகளை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்று ஆதரித்தார். பாட்டாளிகளின் தோழனாகச் சித்தரிக்கப்படும் ஜோதிபாசு, முதலாளிகளின் தோழனாகத்தான் இருந்தார். தனது பிறந்தநாளை ஐந்து நட்சத்திர ஓட்டலில் கொண்டாடி முதலாளிகளுடன் சேர்ந்து விருந்துண்டு களிப்பது அவரது வாடிக்கை.

பாசுவின் "பொற்கால ஆட்சி'யில், சமையல் எண்ணெய் கலப்பட ஊழலால் பெகலாவில் நூற்றுக்கணக்கானோர் கைகால்கள் முடமாகி, இந்த விவகாரம் பாசு ஆட்சியின் மகிமையை நாடெங்கும் நாறடித்தது. இதுதவிர, வங்காள விளக்கு ஊழல், சால்ட் லேக் நிலஊழல், எஸ்.யு.வி. கார் ஊழல் முதலானவை வெளிச்சத்துக்கு வந்து சந்தி சிரித்தது. ஜோதிபாசுவின் முதலாளித்துவ மகன் சாந்தன் பாசுவே வங்காள விளக்கு ஊழலில் சிக்கியிருந்தார். கொல்கத்தா அருகிலுள்ள சால்ட் லேக் பகுதியிலுள்ள சேரிவாழ் மக்களை வலுக்கட்டாயமாக அடித்துவிரட்டிவிட்டு, அப் புறம்போக்கு நிலத்தை பாசுவின் அரசு கையகப்படுத்தி மேட்டுக்குடி அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியாக மாற்றியது.

மேட்டுக்குடியினரும் அதிகாரிகளும் சி.பி.எம். அமைச்சர்களும் விதிமுறைகளை மீறி தமது பினாமிகள் பெயரில் அற்ப விலைக்கு நிலங்களை வாங்கிக் குவித்தனர். எதிர்க்கட்சிகள் இந்த ஊழலை அம்பலப்படுத்தி போராட்டங்களை நடத்தத் தொடங்கியதும், "இது என்ன பெரிய ஊழலா?" என்று நியாயவாதம் பேசினார் பாசு. அந்நிய முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு பாசு பறந்த போது, அவருடன் அவரது முதலாளித்துவ மகன் சந்தன் பாசுவும் சென்றார். சந்தன் பாசுவின் நட்சத்திர ஓட்டல் மற்றும் கூட்டுத் தொழில் நிறுவனத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்துடன் தான் இந்தப் பயணங்கள் அமைந்தன. இந்த விவகாரம் அம்பலமாகி, கொல்கத்தா குடிமக்கள் கழகம் எனும் அமைப்பு, அரசு நிதியைக் கேடாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக பாசு பதவி விலக வேண்டும் என்றும், பயணச் செலவுத்தொகையை அரசுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் வழக்கு தொடுக்குமளவுக்கு, இந்த மோசடி விவகாரம் சந்தி சிரித்தது. ஜோதிபாசுவின் ஆட்சியில் தலைவிரித்தாடிய மனித உரிமை மீறல், போலீசு கொடூரங்களை எதிர்த்து பலமுறை மக்கள் போராடிய பின்னர், 20க்கும் மேற்பட்ட விசாரணைக் கமிஷன்கள் அமைக்கப்பட்டன.

இருப்பினும் இன்றுவரை 4,5 விவகாரங்களில் மட்டுமே விசாரணை முடிந்துள்ளது. இவற்றில் லால்பஜார ;போலீசு நிலையத்தில் இத்ரீஸ் மியான் என்ற விசாரணைக் கைதியின் கொட்டடிக்கொலை பற்றிய விசாரணை முடிவுக்குப் பின்னர், 7 போலீசார் மீது மட்டும் தற்காலிக வேலை நீக்கம் என்ற "புரட்சிகர நடவடிக்கை' எடுக்கப்பட்டது. அடுத்த வாரமே அந்த 7போலீசாரும் வேலையில் அமர்த்தப்பட்டனர். இதுதான் போலி கம்யூனிஸ்டுகளின் தூய்மையான நிர்வாகத்தின் சாதனை! சி.பி.எம். கட்சியில் இருந்தாலும், அவர் எப்போதுமே நேரு இந்திரா ராஜீவ் கும்பலின் பரம்பரை விசுவாசி. பாசிச "அன்னை' இந்திரா கொல்லப்பட்டபோதும், பாசிச ராஜீவ் கொல்லப்பட்டபோதும் அவர் துடிதுடித்துப் போனார். பாசிச "அன்னை' இந்திராவின் தேசிய ஒருமைப்பாடு, பிரிவினைவாத எதிர்ப்புக் கொள்கைகளைப் போற்றி ஆதரித்ததோடு, இந்திய அரசின் பிராந்திய மேலாதிக்கத்தையும் விசுவாசமாக ஆதரித்து நின்றார். மைய அரசிடம்,தனது மாநிலத்துக்கு கூடுதல் ஒதுக்கீடுகள் கோரி அரசின் சார்பில் திருவாளர் பாசு கடையடைப்புப்போராட்டம் நடத்தினாரே தவிர, பிராந்தியநலன், சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பரவல் முதலானவற்றுக்காக அவர் போராடவில்லை.

தேசிய இனங்களின் உரிமைக்கு அவர் குரல் கொடுத்ததுமில்லை. காஷ்மீர் மற்றும் வடகிழக்கிந்திய மாநில மக்களின் தேசிய இனஉரிமைப் போராட்டங்கள் மீது ஆளும் வர்க்கங்கள் ஏவிய அரசு பயங்கரவாத அடக்குமுறைத் தீர்வையே அவர் ஆதரித்து நின்றார். மே.வங்கத்தின் கோர்க்காலாந்து போராட்டத்தை காங்கிரசு வழியில் மிருகத்தனமாக ஒடுக்கினார். 1967இல் அஜாசூ முகர்ஜி தலைமையிலான கூட்டணி ஆட்சியில், ஜோதிபாசு உள்துறைஅமைச்சராகவும் துணை முதல்வராகவும் இருந்தபோது, நக்சல்பாரி பேரெழுச்சியை மிருகத்தனமாக ஒடுக்கினார். பாசுவின் போலீசு கட்டவிழ்த்துவிட்ட கொலைவெறியாட்டத்தில் 9 பேர் கொல்லப்பட்டு, பலர் படுகாயமடைந்தனர்.

விவசாயிகள் சங்க முன்னோடிகள் கைது செய்யப்பட்டு, அந்த வட்டாரமெங்கும் போலீசு பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. கம்யூனிசத் துரோகி ஜோதிபாசுவின் கோரமுகம் 43 ஆண்டுகளுக்கு முன்னரே அம்பலமானது. காங்கிரசு எதிர்ப்பு நாடகமாடி வந்த போலி கம்யூனிஸ்டுகள், இப்போது பா.ஜ.க.வின் வகுப்புவாதஎதிர்ப்பு நாடகமாடிக் கொண்டு காங்கிரசுக்கு முட்டுக்கொடுத்து ஆதரிக்கும் நிலைக்குச் சென்று விட்டனர். தரகுப் பெருமுதலாளிகள் மட்டுமின்றி, அந்நிய ஏகாதிபத்திய முதலாளிகளின் நம்பகமான கூட்டாளிகளாகவும் மாறிவிட்டனர். ஆளும் வர்க்கப் பாசிச கட்சிகளுடன் சந்தர்ப்பவாதக் கூட்டுச் சேர்வதன் மூலம் தம்மை தக்கவைத்துக் கொள்ளத் துடிக்கின்றனர்.

மக்கள் ஜனநாயகப்புரட்சியைச் சாதிக்கப் போவதாகச் சவடால் அடித்துவந்த அக்கட்சி, இன்று கடைந்தெடுத்த முதலாளித்துவ ஓட்டுப் பொறுக்கி கட்சியாக மாறிவிட்டது. தொழிலாளி விவசாயி வர்க்க அடித்தளத்தை ஏற்கெனவே இழந்துவிட்ட அக்கட்சி, இன்று நடுத்தரமேட்டுக்குடி வர்க்கத்தை மட்டுமே சமூக அடித்தளமாகக் கொண்டுள்ளது. இப்படி கட்சியையும் ஆட்சியையும் சீரழித்து, முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் விசுவாச சேவை செய்யும் இன்னுமொரு ஓட்டுப் பொறுக்கி கட்சியாக அபாயமற்ற எதிர்க்கட்சியாக சி.பி.எம். கட்சியை மாற்றியமைத்ததில் முக்கியபங்கு வகித்தவர்தான் திருவாளர் ஜோதிபாசு. நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தை அம்பலப்படுத்தி, இன்றைய அரசியலமைப்பு முறையை வீழ்த்தி, மக்கள் ஜனநாயகத்தை நிலைநாட்டும் புரட்சிக்கான எந்த போராட்டத்தையும் நடத்தாமல், கேடுகெட்ட நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தைக் கட்டிக் காக்கும் ஆளும் வர்க்க சேவையை அவர் விசுவாசமாகச் செய்தார். ஆளும் வர்க்க நலன் பேணும் அரசு எந்திரத்துக்கு இசைவாக "இடதுசாரி கூட்டணி' அரசாங்கத்தை நிறுவி, இதுவே "புரட்சிக்கான இடைக்கால அரசு' என்று கட்சிஅணிகளையும் மக்களையும் ஏய்த்து, அவர்களைப் புரட்சிக்கு அணிதிரள விடாமல் தடுத்து திசைதிருப்பினார். மே.வங்கத்தைப் போல இதர மாநிலங்களிலும் "இடதுசாரிகள்' ஆட்சிக்கு வந்து, அதன் பிறகு டெல்லியிலும் நாற்காலியில் அமர்ந்துவிட்டால், புரட்சி நிறைவேறிவிடும் என்று பிரமையூட்டுவதற்கும், புரட்சியை பூசையறையில் வைப்பதற்கும்தான் அவரது "இடதுசாரி'ஆட்சி பயன்பட்டது.

புரட்சிப் போராட்டப் பாதையிலிருந்து கட்சி அணிகளை நாடாளுமன்ற போலி ஜனநாயகப் பாதைக்கு இழுத்து வந்து, சி.பி.எம். கட்சியை மைய அரசியல் நீரோட்டத்தைச் சேர்ந்த ஓட்டுப்பொறுக்கிக் கட்சியாக மாற்றியதுதான் அவர் ஆளும்வர்க்கங்களுக்கு ஆற்றிய மகத்தான சேவை. சி.பி.எம்.கட்சியை, ஐரோப்பிய சமூக ஜனநாயகக் கட்சிகளைப்போல மாற்றுவதில் அவர் வெற்றி பெற்றார். இதனால்தான் "அவர் தாராளவாத மார்க்சியவாதி, ஸ்டாலினிய கடுங்கோட்பாட்டு போக்கை நிராகரித்தவர்" என்றெல்லாம் அவரை முதலாளித்துவ எழுத்தாளர்க@ள துதிபாடுகின்றனர். இதனால்தான் தான் ஆளும் வர்க்கங்களால்"கம்யூனிச காந்தி"யாக அவர் போற்றப்படுகிறார்.

கம்யூனிசத்தின் பெயரால் இத்தகைய அயோக்கியத்தனங்களை அப்பட்டமாக ரஷ்யாவில் செய்து, முதலாளித்துவத்தை நிலைநாட்டிய சேவைக்காக அன்றைய ரஷ்ய போலி கம்யூனிஸ்டு தலைவர் கோர்பச்சேவுக்கு ஏகாதிபத்திய உலகம் நோபல் பரிசு அளித்து கௌரவித்தது. மறைந்த போலி கம்யூனிசத் துரோகியும், ஆளும்வர்க்கச் சேவகனுமாகிய ஜோதிபாசுவுக்கு இந்திய ஆளும் வர்க்கங்கள் பாரத ரத்னா விருது வழங்க வேண்டியதுதான் இனி பாக்கியிருக்கிறது.

பாலன்