Language Selection

புதிய ஜனநாயகம் 2010

போலி கம்யூனிஸ்டுகள் ஆளும் மே.வங்கத்தின் சிங்கூரில் பாலாய் சாபுய், திவாகர் கோலே ஆகியோர் அண்டை வீட்டுக்காரர்கள். 1970களில் பீடி சுற்றும் தொழிலாளிகளாக இவர்கள் வறுமையில் வாடினர். பாலாய் சாபுய், சி.பி.எம். கட்சியில் சேர்ந்து ஹ_க்ளி மாவட்ட விவசாய சங்கத் தலைவராக உயர்ந்தார். அவர் அரசு போக்குவரத்துத் துறையின் மாவட்டச் செயலாளராகவும் பதவி வகித்தார். இம்மாவட்டத்தின் அனைத்து வாகனங்களுக்கும் உரிமம்  பர்மிட் வழங்கும் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் சிங்கூரில் அரசின் நிலக் கையகப்படுத்தல் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். இன்று அவருக்கு சிங்கூரில் இரண்டு அடுக்கு மாடி வீடு உள்ளது. போலேரோ ஜீப்பில் வலம்வரும் அவர் இன்று இப்பகுதியில் முக்கியத் தலைவராவார்.

பாலாய் சாபுய்யின் பக்கத்து வீட்டுக்காரரான திவாகர் கோலே இன்னமும் பீடிசுற்றும் தொழிலாளியாகத்தான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார். ""நான் இன்னமும் வறுமையில் தான் உள்ளேன். ஆனால், எனது பக்கத்து வீட்டுக்காரராக இருந்தவர், இன்று பெரியவீடும் காரும் கொண்டவராக வளர்ந்திருப்பது எனக்குப் பெருமையளிக்கிறது. ஒரு பீடி சுற்றும் தொழிலாளியும் முன்னேற முடியும் என்பதை பாலாய் சாபுய் நிரூபித்துக்காட்டியிருக்கிறார்'' என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறுகிறார். அப்பாவித் தொழிலாளியான திவாகர் கோலேவுக்கு, சாபுய்யின் சட்டவிரோத வருமானம் பற்றிய உண்மைகள் தெரியவில்லை. இன்று மே.வங்க சி.பி.எம்.கட்சியில் பாலாய் சாபுய் போன்ற புதுப் பணக்காரர்கள்தான் இரண்டாம் மட்டத் தலைவர்கள்.

 

ஹிமான்சு தாஸ் என்பவர் மே.வங்க சி.பி.எம். கட்சியின் நந்திகிராம  கேஜோரி வட்டாரக் கமிட்டியின் செயலாளர். மாவட்டக் கமிட்டியின் உறுப்பினராகவும் உள்ள இவர், கட்சியிடமிருந்து மாதந்தோறும் பெறும் பராமரிப்புத் தொகை ரூ. 1,500. இது தவிர, அரசின் மாவட்ட மேலாண்மைக் குழுவிலும் இவர் அங்கம் வகித்து ரூ. 1,500 ஊதியமாகப் பெறுகிறார். ஆக மொத்தம் இவரது மாதந்திர வருமானம் ரூ. 3,000.

 

உள்ளாட்சித் திட்டங்களுக்காக மைய அரசு ஒதுக்கிய நிதியை ஏப்பம் விட்டு வளர்ந்த இந்தப் "பாட்டாளி வர்க்கத் தோழர்', கேஜோரியில் குளிர்பதனச் சாதனம் பொருத்தப்பட்ட மாடி வீடும், ஆடம்பரக் காரும், மோட்டார் சைக்கிளும் வைத்திருக்கிறார். கோடீசுவரரான இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் நந்திகிராமத்தில் விவசாயிகளும் பழங்குடி மக்களும் நடத்திய பேரெழுச்சியில் அம்பலப்பட்டுப் போனார். விவசாயிகள் அவரது வீட்டை அடித்து நாசப்படுத்தியதும், அலறியடித்துக் கொண்டு ஓடிப்போன தாஸ், இன்றுவரை அந்தப் பக்கம் தலைவைத்துக் கூடப் படுக்கவில்லை.

 

இதுபோலவே, லால்காரில் வேலையில்லாத இளைஞராக கட்சியில் சேர்ந்து, பின்னர் வட்டாரக் கமிட்டிச் செயலாளராக உயர்ந்த அனுஜ் பாண்டே என்பவருக்கு, கட்சியிடமிருந்து மாதந்தோறும் ரூ.1,500 பராமரிப்புத்தொகையாகக் கிடைக்கிறது. ஊரக வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக மைய அரசு ஒதுக்கிய நிதியை, இவர் அதிகார வர்க்கத்தோடு கூட்டுச் சேர்ந்து ஏப்பம்விட்டு, கோடீசுவரராக உயர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தார். பழங்குடியினர ;நிறைந்த லால்காரில் 20 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தின் அதிபராக உள்ள அவர், மிகப்பெரிய மாடிவீட்டை ஈராண்டுகளுக்கு முன்பு கட்டியுள்ளார். குளிர்சாதன வசதியும் ஆடம்பரச் சாதனங்களும் நிறைந்த இந்த வீடுபழங்குடி மக்களின் பேரெழுச்சியில் முற்றுகையிடப்பட்டு அடித்து நொறுக்கப்பட்டது. ""ஓலைக் குடிசைகளும் ஏழ்மையும் நிறைந்த இப்பகுதியில் இப்படியொரு ஆடம்பர வீட்டைக் கட்டிக் கொண்டு வாழ்ந்தவர் ஒரு கம்யூனிஸ்டுதானா?'' என்று கேட்கிறார் இப்பகுதியைச் சேர்ந்த அதே சி.பி.எம். கட்சியின் எம்.எல்.ஏ. பழங்குடியினரின் பேரெழுச்சியின் போது தப்பியோடிய இந்த சி.பி.எம். தலைவர், இன்று வரை இந்தப் பகுதிக்குத் திரும்பவேயில்லை.

 

லால்காரிலும் நந்திகிராமத்திலும் சி.பி.எம். தலைவர்களின் யோக்கியதை இப்படியிருக்க, ஹால்டியா நகரியத்திலோ இக்கட்சியின் தலைவர்கள் நவீன கோடீசுவரர்களாக வலம் வருகின்றனர். ஹால்டியா ஊராட்சிமன்ற உறுப்பினரான எஸ்.கே. முசாபர், வறுமை காரணமாக பள்ளிக் கல்வியைத் தொடர முடியாமல்,1970களில் ஹால்டியா துறைமுகத்தில் கூலித் தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்தவர்.

 

இன்று இவர் ஹால்டியா துறைமுகத் தொழிலாளர் சங்கத்தைக் கட்டுப்படுத்துபவராக வளர்ந்துள்ளார். மேலும், இவர்தான் இத்துறைமுகத்தில் மிகப்பெரிய ஒப்பந்ததாரர். இவரிடம் இன்று 1,500 கூலித் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். ஹால்டியா நகர் மன்ற ஊழியர் என்ற முறையில் இவருக்குக் கிடைக்கும் வருமானத்தைவிட, "கம்யூனிஸ்டு' என்ற முறையில் இவர் நடத்தும் ஒப்பந்தத் தொழில்மூலம் கிடைக்கும் வருமானம் தான் மிகப் பெரியது என்று உள்ளூர் காங்கிரசுக் கட்சியினரே பரிகசிக்கும் அளவுக்கு, இவரது வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.

 

முசாபரின் ஒரு மகன், தந்தையின் ஒப்பந்தத்தொழிலை மேற்பார்வையிடுகிறார். மற்றொரு மகனோ லண்டனில் படிக்கிறார். இன்னொரு மகனோ, தனது ஆடம்பர கார்களை வேகமாக ஓட்டிச் சென்று பிரமிக்கவைக்கிறார். ""இதிலென்ன தவறு? ஒரு கம்யூனிஸ்டு, முதலாளியாக அல்லது தொழில் முனைவோராக இருக்கக் கூடாது என்று என்று எங்கே எழுதி வைத்திருக்கிறார்கள்? இவையெல்லாம் விரக்தியடைந்தவர்களின் வெற்று பேச்சுகள்!'' என்று சாடுகிறார் திருவாளர் முசாபர். ""வெறுமனே வளர்ந்த முதலாளிகள் மட்டுமல்ல் நாங்கள் பலருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம். நாங்கள்தான் உண்மையான கம்யூனிஸ்டுகள். பொறாமைப்படுவோர் பொறாமைப்படட்டும்'' என்கிறார் "கம்யூனிச' முதலாளி முசாபர்.

 

அசோக் பட்நாயக் என்பவர் தொடக்கப்பள்ளி ஆசிரியராக இருந்தபோது கட்சியில் சேர்ந்தார். பின்னர், ஆசிரியர் பணியிலிருந்து விலகி கட்சியில் முழுநேர ஊழியரான அவர், ஹால்டியா ஊராட்சியின் கூட்டுறவுச்சங்கத் தலைவராகவும், பின்னர் ஹால்டியா நகரவளர்ச்சிக் குழுமத்தின் தலைவராகவும் உயர்ந்தார். இன்று இவர்தான் ஹால்டியாவில் மிகப் பெரிய கோடீசுவர ஒப்பந்ததாரர். இவர் பயன்படுத்தாத கார்களே இல்லை எனுமளவுக்கு, ""இந்தியாவின் கோடீசுவர கம்யூனிஸ்டு இவர்தான்'' என்று சி.பி.எம். கட்சி ஊழியர்களே காறி உமிழ்கின்றனர்.

 

ஆனந்த பேரா என்பவர் 1970களில் வறுமை காரணமாக ஹால்டியாவில் குடியேறி கூலி வேலை செய்து வந்தார். பின்னர் கட்சியில் சேர்ந்து முக்கிய பிரமுகராக உயர்ந்த அவர், இன்று ஹால்டியா துறைமுகத்தின் இன்னுமொரு மிகப் பெரிய ஒப்பந்ததாரராக உயர்ந்துள்ளார். சி.பி.எம். தலைவர்களான இவர்கள் இன்று வெற்றிகரமான முதலாளிகளாகவும் வலம் வருகின்றனர். ""இவர்கள் கம்யூனிசம் என்பதற்கான பொருளையே இன்று மாற்றி விட்டனர்'' என்று குமுறுகிறார் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு சி.பி.எம். உள்ளூர் தலைவர்.

 

மேற்கு மித்னாபூர் மாவட்டக் கமிட்டி உறுப்பினர்களான தபன்கோஷ் மற்றும் சுக்கூர் அலி ஆகியோர் கார்பெட்டா வட்டாரத்தின் மிகக் கொடிய குண்டர்படைத் தலைவர்கள். இவர்கள் பத்தாண்டுகளுக்கு முன்பு சோட்டாங்காரியா, பிர்பும் ஆகிய இடங்களில் 11 திரிணாமுல் காங்கிரசு ஊழியர்களை அடித்துக் கொன்று உயிருடன் எரித்த வழக்கில் மையப் புலனாய்வுத் துறையால் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் சி.பி.எம். கட்சி மற்றும் ஆட்சியின் தலையீட்டின் காரணமாக, குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று விடுவிக்கப்பட்டனர். இன்றும் இவர்கள்தான் இவ்வட்டாரத்தின் "மாவீரன்'கள். இவர்களது ஆதரவு இல்லாமல் எந்த சி.பி.எம். அமைச்சரும் தேர்தலில் வெற்றி பெறவே முடியாது எனுமளவுக்கு, இவர்களது மகாத்மியம் புகழ் பெற்றுள்ளது. இதனாலேயே, இவர்கள் மீது பல்வேறு புகார்கள் வந்த போதிலும் கட்சி ரீதியாகக் கூட இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் கட்சித் தலைமை அஞ்சுகிறது என்கிறார் உள்ளூர் சி.பி.எம். தலைவர் ஒருவர். வெறும் குண்டர்படைத் தலைவர்களாக மட்டுமல்லாமல், இவர்கள் உருளைக்கிழங்கு வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் பெருமுதலாளிகளாகவும் வளர்ந்துள்ளனர்.

 

மே.வங்க சி.பி.எம். கட்சிச்செயலாளரான பீமன் போஸ், ""கம்யூனிசவிரோத நடவடிக்கைகளிலிருந்து கட்சியின் சிறந்த தலைவர்கள் விலகி நிற்கவேண்டும். கட்சி எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய சவால் இதுதான்''என்கிறார். இதை எப்படிச் செயல்படுத்துவது என்பதுதான் பிரச்சினை. கட்சியின் இன்றைய இளம் தலைவர்களோ புதுப்பணக்கார கம்யூனிஸ்டுகளாகிவிட்டனர். ஹால்டியாவின் முன்னாள் எம்.பி.யான லக்ஷ்மண்சேத், மூர்ஷிதாபாத்தின் மெயினுல் ஹழுஉன் ஆகியோர்17 இலட்ச ரூபாய் மதிப்புள்ள ஆடம்பரக் கார்களில் வலம் வருகின்றனர். கட்சித் தலைமையும் இதைக்கண்டு கொள்வதில்லை. ஏனென்றால், "மாவீரன்'களான இந்தக் காம்ரேடுகளின் தயவு இல்லாமல் சி.பி.எம்.கட்சி தேர்தல் வெற்றிகளைச் சாதிக்கவே முடியாது.

 

இவையெல்லாம் வகைமாதிரிக்கு சில உதாரணங்கள் தான். முழுமையாக ஆராய்ந்தால் சி.பி.எம். முதலாளிகளைப் பட்டியலிடப் பக்கங்கள் போதாது. சீனாவின் கம்யூனிசப் போர்வையணிந்த நவீன முதலாளிகள், கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டுக்கு கார்களில் வந்திறங்கும்போது, சி.பி.எம்.கட்சித் தலைவர்களும் கார்கள் பங்களாவுடன் அதன் வழியில் முன்னேறி வருகிறார்கள்.

 

இனி என்ன கவலை! நீங்களும் ஒரு முதலாளித்துவ காம்ரேடாக  கம்யூனிச கனதனவாக விரும்பினால், சி.பி.எம். கட்சியில் சேரலாம். கம்யூனிசம் பேசிக்கொண்டு நீங்களும் முதலாளியாகி முன்னேறலாம்.

 

சீ! இது என்ன துரோகத்தனம் என்று நீங்கள் காறி உமிழ்ந்துவிட்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான புரட்சியில் பங்கேற்க விரும்பினால், நீங்கள் நக்சல்பாரி கம்யூனிசப் புரட்சியாளர்களுடன் அணிவகுக்கலாம்.

 

நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?

• குமார்

 

சி.பி.எம் கட்சியில் ஒழுங்கு நடவடிக்கையாம் கேழ்வரகில் நெய் வடிகிறதாம்

 

""கட்சியில் ஊழலும் அதிகாரத்துவமும் பெருகிவிட்டது. கட்சிக்குள்ளும் வெளியிலும் கட்சியின் முக்கிய தலைவர்களைப் பற்றியும் உள்ளூர் தலைவர்கள் பற்றியும் புகார்கள் வந்துள்ளன. கட்சியில் நிலவும் கம்யூனிச விரோத பண்புகளை ஒழிக்க கட்சி முழுவதும் சீர்செய் இயக்கம் தொடங்கப்பட வேண்டும். இதற்கென ஒரு தனி அமைப்பு உருவாக்கப்படும். அந்த அமைப்பிடம் கட்சி ஊழியர்கள் மட்டுமின்றி கட்சிக்கு வெளியிலுள்ள பொது மக்களும் புகார் கொடுக்கும் வகையில் அந்த அமைப்பு இயங்கும். இப் புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கடந்த பிப்ரவரி 4முதல் 6ஆம் தேதிவரை நடந்த சி.பி.எம். கட்சியின் மத்தியக் கமிட்டி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

ஏற்கெனவே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பல கட்டுப்பாட்டுக்குழுக்கள் இருந்தபோதிலும், இப்படிப் புதியதொரு குழுவுக்கான அவசியத்தை விளக்கும் போது, குற்றச்சாட்டுக்குள்ளான நபர்களே மேல்மட்டக் கமிட்டிகளில் இருந்ததால் அவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்க இயலவில்லை எனவும், இந்தப் புதிய குழுவின் மூலம் கட்சியின் தலைமை முதல் தொண்டர் வரை அனைவரையும் விசாரித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் சி.பி.எம். கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.

 

இத்தகைய அமைப்பு உருவாக்கப்படுமா, இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால், கட்சியில் ஊழல் பெருகிவிட்டதையும் புதுப் பணக்கார கும்பல்கள் தலைவர்களாக வலம் வருவதையும் கண்டு அதிருப்தி பெருகியிருக்கிறது என்பதையும் சி.பி.எம். தலைமையால் மூடிமறைக்க முடியவில்லை. தேர்தல்களில் தோல்வி அடைந்ததற்கு சி.பி.எம்.மின் சந்தர்ப்பவாத அரசியல் மட்டும் காரணமல்ல் அதன் உள்ளூர் தலைவர்கள் ஆடம்பரமாக வாழ்வதைக் கண்டு உழைக்கும் மக்கள் அக்கட்சியை வெறுத்தொதுக்குவதும் முக்கிய காரணமாகும்.

 

சி.பி.எம். கட்சியினர் ஊழலில் ஊறித்திளைப்பது ஏதோ இன்று நேற்று நடைபெறும் விசயமல்ல. அவர்கள் நாடாளுமன்றப் பதவிக்கான சாக்கடையில் பயணிக்க ஆரம்பித்தவுடனேயே இதுவும் தொடங்கிவிட்டது.

 

லாவ்லின் புகழ் பினாரயி விஜயன், திருப்பூரில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பை முதலாளிகளிடம் பணயம் வைத்துக் கோடீஸ்வரராக உயர்ந்த கோவிந்தசாமி என கருப்பட்டிப் பானையில் கையை நனைத்து நக்க ஆரம்பித்த "காம்ரேடுகளின்' பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. உண்மையில் சி.பி.எம். கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால், பெரும்பான்மையான கட்சிப்பிரமுகர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து, ஒட்டு மொத்தக் கட்சியையுமே கலைக்க வேண்டியதாகிவிடும். அதனால்தான் இப்போது களை எடுக்கப் போவதாக கட்சித் தலைமை பம்மாத்து செய்து மக்களையும் அணிகளையும் ஏய்த்து வருகிறது.