Language Selection

புதிய ஜனநாயகம் 2010

மத்திய அமெரிக்காவில் கியூபாவிற்கு அருகில் அமைந்துள்ள ஹெய்தி தீவைச் சேர்ந்த சாதாரண குடிமகன் தொடங்கி அத்தீவின் முன்னாள் இராணுவஅமைச்சர் உள்ளிட்டுப் பலரும் இவ்வார்த்தைகளைத்தான் இப்பொழுது கூறிக் கொண்டிருக்கிறார்கள். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டிற்கு நிவாரணம் வழங்குவது என்ற போர்வையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திவரும் அரசியல் சதிராட்டத்தைத் தோலுரித்துக் காட்டும் வார்த்தைகள் இவை.

கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் தேதி இரவில் (அந்நாட்டு நேரப்படி) ஹெய்தியைத் தாக்கிய நிலநடுக்கம், கடந்த இருநூறு ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நிலநடுக்கங்களுள் ஒன்றாகக் கூறப்படுகிறது. இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த ஹெய்தியின் தலைநகர் போர்ட்ஆஃப்பிரின்ஸ் (கணிணூவச்தகணூடிணஞிழூ) மண்மேடாகவும் பிணக்காடாகவும் மாறிப் போனது. இந்நிலநடுக்கத்தால் இறந்துபோன ஏறத்தாழ 2 இலட்சம் பேரில், 1 இலட்சம் பேர் தலைநகரில் மட்டும் இறந்துபோனதாகக் கூறப்படுகிறது. பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில் விவசாயம் அழிக்கப்பட்டு, அந்நியக் கடனில் மூழ்கி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் ஹெய்திமக்களின் மீது இந்நிலநடுக்கம் இன்னுமொரு இடியாக இறங்கியிருக்கிறது.

 

ஹெய்தியைத் தாக்கிய நிலநடுக்கம் மிகச் சக்திவாய்ந்தது என்றாலும், அந்நாட்டில் நடைபெற்று வந்த ஊழல் நிறைந்த, திறமையற்ற ஆட்சிதான் இப்பேரழிவுக்குக் காரணம் என மேற்குலக ஊடகங்கள் குற்றம்சுமத்தி வருகின்றன. இது, எய்தவனை விட்டுவிட்டு அம்பை மட்டும் குற்றவாளியாக்குவதைத்தான் நினைவுபடுத்துகிறது.

 

ஹெய்தியின் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாறை எடுத்துக் கொண்டால், அந்நாடு இக்காலக்கட்டத்தில் ஒரு சில பத்தாண்டுகள் மட்டுமே சுதந்திரமான, இறையாண்மைமிக்க நாடாக இருந்து வந்திருக்கிறது. 18ஆம் நூற்றாண்டில் ஹெய்தி தீவு பிரெஞ்சுக் குடியரசின் காலனிநாடாக இருந்து வந்தது. பிரெஞ்சு புரட்சியால் கவரப்பட்ட அத்தீவின் கருப்பின அடிமைகள், பிரான்சின் ஆதிக்கத்துக்கும் வெள்ளை எஜமானர்களுக்கும் எதிரான விடுதலைப் போரை 1791இல் தொடங்கினர். பிரெஞ்சுப் படைகளையும், அத்தீவைக் காலனியாக்க முயன்ற இங்கிலாந்து, ஸ்பெயின் படைகளையும் எதிர்த்துப் போரிட்ட கருப்பின அடிமைகள், 1804ஆம் ஆண்டு அத்தீவை விடுதலை செய்து, கருப்பினக் குடியரசை நிறுவினர். வர்க்கப் போராட்ட வரலாற்றில் இப்புரட்சி மிகுந்த முக்கியத்துவம் உடையதாகக் கருதப்படுகிறது.

 

எனினும், கருப்பினக் குடியரசை முறியடிக்கும் திட்டத்தோடு, ஹெய்தி தீவின் கடல் வழி அனைத்தையும் மறித்து பிரான்சு முற்றுகையிட்டது. 1804ஆம் ஆண்டு தொடங்கிய இந்த முற்றுகை 1863ஆம் ஆண்டுதான் முடிவுக்கு வந்தது. இம்முற்றுகையை விலக்கிக் கொள்வதற்காக ஹெய்தி பிரான்சுக்கு இன்றைய மதிப்புப்படி 3,100 கோடி அமெரிக்க டாலர்கள் (1,43,437கோடி ரூபாய்) கப்பமாகச் செலுத்த ஒப்புக் கொண்டது. ஹெசூதி இக்கப்பத் தொகையை 1947ஆம் ஆண்டு வரை செலுத்தி வந்தது. ஹெய்தி இக்கப்பத் தொகையைச் செலுத்த அமெரிக்க வங்கிகளிடம் கடன் வாங்கி வந்ததைப் பயன்படுத்திக் கொண்டு, அமெரிக்க ஏகாதிபத்தியம் ஹெய்தியை 1914இல் தனது காலனி நாடாக்கிக்கொண்டது. அமெரிக்காவின் இந்த நேரடி காலனியாதிக்கம் 1934 வரை நீடித்தது. அதன்பிறகு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆசியோடு டுவாலியர் குடும்பம் ஹெய்தியை ஆளத் தொடங்கியது.

 

1980களில் டுவாலியரின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக நடந்த கலகத்தையடுத்து, டுவாலியர் குடும்பம் அதிகாரத்தை இழந்து நாட்டைவிட்டு ஓடியது. அதன் பின் நடந்த தேர்தலில், டுவாலியர் ஆட்சிக்கு எதிராக மக்களை அணிதிரட்டிப் போராடிய கிறித்துவப் பாதிரியார் அரிஸ்டைடு நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நிலச் சீர்திருத்தம், ஹெய்தியில் இயங்கிவரும் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் சம்பள உயர்வுபோன்ற சீர்திருத்தங்களை நிறைவேற்ற முயன்ற அரிஸ்டைடின் ஆட்சியை, அமெரிக்க ஏகாதிபத்தியம் 1991ஆம் ஆண்டு ஒரு அதிரடிப் புரட்சியின் மூலம் கவிழ்த்தது. எனினும், அதன்பிறகு நடந்த பேரங்களையடுத்து அரிஸ்டைடை மீண்டும் அதிபராக அமர்த்தியது, அமெரிக்க ஏகாதிபத்தியம். இதற்கு ஈடாக, ஹெய்தியின் மின் துறையை அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு விற்கவும், விவசாயப்பொருட்களின் இறக்குமதி விதிக்கப்பட்டு வந்த சுங்கவரியை விலக்கிக் கொள்ளவும் அரிஸ்டைடு சம்மதித்தார்.

 

அமெரிக்க ஏகாதிபத்தியம் அரிஸ்டைடின் விசுவாசத்தை முழுமையாக நம்பாததால், 2004ஆம் ஆண்டு சி.ஐ.ஏ. மூலம் அதிபர் அரிஸ்டைடைக் கடத்திக்கொண்டு போய் தென் ஆப்பிரிக்க அரசிடம் ஒப்படைத்தது. அதன் பிறகு அமெரிக்க விசுவாசிகளைக் கொண்ட பொம்மையாட்சியொன்று ஹெய்தியில் நிறுவப்பட்டாலும், அத்தீவின் நிர்வாகம் முழுவதையும் ஐ.நா.வும், அமெரிக்காவும் எடுத்துக் கொண்டன. ஹெய்தியின் இராணுவம் ஏற்கெனவே அரிஸ்டைடால் கலைக்கப்பட்டதைப் பயன்படுத்திக் கொண்டு, அமெரிக்க மற்றும் பிரேசில் வீரர்களைக் கொண்ட ஐ.நா. படை ஹெய்தியில் இறக்கப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2,000 அதிகாரிகளைக் கொண்ட சிவில் நிர்வாகம் ஐ.நா.வின் மேற்பார்வையில் அமைக்கப்பட்டது. அப்பொழுது அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில்கிளிண்டனை ஹெய்தியின் பொருளாதார ஆலோசகராக நியமித்தார். சுருக்கமாகச் சொன்னால், ஐ.நா.மன்றத்தின் போர்வையில் அமெரிக்காவின் மறுகாலனியாதிக்கம் ஹெய்தியின் மீது திணிக்கப்பட்டது.

 

1991க்குப் பிறகு, அமெரிக்காவால் ஹெய்தி மீது திணிக்கப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள், அந்நாட்டு மக்களால் ""சாவுத் திட்டம்'' என்றே அழைக்கப்பட்டன. 1990க்கு முன்னதாக அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த நாடாக இருந்து வந்த ஹெய்தி, விவசாயஇறக்குமதிக்கு இருந்து வந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால், தற்பொழுது உணவுப் பொருட்களுக்கு அமெரிக்காவிடம் கையைந்தி நிற்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. விவசாயம் முற்றிலும் அழிக்கப்பட்டதால் விவசாயிகள் வேலைதேடி நகரங்களுக்கு வந்து குவிந்தனர். ஹெய்தியின் மொத்த மக்கட் தொகையில் (90 இலட்சம் பேர்) மூன்றில் ஒரு பகுதியினர் (30 இலட்சம் பேர்) தலைநகரின் சேரிப் பகுதிகளில் வாழ்ந்து வருவதிலிருந்தே, விவசாய அழிவின் பரிமாணத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

 

அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்கள் இவர்களின் உழைப்புச் சக்தியை மிகவும் மலிவான கூலிக்குச் சுரண்டிக்கொழுத்து வருகின்றன. இதனாலேயே ஹெய்தியில் உள்ள அமெரிக்கத் தொழிற்சாலைகள், ""வியர்வைக் கூடாரங்கள்''என அழைக்கப்படுகின்றன. அமெரிக்காவின் வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவைப்படும் நுகர்பொருட்களைத் தயாரித்துக் கொடுக்கும் இயந்திரமாகவும், அமெரிக்காவின் உணவுப்பொருட்களைக் கொண்டு வந்து கொட்டும் குப்பைத்தொட்டியாகவும் ஹெய்தி மாற்றப்பட்டது. இப்படி கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக ஹெய்தியை மறைமுகமாகவும், நேரடியாகவும் ஆதிக்கம் செலுத்திவரும் அமெரிக்கா, அத்தீவின் கருப்பின மக்களின் நலனுக்காக ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போட்டதில்லை. கல்வி, மருத்துவம், குடிநீர், குடியிருப்பு என எந்த அடிப்படைவசதியுமற்ற நிலையில் ஹெய்தி இருத்தப்பட்டிருப்பதால்தான், நிலநடுக்கத்தின் பின் பிணத்தை அப்புறப்படுத்தக்கூட பிற நாடுகளின் உதவியை அத்தீவு மக்கள் எதிர்பார்த்தனர். இப்படிபட்ட அவலநிலையை ஏற்படுத்திய குற்றவாளிகளோ, இப்பொழுது வள்ளல்களாக அவதாரமெடுத்துள்ளனர்.

 

அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்நிலநடுக்கத்தைப்பயன்படுத்திக் கொண்டு ஹெய்தியை நேரடியாகவே மறுகாலனியாக்கிக் கொள்ளவும், அத்தீவையே தனது இராணுவத் தளமாக மாற்றவும் அடுத்தடுத்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. நிலநடுக்கம் ஏற்பட்ட செய்தியை அறிந்தவுடன் மருத்துவர்கள், நிவாரணப்பொருட்களை அனுப்புவதற்குப் பதிலாக, 13,000 இராணுவச் சிப்பாய்களைத்தான் அமெரிக்கா அனுப்பியது. அத்தீவின் ஒரேயொரு விமான தளத்தை ஐ.நா.வின் ஒப்புதலோடு தனது முழுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த அமெரிக்கா, இதன்மூலம் தனது துருப்புகள் தரையிறங்கிய பிறகே, நிவாரணப் பொருட்களை ஏற்றிவந்த பிற நாட்டு விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்கியது; அமெரிக்காவின் உள்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் ஹெய்திக்கு வருவதைக் காரணம்காட்டி விமான நிலையத்தை அமெரிக்க இராணுவம் மூடியதால், நிவாரணப் பொருட்களை ஏற்றிவந்த விமானங்கள் ஹெய்திக்கு அருகில் உள்ள டொமினிகன் குடியரசில் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, நிவாரண உதவி அளிப்பது தாமதமானது.

 

ஹெய்திக்கு வந்த ஹிலாரி கிளிண்டன் நிவாரண நடவடிக்கைகள் குறித்துப் பேசவில்லை மாறாக, அத்தீவின் நிர்வாகக் கட்டுப்பாடு முழுவதையும் அமெரிக்க இராணுவத்திடம் ஒப்படைப்பது குறித்தும், மறுகட்டுமானப்பணிகளை அமெரிக்க நிறுவனங்களுக்கு வழங்குவது குறித்தும் பேசிவிட்டுச் சென்றார். அமெரிக்க இராணுவமோ நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குப்பதிலாக, நிலநடுக்கத்தால் இடிந்துபோன அதிபர் மாளிகையையும் பிற நகரங்களையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதற்குதான் முக்கியத்துவம் கொடுத்தது. ஹிலாரி வந்துபோனவுடனேயே ஹெய்தியில் அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டினால்தான் நிவாரண உதவிகளைத் தடையின்றி வழங்க முடியும் என இதற்கு ஏகாதிபத்தியவாதிகள் பொழிப்புரை எழுதினார்கள். இதற்கு ஏற்றாற்போல, மேற்குலக ஊடகங்கள் ஹெய்தியில் திருட்டும் கலகமும் தலைவிரித்தாடுவதாக எழுதித்தள்ளின.

 

ஐ.நா.வின் மதிப்பீட்டின்படியே, ஹெய்தியில் 2இலட்சம் பேருக்கு உடனடியாக ஏதாவதொரு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்; 20இலட்சம் பேருக்கு உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யவேண்டும். ஆனால், இதுவரை அந்நாட்டிற்குக் கிடைத்துள்ள உதவிகளை வைத்துக் கொண்டு 6 இலட்சம் பேருக்குத்தான் உணவு வழங்க முடியும்; 12,000 பேருக்குத்தான் வேலைவாய்ப்பினை வழங்க முடியும். தர்மப்பிரபுவாகக் காட்டிக் கொள்ளும் அமெரிக்க ஏகாதிபத்தியம் வழங்கியிருக்கும் நிதியுதவி 10 கோடி அமெரிக்க டாலர்கள்தான்; ஹெய்தியைக் கொள்ளையடித்து வரும் அமெரிக்க முதலாளிகள் வழங்கியிருக்கும் நிதியுதவி 4.3கோடி அமெரிக்க டாலர்கள்தான். அமெரிக்காவின் ஈராக் ஆப்கான் போர்ச் செலவுகளையும் இந்த நிவாரண உதவியையும் ஒப்பிட்டால், அமெரிக்காவின் ஆளும் கும்பல்களின் மீது காரி உமிழத்தான் தோன்றும்.

 

ஹெய்தி மக்களின் மறுவாழ்வுக்கு உதவ வேண்டும் என்றால், குறைந்தபட்சம் அந்நாட்டின் அந்நியக் கடன்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனப் பலரும் கோரி வருகிறார்கள். இக்கோரிக்கையைப் பரிசீலிக்கக்கூட மறுக்கும் கருப்பினத்தைச் சேர்ந்த அதிபர் ஒபாமா, ஹெய்திக்கு மேலும் கூடுதலாக அமெரிக்கத் துருப்புகளை அனுப்புவதற்கான நிர்வாக உத்தரவைத் தயார் செய்கிறார். ஹெய்தியை மொட்டையடித்த முன்னாள் அமெரிக்க அதிபர்கள் பில் கிளிண்டனையும், ஜார்ஜ் புஷ்ஷையும் நிவாரண உதவி வழங்குவதை மேற்பார்வையிடும் பொறுப்பில் அமர்த்துகிறார். கருப்பினத்தைச் சேர்ந்த ஒபாமா அதிபரானால் அமெரிக்கா தலைகீழாக மாறிவிடும் என்ற பரப்புரை ஹெய்தியில் மீண்டும் அம்மணமாகிவிட்டது.

 

மத்திய மற்றும் தென் அமெரிக்கப்பகுதியில் தனது ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளவும், தன்னை எதிர்த்துவரும் கியூபா, வெனிசுலா, பொலிவியா நாடுகளை எதிர்கொள்ளவும் அமெரிக்கா அடுத்தடுத்துப் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஹோண்டுராஸில் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்திய கையோடு கொலம்பியாவில் இராணுவத் தளங்களை அமைத்துள்ள அமெரிக்கா, அவற்றின ;தொடர்ச்சியாக ஹெய்தியைத் தனது நேரடி மறுகாலனி நாடாக மாற்ற முயன்று வருகிறது. அதற்காக ஹெய்தியில் விழுந்த பிணங்களையும், அம்மக்களின் பட்டினியையும் துயரத்தையும் கூச்சமின்றிப் பயன்படுத்தி வருகிறது, அமெரிக்கா.


• குப்பன்