இன்று எதிர்ப்புரட்சி அரசியல் என்பது, படிப்படியாக மார்க்சியத்தை திரித்துக்காட்டுவதில் தொடங்குகின்றது. புரட்சிகர நடைமுறையின்றி, புரட்சிகர அமைப்பு இன்றி, அதற்கான அரசியல் வேலைத்திட்டம் இன்றி, சில தனிநபர்கள் முதல் புதிய ஜனநாயகக்கட்சி வரை இந்த தேர்தலில் பங்கு கொள்கின்றது அல்லது ஆதரிக்கின்றனர். இதை நியாயப்படுத்த  ஆளுக்காள் நியாயம் கற்பிக்கின்றனர். இந்த வகையில் மாவோவையும் இனியொரு தமக்கு ஆதரவாக களத்தில் இறக்கியுள்ளது.

மாவோ யப்பானுக்கு எதிரான யுத்தத்தின் போது, கொமிங்டாங்குடனான உடன்பாட்டுடன் யுத்தத்தை எதிர் தொடுத்தது. இதன் போது நாட்டின் பொது அரசியல் நீரோட்டத்தில் பங்கு கொள்வதைப்பற்றியும் தன்நிலையை வெளிப்படுத்தியது. இவை அனைத்தும் கொமிங்டாங்குடனான ஒரு ஜனநாயகப் புரட்சி வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தான் நடந்தது. மாவோவின் வார்த்தையில் அதைச் சொன்னால் "முன்பாகவே டாக்டர் சன்-யாட்-சென்னால் வலியுறுத்தப்பட்ட அரச கட்டுமானமாக இருக்கும்." என்றார். ஜனநாயகக் குடியரசு பற்றிய உங்கள் வரைபடம் என்ன? என்ற கேள்விக்குத் தான், மாவோ இந்தப் பதிலை அளிக்கின்றார். ஜனநாயகக் குடியரசு என்ற, ஜனநாயகப்புரட்சி வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்தது.   டாக்டர் சன்-யாட்-சென்னால் முன் வைத்த ஜனநாயகப் புரட்சி அடிப்படையில், 1911ம் ஆண்டு நடத்திய ஜனநாயகப் புரட்சியே இதன் அரசியல் உள்ளடக்கமாகும்.

 

1938 இதன் அடிப்படையல் தான் கம்யூனிட்ஸ்கட்சி மீண்டும் கொமிங்டாங்குடனான உடன்பாட்டுக்கு வந்தது. இதன் அடிப்படையில் தான், அரசியல், இராணுவ வியூகத்தை அது அமைத்துக்கொண்டது. புரட்சியினை தொடர்வதற்கான அடிப்படையில், ஜனநாயகப் புரட்சியின் கூறுகளை உள்ளடக்கிய வண்ணம், அந்த நாட்டின் குறிப்பான சூழலை அடிப்படையாகக் கொண்டு இது அமைந்தது. இது மிகச்சரியானது.

 

உதாரணமாக நேபாளத்தில் மாவோயிஸ்டுகளின் நிலை இந்த வகையில் மிகச் சரியானது. ஜனநாயகப் புரட்சிக் கடமைகளை நிறைவுசெய்ய, ஆளும் வர்க்கங்கள் உடன்பட்ட நிலையில், அதை நிறைவு செய்யும் குறிப்பான அரசியல் போக்கில் அங்கம் வகிக்கின்றனர். இது குறைந்தபட்சம், ஜனநாயக புரட்சியின் கடமைகளை நிறைவு செய்யும் அடிப்படையிலான ஒன்று.

 

இதை ஆளும் வர்க்கங்கள் நிறைவு செய்யத் தவறும் பட்சத்தில், மீண்டும் பொது அரசியல் நீரோட்டத்தக்கு வெளியில் ஆயுதப்போராட்டம் மூலமாக அதை அடைவது தவிர்க்க முடியாது.

 

ஏன் இந்திய ஆக்கிரமிப்பு இலங்கையில் நடந்த போது, புலிகள் பிரேமதாச அரசுடன் செய்து கொண்ட ஓப்பந்தம் மிகச் சரியானது. ஏன் இதை ஜே.வி.பியுடன் அவர்கள் செய்யவில்லை என்ற விமர்சனத்துக்கு அப்பால், இந்த ஓப்பந்தம் சரியானதாக இருந்தது. இப்படி இவை குறிப்பான சூழல் சார்ந்தவை.

 

இந்தக் குறிப்பான சூழலுக்குரியதை, பொதுத்தளத்துக்கு பாவிப்பதும், காட்டுவதும் சந்தர்ப்பவாதமாகும். திரித்தலுமாகும். புதிய ஜனநாயகக்கட்சி புரட்சிகர ஒரு வர்க்க கட்சியாகவே செயல்படுவது கிடையாது. 1970க்கு பிந்தைய இலங்கையில் தமிழ் சிங்கள இளைஞர்கள் இளைஞிகளின் பாரிய தியாகங்கள் ஒரு விடுதலையின் பெயரில் செய்யப்பட்டு இருக்கின்றது. பல பத்தாயிரம் பேர் இதுதான் விடுதலை என்று நம்பி அதற்காக மரணித்தார்கள். இக்காலத்தில் இதன் தவறான தலைமையை எதிர்த்து சரி, அவர்கள் எந்த அரசுக்கு எதிராக போராடினார்களோ அதை எதிர்த்தும் கூட, போராடியது கிடையாது. ஆனால் ஒரு கட்சியாக இருந்திருகின்றது. எந்த தியாகம் இதற்குள் நிகழவில்லை. வெளியில் பல போராட்டங்கள் நடந்தன.

 

மரணங்கள் அவலங்கள் தொடாந்த காலத்தில் கூட, பாராளுமன்றத்திற்கு செல்லும் பாதையில் சென்றவர்கள், வெறும் தொழிற்சங்;க மற்றும் சிறுஅளவிலான எதிர்ப்பினை மற்றைய கட்சிகள் போல் நடத்தினர். புரட்சிகர கட்சியின் உள்ளடக்கத்துடன் இயங்கியது கிடையாது. இதனால் போராட்டங்களும் தியாகங்களும் இவர்களுக்கு வெளியில் நடந்தது. இது வரலாறு.

 

மே 18, இனியொரு, புதுக்குரல் போன்ற தேர்தல் ஆதரவு பிரிவினரிடம், குறைந்தபட்சம் ஒரு அரசியல் வழிமுறை சார்ந்த கொள்கையோ திட்டமோ கிடையாது. இப்படிப்பட்ட நிலையில், நல்லவர்களை நேர்மையானவர்களை தெரிவு செய்வது பற்றி கூறுவதும், ஜனநாயக சூழலை உருவாக்குவது பற்றியும் பேசுகின்றனர். வேடிக்கைதான். தங்கள் தேர்தலை ஆதரித்து நிற்பதால், நல்லவர்கள் வல்லவர்கள், நேர்மையானவர்கள் வந்துவிடுவார்கள் என்பதும், 1980 முந்தைய ஜனநாயக சூழல் திரும்பிவிடும் என்பதும் நகைச்சுவைதான்.

 

1980 முந்தைய ஜனநாயகச் சூழலை மீட்க தேர்தலை தாம் ஆதரிப்பதாக கூறுவது, புலியெதிர்ப்பு அரசியல் ஜனநாயகத்தை மீட்க இலங்கை அரசை ஆதரித்து ஜனநாயகத்தை மீட்ட கதைதான். தேர்தல் பற்றி புலியெதிர்ப்பின் ஒரு பகுதி இப்படித்தான் சொல்லுகின்றது.  மக்களை புரட்சிகரமாக அணிதிரட்ட ஒரு திட்டத்தையோ, நடைமுறையையோ கொண்டிராதவர்கள், அதனடிப்படையில் கருத்தை முன்வைக்காதவர்கள், தங்கள் குறுகிய நலனுக்காக தேர்தலை வழிகாட்டுகின்றனர்.

 

இதில் வேடிக்கை என்னவென்றால், இதை பற்றியெல்லாம் தங்களுக்கு தெரியும் என்பது தான். இயக்கங்கள் எமக்கு இந்தியாவையும் ஏகாதிபத்தியத்தையும் தெரியும் என்று கூறி, இந்தியாவைப் பயன்படுத்தி அதே கதைதான்;. இதில் வேடிக்கை என்னவென்றால் எங்களுக்குத் தெரியும் என்று கூறி, அதை மக்களுக்கு பிரச்சாரம் செய்வதை மறுப்பதுதான். அதாவது மக்கள் தேர்தல் வழியைக் காட்டி, நாங்கள் மக்களை மிஞ்சி எல்லாம் தெரிந்த தலைவராக காட்டிக்கொள்வது. இதன் மூலம் தங்கள் குறுகிய நலனுக்காக, மக்களை மந்தையாக மேய்ப்பதுதான்.              


இதற்கு மாவோவை காட்டுவது வேடிக்கைதான். மாவோ என்ன சொன்னார் என்பதையும் பாருங்கள்.

    

"கேள்வி: கொமிங்டாங்கிற்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையேயான தொடர்பு தொடர்ந்தும் நீடிக்கும் என்று கருதுகிறீர்களா?

 

பதில்: ஆம் நான் தொடரும் என்றே நம்புகின்றேன். எம் இருவருக்கும் இடையே 1927இல் தோன்றிய மோதல் கம்யூனிஸ்ட் கட்சியின் விருப்பத்துக்கு எதிரானது. கொமிங்டாங்குடனான(குழு) ஒரு பிளவை கம்யூனிஸ்ட் கட்சி என்றுமே விரும்பாது. அவர்களுக்கிடையேயான பிளவு நாட்டை எங்கு நோக்கிக் கொண்டுபோகும் என்பதை தமது பத்து வருடகால அனுபவங்களின் மூலம் இரு கட்சிகளும் மட்டுமல்ல, முழுத் தேசமும்கூட நன்றே புரிந்து வைத்துள்ளனர். நாம் மேலும் ஒன்றுபடுவதற்கு இந்த அனுபவங்கள் எமக்கு உதவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கூட்டணி தொடர்பாக இன்றும் வரப்போகும் எதிர்காலத்துக்குமான எமது நோக்கம் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டமும், நாட்டை அபிவிருத்தி செய்வதிலான கூட்டு வேலையுமேயாகும். இந்த நிலமைகளை அவதானிப்போமானால் எந்தக் கட்சியுடன் நட்புறவு கொண்டுள்ளோமோ அந்தக்கட்சி நம்மைப்போல் நேர்மையாக நடந்துகொள்ளுமேயானால் சீன மக்கள் அனைவராலும் கட்டுப்படுத்தப்படும் இந்தக் கூட்டணி நீண்டகாலத்திற்கு நிலைத்து நிற்கும் என்பது இயல்பானது.

 

கேள்வி: கொமிங்டாங்கிற்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையேயான கூட்டு ஜப்பானிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஒன்றிணைந்த யுத்ததை நடத்துவதற்கானது மட்டுமல்ல, ஆக்கிரமிப்பாளரைத் தோற்கடித்ததன் பின்னால் அது நாட்டை அபிவிருத்தி செய்வதற்குமானது என கம்யூனிஸ்ட் கட்சி தனது அறிக்கையில் கூறியுள்ளது. இது முரண்பாடாகத் தெரியவில்லையா? புதிய அரசை அபிவிருத்தி செய்வதில் இரு வேறு வர்க்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரு கட்சிகள் எவ்விதம் ஒன்றிணைந்து செயல்படமுடியும்?

 

பதில்: ஒரு அரைக்காலனிய நாடான சீனாவை ஜப்பான் தனது காலனியாக மாற்றிவிடுமோ என்ற அச்சம் ஒரு தேசம் என்ற முறையில் சீனாவின் இருத்தலையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. வௌ;வேறு கட்சிகள் வௌ;வேறு வர்க்கங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தினாலும் தற்போது நிலவும் நிலமையின் கீழ் அவை அனைத்தினதும் நிலை கிட்டத்தட்ட ஒரே விதமானதே. இதன் காரணத்தால் ஜப்பானுக்கு எதிரான யுத்தத்தில் மாத்திரமல்ல தேசத்தை விருத்திசெய்வதிலுங்கூட அவற்றினால் ஒன்றிணைந்து செயற்படமுடியும். எவ்விதமிருந்தாலும் இக்கூட்டு ஒரு வரையறுக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையிலானதாக அமையவேண்டும். கட்டாயப்படுத்தப்பட்டதொன்றாகவோ வெறும் சம்பிரதாய வகைப்பட்டதொன்றாகவோ அமையக்கூடாது.

 

ஒரு திட்டவட்டமான வேலைத்திட்டத்தையும் உறுதிசெய்யப்பட்ட கோட்பாடுகளையும் கொண்டிராத எந்தக் கட்சியானாலும் உண்மையான நண்பர்களின் இதய பூர்வமான நட்பைப் புரிந்துகொள்ளமுடியாது. இவ்விதமானதோர் அடிப்படையில் அமையும் நட்புதான் இதயபூர்வமானதாகவும் நீடித்து நிற்கும் தன்மைபெற்றதாகவும் அமையும்.

 

கேள்வி: கம்யூனிஸ்ட் கட்சியால் முன்வைக்கப்படும் ஜனநாயகக் குடியரசு பற்றிய உங்கள் வரைபடம் என்ன?

 

பதில்: கட்சியால் முன்வைக்கப்படும் ஜனநாயகக் குடியரசின் பாராளுமன்றமானது காலனியல் அடிமைகளாக இருக்க மறுக்கும் எமது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக இருக்கும். எந்தக்கட்டுப்பாடும் இன்றி அனைவருக்கும் வாக்குரிமை என்ற கோட்பாட்டின்படியே தேர்தல்கள் நடைபெறும். பரந்த அர்த்தத்தில் சொல்வதானால் இது நீண்டகாலத்திற்கு முன்பாகவே டாக்டர் சன்-யாட்-சென்னால் வலியுறுத்தப்பட்ட அரச கட்டுமானமாக இருக்கும். இந்த வழிமுறைகளில்தான் சீன அரசு வளர்க்கப்படவேண்டும்.

 

கேள்வி: தற்போதைய தேசிய அரசாங்கத்துடன் கம்யூனிஸ்ட் கட்சி திருப்திப்படுகின்றதா? தேசிய சட்டசபை ஒன்று அவசியமென அது கருதுகிறதா?

 

பதில்: ஜப்பானுக்கு எதிரான ஆயுத எதிர்ப்புக்குத் தலைமை தாங்குவதாலும், ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கெதிரான போராட்டத்தில் ஒரு திட்டவட்டமான கோட்பாட்டைப் பின்பற்றி வருவதாலும் நாம் தற்போதைய மத்தியரசை ஆதரிக்கிறோம். ஆனால் தற்காப்பு யுத்தத்தின் வளர்ச்சிக்கு உகந்தமுறையில் இக் கோட்பாடுகளை மேலும் செயல் திறன் மிக்கதாக மாற்றுவதற்காக இந்த அரசாங்கம் தன்னை விரிவுபடுத்தியும் பெருப்பித்தும் கொள்ளவேண்டும். இதற்காக அரசாங்கம் தனது உள்நாட்டுக் கொள்கையில் அவசியமான சில சீர்திருத்தங்களை செய்யுமென எதிர்பார்க்கிறோம். தேசிய ஐக்கியத்தை மேலும் வலுப்படுத்துவதற்காகவும் எமது தேசிய தற்காப்பு அணிகளை மேலும் விரிவுபடுத்துவதற்காகவும் தேசிய சட்டவாக்கசபையை நிறுவும்படி நாம் மத்தியரசைக் கோரியுள்ளோம். இது டாக்டர் சன்-யாட்-சென்னால் அவரது காலத்திலேயே முன்வைக்கப்பட்டதொன்றாகும். தற்காப்பு யுத்தத்தின் நலனுக்கு பலன்தரக்கூடியது எதுவானாலும் அவற்றைச் செய்ய நாம் தயாராய் உள்ளோம்.

 

கேள்வி: வட மாகாணங்கள் மூன்றிலும் (மஞ்சூரியா) ஜப்பானுக்கு எதிரான போர்க்களத்தில் நிற்கும் தன்னார்வ இராணுவத்தை வழிநடத்துவது கம்யூனிஸ்ட் கட்சி தான் என்பது உண்மையா?

 

பதில்: இந்த இராணுவத்துடன் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு நெருக்கமான பிணைப்பை உருவாக்கிவருகிறது என்பது உண்மைதான். இத் தன்னார்வ இராணுவத்தின் தளபதிகளாக இருப்பது பிரபல்யமிக்க கம்யூனிஸ்டுகள்தான் என்பது இந்தப் பிணைப்புக்கோர் எடுத்துக்காட்டாகும். ஜப்பானுக்கெதிரான யுத்தத்தில் அவர்கள் காட்டிவரும் திட்டவட்டமான ஒருமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் பல வெற்றிகளைத் தந்துவருவதை அனைவரும் அறிவர். கம்யூனிஸ்ட்டுகளுக்குப் புறம்பான பல இராணுவக்குழுக்களும் வெகுஜன அமைப்புகளும் இங்கு காணப்படுகின்றன. இருந்தும் ஒரு தேசிய முன்னணியின் அவசியத்தை இந்த மாகாணங்கள்கூட உணரத்தொடங்கியுள்ளன. இவை அனைத்தும் பொதுவான செயல்பாட்டுகளுக்காக ஏற்கனவே ஒன்றிணைந்தும் உள்ளன.

 

கேள்வி: சீன-ஜப்பான் யுத்தத்தையிட்டு அமெரிக்கா எடுத்துள்ள நிலைப்பாடு பற்றிய உங்கள் கருத்து என்ன?

 

பதில்: அமெரிக்கா வாழ் ஜனநாயக அணியினர் அனைத்துலக சமாதானத்துக்காகக் குரல் கொடுத்து வருவதுவும் அந்நாட்டு ஜனாதிபதி ருஸ்வெல்ட் பாசிசத்தைக் கண்டித்துவருவதுவும், ஜப்பானுக்கெதிரான சீனாவின் எதிர்ப்பின் மீது அமெரிக்கப் பத்திரிகைகள் காட்டிவரும் பரிவும், இவை எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்க மக்கள் ஜப்பானுக்கு எதிரான சீன மக்களின் போராட்டத்துக்குக் காட்டிவரும் ஆதரவும் எமது வரவேற்புக்குரியவையாகும். நாம் இவற்றிற்காக அமெரிக்க மக்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். ஆனால் ஆக்கிரமிப்பிற்கு எதிரான யுத்தத்தை முன்னெடுத்துச்செல்ல பிற அரசுகளோடு சேர்ந்து யுத்த நடைமுறை வேலைத்திட்டத்துடன் அமரிக்கா இணைந்து கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

 

 

பி.இரயாகரன்
21.03.2010