அரசு பயங்கரவாதம் கொடியது. அதிலும் உலகப்பொது எதிரியான அமெரிக்க அரசு பயங்கரவாதம் மிகக்கொடியது. கியூபா எல்லையை ஒட்டியுள்ள குவாண்டனோமோ சிறை, ஈராக்கின் அபு கிரைப் சிறை, அமெரிக்கப் போர்க் கப்பல்கள் என்ற பெயரில் உள்ள 'மிதக்கும் சிறைச்சாலைகள்' முதலானவற்றில் தொடரும் காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைகளும் இரத்தத்தை உறைய வைக்கும் கொடுமைகளும் அடுத்தடுத்து அம்பலமாகி அமெரிக்கப் பயங்கரவாதம் உலகெங்கும் காறி உமிழப்படுகிறது.
இவையும் போதாதென்று, இப்போது ஆப்கானில் பாக்ராம் எனுமிடத்தில் இன்னுமொரு கொடிய இரகசிய சிறைச்சாலையை அமெரிக்கா நடத்திவரும் உண்மையும், அங்கு நடக்கும் கொடுமையும் மெதுவாகக் கசியத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஆஃபியா சித்திகி என்ற பெண் மருத்துவரை உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர் அமெரிக்காவில் நரம்பியல் துறையில் மருத்துவஉயர் கல்வி கற்றவர். அமெரிக்காவிலிருந்து திரும்பிய அவர் 2003ஆம் ஆண்டில் அமெரிக்க உளவுப் படையினரால் கடத்திச் செல்லப்பட்டு, ஆப்கானில் உள்ள பாக்ராம் இரகசிய சிறையில் அடைக்கப்பட்டு, அமெரிக்க ஆக்கிரமிப்பு பயங்கரவாதப் படையினரால் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக கொடூரமாக வதைக்கப்பட்டார்.(பார்க்க: புதிய ஜனநாயகம், செப். 2008).ஆஃபியா சித்திகி வதைக்கப்பட்ட பாக்ராம் இரகசிய சிறையானது, குவாண்டனோமோ சிறையைவிட இருமடங்கு பெரியது.
இது ஆப்கானின் தலைநகரான காபூலுக்கு வடகிழக்கே 49 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. விமானத் தளம் என்று வெளியுலகுக்குக் காட்டப்படும் பாக்ராமிலுள்ள இரகசிய சிறைச்சாலை, மிகக் கொடிய பயங்கரவாத சித்திரவதைக் கூடம். அமெரிக்க கொலைகார உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வினால் சட்டவிரோதமாக இயக்கப்படும் மிகக் கொடிய இச்சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு வதைக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கை அரசாங்க இரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது. கடந்த 2002 முதல் இந்த சிறையில் ஏறத்தாழ 2000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. பயங்கரவாதக் குற்றம் சாட்டி யேமன், துனிசியா மற்றும் ஆப்கான் நாட்டவரைக் கைது செய்து, பாக்ராம் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறி நான்கு ஆட்கொணர்வு வழக்குகள் அமெரிக்காவில் தொடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் பாகிஸ்தான், தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகக் குடியரசு, பின்னர் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அமெரிக்க உளவுப்படையினரால் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்குகள் தவிர சி.ஐ.ஏ.வினால் கடத்திச் செல்லப்பட்ட கைதிகளின் நிலையை அறிவிக்கக்கோரி அமெரிக்காவில் மேலும் இரு ஆட்கொணர்வு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இதன் பிறகே, பாக்ராம் இரகசிய சிறை பற்றியும் அங்கு நடக்கும் கொடுமைகள் பற்றியும் செய்திகள் வெளிவரத் தொடங்கின. அல் காய்தா, தாலிபான் தீவிரவாதி என்று முத்திரை குத்தப்பட்டோ, அல்லது பயங்கரவாதி என்ற சந்தேகத்தின் பேரிலோ கைது செய்யப்படுபவர்கள் அமெரிக்கச் சிறைகளில் அடைக்கப்படுவதில்லை. நீதிமன்றங்களிலும் முன்னிறுத்தப்படுவதில்லை. அவர்கள் பாக்ராம் சிறைகளில் அடைக்கப்படுகின்றனர். பத்திரிகையாளர்களோ வழக்குரைஞர்களோ இங்கு அனுமதிக்கப்படுவதுமில்லை.
பாக்ராம் இரகசிய சிறையில் அனைத்துலக மனிதஉரிமை விதிகளுக்கு எதிராக குழந்தைகளும் சிறுவர்களும் கூட அடைத்து வைத்துவதைக்கப்பட்டு வருகின்றனர். முகம் தெரியாத, பெயர் தெரியாத கைதிகள் ஆண்டுக் கணக்கில் அச்சிறையில் வதைபடுகின்றனர். பாக்ராம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை எவ்வளவு, கைதிகளின் பெயர்கள் என்ன என்ற எந்த விவரமும் யாருக்கும் தெரியாது. இதனால் எந்த வழக்குரைஞரும் கைதிகளின் சார்பாக ஆஜராக முடிவதில்லை. அமெரிக்க குடியுரிமைக் கழகம் (ஏ.சி.எல்.யு.)பாக்ராம் சிறைக் கொடுமை பற்றியும் அங்குள்ள கைதிகளின் விவரங்களைக் கேட்டும் "சுதந்திர தகவல் அறியும் சட்டத்தின்'கீழ் மனு செய்து கோரியது. அக்கோரிக்கையை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடிசெய்து விட்டது. இந்த இரகசிய சிறைச்சாலை பற்றியும் அங்கு நடக்கும் கொடுமைகள் பற்றியும் எந்த விவரமும் வெளிவராமல் அமெரிக்க வல்லரசு திட்டமிட்டு தடுத்துவருகிறது.
உலகின் பல்வேறு நாடுகளது மனித உரிமைஅமைப்புகள், ஆப்கான் அதிபர் கர்சாய் மற்றும் அந்நாட்டின் சுதந்திர மனித உரிமைக் கமிசன் ஆகியவற்றுடன் பலமுறை தொடர்பு கொண்டு கைதிகள் பற்றி விசாரித்தபோதிலும், இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. குவாண்டனோமோ சிறைக் கொடுமையை ஒப்பிடும்போது, பாக்ராம் சிறை மிகக் கொடியது. 2002ஆம் ஆண்டில் பாக்ராம் சிறையிலிருந்து குவாண்டனோ மோசிறைக்கு மாற்றப்பட்ட ஓமர் டேஹயஸ் என்ற கைதி,"இரவு முழுவதும் சித்திரவதையால் அவதிப்படும் கைதிகளின் மரண ஓலம் அந்த சிறையெங்கும் எதிரொலிக்கும்" என்று கூறுகிறார். பத்திரிகையாளர்கள் முன் அவர் அச்சிறைக் கொடுமைகளை விவரிக்கும்போதே,அவரது உடல் அச்சத்தால் நடுங்குகிறது. ஆடைகளை உரித்து அம்மணமாக்குவது, அம்மணநிலையிலேயே சித்திரவதை செய்வது,
நிரந்தரமாக சங்கிலியால் பிணைத்து வைப்பது, பேரொலியைத்தொடர்ந்து எழுப்பி செவிடாக்குவது, தொடந்து மனஉளைச்சலை ஏற்படுத்துவது, கைகளைக் கட்டிவிட்டு ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சி கண்களைக் கூசவைத்து குருடாக்குவது, தனிமைச் சிறையில் நிரந்தரமாக அடைத்து வைப்பது, நாய்களை ஏவி அச்சுறுத்துவது, முஸ்லிம்களின் மத அடையாளமாகக் கருதப்படும் தாடியைச் சிரைத்து அவமானப்படுத்துவது, கொளுத்தும் வெய்யிலில் அம்மணமாக சுடுமணலில் தள்ளி வதைப்பது, பெண் கைதிகள் மீது பாலியல் வன்முறையை ஏவுவது, சிறையிலுள்ள மலக்குழியில் அம்மணமாக கைதிகளைத் தள்ளி வதைப்பது என அங்கு நடக்கும் கொடுமைகளைக் கேட்டால் முதுகெலும்பே சில்லிட்டுப் போகும். குவாண்டனோமோ சிறைக் கொடுமைகள் பற்றிய செய்திகள் மெதுவாகக் கசியத் தொடங்கியதும், அங்கு படிப்படியாக கைதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
ஜனவரி 22ஆம் தேதி முதலாக குவாண்டனோமோ சிறை மூடப்படும் என்று ஒபாமா அரசு அறிவித்துள்ளது. அதேசமயம், ஒதுக்குப்புறமாக ஆப்கானில் அமைந்துள்ள பாக்ராம் இரகசிய சிறையில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, சித்திரவதையும் கேள்விமுறையின்றி நடக்கிறது. குவாண்டனோமோ சிறையை மூடப்போவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ஒபாமா, பாக்ராம் சிறையை விரிவுபடுத்த ஏறத்தாழ 2500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். பயங்கரவாதி புஷ்{க்கும் 'ஜனநாயகவாதி' ஒபாமாவுக்கும் உலக மேலாதிக்கக் கொள்கையில் எவ்வித வேறுபாடும் கிடையாது. இப்போது மேலும் அதிகமான அமெரிக்கப் படைகள் ஆப்கானில் குவிக்கப்பட்டுவரும் நிலையில், பாக்ராம் சிறையில் கைதிகளின் எண்ணிக்கையும், கேள்விமுறையற்ற சித்திரவதைகளும் தீவிரமாகும் என்பதையே காட்டுகின்றன. "குவாண்டனோமோ, அபு கிரைப் சிறைச்சாலைகள் மட்டுமல்ல, பாக்ராம் சிறையும் இன்னும் இரகசியமாக இயக்கப்பட்டுவரும் பல்வேறு சிறைச்சாலைகளும் மூடப்பட வேண்டும்; ஆக்கிரமிப்பு வெறிபிடித்த அமெரிக்கா இந்நாடுகளிலிருந்து வெளியேற வேண்டும்" என்ற கோரிக்கையுடன் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இனியும் தனது கொலைகார கோரமுகத்தை மறைத்துக் கொள்ள முடியாதபடி, நாகரிக உலகின் காட்டுமிராண்டியான அமெரிக்காவின் பயங்கரவாதம் அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது. அமெரிக்க மேலாதிக்கப் பயங்கரவாதிகளை சவக்குழியில் தள்ளிப்புதைக்கும் மகத்தான பணியை, அனைத்துலக உழைக்கும் மக்கள் நிறைவேற்ற வேண்டியதுதான் இனி பாக்கியிருக்கிறது.
குமார்