08112022வி
Last updateபு, 02 மார் 2022 7pm

தோழர் கண்ணனின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் திருச்சி மாவட்டக்கிளை உறுப்பினராகச் செயல்பட்டு வந்த தோழர் கண்ணன், கடந்த 16.2.2010 அன்று காலை திடீர் மாரடைப்பினால் மரணமடைந்து விட்டார். படிப்பறிவு குறைந்தவராக இருந்தபோதிலும், வர்க்க உணர்வும் போர்க்குணமும் நிறைந்த தோழர் கண்ணன், தன்னைப் புரட்சிகர அரசியலின் பிரச்சாரகனாகக் கருதி உணர்வோடு செயல்பட்டவர். உதிரித் தொழிலாளியான அவர், நாள் முழுவதும் உடலுழைப்பில் ஈடுபட்டுவிட்டு, இரவு நேரங்களில் அமைப்பின் பிரச்சாரப் பணிகளில் சோர்வின்றிப் பணியாற்றினார். கொள்கையின் மீது பற்றுறுதியும், அது வெற்றிபெற வேண்டும் என்ற துடிப்பும் அவரது பேச்சிலும் செயலிலும் எப்போதும் வெளிப்படும். புரட்சிகர அமைப்பையும் தோழர்களையும் இழிவாக அவதூறு செய்த காலிகளை தன் பாதச் செருப்பால் பதம்பார்த்தவர்தான் இந்த உணர்வுமிக்கத் தோழர். எளிய வாழ்வும் கடினஉழைப்பும் புரட்சியின் மீது மாளாக்காதலும் கொண்ட 45 வயதான அத்தோழரின் திடீர் மரணம், ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

 

தோழரின் மரணச் செய்தி அறிந்து திருச்சி மாவட்டம் முழுவதிலுமிருந்து திரண்ட அமைப்புத்தோழர்களும் நண்பர்களும் உறவினர்களும், ம.க.இ.க. அலுவலகத்தில் செங்கொடி போர்த்தப்பட்டிருந்த அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி, அன்று மாலை நடந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று, இடுகாட்டில் இரங்கல் கூட்டம் நடத்தினர். கண்ணீர் மல்க உரையாற்றிய அனைவரும் தோழரின் உயரிய கம்யூனிசப் பண்புகளை வழுவாமல் பின்பற்றவும், அவரது புரட்சிகர கனவை நிறைவேற்றப் பாடுபடவும் உறுதியேற்று அஞ்சலி செலுத்தினர்.

 

தோழர் கண்ணனின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!


மக்கள் கலை இலக்கியக் கழகம்,திருச்சி.
18 புதிய ஜனநாயகம் மார்ச் 2010