திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சுகுணா பவுல்ட்ரி ஃபார்ம் என்ற நிறுவனம் கால்நடைத் தீவனம் மற்றும் கறிக்கோழிகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள், தமிழகமெங்கும் கறிக் கோழிகளையும் தீவனங்களையும் உரிய காலத்திற்குள் கொண்டு சென்று இரவு பகலாகப் பாடுபட்டு வந்தபோதிலும், எவ்விதச் சட்டபூர்வ உரிமைகளுமின்றிக் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டுவந்தனர்.

குமுறிக் கொண்டிருந்த தொழிலாளர்கள், கடந்த 2007ஆம் ஆண்டின் இறுதியில் சி..டி.யு. சங்கத்தில் திரண்டனர். சந்தா, வெண்மணி நினைவுநாள் விழா நிதி, அகில இந்திய மாநாட்டுக்கான நிதி என்றெல்லாம் பல்லாயிரக்கணக்கில் தொழிலாளர்களிடமிருந்து வசூலித்த சி..டி.யு. சங்கம், சேமநல நிதி முதலானவை உரிய முறையில் தொழிலாளர் கணக்கில் சேமிக்கப்படுகிறதா என்று தொழிலாளர்கள் கோரிய போதெல்லாம் இழுத்தடித்து வந்தது. நிர்வாகத்துடன் Nபுச்சுவார்த்தைக்குத் தொழிலாளர் பிரதிநிதிகளை அழைத்துச் செல்லவும் மறுத்தது. இச்சங்கத் தலைமையின் அலட்சியப்போக்கைக் கண்டு வெறுப்புற்ற தொழிலாளர்கள் பு.ஜ.தொ.மு.வுடன் தொடர்புகொண்டு, கடந்த 7 மாதங்களாகத் தொழிலாளர்களை அமைப்பு ரீதியாகத் திரட்டிப்புதிய சங்கக் கிளையைத் தொடங்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

 

அதன் தொடர்ச்சியாக 20.12.09 அன்று உடுமலையில் வரதராசபுரம் மற்றும் சடையகவுண்டன் புதூர் ஆகிய இடங்களில் பு.ஜ.தொ.மு. சங்கத்தின் பெயர்ப் பலகைகளைத் திறந்து சங்கக் கொடியேற்ற முடிவு செய்யப்பட்டது. இதைக் கண்டு ஆத்திரமடைந்த நிர்வாகம், 30.12.09 அன்று சங்க முன்னணியாளர்களான 4 தொழிலாளர்களை இடமாற்றம் செய்து பழிவாங்கியது. நிர்வாகத்தின் பழிவாங்கலை முறியடிக்க வேண்டுமானால், புதிய போர்க்குணமிக்க சங்கத்தில் இணைந்து போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்த தொழிலாளர்கள், கடந்த 31.1.10 அன்று வரதராசபுரம் மற்றும் சடையகவுண்டன் புதூரில் சங்கப் பலகைகளைத் திறந்து கொடியேற்றி, பு.ஜ.தொ.மு. சங்கக் கிளை தொடக்க விழாவை எழுச்சியோடு நடத்தினர். அதை தொடர்ந்து, அன்று மாலை உடுமலை காந்தி சதுக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் சங்கத்தின் முன்னணியாளர்களும் பு.ஜ.தொ.மு. மாநிலச் செயலர் தோழர் சுப.தங்கராசுவும் உரையாற்றினர்.

 

கொடியேற்றல் மற்றும் பொதுக்கூட்டத்தில் தொழிலாளர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று அச்சுறுத்திய நிர்வாகம், போலீசை வைத்தும் மிரட்டிப் பார்த்தது. முன்னணியாளர்களை இடமாற்றம் செய்து பழிவாங்கியது. ""சி.ஐ.டி.யு. சங்கத்தில் இருந்தால் உங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது. பு.ஜ.தொ.மு.வில் சேராதீர்கள்!'' என்று நைச்சியமாகப் பேசி மிரட்டிப் பார்த்தது. இத்துணை மிரட்டல்களையும் துச்சமாக மதித்துத் தொழிலாளர்கள் வர்க்க உணர்வுடன், போர்க்குணமிக்க சங்கத்தில் ஓரணியாகத் திரண்டு அடக்குமுறை பழிவாங்கல்களுக்கு எதிராகப் போராடிவருகின்றனர்.

 

— பு.ஜ.செசூதியாளர்,உடுமலை.