Language Selection

புதிய ஜனநாயகம் 2010

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் இதோ இறுதித் தீர்ப்பு வந்துவிடும், அதுவும் தமிழகத்துக்குச் சாதகமாகவே இருக்கும் என்ற தோரணையில் விசாரணையை நடத்திக் கொண்டிருந்த உச்சநீதி மன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வுப் பிரிவு, கடந்த மாதம் திடீர்த்திருப்பமாக கேரள அரசுக்குச் சாதகமாக அடி எடுத்து வைத்து விட்டது.

முல்லைப் பெரியாறு சம்பந்தப்பட்ட எல்லாப் பிரச்சினைகளையும் ஆய்வு செய்து ஆறு மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு என்ற அதிகார அமைப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்தக் குழுவிற்கு இரண்டு வாரத்துக்குள் தங்கள் பிரதிநிதிகளை நியமிக்கும்படி கேரளா மற்றும் தமிழ்நாடு அரசுகளை உச்சநீதி மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த ஐவர் குழுவில் தமிழக அரசு பங்கேற்காது என்று தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஒரு அரசு உத்தரவு போட்டு அரசு வழக்கறிஞர் மூலமாக உச்சநீதிமன்றத்திடம் தெரிவிப்பதற்குப் பதிலாக கட்சிப் பொதுக்குழுத் தீர்மானம் போட்டிருப்பதே கருணாநிதியின் அரசியல் நரித்தனத்தைக் காட்டுகிறது.

 

உண்மையில் உச்சநீதி மன்றத்தின் ஏற்பாட்டை ஏற்று ஜவர் குழுவில் பங்கேற்பதே, அந்த ஏற்பாடு அறிவிக்கப்படுவதற்கு முன்பே கருணாநிதி எடுத்துவிட்ட முடிவாகும். ஜவர் குழுவில் பங்கேற்பது என்ற முடிவை முதலில் பகிரங்கமாக அறிவித்துவிட்டால், ""கருணாநிதி துரோகம் செய்துவிட்டார்'' என்று ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த், போலி கம்யூனிஸ்ட் ஆகிய எதிர்த்தரப்பு அடையாளம் காட்டிவிடும்.

 

அதற்குப் பதிலாக ஜவர் குழுவில் பங்கேற்பதில்லை என்று முதலில் கட்சியில் மட்டும் தீர்மானம் போடுவது "செத்தகட்சி  சாவாத கட்சி' என்ற லாவணி அரசியல்படி எதிர்க்கட்சிகள் ""அந்த முடிவு தவறானது, தமிழக அரசு ஜவர் குழுவில் பங்கேற்க வேண்டும்'' என்று பேசுவார்கள்; இதையே சாக்காக வைத்து எதிர்த்தரப்பின் வற்புறுத்தல் காரணமாக ஜவர் குழுவில் பங்கேற்பதாக அரசு பூர்வ முடிவெடுப்பது என்பதுதான் கருணாநிதியின் அரசியல் திட்டம் (யுக்தி). இந்தத் திசையில் தான் கருணாநிதி தனது அரசியல் லாவணிக் கச்சேரியை வழிநடத்திச் செல்கிறார்.

 

இது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கருணாநிதி மீது சுமத்தப்படும் அபாண்டமான பழியா? ""ஜவர் குழுவில் பங்கேற்பதில்லை'' என்று இப்போது கட்சித் தீர்மானம் போட்டிருக்கும் கருணாநிதியின் சம்மதத்தோடு தான் ஜவர் குழு அமைப்பது என்ற ஏற்பாடு செய்யப்பட்டது. கருணாநிதி மட்டுமல்ல எதிர்க்கட்சிகளும் இந்த உண்மையை மூடி மறைக்கிறார்கள். இத்தனைக்கும் இந்த உண்மை செய்தி ஏடுகளில் பகிரங்கமாக வெளிவந்த பின்னும் ஓட்டுக்கட்சிகள் இந்தப் பித்தலாட்ட லாவணியைத் தொடர்ந்து நடத்துகின்றன.

 

""தமிழ்நாட்டோடு கலந்தாலோசனை செய்து கேரளா அரசு சமர்ப்பித்த நகல் ஆணையை உச்சநீதி மன்ற நீதிபதிகளின் அமர்வுப் பிரிவு பரிசீலித்த பிறகு இதை (ஜவர் குழு அமைப்பது என்ற ஏற்பாட்டை) நாளை முறைப்படியான ஆணையாக அறிவிக்கும்'' என்று (பார்க்க: ""இந்து'' நாளேடு, பக்.1,பிப். 18, 2010) உச்சநீதி மன்றம் தெரிவித்தது.

 

ஆக, கேரள அரசு தயாரித்த நகல் ஆணையைத்தான், தமிழக அரசின் ஆலோசனையோடும், ஒப்புதலோடும் தான் ஜவர் குழு அமைப்பது என்று உச்சநீதி மன்றத்தில் முடிவானது. அந்த ஆணையிலேயே, ""முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை உயர்த்துவது என்ற 2006ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத் தீர்ப்பை கேரள அரசு அமலாக்க மறுப்பது, அதற்கு எதிராக கேரள அரசு சட்டமியற்றியது, தற்போதுள்ள அணையின் பாதுகாப்புபற்றி கேரள அரசு அச்சமெழுப்புவது புதிய அணை கட்டுவது என்ற கேரள அரசின் முடிவு எல்லாவற்றையும் ஐவர் குழு பரிசீலிக்கும்.

 

இவ்வளவு ஆண்டுகள் "போராடி' வழக்குகள் நடத்தி, ""தற்போதைய முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது தான், அதன் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்திக் கொள்ளலாம்'' ஆகிய உரிமைகளை உச்சநீதி மன்றத் தீர்ப்பின்படியே நிலைநாட்டிய பிறகு, பெற்ற உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்குப் பதில் கேரள அரசின் அடாவடி எத்தணிப்புகளுக்கு உடன்படும் நிலைக்குத் தமிழகத்தை தாழ்ந்துபோக வைத்துவிட்டது கருணாநிதி அரசு.

 

காவிரிப் பிரச்சினையிலும் இதேநிலை தான். 17ஆண்டுக்குள் கோடிக்கணக்கில் வழக்குரைஞர்களுக்குக் கொட்டிக் கொடுத்து "போராடி'  வாதாடி நடுவர்மன்றத்தில் ஓரளவு சாதகமான தீர்ப்புப் பெற்றும், அந்தநிலையையும் பறிகொடுத்து விட்டது.


நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதி மன்றத்திலேயே கூட மேல்முறையீடு செய்ய முடியாது என்ற சட்டத்தையே மீறி, காவிரிப் பிரச்சினையில் கர்நாடகஅரசினுடைய மேல்முறையீட்டையும்; உச்சநீதி மன்றத் தீர்ப்பையே அமலாக்க மறுத்து, உச்சநீதி மன்றத்தையே அவமதிக்கும் கேரள அரசின் மேல் முறையீட்டையும் விசாரணைக்கு ஏற்பதன் மூலம் காலங்கடத்தும் கர்நாடக, கேரள அரசுகளுக்குத் துணை போகிறது, உச்சநீதி மன்றம். காவிரிப் பிரச்சினையிலும் முல்லைப் பெரியாறு பிரச்சினையிலும் மத்தியிலுள்ள நீதிநிர்வாக அமைப்பு முழுவதுமே தமிழகத்துக்கு எதிராக நிற்கிறது; மாநிலங்களிலுள்ள ஓட்டுக்கட்சிகள் எல்லாமே தெரிந்தே துரோகத்தனம் செய்கின்றன.