Language Selection

புதிய ஜனநாயகம் 2010

போலீசுக்காரர்கள், குறிப்பாக உயர் போலீசு அதிகாரிகள் வக்கிரமான, கிரிமினல் குற்றச் செயல்களில் ஈடுபடுவதும், தண்டனை ஏதுமின்றித் தப்பித் திரிவதும் மட்டுமல்ல அவர்களால் பாதிக்கப்பட்டவர்களே துன்புறுத்தப்படுவதும், கிரிமினல் போலீசார் மேலும்மேலும் பதவி உயர்வும் விருதுகளும் பெறுவதும் கூட புதிதில்லை.

சில பத்தாண்டுகளுக்கு முன்பு, ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் விசாணை நடந்து கொண்டிருந்தபோது, தலைமை நீதிபதி முன்ஷி வெளிப்படையாகச் சொன்னார்: "சீருடையில் உள்ள போலீசார்தான் நாட்டிலேயே அமைப்பு ரீதியில் திரண்டுள்ள மிக மோசமான கிரிமினல் கும்பல்". ஐதராபாத் நகரத் தெருவில் கணவனோடு சென்று கொண்டிருந்த ரமீஷா பீவி என்ற இசுலாமியப்பெண்ணைப் பாலியல் வன்முறை செய்த போலீசு கும்பல், போலீசு நிலையத்துக்குக் கொண்டு போய் கணவனை சித்திரவதை செய்து சிறையில் அடைத்தது. ஐதராபாத் öசகந்திராபாத் இரட்டை நகரங்களை ஒருவாரம் நிலைகுலையச் செய்த போராட்டங்களுக்குப் பிறகு வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடந்த விசாரணையில், ரமீஷா பீவி ஒரு விபச்சாரி என்றும், அவளது கணவனைவிபச்சாரத் தரகனென்றும் நிரூபிக்க முயன்றது போலீசு கும்பல்.

 

இதற்காக விபச்சாரத் தரகு கும்பலோடு சேர்ந்து சதி செய்து பொய்ச் சாட்சியங்களை உருவாக்கியது. இதைக் கண்டுபிடித்த நீதிபதி முன்ஷி போலீசுத் துறையையே கிரிமினல் கும்பல் என்றார். ரமீஷா பீவி வழக்கு போலீசின் கிரிமினல்குணத்துக்கு ஒரு வகைமாதிரி என்றால், அரியானா மாநிலம் சண்டிகரில் நடந்த மாயாதேவி வழக்கு அதன் வக்கிரப் புத்திக்கு வேறொரு வகைமாதிரியாகும். திருமணத்துக்கு காரில் சென்று கொண்டிருந்த குழுவைச் சேர்ந்த பெண ;மாயாவை வெளியே இழுத்துப் போட்டது ஒரு போலீசு கும்பல். தடுக்கப் போன ஒரு இளைஞரை நடுத்தெருவில் நாயைப் போலச் சுட்டுக்கொன்றது.

 

மாயாவை நிர்வாணப்படுத்தி தெருவில் இழுத்துப் போய், கும்பல் பாலியல் வன்முறை செய்ததோடு, அவரது பிறப்பு உறுப்பில் போலீசு "லத்தி'யைச் செருகித் துன்புறுத்தியது. இத்தனைக்கும் மாயாவோஅவரது குடும்பமோ, போலீசின் இந்தச் செயல்களுக்குக் காரணமாக எந்த குற்ற நடவடிக்கையிலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. ரமீஷா பீவி, மாயாதேவி வழக்குகளில் கண்டவாறு அன்றாடம் வந்து குவியும் போலீசின் வக்கிரமான, கிரிமினல் குற்றச் செய்திகளால் முதலாளியச் செய்திஊடகம் மரத்துப் போய்க் கிடக்கிறது என்றே சொல்லலாம். என்றாலும், அதையே குலுக்கி எழுப்பியிருக்கிறது, அரியானாவில் தற்போது மீண்டும் உயிர் பெற்றுள்ள ஒரு வழக்கு. சாம்பு பிரதாப்சிங் ரத்தோர், அரியானா மாநில கூடுதல் போலீசு தலைமை இயக்குனராக இருந்தவன்; அரியானா மாநில டென்னிசு விளையாட்டு சங்கத் தலைவன்.

 

அம்மாநில பஞ்சகுலா நகர கிறித்தவ ஆங்கிலப்பள்ளியில் பத்தாம் வகுப்புப் படித்த 14 வயதே நிரம்பிய இளம் விளையாட்டு வீராங்கனை ருச்சிகா என்ற சிறுமியைத் தனது அலுவலகத்தில் வைத்து 1990ஆம் ஆண்டு பாலியல் வன்முறைக்குப் பலியாக்கி விட்டான். அக்குற்றத்தில் இருந்து தப்பிக்க, அடுக்கடுக்கான கிரிமினல் குற்றங்கள் புரிந்தான்; பின்னர், அம்மாநிலத் தலைமைப்போலீசு அதிகாரியாகி அப்பொறுப்பிலிருந்து ஓய்வும் பெற்றான். பாலியல்குற்றத்துக்காக 19 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆறுமாத சிறையும் ஒரு ஆயிரம் ரூபாய் அபராதமுமே பெற்றான்; அதிலிருந்தும் பிணையில் வந்து சுதந்திரமாக திரிகிறான். இந்த அக்கிரமத்தைக் கண்டுதான் முதலாளியச் செய்தி ஊடகம் சூடாகிப் போயுள்ளது.

 

 ருச்சிகா மீதான பாலியல் வன்முறையை அவளது வகுப்புத் தோழி ஆராதனா நேரில் கண்டிருக்கிறார். இம்மாதிரியான அக்கிரமத்துக்கு ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் பலியாகும் இந்தியப் பெண்கள் கண்ணீரும் கம்பலையுமாக மௌனித்திருக்கையில், தன்தோழி ஆராதனாவின் துணையோடு அந்தக்காம வெறியனுக்கு எதிராகப் போராடி நீதியை நிலைநாட்டத் துணிந்தாள் ருச்சிகா. அன்றிலிருந்து போலீசு மிருகம் ரத்தோரின் அடுத்தடுத்த கிரிமினல் நடவடிக்கைகளால் ருச்சிகா மற்றும் அவளது குடும்பம் மட்டுமல்ல, ருச்சிகாவின் தோழி ஆராதனாவும் அவளது குடும்பத்தினரும் கூட "நரக வேதனை'க்குள் தள்ளப்பட்டனர்.

 

தன் குடும்பத்தின் மீது ரத்தோர் தொடர்ந்து தொடுத்துவந்த தாக்குதல்கள் காரணமாக, 1994 ஜனவரியில் நஞ்சு உண்டு ருச்சிகா தற்கொலை செய்து கொண்டாள். ருச்சிகா குடும்பத்தினர் ரத்தோருக்கு எதிரான போராட்டத்தைக் கைவிட்ட நிலையில், ருச்சிகாவின் தோழி ஆராதனா குடும்பத்தினர் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் ரத்தோரின் ஆத்திரமும் தாக்குதலும் ஆராதனா குடும்பத்துக்கும் எதிராகத் திரும்பியது. ஒரு 14 வயதுச் சிறுமி உயர் போலீசு அதிகாரியால் பாலியல் வன்முறை செய்யப்பட்டு, அதற்கு நேரடிச் சாட்சியம் இருந்தும், அந்த கிரிமினல் போலீசு வெறிநாய் மீது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் இல்லை.

 

பதவி உயர்வுகள் பெற்று, வழக்கமான விருதுகள், சன்மானங்கள், பாராட்டுக்கள், விருந்துகளோடு பதவி ஓய்வு பெறுகிறான். இறுதியில், வெறும் ஆறுமாதம் சிறைத் தண்டனை (அதுவும் பிணையில் சுதந்திரமாக வெளியில் போகவும் மேல் முறையீடு செய்யவும் அனுமதியோடு). பாலியல் வன்முறைக்கான சட்டப்படி அதிகபட்ச தண்டனைக்கான இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை கூட விதிக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் போலீசு வெறியனால் துன்புறுத்தப்பட்டனர்; பாலியல் வன்முறைக்குப் பலியான சிறுமி தற்கொலைக்குத் தள்ளப்பட்டாள். பாலியல் வன்முறை தவிர, அதிகபட்சம் மரண தண்டனை பெருமளவு பதினோரு கிரிமினல் குற்றங்கள் புரிந்துள்ளான் ரத்தோர். அவன் புரிந்த குற்றங்களுக்கான சாட்சியங்கள் தடயங்கள் எல்லாவற்றையும் அழித்துள்ளான்.

 

 அரசு ஊழியராக இருந்து தனக்கு எதிரான சாட்சியங்களை மிரட்டிக் கலைத்துள்ளான். அரசு பதவியைக் கேடான நோக்கத்துக்குப் பயன்படுத்தியுள்ளான். தற்கொலை செய்து கொண்ட ருச்சிகாவின் பிரேதபரிசோதனை அறிக்கையை, தில்லுமுல்லு செய்து மாற்றி எழுத வைத்திருக்கிறான். இவ்வாறு போலீசு மிருகம் அடுக்கடுக்கான கிரிமினல் குற்றங்கள் செய்து கொண்டிருந்த அதேசமயம், எந்தக்கட்சி ஆட்சியாக இருந்த போதும் அவனது செல்வாக்கும் ஆதரவும் பெருகிக்கொண்டே போனது. காங்கிரசின் கட்சிமாறி புகழ் பஜன்லால் அவனுக்குக் கூடுதல்தலைமை போலீசு பொது இயக்குநராகப் பதவி உயர்வு கொடுத்தார். பின்னர் அரியானா விகாசு கட்சி பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சியில், பா.ஜ.க. மந்திரி சம்பத் சிங் போலீசு மந்திரியாகவும் பான்சிலால் முதலமைச்சராகவும் இருந்தபோது கிரிமினல் ரத்தோர மாநிலத் தலைமை போலீசு பொது இயக்குநராக மேலும் பதவி உயர்வு பெற்றான்.

 

ருச்சிகா வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தொடங்கியபோது, கூடுதல் தலைமைப் போலீசு பொது இயக்குநராக நியமிக்கப்பட்டான். லோக் தளக் கட்சியின் ஓம் பிரகாஷ் சேளதாலா முதலமைச்சரான பிறகு மீண்டும் மாநிலத் தலைமை போலீசு பொது இயக்குநராக்கப்பட்டான். பின்னர், எல்லா அரசு மரியாதைகள், சலுகைகள், உரிமைகள், ஊதியங்களோடு ஓய்வு பெற்றான்.

 

***

 

இங்கே அடிப்படையான சில கேள்விகள் எழுகின்றன. இவ்வளவு கிரிமினல் குற்றங்கள் புரிந்த ஒரு போலீசு வெறிநாயால், இதுவரை எந்தவித சிறு தண்டனையுமின்றி எப்படிச் சுதந்திரமாக வாழ முடிகிறது? கிரிமினல் போலீசு அதிகாரியை எதிர்த்து நீதிக்காக எழுந்து நின்ற வங்கி மேலாளர் மற்றும் அரசு ஊழியர் ஆகிய நடுத்தரக் குடும்பங்களுக்கே இதுதான் கதி என்றால் சாதாரண ஏழைஎளிய மக்களின் நிலை என்ன? நீதியான, அமைதியான, சுதந்திரமான வாழ்க்கையை இவர்களால் எண்ணிப் பார்க்கவும் முடியுமா? நாட்டிலேயே திறமை வாய்ந்தது, தொழில் சுத்தமானது, எந்த வழக்கானாலும் உண்மையை வெளிக்கொண்டுவரத் தகுதியான ஒரே புலனாய்வுத் துறை என்று அனைத்துப் பிரிவு அரசியல்சமூக அமைப்புகளாலும் கைகாட்டப்படும் சி.பி.ஐ. மற்றும் அதிஉயர்ந்த நீதி தேவதையின் கருவறையாக அடையாளம் காட்டப்படும், நம்பிக்கை வைக்கப்படும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் இலட்சணம் யோக்கியதையே இதுதான் என்றால், இனி இந்நாட்டு மக்கள் எந்தச் சட்டநீதி அமைப்பின் மீது நம்பிக்கை வைக்க முடியும்? ருச்சிகா வழக்கு விவரங்களை முழுமையாக அறிந்திருக்கும் ஆங்கிலம் அறிந்த நடுத்தர மேட்டுக்குடி அறிவுஜீவிகள் ஆடிப்போயிருக்க வேண்டும். ஆனால், அவர்களில் ஒருபிரிவு, இன்னமும் இந்தநாட்டின் அரசியல் சட்டநீதி அமைப்பின் மீது நம்பிக்கையூட்டும் வகையில் இந்த வழக்கைப் பார்க்கிறார்கள்.

 

எல்லாம் சட்டநீதிமுறைப்படிதான் நடந்துள்ளன. தங்கள் முன்வைக்கப்பட்ட வழக்குவிவரங்கள் சாட்சியங்கள் வாதங்களின்படிதான் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன. அதுதான் அவர்களின் வரம்பு என்று வாதிடுகிறார்கள். வேண்டுமானால், மீண்டும் நீதிமன்றங்களை அணுகி புதுப்புது வழக்குகள் போட்டு, தங்கள் எண்ணப்படி நீதியைப் பெறமுயற்சிக்கலாம் என்று வாதிடுகிறார்கள். இன்னும் சில அறிவுஜீவிகள் நாட்டின் அரசியல் சட்டம் நீதி அமைப்பு முறை முற்றிலும் தோற்றுப் போய்விட்டது என்பதை ஒப்புக் கொள்ளும் அதே வேளையில், இந்த அமைப்பைச் சீர்திருத்த வேண்டும் அரசியல், சட்ட, நீதித்துறையில் ரத்தோர் போன்ற சில கேடானவர்களால் தான் இப்படி நேர்ந்துவிட்டது. ரத்தோர் போன்ற புல்லுருவிகள் இத்துறைகளில் நுழைந்து விடாமல் தடுப்பதற்காக சட்டங்களையும் விதிகளையும் மேலும் கறாராகவும் கடுமையாகவும் மாற்றியமைக்கலாம் அத்தகைய கருப்பு ஆடுகளை அடையாளங்கண்டு கடுமையாகத் தண்டிக்கவும் வேண்டும்.

 

இத்துறைகளில் பணியாற்றுவோரைக் கண்காணிக்கும் நெறிப்படுத்தும் நடுநிலையாளர்களை கொண்ட ஆணையங்களை அமைக்கலாம்; நல்லொழுக்கத்தையும் நாட்டுப்பற்றையும் போதிப்பக்கலாம் என்றெல்லாம் பண்டிதத்தனமாகிப் பரிந்துரைக்கிறார்கள். ஆனால், போலீசுத் துறையில் ரத்தோர்கள் விதிவிலக்குகள் அல்ல. சமீபத்திய சில சான்றுகளைப் பார்த்தால் இந்த உண்மை துலக்கமாக தெரியும்.

 

• ராஜஸ்தான் மாநிலத் துணைத் தலைமை போலீசு பொது இயக்குநர், ஒரு மலைவாழ் பெண்ணை புதுதில்லிக்கு அருகே கடத்தி வைத்து பாலியல் வன்முறை செய்திருக்கிறான். அவன் மீது வழக்குப் பதிவு செய்து 13ஆண்டுகளாகத் தலைமறைவாக இருப்பதாகவும்,போலீசு அவனைத் தேடி வருவதாகவும், ரத்தோர் விவகாரம் வெளியான பிறகு அவன் மீதான நடவடிக்கையைத் தீவிரப்படுத்தும்படியும் அம்மாநில போலீசுத்துறை அமைச்சர் ஆணையிட்டிருக்கிறார்.

 

• ஒரிசா மாநில தலைமைப் போலீசு பொது இயக்குநரின் மகன், ஒரு ஜெர்மன் நாட்டு சுற்றுலாப் பயணியை பாலியல் வன்முறை செய்த வழக்கில் ஏழாண்டு சிறைத் தண்டனை பெற்று ராஜஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். அவன் தாயான தன் மனைவி சாகக் கிடப்பதாகக் கூறி அந்த அதிகாரி சொந்தப் பிணையில், பரோலில் கொண்டு வந்து தலைமறைவாகும்படி செய்து விட்டார்.

 

செய்திஏடுகளில் பரபரப்பாக பேசப்பட்டவுடன் இடைநீக்கம் செய்யப்பட்டு, அது அடங்கியவுடன் அவர் மீண்டும் அதே பதவியில் அமர்ந்துள்ளார். பல மாதங்களாக அந்த டி.ஜி.பியின் கிரிமினல் மகனைத் தன்பாதுகாப்பில் வைத்துப் பராமரித்தே வருகிறார. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 

• அவ்வளவு ஏன், நமது தமிழ்நாட்டில் போலிமோதல் (போலி என்கவுண்டர்) புகழ் தேவாரம் மீது, வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது மலைவாழ்பெண்களை பாலியல் வன்முறை செய்தது உட்பட சித்திரவதை கொலை வழக்குகள், புகார்கள் எதுவுமே விசாரித்துத் தண்டிக்கப்படவில்லை.

 

• மராட்டிய மாநிலம் மும்பையின் இரகசிய உலகதொழில்முறை குற்றக் கும்பல்களிடமும் வீடு மற்றும் வீட்டுமனைத் தொழில் குற்றக் கும்பல்களிடம் இலஞ்சம் வாங்கிக் கொண்டு ஒன்றுக்கு எதிராக மற்றொன்றின் முக்கிய புள்ளிகளை போலி மோதல்கள் (போலி எண்கவுண்டர்கள்) மூலம் படுகொலைகள் செய்து கோடிகோடியாக சொத்துக்களைக் குவித்தார்கள், பல போலீசுஅதிகாரிகள். இப்படிப்பட்ட போலீசு அதிகாரிகளில் சிலர், கிரிமினல் குற்றக் கும்பல் ஒன்று சமீபத்தில் ஏற்பாடு செய்த புத்தாண்டு களிவெறியாட்ட விருந்தில் கலந்து கொண்டு குடித்துக் கும்மாளமிட்டு ஆடிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

• குஜராத்தில் பயங்கரவாதிகளை என்கவுண்டரில் கொன்றதாகக் கூறி இசுலாமிய இளைஞர்களைப ;பிடித்து நேருக்கு நேர் சுட்டுக் கொன்று, பெண்களைப் பாலியல் வன்முறைக்குப் பலியாக்கியிருக்கிறது, போலீசுஅதிகாரிகளின் கும்பல். அதுமட்டுமல்ல் விருதுகளுக்காகவும் பதவி உயர்வுக்காகவும் ஆந்திரா, மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், உ.பி. மற்றும் தில்லி போலீசார், பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் கொள்ளையர்கள் கிரிமினல் குற்றக் கும்பல்களுடன் மோதல் என்ற பெயரில் சிறைக் கைதிகளைப் பணத்துக்குப் பரிமாறிக்கொள்வதையும் ஒரு தொழிலாக்கிக் கொண்டுள்ளார்கள் என்ற உண்மையும் வெளியாகியுள்ளது.

 

இப்படி பொதுவில் போலீசுக்காரர்கள், குறிப்பாக உயர் போலீசு அதிகாரிகள் புரியும் கிரிமினல் குற்ற வழக்குகள் பலவாகவும், நாளும் அதிகரித்தவாறும் இருந்தபோதும், பெரும்பாலும் அவ்வழக்குகள் பதிவு செய்யப்படுவதோ, விசாரணை மற்றும் தண்டனை எதுவும் வழங்கப்படுவதோ இல்லை. நாட்டின் சட்டநீதிஅமைப்பு முழுவதும் அவர்கள் என்னதான் குற்றம் புரிந்தாலும், தண்டனையின்றித் தப்பித்துக் கொள்ளும் வகையிலே கட்டமைக்கப்பட்டுள்ளது. முதலாவது, அரசு அதிகார வர்க்கத்தினர், பதவியிலிருக்கும் அரசியல்வாதிகள், போலீசு அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் கிரிமினல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அப்பட்டமாகத் தெரிய வந்தாலும், அரசாங்க அனுமதியின்றி அவர்கள் மீது வழக்குப் போட முடியாது. அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினரைத் தகுந்த முறையில் "கவனிப்பதன்" மூலம் பல நூற்றுக்கணக்கான வழக்குகளிலும் அரசாங்க அனுமதி வழங்குவதை தடுத்து விசாரணை தண்டனை இன்றி கிரிமினல் போலீசுக்காரர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். இரண்டாவதாக, போலீசுக்காரர்கள் இராணுவத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து, தண்டிக்கப்பட்டால், முறையே போலீசு மற்றும் இராணுவத்தினரின் தார்மீகபலம் குன்றிப் போய்விடும் என்று அவர்களின் உயரதிகாரிகள், ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல் பண்டிதப்பெருச்சாளிகள் கூச்சல் போடுகிறார்கள். எனவே, என்னதான் கிரிமினல் குற்றம் புரிந்திருந்தாலும், போலீசுக்காரர்கள் தண்டிக்கப்படக் கூடாது என்பது பொது மரபாகவும் எழுதப்படாத விதியாகவும் பொது நிர்பந்தமாகவும் நிலைநாட்டப்பட்டுள்ளது.

 

மூன்றாவதாக, அரசியல்வாதிகள் போலீசு அதிகார வர்க்கத்தினரின் கிரிமினல் கூட்டைத் தகர்க்க வேண்டும்; போலீசுத் துறை சீர்திருத்தப்பட வேண்டும் போலீசாரை கண்காணித்து நெறிப்படுத்த வேண்டும் என்று பல்வேறு ஆணையங்கள் (கமிஷன்கள்) பரிந்துரைத்தும், வௌ;வேறு அரசியல் கட்சிகளின் அரசாங்கங்கள் மத்தியிலும் மாநிலங்களிலும் அமைந்த போதும், இந்தப்பரிந்துரைகள் எதன் மீதும் நடவடிக்கை எடுக்க மறுத்துவருகின்றன. நான்காவதாக, போலீசின் மனித உரிமை மீறல் குற்றங்களை விசாரித்து, பரிந்துரைகள் செய்யும் அமைப்புகளான தேசிய மனித உரிமை ஆணையம், பெண்களுக்கான தேசிய ஆணையம் மற்றும் சிறுபான்மையினருக்கான மனித உரிமை ஆணையம் போன்றவற்றை ஆட்சிக்கு வந்த எல்லா கட்சிகளின் அரசாங்கங்களும் திட்டமிட்டுப் புறக்கணித்து, செயலிழக்கச் செய்துவிட்டன. இந்தக் கமிசன்களின் வரம்புகளே பல் பிடுங்கப்பட்ட தன்மையோடு தான் வரையறுக்கப்பட்டுள்ளன. அதாவது, இந்தக் கமிசன்களின் விசாரணைக்கு போலீசுக்காரர்கள் ஒத்துழைக்க மறுத்தாலோ, குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட நிலையிலும் குற்றவாளிகளைத் தண்டிக்கவோ மேற்படி ஆணைகளுக்கு அதிகாரம் கிடையாது.

 

ஆக, சாதாரண (சிவிலியன்) குடிமக்கள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டபூர்வமாகவோ, சட்ட விரோதமாகவோ எந்தவித நடவடிக்கை எடுக்கவும் (போலீசுடன் மோதல் என்ற பெயரில் சுட்டுக் கொல்லவும்) எல்லாவித உரிமையும் வசதிவாய்ப்பும் போலீசுக்கு உண்டு. ஆனால், போலீசு அதிகாரிகள் மோசமான கிரிமினல் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அவர்கள் மீது புகார் கொடுப்பது வழக்குப் பதிவு செய்வது உட்பட எந்தவித நடவடிக்கை மேற்கொள்வதற்கும் சாதாரண (சிவிலியன்) குடிமக்களுக்கு உரிமை கிடையாது. இதுதான் இந்த நாட்டின்சட்ட நீதி அமைப்பு முறை. எல்லாவற்றுக்கும் மேலாக, பயங்கரவாத, தீவிரவாத, சமூக விரோத, கிரிமினல் மஃபியா கும்பல் எதிர்ப்பு என்ற பெயரில், போலீசார் என்னதான் சட்ட விரோத கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டாலும் எவ்வித கேள்வியும் எழுப்ப முடியாது. அப்படிப்பட்ட போலீசு கிரிமினல் குற்றவாளிகள் மாபெரும் வீரதீர நாயகர்களாகப் போற்றப்பட்டு, விருதுகளும் பதவி உயர்வுகளும ;பெறுகிறார்கள். பஞ்சாபில் 1500க்கும் மேற்பட்ட இளைஞர்களை சந்தேகப்படத்தக்க பயங்கரவாதிகள் என்று கருதி விசாரணை ஏதுமின்றி சுட்டுக் கொன்றான், அம் மாநிலதலைமை போலீசு பொது இயக்குநர் கே.பி.எஸ்.கில். அவன் ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியை பொது நிகழ்ச்சியில் வைத்து மானபங்கம் செய்தபோதும், பஞ்சாபில் அவன் ஆற்றியதாகக் கூறப்பட்ட வீரதீர கதாநாயகத்தனத்துக்காக அவன் தண்டிக்கப்படவில்லை.

 

குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் உச்சநீதிமன்றம் அவனுக்கு நன்னடத்தைக் கண்காணிப்புக் கால "தண்டனை" மட்டுமே விதித்து சுதந்திரமாகத் திரிய விட்டது. ரத்தோர்கள், கில்கள் போன்ற உயர் போலீசு கிரிமினல்களின் குற்றங்களை, தண்டனையின்றி அவர்கள் தப்பித்துக் கொள்வதைப் பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டும் செய்தி ஊடக அறிவாளிகள், வக்கணையாகப் பேசும் அறிவுஜீவிகள், மனித உரிமைப் போராளிகள் இவர்களில் அத்தனை பேரும் ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் தமது பார்வையைச் செலுத்த மறுக்கிறார்கள்.

 

• எந்தவொரு சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகள், நெருக்கடிகள் முற்றினாலும் ஒடுக்குமுறைச்சட்டங்களை மேலும் கடுமையாக்கி இரும்புக் கரங்கொண்டு ஒடுக்குவதற்காக போலீசுக்கு எல்லை இல்லாத அளவுக்கு அதிகாரங்கள் குவிக்கப்படுகிறது.

 

• இப்படிச் செய்யும்போது, தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை சொந்த நலன்களுக்காக முறைகேடாகப் பயன்படுத்தி, அதற்கு எதிராக போலீசு மீது எந்தவித நடவடிக்கை மேற்கொள்வது, நீதிமன்றங்களிலேயே கூட முறையீடு செய்வது, போலீசு யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கட்டாயம் ஏதும் கிடையாது என்ற பாதுகாப்புக் கவசமளிக்கப்படுகிறது.


• இவ்வாறு வரம்பற்ற அதிகாரம் வழங்கப்படும் வகையிலாக சிறப்பான சோதித்தறியப்பட்ட தனிச்சிறப்பான தகுதி ஏதும் போலீசுக்காரர்களுக்கு இருக்கிறதா? இந்த அதிகாரங்களைத் தமது சொந்த ஆதாயங்களுக்காக முறைகேடாக அவர்கள் பயன்படுத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?

 

• ஆர்.கே.