Language Selection

புதிய ஜனநாயகம் 2010

கருப்புப் பட்டியலில் உள்ள தமிழகத்தின் 16 தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்ற மைய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, கல்விக் கொள்ளையர்களுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் மீண்டும் குமுறி எழுந்து அடங்கியிருக்கிறது.

தங்களது எதிர்கால வாழ்வு இருண்டு போயுள்ளதை அறிந்த மாணவர்கள், தலைநகர் சென்னை மட்டுமின்றி, தமிழகமெங்கும் தன்னெழுச்சியாகத்திரண்டு கல்லூரிகளின நாற்காலி மேசைகளை அடித்து நொறுக்கி தீயிட்டும், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டும் தமது குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர். பல்கலைக் கழகங்களுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு, விடுதிகளிலிருந்து கட்டாயமாக மாணவர்கள் வெளியேற்றப்பட்டு போராட்டம் முடக்கப்பட்டுள்ளது.

 

நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களுக்கான வழிகாட்டல் குறித்து உச்சநீதி மன்றத்தில் வழக்குரைஞர் விபல்சர்மா தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், இது குறித்து மைய அரசிடம் விளக்க அறிக்கை கேட்டது. அதனடிப்படையில் அமைக்கப்பட்ட பேராசிரியர் தாண்டன் கமிட்டி, நாட்டிலுள்ள 126 தனியார் பல்கலைக் கழகங்களில் 38 மட்டுமே விதிமுறைப்படி இயங்குகிறது; 44 பல்கலைக் கழகங்கள் சுமாராக உள்ளதால், இவற்றுக்கு மூன்றாண்டு அவகாசம் அளிக்கலாம்; எஞ்சியுள்ள 44 பல்கலைக் கழகங்கள் மிக மோசமானவை, அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அறிக்கை சமர்பித்தது.

 

மோசமான பல்கலைக் கழகங்களின் பட்டியலில், 16 பல்கலைக் கழகங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. மைய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், திராவிடர் கழக வீரமணியின் பெரியார் மணியம்மை விஞ்ஞான தொழில்நுட்பக்கழகம், (அ)நீதிக் கட்சியின்தலைவர் ஏ.சி.எஸ்.இன்டாக்டர் எம்.ஜி.ஆர் கல்விமற்றும் ஆராசூச்சிக் கழகம், சாதிக் கட்சி நடத்தும் டாக்டர் சேதுராமனின் மீனாட்சி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கருப்புப் பண கல்விக் கொள்ளையர்களின் நிறுவனங்களும் இதில் அடங்கும். அறுக்க மாட்டாதவன் கையில் ஆயிரம் கருக்கறுவாள் என்ற கதையாக, நாடெங்கிலும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்க 51 அரசு நிறுவனங்கள் இருந்த போதிலும், அவை அனைத்தும் இந்த கொள்ளையையும் மோசடியையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதான் நிற்கின்றன.

 

உயர்கல்வி தொடர்பான அரசின் கொள்கையும் சட்டதிட்டங்களும் இவற்றை ஊக்குவிப்பதாகவே உள்ளன. கடந்த பத்தாண்டுகளில் பல்கலைக்கழக மானியக் குழுவும், மனிதவள மேம்பாட்டுத் துறையும் தனியார் கல்விக் கொள்ளைக்கு அனுமதி வழங்கிய வேகத்தைப் பார்த்தாலே, அவை இந்திய மாணவர்களின் நலனுக்கு எதிராக இருப்பதை அறிய முடியும். சட்ட விதிகளை வளைத்து தனியார் கல்விக்கொள்ளைக்கு கதவை அகலத் திறந்துவிடுவதைத் தவிர அரசிடம் வேறு கொள்கை இல்லை என்பது புரியும். தனியார் கல்வி நிறுவனங்கள் தொடங்குவது இந்தியஅரசியலமைப்புச் சட்டம் குடிமகனுக்கு வழங்கியுள்ள உரிமை என்று ஏற்கெனவே தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம், இப்போது அளித்துள்ள இடைக்காலத் தீர்ப்பில், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் கருத்தைக் கேட்டு இறுதி முடிவு எடுக்கலாம் என்று கூறி கல்விக் கொள்ளையர்களைக் காப்பாற்றியுள்ளது.

 

 மாணவர்கள் தங்கள் கல்வியை இதே கல்விக்கூடங்களில் தொடரலாம் என்றும், இக்கல்வி நிறுவனங்கள் நிகர்நிலைப் பல்கலைக் கழகத் தகுதிபெறும் முன் இணைக்கப்பட்டிருந்த பல்கலைக் கழகங்களின் பட்டங்கள் தற்போதைக்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் மைய அரசு அறிவித்துள்ளது. கல்வி வியாபாரிகளின் பகற்கொள்ளையும் மோசடியும் வெட்டவெளிச்சமான பின்னரும் அரசு இப்பகற்கொள்ளையர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வளவுக்கும் பிறகும் வேறெந்த மாணவர் அமைப்பும் போராட முன்வராத நிலையில், "பகற்கொள்ளையடிக்கும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் அனைத்தையும் அரசுடமையாக்கு! மைய அமைச்சர் ஜெகத்ரட்சகன், ஏ.சி.எஸ்., கி. வீரமணி முதலான கல்விக்கொள்ளையர்களைக் கைது செய்து சிறையிலடை! அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்!

 

சூட்கேசுக்குச் சோரம்போன கல்வி அதிகாரிகள ;அமைச்சர்களைக் கைது செய்!  தனியார்மயதாராளமயக் கொள்கையை முறியடிக்க உழைக்கும் மக்களுடன் இணைந்துபோராடுவோம்!" என்ற முழக்கங்களுடன் கடந்த 27.1.10 அன்று சென்னை அரசு பொது மருத்துவமனை அருகே பு.மா.இ.மு. எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. கல்விக் கொள்ளையர்களுக்கும் தனியார்மயத்துக்கும் எதிராக நடந்த இந்த ஆர்ப்பாட்டம், மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது. கல்விக் கொள்ளையர்களுக்கு எதிராக பு.மா.இ.மு. தொடர்ந்து பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகிறது.

 

- பு.ஜ.செய்தியாளர்கள்