Language Selection

புதிய ஜனநாயகம் 2010

பழங்குடியினர் நிறைந்த ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிழக்கு சிங்பும் மாவட்டத்தின் ஜாடுகுடா, யுரேனியவளம் மிக்க பகுதியாகும். இங்கு இந்திய யுரேனியக் கழகம் எனும் அரசுத்துறை நிறுவனத்துக்குச் சொந்தமாகப் பல சுரங்கங்கள் உள்ளன. இந்நிறுவனம் தனது உற்பத்தியை அதிகரிக்க எடுத்து வரும் நடவடிக்கைகளை எதிர்த்து, அப்பகுதி மக்கள் நடத்திவரும் போராட்டங்களால் ஜாடுகுடா வட்டாரமே கொதித்துக் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.

1967 முதல் இங்கு செயல்பட்டுவரும் இந்நிறுவனத்துக்கென பத்தின், துரம்திஹ், நர்வாபஹர், பாண்டுஹ_ரங் ஆகிய இடங்களில் சுரங்கங்கள் உள்ளன. இச்சுரங்கங்களில் வெட்டியெடுக்கப்படும் தாதுவிலிருந்து ஜாடுகுடா, துரம்திஹ் ஆகிய இடங்களில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகளில் அணுசக்திக்கு அவசியமான யுரேனியம் பிரித்தெடுக்கப்படுகின்றது. இப்பகுதியில் கிடைக்கும் தாதுவில் யுரேனியத்தின் அளவு மிகமிகக் குறைவாக இருப்பதால், 1000 மெட்ரிக் டன் தாதுவிலிருந்து 2 மெட்ரிக் டன் யுரேனியம் மட்டுமே பிரித்தெடுக்க முடியும். அணுக்கதிர்வீச்சு நிறைந்த எஞ்சிய தாதுக்கள், கழிவுகளாகத் திறந்த வெளியிலும் நீர் நிலைகளிலும் கொட்டப்படுகின்றன.

 

இக்கழிவுகள் உருவாக்கும் கதிர்வீச்சினால் இப்பகுதிவாழ் பெண்கள் பலருக்கும் குழந்தைப் பேறு இல்லாமல் போகும் கொடுமை அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் 9.6 சதவீத தம்பதியினர் குழந்தைப் பேற்றுக்குத் தகுதி அற்றவர்களாகி விட்டனர். 68.33 சதவீதம் பேர் சராசரி வயதான 62ஐ எட்டும் முன்பே இறந்துவிடுகின்றனர். 1967இல் சுரங்கம் ஆரம்பித்தபோது வேலைக்குச் சேர்ந்தவர்களில் ஒரே ஒருவர்தான் இன்று உயிரோடு இருக்கிறார்;. மற்றவர்களெல்லாம் தொடர் கதிர்வீச்சினால் பல்வேறு நோய்களுக்குப் பலியாகிவிட்டனர்.

 

சுரங்கத்தை ஒட்டிய பகுதிகளில் நீடிக்கும் அபாயகரமான கதிர்வீச்சினால் இப்பகுதிவாழ் மக்களுக்கு காசநோய், வயிற்றுப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் போன்றவை உருவாகியிருப்பதை ""அமைதிக்கும் வளர்ச்சிக்குமான இந்திய மருத்துவர்குழு'' என்ற அமைப்பு, தனது ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளது. அணுக்கழிவு நிலத்தடி நீரில் கலப்பதால் நீர் நஞ்சாகிவிட்டது. ஏறத்தாழ ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை இந்த யுரேனியச் சுரங்கமும் கதிர்வீச்சும் மெல்லமெல்லச் சுhகடித்துக் கொண்டிருக்கிறது.

 

ஹிரா ஹன்ஸ்தா எனும் பெண்ணின் கணவர் யுரேனியச் சுரங்கத்தின் தொழிலாளி. திருமணமான 20ஆண்டுகளில் 3 முறை கருச்சிதைவுக்குள்ளான இப்பெண்ணுக்குப்பிறந்த 5 குழந்தைகளும் பிறந்த சில நாட்களிலேயே இறந்துவிட்டன. முன்யா எனும் பெண்ணுக்கு தப்பித்தவறி ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு வலது காது மடல் இருக்க வேண்டிய இடத்தில் சதைக்கோளம் இருந்தது காதும் கேட்பதில்லை.

 

சுரங்கங்களிலும், சுத்திகரிப்பாலைகளிலும் கதிர்வீச்சைக் கட்டுப்படுத்தும் சர்வதேச விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. அங்குள்ள தொழிலாளர்கள் எவ்வளவு கதிர்வீச்சுக்கு உள்ளாகிறார்கள் என்பதை முறையாகக் கணக்கெடுக்க வேண்டும் எனும் விதி கூட இந்திய யுரேனியக் கழகத்தில் இல்லை. 2005ஆம் ஆண்டு இறுதியில் கழிவுகளைக் கொண்டு செல்லும் குழாய் ஒன்றில் ஏற்பட்ட கசிவினால் அணுக்கழிவுகள் ஊருக்குள் நுழைந்தன. அப்போது எவ்வித அபாய எச்சரிக்கையும் எழுப்பப்படவில்லை. சுமார் 9 மணி நேரத்திற்குக் கழிவுகள் தொடர்ந்து வெள்ளம் போல வெளியேறி ஊரையே நிரப்பிய பின்னர்தான் கசிவு அடைக்கப்பட்டது.

 

இவற்றையெல்லாம் கண்டு பொங்கி எழுந்த மக்கள் பல போராட்டங்களை நடத்தினர். ஏற்கெனவே இருக்கின்ற சுரங்கங்களில் சர்வதேச தரம் வாய்ந்த பாதுகாப்பை செய்து கொடுப்பது, கதிர் வீச்சு பாதித்துள்ள பகுதிகளைத் தூய்மைப்படுத்துதல், சுற்றுச்சூழல் மாசுபாடு,சுகாதாரச் சீர்கேடுகள் குறித்து நடுநிலையான ஆய்வு செய்தல், குடிநீர்நிலைகளில் கதிர்வீச்சு அபாயம் ஏற்படுவதை கண்காணித்துத் தடுக்க ஆவன செய்தல்  முதலான கோரிக்கைகளை முன்வைத்து அப்பகுதிமக்கள் கடந்த நாற்பதாண்டுகளாகப் போராடி வருகின்றனர்.

 

ஆனால், ஆலை நிர்வாகமோ அப்போராட்டங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இந்நிலையில், தனது அணு ஆயi ஆற்றலைப் பெருக்கவும், தெற்காசியாவில் "வல்லரசு என்ற பெருமையை' நிலைநாட்டவும் உற்பத்தித்திறனை மேலும் அதிகரிக்க முடிவுசெய்துள்ளது, இந்திய அரசு. இதற்காக ஆலை நிர்வாகம், கழிவுகளைக் கொட்டுவதற்கெனப் புதிதாக 6.37ஹெக்டேர் நிலத்தை வனத்துறையிடம் இருந்து வாங்கியுள்ளது.

 

ஆலை விரிவாக்கம் குறித்து நடந்த கருத்தாய்வுக் கூட்டத்தில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ய மக்கள் தீர்மானித்தனர். ஆனால், மக்களைக் கூட்டம் நடந்த இடத்திற்கு அருகிலேயே வர விடாமல் தடுக்க, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மத்திய தொழில் பாதுகாப்புப்படையைக் கொண்டுவந்து குவித்து, கூட்டத்திற்கு வந்த மக்களை மிரட்டி, கூட்டத்தில் கலந்துகொள்ள விடாமல் தடுத்து விரட்டினர். அதிகார வர்க்கமும் போலீசும் அமைத்த எல்லாத் தடைகளையும் மீறி, சுமார் 50க்கும் மேற்பட்ட மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்குள் நுழைந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.


நீர், காற்று, உணவு என அனைத்தையும் கதிர்வீச்சினால் மாசுபடுத்தும் அரசின் பொறுப்பற்றதனத்தைச் சுட்டிக்காட்டக் கூட அனுமதிக்காத அந்தக் கருத்தாய்வு, கதிர்வீச்சு பற்றிப் பேசுவதென்பது தேசவிரோத பிரச்சாரம் என்ற "கருத்தை'ப் பதிவு செய்திருக்கிறது. தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை நிறுத்துவதில்லை எனப் பழங்குடியினரும் உறுதியாய் உள்ளனர். முற்போக்கு ஜனநாயக சக்திகள் மற்றும் சுற்றுச்சூழலாளர்கள், மருத்துவர்கள் என பலதரப்பினரின் ஆதரவோடு பழங்குடியினரின் போராட்டம் இவ்வட்டாரமெங்கும் தொடர்கிறது.

 

• அன்பு