Language Selection

புதிய ஜனநாயகம் 2010

சென்ற வருடம் அக்டோபர் மாதம் மத்திய அரசின் மரபணு பொறியியல் ஒப்புதல் குழு, பி.டி. கத்தரிக்காயை வணிக ரீதியில் விளைவிக்கலாம் என ஒப்புதல் கொடுத்துள்ளது. இதற்கு நாடெங்கிலும் அறிவுத்துறையினர், சூழலியவாதிகள், தன்னார்வக் குழுக்கள் முதலானோரிடத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பியது.

 இதையடுத்து மைய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மக்களிடையே கருத்துக்களைக்கேட்டு, வரும் பிப்ரவரி மாதம் இருபதாம் தேதி முடிவெடுக்கப்படும் என்றார். கொல்கத்தா, புவனேசுவர், அகமதாபாத், ஹைதராபாத், பெங்களூரு, நாக்பூர், சண்டிகர் என ஏழு நகரங்களில் இந்த கருத்து கேட்கும் வைபவம் நடந்து வருகிறது. எல்லா இடங்களிலும் தன்னார்வக் குழுக்களால் அணிதிரட்டப்பட்ட தொண்டர்களும், விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். பி.டி கத்தரிக்காய் என்றால் என்ன? பேசில்லஸ் எனப்படும் ஒருவகை பாக்டீரியாவின் மரபணுவை எடுத்து கத்தரிக்காயின் மரபணுவுடன் இணைத்து ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்படும் புதிய வகை உயிரிதான் பி.டி.கத்தரி.

 

இதனால் கத்தரியை தாக்கும் பூச்சிகள் பி.டி கத்தரியைத் தாக்காது, விளைச்சல் அமோகமாக இருக்கும் என்றெல்லாம் இதன் ஆதரவு அறிவியலாளர்களும், நிறுவனங்களும் வாதிடுகின்றனர். சூழலியவாதிகளோ இதனால் ஏற்படும் தீங்குகள், நோய்கள், அதிகம் தண்ணீர் உறிஞ்சுவது, காட்டமான பூச்சி கொல்லிகள் தேவைப்படுவது, புதிய வகை பூச்சிகள் உருவாவது, உயிரியல்சூழல் பாதிக்கப்படுவது முதலானவற்றை முன்வைக்கின்றனர். இது குறித்து பலரும் எழுதியிருப்பதை வாசகர்கள் அறிந்திருக்கலாம். அவை உண்மைதான் என்பதை 2002இல் அறிமுகம்செய்யப்பட்ட பி.டி.பருத்தி விதைகளே நிரூபித்திருக்கின்றன. முக்கியமாக ஆந்திரா, விதர்பாவில் பல நூறு விவசாயிகள் விளைச்சல் இல்லாததனாலும், அதற்குக்கடன் வாங்கி திருப்ப முடியவில்லை என்பதற்காகவும் தற்கொலை செய்திருக்கின்றனர்.

 

சில இடங்களில் இந்தப் பருத்தி நன்றாக விளைந்ததாக நிறுவனங்களும், அரசுத் தரப்பும் கூறுகின்றன. காலம் தோறும் அறிவியல் கண்டுபிடிப்புகளால் நவீனமயமாகி வரும் வாழ்க்கையில் பி.டி விதைகளும் ஓர் அங்கம் என்று வாதிடும் தூய அறிவியல்வாதிகளின் வாதத்தை, ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொள்வோம். சரி, இந்த நவீன பி.டி. விதைகளின் சமூக, பொருளாதார,அரசியல் நோக்கமென்ன? இவ்விதைகள் ஏற்கனவே பஞ்சைப் பராரியாக வாழும் விவசாயிகளின் இன்னலைத் தீர்க்க வந்ததா, இல்லை அவர்களிடம் மிச்சமிருக்கும் பொருளாதாரத்தைப் பறிக்க வந்ததா? அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டிருக்கும் மான்சாண்டோ நிறுவனம்தான் இந்த பி.டி. விதைகளை ஆய்வின் மூலம் கண்டுபிடித்து சந்தைப்படுத்துகிறது.

 

இரண்டாம் உலகப் போருக்கு பின் ஏகாதிபத்தியங்களும் அவற்றின் அரசியல் ஆசியுடன் பன்னாட்டுநிறுவனங்களும் உலகை எல்லா வழிகளிலும் மேலாதிக்கம் செய்ய முயன்றன. தண்ணீர், விவசாயம் போன்ற இயற்கை சார்ந்த வாழ்க்கையைக் கூட கட்டுப்படுத்தி, அதிக இலாபம் பெறலாம் எனபல இரசாயன நிறுவனங்கள் தங்களது இலக்கை மாற்றின.அப்படி மாற்றிக் கொண்டமான் சாண்டோ நிறுவனம் முழு உலகின் விவசாயத்தையும் தனது பிடிக்குள் கொண்டுவர தீவிரமாக முயல்கிறது.அதற்காகவே மூலதனமிட்டு பிரம்மாண்டமான ஆய்வுகளை இந்நிறுவனம் நடத்துகின்றது.

 

இங்கே நாம் வலியுறுத்த விரும்புவது, விவசாயத்தின் உற்பத்தியை நவீனப்படுத்தி மேம்படுத்துவது இவர்களின் நோக்கமல்ல. ஆனால், அப்படி ஒரு நோக்கை பிரச்சாரம் செய்து கொண்டு முழு விவசாயத்தையும் தனக்கு அடிமைப்படுத்துவதே இவர்களின் நீண்ட கால இலக்கு. எடுத்துக்காட்டாக, பி.டி. விதைகள் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஏழு ஆண்டுகளில் நாட்டுப்புற பருத்தி விதைகள் ஏறத்தாழ இல்லையென்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. இந்த விதைகளை விட மான்சாண்டோவின் பி.டி. விதைகள் பல மடங்குவிலை அதிகம். இன்றும் கூட இதன்விலை ஒரு கிலோவுக்கு ஆயிரம் ரூபாயைத் தாண்டுகிறது. 1947க்குப் பின் ஓரவளவு சுயேச்சையாக இருந்த விவசாயம் அரசு ஆதரவுடன் இயங்கத் துவங்கியது.

 

பணக்கார விவசாயிகளுக்காகக் கொண்டுவரப்பட்ட பசுமைப் புரட்சித் திட்டம், சிறிய விவசாயிகளுக்குப் பயனளிக்கவில்ல என்றாலும் அவர்களும் அதன் பிடியில் கொண்டு வரப்பட்டனர். இதன் விளைவாக உரம், பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் குடிக்கும் செலவு பிடிக்கும் விவசாயத்திற்கு இந்த விவசாயிகள் தள்ளப்பட்டனர். பாரம்பரிய விவசாய அனுபவம் அறிவு எல்லாம் அழிக்கப்பட்டு, தரகு முதலாளிகளின் அரசுவிரும்பும் அடிமை விவசாய முறைக்குப் பிடித்துத்தள்ளப்பட்டனர். இதன் விளைவு என்ன? இன்றைக்கு விவசாயிகள் தமது விருப்பப்படி நாட்டுப்புற விதைகளை வாங்கி விவசாயம் செய்ய முடியாது. ஏனெனில், அதன் இருப்பு அழிக்கப்பட்டு பி.டி. விதைகள் மட்டுமே கிடைக்கும் என்ற நிலைமை பருத்தியில் உருவாக்கப்பட்டுவிட்டது.

 

ஏற்கெனவே அரசியல் ரீதியாக திரளாத விவசாயிகள், தமது தொழிலுக்காக பெரும் நிறுவனங்களைச் சார்ந்து இயங்குவதாக மாற்றப்பட்டுவிட்டனர். பிற்போக்கு நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில் சிக்குண்டிருக்கும் விவசாயிகளின் பாமரத்தனம் பெரும் முதலாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்து விட்டது. பருத்தியில் ஆக்கிரமிப்பு வெற்றி கண்ட மான்சாண்டோ நிறுவனம், அடுத்ததாக உணவுப் பயிர்களுக்கு குறிவைத்திருக்கிறது. அதற்கான முதல் அறிமுகம்தான் பி.டி. கத்தரி. இந்தியாவில் விளையும் காய்கறிகளில் எட்டு சதவீதபங்கைக் கொண்டிருக்கும் கத்தரிக்காய், சரியாகச் சொன்னால் அது ஏழைகளின் காய்.

 

எத்தகைய வறட்சியிலும்,மழையிலும், கிராக்கியில்லாமல் அதிகம் கிடைக்ககூடியதும், விலை குறைவானதுமான அந்தக் காயைக் கூட விட்டுவைக்க மான்சாண்டோ விரும்பவில்லை. கத்தரியில் ஆரம்பிக்கும் இந்த ஆக்கிரமிப்பு நாளை அரிசி, கோதுமையில் முடியும்நாள் வெகுதொலைவில் இல்லை. இந்தியாவில் சுமார் 2500 வகை நாட்டுப்புற கத்தரி வகைகள் உள்ளன. பீகார்,மே.வங்கம், ஒரிசா ஆகிய மூன்று மாநிலங்களும் நாட்டின் கத்தரி உற்பத்தியில் 61சதவீதத்தை கொண்டிருக்கின்றன. அதிகம் உரம், பூச்சிக் கொல்லிகள் தேவைப்படாமல் விதவிதமான ருசியைக் கொண்டிருக்கும் இந்த ரகங்களை வணிக நோக்கத்திற்காக மான்சாண்டோ அழிக்க நினைக்கிறது. இதன் இந்திய அவதாரமான மகிகோ நிறுவனத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பி.டி. விதையை சந்தைப்படுத்துவதற்கான முயற்சியை இந்திய அரசு வலிந்து செய்கிறது. ஏற்கெனவே அரசின் கீழ் இயங்கும் நிபுணர்கள் குழு இதற்கு ஒப்புதல் கொடுத்து விட்டது.


இப்போது ஊரூராகச் செல்லும் அமைச்சர் ஜெய்ராம் ரமே{ம் அந்த நிபுணர்களின் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்கிறார். ஏற்கெனவே சில மாநிலங்கள் இந்த பி.டி. கத்தரிக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், அவற்றைச் சரிக்கட்ட இந்தப் பிரச்சாரம் உதவுகிறது. இதற்குத் தோதாக தன்னார்வக் குழுக்களும் இந்த பி.டி.விதையின் தீங்கைத்தான் பிரச்சாரம் செய்கின்றவே அன்றி, விவசாயிகளை அடிமைப்படுத்தும் மான்சாண்டோவின் அரசியல் சதியை பேசுவதில்லை. பி.டி.பருத்தி அறிமுகப்படுத்தப்பட்டபோது நடந்த நாடகம், இப்போது கத்தரி விசயத்தில் மீள நடைபெறுகிறது. பெயரளவிற்காவது சில மாநிலங்கள் பி.டி. கத்தரிக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், தமிழக அரசுமட்டும் மான்சாண்டோவின் அடியாளாக நடந்து கொள்கிறது.

 

கோவை விவசாயப் பல்கலைக் கழகமும் மான்சாண்டோவின் ஆய்வில் பங்கு பெற்று நான்கு பி.டி.கத்தரி விதைகளை அறிமுகப்படுத்த காத்திருக்கிறதாம். மத்திய அரசு சொல்லாமலேயே இவற்றைச் சந்தைப்படுத்த தி.மு.க அரசு துடிக்கிறது. தமிழகத்தில் நூற்றுக்கும் அதிகமான கத்தரி விதைகள் பயன்பாட்டில் இருக்கின்றன. விவசாயிகள் தமது வழமையான சாகுபடியின் ஒரு அங்கமாக நிலத்தின் ஒரத்தில் கத்தரியைப் பயிரிடுவது வழக்கம். குறுகிய கால பணப்பயிராக விளங்கும் கத்தரி, பெரும்பாலும் விவசாயிகளை ஏமாற்றாமல் உதவி வந்துள்ளது. தமிழகத்திலும் இதுவரை கத்தரிக்காய்க்குத் தட்டுப்பாடோ, அதிக விலை உயர்வோ வந்ததில்லை. இப்போது இதை அடியோடு மாற்ற அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் துடிக்கிறார்.

 

பி.டி கத்தரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரை இகழ்ந்துபேசும் இந்த அமைச்சரும், கோவை பல்கலைக் கழகமும் மான்சாண்டோவின் புரோக்கர்களாக மாறிவிட்டனர். மத்திய அரசு என்ன சொல்வது? நாங்களே தயார்! என்று பகிரங்மாக அறிவிக்கும் இவர்களின் அடிமைப்புத்தி, இதர மாநிலங்களில் காணப்படவில்லை. இதிலிருந்தே தமிழக அரசின் யோக்கியதையை புரிந்துகொள்ளலாம். மறுகாலனியாக்கத்தின் அங்கமாக வரும் மான்சாண்டோவின் படையெடுப்பை விவசாயிகள் மட்டுமல்லாமல், அனைத்து பிரிவு உழைக்கும் மக்களும் ஒன்றுசேர்ந்து எதிர்க்காமல் நமது விவசாயத்தைக் காப்பாற்றவேறு வழியில்லை. இதற்கு நேரெதிராக இயங்கும் தன்னார்வக் குழுக்கள் இந்தப் பிரச்சினையை முன்னெடுப்பது, போராட்டத்தைத் திசைதிருப்பி பின்னுக்கு இழுக்கும் சதியாகவே இருக்கும் என்பதைப் போராடும் விவசாயிகள் உணரவேண்டும்.

 

சாந்தன்