Language Selection

புதிய ஜனநாயகம் 2010

நக்சல் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் அரசு நடத்திவரும் காட்டுவேட்டை (ஆபரேஷன் கிரீன்ஹண்ட்)என்பது, நாட்டு மக்கள் மீது மறுகாலனியாக்கத்தை துப்பாக்கி முனையில் திணிக்கும் ஒரு பாசிசப் போர். அதை அம்பலப்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும், அரசு அவர்களைச் சகித்துக் கொள்ளாது. மனித உரிமைப் போராளி டாக்டர் பினாயக் சென்னும், காந்தியவாதி ஹிமான்ஷ குமாரும் மட்டுமல்ல் வேட்டை தீவிரமாவதைத் தொடர்ந்து இன்னும் பல முற்போக்கு  புரட்சிகர பத்திரிகையாளர்களும் மனித உரிமை இயக்கத்தினரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வதைக்கப்பட்டு வருகின்றனர்.

"பீப்பிள்ஸ் மார்ச்'' என்ற ஆங்கில பத்திரிகையின் வங்கப் பதிப்பின் ஆசிரியராகச் செயல்பட்ட 61 வயதான தோழர் ஸ்வபன்தாஸ் குப்தா, கடந்த பிப்ரவரி 2ஆம் நாளன்று போலீசு காவலிலேயே மரணமடைந்து விட்டர். அவரும் இப்பத்திரிகையின் வெளியீட்டாளரான சதானந்த சின்காவும் கடந்த அக்டோபர் 7ஆம் தேதியன்று மிகக் கொடிய பாசிச கருப்புச் சட்டமான, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ("ஊபா'' சட்டத்தின் கீழ்) மே.வங்க போலி கம்யூனிஸ்டு அரசால் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதமான பத்திரிகை நடத்தியதாகவும் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஏற்கெனவே கேரள போலி கம்யூனிஸ்டு அரசு, மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவான பத்திரிகை என்று குற்றம் சாட்டி, "பீப்பிள்ஸ் மார்ச்'' பத்திரிகையைத்தடை செய்து, அதன் ஆசிரியரான கோவிந்தன்குட்டியைக் கைது செய்தது. இருப்பினும் பத்திரிகை பதிவு குழுமம் இத்தடையை ஆகஸ்டு 7ம் தேதியன்று நீக்கிவிட்டது. தோழர் கோவிந்தன் குட்டியும் விடுதலை செய்யப்பட்டார். மே.வங்கத்திலும் இப்பத்திரிகை பதிவுபெற்றுள்ளது. (அதன் பதிவு எண்: wb/ben/2004-/15681). மே.வங்க அரசும் இதைத் தடை செய்யவில்லை. இருப்பினும், சட்டவிரோதமான தடைசெய்யப்பட்ட பத்திரிகையை நடத்தியதாக அவர் மீது பொய்க்குற்றம் சாட்டப்பட்டு, மிகக் கொடிய பாசிச சட்டமான "ஊபா'' சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். அரசுக்கு எதிராகப் போர் தொடுக்க சட்டவிரோதமாக சதிகளில் ஈடுபட்டதாகவும், கொலை முயற்சியில ;ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பயங்கரவாத பயிற்சி முகாம்களைக் கட்டியமைக்க முயற்சித்தார், பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டார், மைய அரசால் தடைசெய்யப்பட்டுள்ள மாவோயிஸ்டு கட்சிக்கு ஆதரவாக பத்திரிகை நடத்தினார் என்றெல்லாம ;குற்றச்சாட்டுகள் இட்டுக்கட்டப்பட்ட போதிலும், அவர் மீது இன்றுவரை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேயில்லை.

அக்டோபர் 7ஆம் தேதியன்று கைது செயப்பட்டு, போலீசு காவலில் விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செயப்பட்ட தோழர் ஸ்வபன்தாஸ் குப்தா, பிணை மறுக்கப்பட்ட நிலையில்,கடந்த டிசம்பர் 17ஆம் நாளன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். "அரசாங்கம் அவரைப் புறக்கணித்து மரணத்தை விரைவுபடுத்தி விட்டது. மருத்துவமனையில் அவர் படுக்கை தரப்படாமல் தரையில ;கிடத்தி வைக்கப்பட்டார். ஆஸ்த்துமா நோயும் இரத்தப்புற்றுநோயும் அவரை வதைத்த போதிலும், அவருக்கு உரிய சிகிச்சையோ, தேவையான இரத்தமோ அளிக்கப்படவில்லை'' என்கிறார், ஏ.பி.டி.ஆர். எனும் மனிதஉரிமை இயக்கத்தைச் சேர்ந்த சுஜாதோ பத்ரா.

அரசின் சுங்கத்துறை ஊழியராகப் பணியாற்றிவந்த தாஸ்குப்தா, நக்சல்பாரி பேரெழுச்சியைத் தொடர்ந்து வேலையைத் துறந்து நக்சல்பாரி ஆதரவு பிரசுரங்களையும் நூல்களையும் வெளியிட்டு வந்தார். பீப்பிள்ஸ்மார்ச் பத்திரிகையின் வங்கப்பதிப்பின் ஆசிரியராகச் செயல்பட்டு வந்தார். அவரது மரணச் செய்தியறிந்து அறிவுத்துறையினரும் மனித உரிமை இயக்கத்தினரும் புரட்சிகர ஜனநாயக சக்திகளும் திரண்டு, ""பாசிச ஊபா சட்டத்துக்குப் பலியான முதல் தியாகி!'' என்ற முழக்கத்தட்டிகளுடன் மௌள ஊர்வலம் நடத்தி, அவரது உடலை அடக்கம் செய்து அஞ்சலி செலுத்தினர்.

மே.வங்கத்தை ஆளும் போலி கம்யூனிச அரசு எத்தகையதொரு கொடிய அரசு என்பதற்கும், பாசிச கருப்புச்சட்டங்களை எதிர்ப்பதாக நாடகமாடிக் கொண்டு எவ்வாறு அதன் அடியாளாகச் செயல்படுகிறது என்பதற்கும் தோழர் ஸ்வபன்தாஸ் அவர்களது மரணமே சாட்சி.

உத்திரப்பிரதேச மாநிலத்தில், கடந்த நான்காண்டுகளாக இந்தி மொழியில் ""தஸ்தக் நை சமய் கி'' என்ற மாத இதழை நடத்திவரும் சீமா மற்றும் அவரது கணவர் விஸ்வ விஜய் ஆசாத் ஆகியோர் "ஊபா'' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் பத்திரிகை சட்டபூர்வமாக இந்தியப் பத்திரிகை பதிவாளரிடம் பதிவு பெற்றுள்ளது. பி.யு.சி.எல் எனும் மனித அமைப்பின் உ.பி.மாநிலச் செயலாளராக சீமா செயல்பட்டு வந்தார். அவரது கணவரான ஆசாத் ""இன்குலாபி சத்ரமோர்ச்சா'' எனும் மாணவர் இயக்கத் தலைவராவார். இவர்கள் டெல்லிக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது, அலகாபாத் ரயில் நிலையத்தில் அதிரடிப்படை போலீசாரால் பிப்ரவரி 6ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் தவிர, கோர்காப்பூரில் ஆஷா என்பவரையும் கான்பூரில் 8 பேரையும் சிறப்பு அதிரடிப் படைகைது செய்துள்ளது. இவர்கள் அனைவரும் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு ""ஊபா'' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். நக்சல்பாரி தீவிரவாதிகள், அரசுக்கு எதிராகப் போர்தொடுத்தனர் என்றெல்லாம் இவர்கள் மீது பொய்க்குற்றம் சாட்டப்பட்டு மிகக் கொடிய பாசிச கருப்புச்சட்டமான ""ஊபா'' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

"தஸ்தக் நை சமய் கி'' பத்திரிகை, போலி மோதல்களில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதையும், குறிப்பாக கமலேஷ் சௌதாரி என்ற நக்சல்பாரி தலைவர சுட்டுக் கொல்லப்பட்டதையும் எதிர்த்தது. தேசிய மனிதஉரிமைக் கமிசன், அரசின் கைப்பாவையாகச் செயல்படுவதை விமர்சித்து எழுதி வந்தது. அலகாபாத் மற்றும் கௌசாம்பியில் சட்டவிரோத மணல் கொள்ளையர்களையும் இவர்களின் கூட்டாளிகளான அரசியல்வாதிகளையும் அம்பலப்படுத்தியது. அலகாபாத் போலீசு இயக்குனர், இப்பகுதியில் எவ்விதத் தொழிலாளர் போராட்டமும் கூடாது, தொழிலாளர்கள் தமது தோழர்களுக்கு செவ்வணக்கம் தெரிவிக்கக் கூடாது என்றெல்லாம் தன்னிச்சையாக தடைவிதித்து முன்னணியாளர்களை ஒடுக்குவதை எதிர்த்து எழுதியது. இ.பொ.க.(மாலெ) புதிய ஜனநாயகம் குழுவின் உள்ளூர் தலைவரைப் போலீசு கைது செய்ததையும், நந்தா கிராமத்தில் அக்கட்சியின் அலுவலகத்தைத் தீயிட்டதையும் அம்பலப்படுத்தியது. இவற்றுக்குப் பழிவாங்கும் நோக்கத்துடனேயே நக்சலைட்டு மாவோயிஸ்டு பூச்சாண்டி காட்டி, இப்பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர மீது "ஊபா'' சட்டம் ஏவிவிடப்பட்டுள்ளது. இச் சட்டவிரோத கைதைக் கண்டித்து லக்னோ நகரில் பி.யு.சி.எல் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மகசேசே விருது பெற்ற பிரபல சமூகசேவகருமான சந்தீப்பாண்டே இக்கைதுகளைக் கண்டித்து, இது பாசிச அடக்குமுறை என்று சாடியுள்ளார்.

அறிவுத்துறையினர் ஆதரவு தருவதாலேயே மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போரை முன்னெடுத்துச் செல்லமுடியவில்லை என்று கூறும் ப.சிதம்பரம், அறிவுத்துறையினரின் வாயை அடைத்து முடக்கத் துடிக்கிறார். அதனாலேயே அரசை விமர்சித்து எதிர்க்கும் அறிவுத்துறையினர் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டவிரோதநடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு பாசிச ""ஊபா'' சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு வதைக்கப்படுகின்றனர். இந்தப் போர், நக்சல்பாரிகளுக்கு எதிரான போர் மட்டுமல்ல் இது நாட்டுமக்களுக்கு எதிரான போர் என்பதைத்தான் இந்தக் கைது நடவடிக்கைகள் நிரூபிக்கின்றன.


• தனபால்