1987ம் ஆண்டு 28.04.1987 திகதி இரகசியமாக என்னைக் கடத்திச் சென்றனர். அந்தக் கதை. முதல் நடவடிக்கையாக முழுமையாக நிர்வாணமாக்கப்பட்டேன். 17.07.1987 நான் அங்கிருந்து தப்பும் வரையான அனுபவத்தை அடிப்படையாக கொண்டது. பின் தலைமறைவாக 21.08.1987 வாழ்ந்த காலத்தை உள்ளடக்கியது. நான் தப்பிய அடுத்த நாளே, நான் சொல்ல விமலேஸ்வரன் (இவன் பின் புலிகளால் கொல்லப்பட்டான்) எழுதிய 269 குறிப்புகளைக் கொண்டு, 2001ம் ஆண்டு வரையாக தொகுக்கப்பட்டது. பிரசுரிக்கின்ற இன்றைய நிலையில் முழுமையாக செழுமைப்படுத்தி வெளிவருகின்றது.
வாழ்வுக்கான போராட்டம்
எம் மக்கள் வாழ்விழந்து நிற்கின்றனர். இதில் இருந்து மீளமுடியாத வண்ணம், நாதியற்ற நிலையில் நிற்கின்றனர். எல்லாவற்றையும் இழந்து விட்டனர். வன்னி மக்கள் திறந்தவெளிச் சிறையில் அநாதையாகிவிட்டனர். யாழ் மக்கள் நுகர்வுச் சிறையில், தலைகால் தெரியாது வீங்கி வெம்புகின்றனர். கிழக்கு மக்கள் எல்லாவற்றையும் இழந்த நிலையில், கேட்பாரின்றி அநாதையாக விடப்பட்டுள்ளனர்.
சிங்கள பேரினவாதம் எம் மக்களை பலவாக பிரித்து கையாளுகின்றது. சமூகத்தை சீரற்ற வண்ணம் சிதைக்கின்றது. ஒரு இனமாக ஒன்றிணைக்க முடியாத வண்ணம், அரசியல் அடிப்படைகளைத் தகர்க்கின்றது. ஓரே தளத்தில் ஒன்றுபட முடியாத வண்ணம் முரண்பாடுகளை உருவாக்குகின்றது. இனத்தை பிளக்கும் வண்ணம், வேறுபட்ட ஒடுக்குமுறைகளையும், சலுகைகளையும் கூட மிக நுட்பமாக கையாளுகின்றது.
இந்த நிலையில் புலிகள் அமைப்பு ரீதியாக அழிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தம்மை மீள ஒருங்கிணைப்பதற்குரிய எந்த அரசியல் அடிப்படையும், அவர்களின் அமைப்பிடம் இருந்தது கிடையாது.
அவர்களின் கடந்தகாலத் தவறுகள், அவர்கள் இறுதி வரலாறாகிப் போனது. தாங்கள் மட்டுமே போராடமுடியும் என்ற அவர்களின் நிலை, தாம் அல்லாத அனைத்தையும் ஈவிரக்கமின்றி அழித்துள்ளது.
தன்னையும் தன்னைச் சுற்றியும் கூட, தனிமனித துதியை உருவாக்கியது. இப்படி தனிமனித துதியை முன்னிறுத்தி தன் தலைமையையே அழித்தது. போராட்டத்தை தங்கள் சுயநலத்துக்காக பயன்படுத்தி, இனத்தையை அழித்துவிட்டனர். இதைப் பயன்படுத்தி சுரண்டியும் சுருட்டியும் வாழ்ந்த புலத்து புலிக்கும்பல், எஞ்சிய புலிச்சொத்தை தானே சுருட்டிய படி, தான் தொடர்ந்து போராடப் போவதாக பாசாங்கு செய்கின்றது.
இதன் விளைவு இன்று பேரினவாதத்தின் நுகத்தடியில் சமூகத்தை முழுமையாக இட்டுச் சென்றுள்ளது. இதை மாற்றி அமைக்க, போராட்டக் காலம் பூராகவும் போராடியவர்கள் சந்தித்த அனுபவத்தில் இது ஒரு துளி. மண்ணில் நாம் நடத்திய போராட்டத்தின் போது, நான் சந்தித்த சில அனுபவத்தை அடிப்படையாக கொண்டது. நடந்துமுடிந்த தவறான போராட்டத்தின் வரலாற்றை, மீள் ஆய்வுக்கும் சுயவிமர்சனத்துக்கும் உள்ளாக்க இது உங்களுக்கு உதவும். எந்த மக்கள் அரசியலை அழிக்க புலிகள் முனைந்தனரோ, அந்த அரசியல் உள்ளடங்கிய வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.
பி.இரயாகரன்