Language Selection

புதிய ஜனநாயகம் 2010

""ஒரு ஹீரோவாக நீங்கள் மாறவேண்டுமானால் முதலில் தேவை ஒரு வில்லன். அல்லது, சில வில்லன்கள். ராமருக்கு ராவணன், எம்.ஜி.ஆருக்கு நம்பியார். இதிகாசத்திலும், திரைப்படத்திலும் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் வில்லன்களும் ஹீரோக்களும் இருக்கிறார்கள். குறிப்பாக மார்க்கெட்டிங்கில்'' என்கிறார், நிர்வாகம் மற்றும் விற்பனைத் துறைகளுக்கான பயிற்சிவகுப்புகள் நடத்தும் எஸ்.எல்.வி.மூர்த்தி.

தேர்தல் சந்தையில் ஓட்டுப்பொறுக்குவதற்கும், தமது கிரிமினல் குற்றக் கும்பல் நடவடிக்கைகளுக்குக் கேடயமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கும் மராத்திய மக்களின் நலன்களைக் காக்கும் ஹீரோக்களாகக் காட்டிக் கொண்டு, நாற்பதாண்டுகளுக்கு முன்பு தமிழர்களையும் தற்போது வடஇந்தியர்களையும் வில்லன்களாக சித்தரித்து, கிரிமினல்தாக்குதல் மற்றும் அடாவடி அரசியல் நடத்தி வருகின்றன, தாக்கரேகுடும்பத்தினர் நடத்தும் சிவசேனா மற்றும் மராட்டிய நவநிர்மாண்சேனா ஆகிய அமைப்புகள்.

 

தாங்கள் தாம் உண்மையான இந்து தேசியவாதிகள் என்று சொல்லிக் கொண்டு இசுலாமியர்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் கொன்று குவித்தார்கள். அயோத்தி பாபர் மசூதி இடிப்பில் பகிரங்கமாக முன்னின்றதோடு, அதற்குப் பிந்திய 1992-93 ஆண்டு மும்பை இனப்படுகொலையையும் தொடர்ந்து மும்பை மற்றும் மரத்வாடா அம்பேத்கர் பல்கலைக்கழகப் பெயர்வைப்புக்கு எதிராக தாழ்த்தப்பட்டமக்கள் மீதான படுகொலையையும் நடத்தினர். இம்மக்கள் இந்துதேசியத்துக்கு எதிரான வில்லன்கள் என்று சித்தரிப்பதுதான் சேனாக்களின் முக்கிய பிரச்சாரமாக உள்ளது.

 

இசுலாமியத் தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு குறிப்பாக, கடத்தல் தொழிலில் செல்வாக்குச் செலுத்திய இசுலாமியர்களுக்கும் அவர்களுக்குப் பாதுகாப்பாக நின்ற முசுலீம் தாதாக்களுக்கும் போட்டியாக குஜராத்தி, மார்வாடிகளால் ஊட்டி வளர்க்கப்பட்ட கிரிமினல்தாதாக்களின் அரசியல்அமைப்புத் தலைமைதான் சிவசேனா. இசுலாமிய தாதாக்களுக்கு எதிரான இந்துத்தாதாக்களின் தலைமை என்பதால் இந்து தேசியத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு ஆர்.எஸ்.எஸ்.  பா.ஜ.க. ஆகியவற்றின் இணைபிரியா கூட்டணி போட்டுக் கொண்டதோடு, காங்கிரசின் மராத்தா தலைவர்களுடன் இரகசியக் கூட்டும் அமைத்துக்கொண்டது.

 

மராட்டியத்தில் தேசிய இனப்பிரச்சினை, இனப்போராட்டம் நடத்துவதற்குரிய பெரிய பிரச்சினை நிலவுகிறது என்பதற்கான அடிப்படை கிடையாது. மராட்டிய மாநிலம் புறக்கணிக்கப்படுகிறது, பின்தங்கிப்போய்விட்டது, மராட்டியர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கிறது என்று பெரிதாகச் சொல்வதற்கும் ஒன்றுமில்லை. நாட்டிலேயே தொழில், வர்த்தகம், முதலீடு, ஊடகம், நவீன தொழில் நுட்பம், கல்விபோன்றவற்றில் நீண்டகாலமாகவே நாட்டில் முதல்நிலை வகிக்கிறது. அந்த நிலை பறிபோய்விடும் என்ற நிலையும் இல்லை. பல தொழிற்துறையிலும் ஏகபோகம் வகிக்கிறது.

 

நாட்டின் பொருளாதாரம், ஊடக, தொழில் நுட்பத்தலைநகராக விளங்குகிறது. பண்ணை நிலப்பிரபுத்துவசக்தி, குறிப்பாக கரும்புசர்க்கரை உற்பத்தி செய்யும்முதலாளித்துவ கும்பல் நாட்டிலேயே செல்வாக்குள்ளதாக விளங்குகிறது. இவைகள் பறிபோய் விடும் என்ற அச்சுறுத்தலும் கிடையாது.

 

மராட்டிய சேனாக்கள் மேற்கண்டவாறு ஆதிக்கம் வகிக்கும் மராட்டிய, குஜராத்தி, மார்வாடிகளை எதிர்த்து எதுவும் செய்யவில்லை. அவர்களுக்கு எதிராக மராட்டியர்களைத் திரட்டவும் இல்லை. இதற்கு மாறாக, வெறும் உடல் உழைப்பாளிகளான தமிழர்கள், மலையாளிகள், பீகார்  உ.பி.  ம.பி முதலிய இந்தி பேசும் மாநிலத் தொழிலாளர்களை வில்லன்களாகக் காட்டி மும்பையில் அவர்களின் குடியேற்றத்தால்தான் மராட்டியர்களுக்கான வேலைவாய்ப்பு பறிபோகிறது என்று இனவெறியூட்டுகிறார்கள்; அப்பிரிவினர்களைத் தாக்குகின்றனர். மராட்டியத்தில், குறிப்பாக மும்பையில் சம்பாதித்து வெளிமாநிலங்களில் முதலீடு செய்யப்படுவதாக புளுகுகிறார்கள். உண்மையில் வெளிமாநிலங்களிலிருந்து மராட்டியத்தில், குறிப்பாக மும்பையில ;முதலீடு செய்வதும், அங்கு உற்பத்தி செய்து பிற மாநிலச்சந்தையில் வியாபாரம் செய்து லாபமடிப்பதும் தான் நடக்கிறது. இந்த சேனாக்களின் முதுகெலும்பாக மராட்டிய உழைக்கும் மக்கள் திரளவில்லை. நடுத்தர வர்க்க, உதிரித் தொழிலாளி அடியாள் பட்டாளம் மட்டுமே உள்ளது.

 

இந்த அடியாள் பட்டாளத்தை வைத்துக் கொண்டு பரபரப்பூட்டும் பல விவகாரங்களில் மராட்டிய சேனாக்கள் தலையீடு செய்கின்றன. பாகிஸ்தான், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இங்கு விளையாடுவதற்கும், மைக்கேல் ஜாக்சன் கலைநிகழ்ச்சி, சாருக்கான் போன்ற சில சினிமாக்காரர்கள் படங்களுக்கும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களை உருட்டி மிரட்டுவதும், பிறகு ஆதரவு தெரிவிப்பதும் அதன் மூலம் மும்பையில் தனது தாதாத்தன அதிகாரத்தை அங்கீகரிக்கவும் வைக்கின்றன.

 

மராட்டிய இனவெறி ஆதாயங்களைப் பங்குபோட்டுக் கொள்வதில் தாக்கரே குடும்பத்தில் பால்தாக்கரே மகனுக்கும் மருமகனுக்குமிடையே ஏற்பட்ட வாரிசுத் தகராறு காரணமாக, மராட்டிய நவநிர்மாண் சேனை உருவாகியது. இப்போது இந்த இரு சேனாக்களும் போட்டி போட்டுக் கொண்டு மராட்டிய இனவெறியைச் செயற்கையாகக் கிளப்பி விடுகின்றன. அதோடு நிற்காமல் நீண்டகாலமாக பால்தாக்கரேயும், அவரது வாரிசுகளும் மராட்டிய இனம் மற்றும் இந்துமதத்தின் பேரால் ஏராளமான சட்டவிரோத, கிரிமினல் குற்றங்கள் செய்கிறார்கள். ஆனாலும் காங்கிரசு, பா.ஜ.க. ஆகிய தேசியக் கட்சிகள் மட்டுமல்ல, நாட்டிலுள்ள உச்சநீதிமன்றம் உட்பட எல்லா நீதிநிர்வாக அமைப்புகளும் அவர்களுக்குக் கீழ்படிந்து போகின்றன. அவர்கள் என்ன செய்தாலும் தக்க நடவடிக்கைகள் எடுப்பதில்லை.

 

இதன் இரகசியம் இதுதான்: காங்கிரசின் காந்தி நேரு உருவாக்கிய இந்திய தேசியம், ஆர்.எஸ்.எஸ்.இன் ஹெட்கேவர்  கோல்வால்கர் உருவாக்கிய இந்து தேசியம், பால் தாக்கரே உருவாக்கிய மராத்திய சைனிக் (சிவசேனை) தேசியம்  இவை எல்லாமே ஒரே பொதுஅடிப்படைக் கருவிலிருந்து தோன்றிய வௌ;வேறு அவதாரங்கள். இல்லாத ஒரு தேசியத்தை இந்திய தேசியம், இந்து தேசியம் என்ற பெயரில் செயற்கையாக உருவாக்கி, அதற்காகப் போராடும் ஹீரோக்களாகக் காட்டிக்கொள்கின்றனர். சிறுபான்மை மக்களை, உழைக்கும் மக்களைத் தமது தேசியத்துக்கு எதிரான வில்லன்களாகச் சித்தரித்து பயங்கரவாதத் தாக்குதல் தொடுக்கின்றனர். இந்தப் பொதுத்தன்மை காரணமாகத்தான் எந்த நிலையிலும் அவற்றுக்கு இடையிலான நேரடி, மறைமுகஉறவு ஒருபோதும் பகைத்துக் கொள்வதாகவோ, முறித்துக் கொள்வதாகவோ இல்லை. நட்பு ரீதியிலானதாகவே இருக்கிறது.

 

• மாணிக்கவாசகம்