Language Selection

புதிய ஜனநாயகம் 2010

நுண்கடன் என்ற பெயரில் பத்தாயிரம் ரூபாய் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை கடன் கொடுக்கும் நிதிநிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் வகை தொகையின்றிப் பெருக ஆரம்பித்துள்ளன. பொருளாதார மந்தம் உலகைப் பிடித்தாட்டும் இன்றைய சூழலில், முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்க இவர்கள் வெளிநாடுகளில் செய்யும் விளம்பரங்களில்,""பத்தாயிரம் ரூபாய் உங்களுக்கு ஒரு பொருட்டாக இல்லாமல் போகலாம்; ஆனால் அதனை நுண்கடனாகக் கொடுப்பதன் மூலம் நீங்கள் இந்தியாவின் பின்தங்கிய பகுதியில் இருக்கும் ஒரு குடும்பத்தைக் கரை சேர்க்கமுடியும். உங்கள் பணம், நிச்சயமாக உங்களிடமே திரும்ப வரும்  அதுவும், அதற்கு உண்டான வட்டியுடன்!'' என விளக்கி இந்தியாவின் வறுமையையே இவர்கள் மூலதனமாக மாற்றுகின்றனர்.

தற்போது இவற்றில் பல நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தங்களை இணைத்துக் கொண்டுவிட்டதால், இவற்றின் பங்குகளை வாங்க உலகளாவிய பெரும் நிதியாதிக்கக் கும்பல்கள் போட்டி போடுகின்றன. இதுபோன்ற நிறுவனங்களில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது, அசலும் வட்டியும் திரும்பக் கிடைப்பது உறுதி என்பது மட்டுமல்லாமல், இது போன்ற நிதி நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் 50,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கிராமப்புறக் கடன் சந்தையையே கட்டுப்படுத்த முடியும் என்பதால், இவற்றில் முதலீடு செய்ய ஏகாதிபத்திய நிதியாதிக்கக் கும்பல்கள் போட்டி போடுகின்றன.

 

கடந்த 2004இல் 400 கோடி ரூபாய் அளவுக்கு இருந்த நுண்கடன்களின் மதிப்பு, 2009ஆம் ஆண்டில் மட்டும் ஆயிரம்கோடி ரூபாய்க்கும் மேலாக அதிகரிக்கும் அளவுக்கு அத்துறை விரிவடைந்துள்ளது.

 

இவ்வாறு அந்நிய நாடுகளிலிருந்தும் உள்நாட்டுதரகு முதலாளித்துவ நிதி நிறுவனங்களிடமிருந்தும் வந்து குவியும் பெரும் நிதியைச் சிறிது சிறிதாகப் பிரித்து, தகுதியான ஆட்களைக் கண்டறிந்து கடன் கொடுத்து, கறாராக வட்டியையும் அசலையும் வசூலித்துக் கொடுக்கும் பொறுப்பை, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஏற்றுள்ளன. மகளிர் சுய உதவிக் குழுக்கள் என்ற பெயரில் பெண்களைக் கொண்டு கட்டப்படும் குழுக்கள் மூலம் இதனை இவர்கள் சாதித்துக் கொள்கின்றனர்.

 

வங்கதேசத்தைச் சேர்ந்த முகம்மது யூனுஸ் 1983 இல் அறிமுகப்படுத்திய இத்திட்டம், கந்து வட்டியின் பிடியில் சிக்கித்தவிக்கும் பின்தங்கிய நாட்டுப்புற ஏழை மக்களைக் காப்பாற்றவும், வங்கிகள் வழங்கும் கடனுதவிகளைப் பெற முடியாத நிலையில் உள்ளவர்களும் கடன்பெறவும் உதவுவதாகப் பெருமையுடன் குறிப்பிடப்பட்டது. கிராமப்புற பெண்களின் முன்னேற்றமும், தற்சார்பும், விழிப்புணர்வும் பெருகி வருவதாக புள்ளிவிவரங்கள் அடுக்கப்பட்டது. இதற்காக யூனுஸ{க்கும் அவரது""கிராமின்'' வங்கிக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு நோபல் பரிசுகூட வழங்கப்பட்டது. வங்கதேசத்தில் ஏறத்தாழ 75 இலட்சம் ஏழைப் பெண்கள் பயனடைந்துள்ளார்கள் என்று கூறி இத்திட்டத்தை முதலாளித்துவவாதிகள் ஏற்றிப் போற்றினார்கள்.

 

இந்தியாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களைத் தொடங்கியபோது, நுண்கடன்களைப் பெற்று ஊதுவத்தி, மெழுகுவர்த்தி தயாரித்தல் போன்ற சிறுதொழில்கள் தொடங்குவது எனப் படம் காட்டினார்கள். பத்தாயிரம் ருபாய் கடன் பெற்ற குழுக்கள் பல லட்சம் சம்பாதித்துவிட்டதாக வெற்றிக் கதைகளைப் பரப்பினார்கள். பின்னர் மெதுவாக இவர்களது நீலச் சாயம் வெளுக்க ஆரம்பித்தது. மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் சிறுதொழில் தொடங்குவதெல்லாம் தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, முற்று முழுதாக அனைவரும் கந்துவட்டித் தொழிலில்தான் ஈடுபடுகின்றனர். எந்த நோக்கத்தைக் கூறி இத்திட்டம் தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கமே இன்று புஸ்வாணமாகிவிட்டது.

 

திருமணத்துக்கான செலவு முதலாக வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவது வரை எல்லா அவசரச் செலவுகளுக்கெனவும், காய்கறிவியாபாரம், சாப்பாட்டுக் கடை,மளிகைக் கடை போன்ற சிறியதொழில்களில் முதலீடு செய்வதற்கெனவும் பலர் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் நவீன கந்துவட்டிக் கும்பல்களிடம் கடன்வாங்குகின்றனர். 25 முதல் 40 சதவீதம் வரை வட்டி வாங்கும் இக்குழுக்கள், வட்டியை வசூலிப்பதில் கந்து வட்டிக்காரனை விஞ்சுமளவிற்கு மோசமாக நடந்து கொள்கின்றன. சுய உதவிக் குழுக்கள் இவ்வாறு கறாராக நடந்துகொள்வதற்கு, நிதி நிறுவனங்களிடமிருந்து இக்குழுக்கள் வாங்கிய கடனை ஒரு முறை திருப்பிக்கட்டத் தவறினால் கூட மறுமுறை கடன் கிடைக்காது என்பது ஒரு காரணம். நிதி நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்களுக்குத் தரும் கடன் அளவு பத்தாயிரம் ரூபாயில் ஆரம்பிக்கிறது. இத்தொகை முறையாகத் திருப்பிக் கட்டப்பட்டால் தான் கடன் அளவு படிப்படியாக அதிகரித்து 25 இலட்சம் ரூபாய் வரை உயரும் எனும் நிபந்தனையும் இன்னொரு காரணம். எனவேதான், கடனைத்திரும்ப வசூலிப்பதில் இக்குழுக்கள் தயவுதாட்சண்யம் பார்ப்பதில்லை. ஒருவருக்கு இருவராகச் சென்று கடன்பெற்றவரை நச்சரிப்பதில் இருந்து, அவரைப் பொதுஇடத்தில் வைத்து அவமானப்படுத்துவது வரை எல்லாவகையான உத்திகளையும் கையாள்கின்றனர். இதனால் கடன் வாங்கியவர் அவமானத்துக்குள்ளாகி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதும் பரவலாக உள்ளது.

 

வழக்கமான தங்களது 'லோன்'களின் மூலம் கிடைக்கும் வட்டியை விடவும் நுண்கடன்களின் மூலம் கிடைக்கும் வட்டி மிக அதிகம் என்பதாலும், இதன் மூலம் மிகப் பெரிய அளவிற்குக் கடன் கொடுத்து நிதியைச் சுழற்ற முடியும் என்பதாலும் ஐ.சி.ஐ.சி.ஐ; எச்.டி.எப்.சி; ஹெச்.எஸ்.பி.சி; அமெரிக்கன் சிட்டிபேங்க், ஏ.பி.என்.அம்ரோ, ஆக்சிஸ் பேங்க், பார்க்லேஸ், ஐ.என்.ஜி.வைஸ்யா, கோடாக் மகிந்திரா பேங்க், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு, டாடா கேபிடல், எஸ்பேங்க், பஜாஜ் அலயன்ஸ், ரிலையன்ஸ் போன்ற பலதனியார் வங்கிகளும் நிதிக்கழகங்களும் காப்பீடு நிறுவனங்களும் இத்துறையில் குதித்துள்ளன. நெதர்லாந்தின் இன்டர்நேஷனல் பினான்ஸ் கார்ப்பரேஷன்(ஐ.எஃப்.சி.), ஜெர்மனியின் டாசூஷ் வங்கி முதலானவை அவிஷ்கார் குட்வெல் எனும் நுண்கடன் வங்கித்திட்டத்தில் முதலீடு செய்யத் தீர்மானித்துள்ளன. நுண்கடன் துறையில் மிகப் பெரிய எஸ்.கே.எஸ். நிறுவனத்தில் பல்வேறு ஏகாதிபத்திய வங்கிகளும் நிதி முதலீட்டு நிறுவனங்களும் காப்பீடு நிறுவனங்களும் பல்லாயிரம் கோடிகளை முதலீடு செய்யத் தீர்மானித்துள்ளன. கிரெடிட் கார்ட் எனப்படும் கடன் அட்டைகளின் மூலம் அநியாய வட்டி வாங்கும் இவ்வங்கிகள், கடன் கட்ட முடியாதவர்களை ரவுடிகளை விட்டு மிரட்டி, பணம் பறித்தது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். இப்போது இவர்கள் நுண்கடன் துறையில் இறங்கியுள்ளதன் மூலம் அடாவடி வசூலும் ரவுடித்தனமும் தற்கொலைகளும் மேலும் அதிகரிக்கும் என முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளே அஞ்சுகின்றனர்.

 

அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ் என அனைத்து ஓட்டுக் கட்சிகளும் தற்போது வரிந்து கட்டிக் கொண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களைக் கட்டி வருகின்றன. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, சுழல் நிதி வழங்குவது என்ற பெயரில் இலட்சக்கணக்கான குழுக்களுக்கு, கோடிக்கணக்கான ரூபாய்களை தமிழகத்துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கிவருகிறார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அண்மையில் சென்னைக்கு வந்து காங்கிரஸ்சார்பு மகளிர் சுய உதவிக் குழுக்களைத் தொடங்கி வைத்து, தாங்களும் களத்தில் உள்ளதைக் காட்டிவிட்டுச் சென்றார். வாக்காளர்களுக்கு அள்ளி வழங்கும் பணம் மட்டுமே தேர்தலில் வெற்றிபெறுவதற்கான ஒரே வழி என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டதால், கொடுக்கும் பணம் முறையாக விநியோகிக்கப்படுவதற்கு, கட்சிக்காரனைவிட சுயஉதவிக் குழுக்கள் நம்பகமானவர்களாகத் தெரிவதால், எல்லாக் கட்சிகளும் தற்போது சுய உதவிக் குழுக்களைக் கட்டி வருகின்றன. முதலாளித்துவக் கட்சிகள் மட்டுமின்றி, இடதுவலது போலிக் கம்யூனிஸ்டுகளும் இது போன்ற குழுக்களைக ;கட்டி ஓட்டு வேட்டையாட முயற்சித்து வருகின்றன.

 

விவசாயம் நாசமாகி, விவசாயிகள் நொடித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் கிராமப்புறங்களைக் குறிவைத்து இறங்கியிருக்கும் நுண்கடன் குழுக்கள், விவசாயம் செய்யவும், ஆடுமாடு வாங்கவும் நிதி வழங்குவதை விட, ஆடம்பர நுகர் பொருட்களை வாங்கத்தான் அதிக அளவில் கடன் கொடுக்கின்றன. வாங்கும் கடனை உடனடியாகச் செலவு செய்துவிட்டு வட்டிகட்ட முடியாமல் விவசாயிகள் திணறிக் கொண்டிருக்க, கடன் கொடுக்கும் பன்னாட்டு நிதி நிறுவனங்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இலாபத்தில் கொழிக்கின்றன. இவர்கள் அடிக்கும் கொள்ளைக்குக் கூட்டாளிகளாக அடியாள்வேலை செய்வதைத்தான் மகளிர்சுய உதவிக் குழுக்கள் செய்கின்றன. மொத்தத்தில், நுண்கடன் திட்டம் என்பது ஏழைகளை ஏற்றிவிடும் ஏணியல்ல் அது அவர்களின் கழுத்தை இறுக்கும் சுருக்கு என்பதும், உள்நாட்டு வெளிநாட்டு நிதியாதிக்கக் கொள்ளைக் கூட்டம் கிராமப்புற ஏழைகளையும் சூறையாடக் கிளம்பிவிட்டது என்பதும் அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது.


• வேலன்