Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புலிகள் என்னை உரிமை கோராது 28.04.1987 அன்று படுகொலை செய்யவென கடத்திச் சென்றனர். என்னை அழித்து விட, இரகசியமாக நடுவீதி ஒன்றில் வைத்து கடத்தியவர்கள், என்னிடமுள்ள தகவல்களைப் பெற தொடர்ச்சியாக சித்திரவதைகளைச் செய்தனர். தங்கள் சொந்த இரகசிய வதைமுகாமில் வைத்து, தொடர்ச்சியாக சித்திரவதைகளை என் மீது ஏவினர். இதன் மூலம் அவர்கள் மக்களின் அடிப்படையான ஜனநாயக உரிமைகளையும், போராட்ட வெற்றிகள் அனைத்தையும் காட்டிக் கொடுக்கக் கோரினர். இதற்காக யார் யார் எல்லாம் போராடுகின்றனர் என்ற விபரத்தைக் கக்கக்கோரினர்.

இப்படி இரகசியமாக உரிமை கோராது கடத்தியது முதல், கைது, சித்திரவதை, படுகொலைகள் என அனைத்துமே ஜனநாயக விரோதமானது, சட்டவிரோதமானது. ஒரு போராட்ட இயக்கத்தின், இழிந்து போன அதன் அரசியலைக் காட்டியது. இதுவே பாசிட்டுகளுக்கே உரிய வக்கிரமுமாகும். இதைவிட மாற்று அரசியல் தெரிவு, பாசிட்டுகளுக்கு கிடையாது.

 

நானோ ஒரு இயக்கத்தின் உறுப்பினர். பரந்த மக்களின் ஆதரவும், அவர்களின் போராட்டங்களில் பங்குபற்றியதன் மூலம், நெருக்கத்துக்குரிய ஒரு தலைவராகவும் இருந்தவன். பல்கலைக்கழக மாணவர் தலைவர்களில் ஒருவன். மக்களின் ஜனநாயக போராட்டங்கள் பலவற்றில் பங்கு கொண்டதுடன், அதற்கு தலைமை தாங்கியவன். மக்களின் அன்றாட வாழ்வியல் போராட்டங்களில் ஒன்றிணைந்து இருந்த என்னை, அன்று கொன்று விடுவதே புலிகளின் அரசியல் தெரிவாக இருந்தது. பலரை இப்படிக் கொன்றனர்.

 

புலிகள் என்னைக் கொன்று விடவே, மிக இரகசியமாக கடத்திச் சென்றனர். என்னைக் கொலை செய்யும் நாள் வரை, என்னிடமிருந்த மக்களுடன் நிற்பவர்கள் பற்றிய தகவல்களை கறக்க முனைந்தனர். அவர்களிடம் இருந்த சில தகவல்களைக் கொண்டு, மேலதிகமான புதிய தகவல்களைப் பெற முனைந்தனர். அத்துடன் பொதுவான சித்திரவதையைச் செய்வதன் மூலம், அவர்களுக்கு தெரியாத தகவல்களைப் புதிதாகப் பெற முனைந்தனர். 

 

இதற்காக அடைத்து வைத்து சித்திரவதை செய்தனர். நான் இந்த வதைமுகாமில் இருந்து தப்பியதன் மூலம், அங்கு என்ன நடந்தது என்ற வரலாற்று உண்மையை, தகுந்த ஆதாரங்களுடன் இந்த நூல் மூலம் உங்களுக்கு சமர்பிக்கின்றேன்.
 
புலிப் பாசிசமோ நேர்மையற்ற ஒன்று. ஒன்றுக்கொன்று முரணான பொய் புரட்டுகளின் மூலம், முழு மக்களையும் தனக்கு கீழ் அடிமைப்படுத்தியது. இதற்கு புலிகளின் பாசிசம் கட்டமைத்த தேசிய வரலாற்றில், பல ஆயிரம் உதாரணங்கள் உண்டு. அதில் ஒன்றே மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை என்ற எனது இந்தக் குறிப்பு.

 

1.வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)