இந்தியாவின் மிகப் பெரிய அந்நிய முதலீட்டுத்திட்டமான தென்கொரியாவின் போஸ்கோ எஃகு ஆலைத் திட்டத்துக்கு எதிராக, போஸ்கோ பிரதிரோத் சங்கராம் சமிதி (பி.பி.எஸ்.எஸ்) என்ற அமைப்பின் தலைமையில் ஒரிசாவின் ஜெகத்சிங்புர் மாவட்டத்தின் விவசாயிகள் கடந்த ஜந்தாண்டுகளாகப் போராடிவருகின்றனர். கடந்த ஜனவரி 26 முதலாக போஸ்கோ திட்டத்திற்கு எதிராக காலவரையற்ற தர்ணா போராட்டத்தை அவர்கள் நடத்தி வருகின்றனர்.

 

தென்கொரிய அதிபர் லீ மையூங் பாக், டெல்லியில் கடந்த ஜனவரி 26 அன்று நடந்த "குடியரசு' தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் வருகைக்கு முன்னதாக 3566 ஏக்கர் நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எஞ்சிய நிலங்களை விரைவில் கையகப்படுத்தி திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாகவும் அரசு அறிவித்துள்ளது. அதாவது, 2006ஆம் ஆண்டில் கலிங்கா நகரில் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 14பேரைக் கொன்றதைப் போல, மிகக் கொடிய தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடத் துடிக்கிறது.

 

ஏறத்தாழ 52,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போஸ்கோ திட்டத்தினால் 30,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழ்விழக்கும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரிசாவின் உயர்தரமான இரும்புக் கனிமத்தில் 60 கோடிடன் அளவுக்கு அள்ளிச் செல்வதோடு, ஆண்டுக்கு 12கோடி டன் எஃகு உற்பத்தி செய்யும் உருக்காலையும் மின்நிலையமும் தனியார் துறைமுகமும் கொண்ட இத்திட்டம், கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி கையெழுத்திடப்பட்டது. இத்திட்டத்தால் 11 கிராமங்களிலுள்ள 5000 குடும்பங்கள்  ஏறத்தாழ 30,000 பேர் வெளியேற்றப்படவுள்ளனர். இதுதவிர, ஜடாதாரி ஆற்றையும் அது கடலில் கலக்கும் கழிமுகப்பகுதியையும் போஸ்கோ நிறுவனம் ஆக்கிரமிக்கப் போவதால், 52,000 மீனவர்களின் எதிர்கால வாழ்வும் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

எஃகு உருக்காலை மற்றும் மின்நிலையத்துக்கு 4004ஏக்கர் நிலம் தேவை. இதில் 3566 ஏக்கர் புறம்போக்கு மற்றும் காட்டுப்பகுதிகள் அரசால் இந்நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. காட்டு நிலங்களையும் காட்டின் விளைபொருட்களையும் பயன்படுத்தி வந்த மக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 438 ஏக்கர் நிலம் உள்ளூர் சிறு விவசாயிகளுடையது. இவற்றில் வெற்றிலை, முந்திரி சாகுபடியும் முக்கியமாக, நெல் சாகுபடியும் செய்து வருகின்றனர். இந்த நிலங்களைப் பறிப்பதை எதிர்த்து விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தை ஒடுக்க 25 பிளாட்டூன் துணை இராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் மூலம் கிராமப் பஞ்சாயத்துகளில் ஒப்புதல் பெறுவதற்கான கூட்டங்கள் நடத்தப்பட்டபோது, தங்கள் வாழ்வுரிமையைப் பறிக்கும் போஸ்கோ திட்டத்தை எதிர்த்து அனைத்து விவசாயிகளும் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஆனால் அரசோ, 15 நாட்களுக்குள் நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொள்ளாவிட்டால், பின்னர் எவ்வித நிவாரணமும் தரப்பட மாட்டாது என்று கடந்த பிப்ரவரி முதல் நாளன்று அறிவித்து, நிலங்களைப் பறிக்கக் கிளம்பியுள்ளது. பாதிக்கப்படும் விவசாயிகளுக்கான மறுகுடியமர்த்தல் மற்றும் நிவாரணத்திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. ""இந்தியாவில் இதுதான் மிகச் சிறந்த நிவாரணத் திட்டம்'' என்கிறார் போஸ்கோ இந்தியா நிறுவனத்தின் பொது மேலாளரான மொகந்தி. ஆனாலும் இன்றுவரை எந்த விவசாயியும் நிவாரணத் தொகையை வாங்கவில்லை.

 

ஜெகத்சிங்புர் மாவட்டத்தின் பட்னா, கோவிந்த்புர், தின்கியா ஆகிய கிராமங்கள் போராட்டத்தின் முன்னணியில் நிற்கின்றன. விவசாயிகள் போஸ்கோ திட்டம் அமையவுள்ள 4004 ஏக்கர் நிலத்தைச் சுற்றிவளைத்து 17இடங்களில் மட்டும் நுழைவாயில்களை அமைத்துள்ளனர். அவர்களின் அனுமதி இல்லாமல் அந்த மூங்கில் தடுப்பரண்களைத் திறக்க முடியாது. அரசு அதிகாரிகளோ போஸ்கோ நிறுவனத்தினரோ இன்னமும் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியவில்லை. ஒவ்வொரு கிராமத்திலும் மூங்கில் வேலி போடப்பட்டு அந்நியர்கள் எவரும் நுழைய முடியாதபடி தடுத்துக் கண்காணித்துவருகின்றனர்.

 

""ஏற்கெனவே பாரதீப் துறைமுகப் பகுதியில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இதேபோல விளைநிலங்களைப் பறித்துக் கொண்டு மறுவாழ்வு நிவாரணத் திட்டங்களை அறிவித்தது. அதை அன்று விவசாயிகள் நம்பினர். அந்த இடத்தை இன்று யார் வேண்டுமானாலும் நேரில் சென்று பார்க்கட்டும். வெறும் கான்கிரீட் தூண்கள்தான் நிற்கின்றன. அதற்குமேல் நிவாரணத் திட்டம் நகரவேயில்லை. அரசாங்கமே எங்களை வஞ்சித்துவிட்ட நிலையில், அந்நியத்தனியார் ஏகபோக நிறுவனமான போஸ்கோ, நிவாரணத்திட்டத்தை நிறைவேற்றும் என்று நம்புவதற்கு நாங்கள் முட்டாள்கள் இல்லை'' என்கிறார், தின்கியா கிராமப்பஞ்சாயத்துத் தலைவரான சிசிரா மகாபத்ரா.

 

நருசிங்க பெஹரா மற்றும் தேவேந்திர சுவாசூன் ஆகியோர் ""போஸ்கோவுக்கு மக்களின் எதிர்ப்பு'' எனும் ஏழுநிமிடக் காணொளியைத் தயாரித்து, அதை நாட்டு மக்கள் அனைவரும் காணுமாறும், விவசாயிகளின் நியாயமான இப்போராட்டத்தை ஆதரிக்குமாறும் கோரியுள்ளனர். ((http://www.youtube.com/watch?v=cizn7zJmyUc)

 

போஸ்கோவை எதிர்த்து வலது கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் விவசாயிகளோடு இணைந்து போராடி வருகின்றன. தர்ணா போராட்டம் நடத்தியவர்கள் மீது போஸ்கோ நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள குண்டர்படையினர் தாக்குதல் நடத்தியதோடு, குண்டுகளையும் வீசியுள்ளனர். இதில் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இது தவிர போலீசு பலமுறை தடியடித்தாக்குதல் நடத்தி இப்போராட்டத்தை நசுக்க முயற்சிக்கிறது. இத்துணை அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு ஒரிசா மக்களின் போஸ்கோ எதிர்ப்புப்போராட்டம் பற்றிப் படர்ந்து வருகிறது. ஒரிசா மக்களின் போஸ்கோ எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரிப்பதும், அதை மறுகாலனியாக்கத்திற்கு எதிரான போராட்டமாக வளர்த்தெடுப்பதும் புரட்சிகரஜனநாயக சக்திகளின் உடனடிக் கடமை; நம் கடமை.


• குணசேகரன்