Language Selection

இன்றைய பொதுப்புத்தி இப்படித்தான் கருதுகின்றது. மூலதனத்தின் மந்தைக் கூட்டமாக, மனிதன் இருக்கும் வரை, ரசனை மட்டகரமானதாக மாறிவிடுகின்றது. மனிதனை மூலதனத்தின் அடிமையாக இருக்க, மட்டகரமான ரசனை உற்பத்தி செய்யப்படுகின்றது.

இதனால் சினிமாவின் பின்னால், நாடகத்தின் பின்னால் மயங்கி, அதன் உறுப்புகளாகவும் மாடல்களாகவும் மாறி, வாழ்க்கையை அதற்கூடாக அணுகி வாழ முனைகின்றனர்.

இந்த சினிமா என்பது, சந்தைக் கலாச்சாரத்தின் விளம்பர ஊடகம் தான். சந்தைக்கு பாய்விரித்து தொழில் நடாத்தும் விபச்சாரத் தரகுத் தொழில் தான், இந்தக் கலை. பாலியல் விபச்சாரத்தை தொழிலாகவே நடத்தும் மாமாக்களின் அதே கலை நேர்த்தி, இந்த சினிமா என்ற கலைக்கும் உண்டு.

இந்த சினிமா பற்றிய விவாதம் மிகப்பெரியது. நாம் குறிப்பாக மட்டும் ஆராய்வோம். பிரதேசத்துக்கு பிரதேசம், சூழலுக்கு ஏற்பவும் சினிமா பற்றிய மதிப்பீடுகள் மாறுபடுகின்றது. மேற்கு சினிமா கீழைத்தேய நாடுகளின் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதும், கருத்துரைக்கப்படுவதும் உண்டு. இதே போல் தான் கீழைத்தேய சினிமா பார்க்கப்படுகின்றது.

சினிமா உள்ளடக்கமும், அதன் ஆன்மாவும் எப்படி எந்த வழியில், கலைத்துவம் என்ற பெயரில் விபச்சாரமாகவே இருக்கின்றது என்பதை பார்த்தோம். கலை பற்றிய சமூகத்தின் விபச்சார நிலை தான், அதையே சமூக ரசனையாக்குகின்றது. மறுபக்கத்தில் சமூகத்தை வழிநடத்த முடியாத நிலைக்குள், சமூகம் தாழ்ந்து சீரழிந்துவிடுகின்றது. மேலிருந்து திணிக்கப்படும் உலகமயமாதல் நிகழ்ச்சிகளை, கீழ் இருந்து எதிர்கொள்ள முடியாது சமூகம் திணறுகின்றது.

சமூகம் தான் கொண்டிருந்த கடந்த கால அறிவுகள், நம்பிக்கைகள், வழிகாட்டல்கள் எதுவும் இதன் முன்னால் செயலற்றதாக்கப்படுகின்றது அல்லது இழிவாக்கப்படுகின்றது. சமூகம் மீதான தனது சுய நம்பிக்கையைக் கூட, சமூகம் தன்னளவில் இழந்து விடுகின்றது. தனது சொந்த வழிகாட்டல் மீதே நம்பிக்கையை இழக்கின்றது. மேலிருந்து இடியாக சமூகம் மீது இறங்கும் சமூகச் சிதைவை எதிர்கொள்ளும் ஆற்றல் என்பது, சமூகத்தின் கீழ் இருந்து அதை ஒருங்கிணைத்து எதிர்கொள்ள வேண்டும். மேலிருந்து சமூகத்துக்குள் வருவது வெளிப்படையானது. குவிந்த பணமும் அது வக்கரிக்கும் அதன் பண்பாடும் தான், அதாவது அதன் சொந்த வக்கிரம் தான் மேலிருந்து கீழ் வருகின்றது. கீழிருப்பதோ வறுமையும் மனித அவலமும், கையாலாகாத்தனமுமே.

இங்கு வெளிப்படுவது நேர்ரெதிரான இரண்டு கலாச்சாரங்கள். மேலே பணத் திமிர் கலாச்சாரமாகவும், கீழ் இருப்பது தாழ்வு மனப்பான்மையும், அடிமை மனப்பாங்கும், கையாலாகாத்தனமுமாகும். இதற்கு ஏற்ப மேலுள்ளதை உள்வாங்குவது அல்லது ஏதோ ஒரு வகையில் திருத்திப்படுத்தும் சுய கோட்பாட்டை கூறியபடி, மேல் இருந்து வரும் கலாச்சாரத்தில் சீரழிவதுமாகும். உண்மையில் சுய திருப்தி காணும் கோட்பாடுகளும், சமூகத்தின் மேல் நஞ்சிடுவதுமாகும்.

இதை எதிர்கொள்ளல் என்பது, இருக்கின்ற சமூகத்தின் இன்றைய பொது அறிவால் முடியாது என்பதே உண்மை. மாறாக சமூகத்தில் இருந்து சமூகத்தை துருவிக் கற்றல், அதை மீளக் கற்றுக் கொடுத்தல் என்ற கடந்தகால சமூக வாழ்வியல் வழியை கண்டறிதல் அவசியம். இதன் மூலம் கூட்டாக இயங்குதல் அவசியம்;. தொலைக்காட்சிகள், மற்றும் சினிமாவின் வருகைக்கு முந்தைய காலத்தில் கற்றல், கற்றுக்கொடுத்தல் என்ற அடிப்படையில் தான் சமூகங்கள் இயங்கின. ஆனால் இன்று பணம் உள்ளவன் மேலிருந்து திணிக்கும் தொலைக்காட்சியிடமும், சினிமாவிடமும் மனித விரோத சீரழிவை கற்றுக் கொடுத்தல் என்ற பணியை தாரை வார்ப்பதை, நாம் எப்படி அனுமதிக்க முடியும்? ஆனால் அதைத்தான் நாம் வெட்கமின்றி செய்கின்றோம். வழிகாட்டும் சமூகப் பாத்திரத்தை இழந்து, வெறும் நுகர்வு பண்பாட்டுக்குள் மனித உறவுகளை சிதைக்கின்றோம். சமூகம் கொண்டுள்ள மனித உறவுகள், பொருளைச் சார்ந்த ஒன்றாகவே மாறிவிட்டது. பொருட்களை வாங்கிக் கொடுப்பது, அன்பளிப்பு செய்வது, அதை நேசிப்பது என்று, அதைச் சுற்றியே மனித உறவுகளான ஒரு உலகம் இயங்குகின்றது. இப்படி இழிவான மலட்டு மனிதப் பண்பாடுகளும், கலாச்சாரங்களும் உருவாகிவிட்டன. இதைத்தான் சமூகத்தின் மனித செயல்பாடாக மாற்றிவிட்டு, ஒரு பொருளுலகத்தின் அடிமைகளாக நாம் வாழ்கின்றோம். பொருளை கொடுத்தல், வாங்குதலுக்குள் மனித உறவுகளை தீர்மானிக்கின்ற மனித அவலம். மனிதன் வெளிப்படுத்தும் உணர்ச்சி, ரசிப்பு, ஈர்ப்பு, சிரிப்பு, மகிழ்ச்சி, கோபம், அழுகை, உரையாடல், நடைமுறை முதல் காதல் வரை, பொருள் சார்ந்த நுகர்வின் எல்லைக்குள் மலினப்பட்டு, அதற்குள் சடங்குத் தன்மையிலான அசட்டுத்தனமாக உயிர்வாழ்கின்றது.

பொருள் சார்ந்த நுகர்வுக் கலாச்சாரத்தை, பண்பாட்டை மறுத்து வாழமுற்படுதல், அந்த நடைமுறையை பின்பற்ற மறுப்பதை எல்லாம், இழிவான செயலாக எண்ணுகின்ற, கற்பிக்கின்ற மனப்பாங்கு உருவாகியுள்ளது. குடும்பங்களில் இந்த உறவின் எல்லைக்குள், பிளவுகள் முரண்பாடுகள் கற்பிக்கப்படுகின்றது. இப்படி பொருள் சார்ந்த உலகை நடைமுறையில் பின்பற்ற மறுப்பதை விநோதமாக நோக்குகின்ற அற்பத்தனங்கள், சமூக அரங்கில் பல்லிளித்து மிரட்டுகின்றது. இந்த பொருள் சார்ந்த உலகம் உருவாக்குவதோ, கவர்ச்சியும் ஆபாசமும் தான்.

மனித உறவுகளைச் சுற்றி இந்த நுகர்வு நிகழ்ச்சி நிரலை இனம் காண்பது என்பது கடினமானது. சமூக உண்மைகளையும் விமர்சனம் சுயவிமர்சனம் ஊடாக கற்பதும், நடைமுறை வாழ்விலான போராட்டத்தில் அதை தெரிந்து கொள்வதன் மூலமுமே இதை எதிர்கொள்ள முடியும். பகட்டான, ஆடம்பரமான, வீம்பான, எடுப்பான திமிர்தனங்களால், எதார்த்த உண்மையை புரிந்து கொள்ளவே முடியாது. சமூகத்தின் பொதுப் புத்தி மட்டம் இதற்குள் தான், தன்னை விளம்பரப்படுத்தும் அற்பத்தனத்தில் உளறுகின்ற துயரம் நிகழ்கின்றது.

பொதுப்புத்தி மட்டம் நாணம் கட்டிய மாடுகள் போன்று பழக்கப்படுத்தப்படுகின்றது. புதிய தலைமுறைகளை கருவிலேயே இருந்து, இதற்குள் உற்பத்தி செய்கின்றனர். கருவிலேயே புகுத்தப்படுகின்ற நுகர்ச்சிவெறி சார்ந்த கவர்ச்சியும் ஆபாசமும் திமிராகவே வெளிப்படுகின்றது. இப்படி வெளிப்படுத்தும் இந்த நுகர்வுவெறி சார்ந்த திமிருக்கு முன்னால், உழைக்கும் சமூகம் கூனிக்குறுகி விடுகின்றது. பணக்காரனுக்கு முன்னால் கூனிக்குறுகி நிற்கும் உழைக்கும் வர்க்கம் போல், நுகர்வுவெறிக்கு முன்னால் உழைக்கும் மக்கள் கூனிக்குறுகுகின்றனர். இதுவே சொந்த குடும்பங்களில், பழைய புதிய தலைமுறைக்குள்ளும் நடக்கின்றது. உலகமயமாதலின் அற்பத்தனத்தை முன்னெடுக்கும் தர்க்கம் மற்றும் நடைமுறை வாதத்தின் முன்னால், அதை மறுக்கும் உழைக்கும் வர்க்கம் கைகட்டி நிற்கின்ற மனித அவலம். இதற்குள் சீரழிந்து விடுவதும், சினிமாவூடாக தொலைக்காட்சி ஊடாக அதை கற்பனையில் நுகர்ந்து வாழ முனைவதும், இதை நியாயப்படுத்துகின்ற எல்லைக்குள் அங்கீகரித்து விடுவதும் நிகழ்கின்றது. தமக்கு தாமே, தமது மனத்திரையில் இந்த மாயையை உற்பத்தி செய்கின்றனர்.

இதன் எதிர்நிலை தம்மைத்தாமே திருப்தி செய்கின்ற கோட்பாட்டையும், இதே உலகமயமாதலில் கண்டுபிடிக்கின்றது. சினிமாவை கலாச்சாரத்தின் ஊடகமாகவும், மொழியின் ஊடகமாகவும் காணவும், சிந்திக்கவும் தொடங்கி, அதுவாக அது இருப்பதாக, நம்பவும் காட்டவும் தொடங்குகின்றது. சொந்த சமூகத்தில் இருந்து அன்னியமாகின்ற போது ஏற்படும் பண்பாட்டுக் கலாச்சாரக் கூறுகளின் அதிர்வு, அதை சினிமா ஊடான கலாச்சாரமாக மொழியாக காண்கின்ற அவலமும், அதை விளக்குகின்ற தர்க்கவாதமும் உருவாகின்றது.

சமூகத்தின் போலியான மனப்பாங்கு சார்ந்த, பிரமை சார்ந்த சமூக அறியாமையே, இதன் மூலதனமாகின்றது. ஆங்கிலப் படம் பார்த்தால் ஆங்கிலம் படிக்க முடியும் என்ற சமூக மனப்பிரமையும் அதை நோக்கிய அறியாமையும் தான், தமிழ் படத்தைப் பார்த்தால் தமிழைக் கற்க முடியும் என்று நம்புகின்றது. இதுபோல் தான் கலாச்சாரத்தையும் பற்றிய, மனப்பிரமையும் உருவாகின்றது. சமூகம் என்ற தொப்புள்கொடியில் இருந்து சமூக உறுப்புகள் அன்னியமாகின்ற போது, முரண்பட்ட இரண்டு கலாச்சாரங்கள் ஒன்றுடன் ஒன்று இப்படி மோதுகின்றது.

இந்தத் தளத்தில் பலமான இழிவான நுகர்வுக்கலாச்சாரம் ஆதிக்கம் வகிக்கின்ற நிலையில், பலமற்ற கலாச்சாரம் அதை எதிர்கொள்ளும் ஆற்றலை இழக்கும் போது, சாக்கடைக்குள் வடிகாலை கண்டுபிடிப்பதில் தான், அது தன்னைத்தானே திருப்தி செய்து கொள்கின்றது. இந்த சாக்கடையான சினிமாக் கலாச்சாரத்தையும், அது பேசும் மொழியைப் பற்றியும் சுய திருப்தி கொள்கின்றது. உண்மையில் இந்த விடையத்தைப் சமூக முழுமையில் புரிந்து கொள்ளாமல், அதற்குள் தாம் ஒரு தீர்வைக் கண்டுள்ளதாக மனப்பிரமை கொள்கின்றனது.

இது பலதளத்தில் பலவிதமாக இருந்த போதும், மேற்கத்தைய கலாச்சாரத்தை இழிவானதாக குறுக்கிப் பார்க்கின்ற, இந்தியக் கலாச்சார சுயதிருப்தி வெளிப்படுகின்றது. இந்தப் பொதுப்புத்தியில் இந்தியக் கலாச்சாரத்தை அணுகுகின்றது. இந்தியக் கலாச்சாரம் உயர்ந்ததாகவும், மேற்கத்தைய கலாச்சாரம் தாழ்ந்ததாகவும் கற்பிக்கின்ற பொதுப்புத்தி மட்டம், தனது அறிவு சூனியத்துக்கு ஏற்ப அதற்கு விளக்கம் கொடுத்து அதை அணுகுகின்றது. குறிப்பாக பெண்களின் ஓழுக்கவியல், நடையுடை பாவனைகள், முதல் அவளின் திருமணங்கள் அனைத்தையும் இதற்குள் ஓப்பிட்டு காண்பதே, இந்த இந்தியக் கலாச்சாரத்தின் ஆபாசமான பொது எல்லையாகும். இது மறுக்கப்படும் போது, இவை அத்துமீறப்படும் போது, நிலப்பிரபுத்துவ சமூக உறவு சார்ந்து பெண்ணின் எதிர்கால பாலியல் பற்றிய அச்சம் ஏற்படும் போது எல்லாம், சினிமா கலாச்சாரம் பற்றியும், அது பேசும் மொழி பற்றிய பிரமைகள், எதிர்வு கூறல்கள் முன்வைக்கப்படுகின்றது.

மேற்கத்தைய கலாச்சாரம், கீழைத்தேய கலாச்சாரம் என்ற பிளவுக்கு இடையிலான பொது அடிப்படை என்பது, பொருளாதார உள்ளடகத்தில் இருந்தும் சீரழிந்துவிட்டது. முன்பு முதலாளித்துவக் கலாச்சாரம், நிலப்பிரபுத்துவ கலாச்சாரம் என்ற ஒரு பொதுக்கோடு பிரித்த போதும், அவை படிப்படியாக ஒன்றுக்குள் ஓன்றாகவே சீரழிந்தது. நிலப்பிரபுத்துவமும் ஏகாதிபத்தியமும் கொண்டிருந்த இணக்கமானதும், ஒன்றையொன்று சார்ந்த தமக்குள் புனிதமான விபச்சாரத்தை செய்து கொண்டது. இந்த ஏகாதிபத்திய கலாச்சாரம் இன்று, முழுமையான உலகமயமாதல் என்று நுகர்வுக் கலாச்சாரமாகிவிட்டது. இது வாழ்வியல் கூறுகளில் ஏற்படுத்தும் பாரிய தாக்கத்தை, அதன் விளைவையும் சமூகத்தால் உட்கிரகிக்க முடிவதில்லை. அதனால் அது அதனிடத்தில் தன்னை அறியாமல் விலகிய முரண்பாட்டுடன் அம்மணமாகவே சரணடைகின்றது.

1. உலகமயமாதல் ஏற்படுத்தும் சமூக விலகல். தனிமனித வாதம், நுகர்வுவாதத்தின் மையப்புள்ளியாக ஒன்றிணைந்து, சுய அனுபவிப்பு பற்றிய பிரமையில் சமுகத்தை எதிராக நிறுத்துகின்றது. இது கலாச்சாரம் பற்றிய எதிர்நிலை முரண்பாடுகளை உருவாக்குகின்றது.

2. சமூக அமைப்பில் நுகர்வு கலாச்சாரம் ஏற்படுத்தும் சீரழிவு. உலகமயமாதலில் நுகரக் கூடியவனுக்கும், நுகர முடியாதவனுக்கும் இடையிலான இரட்டைக் கலாச்சாரம். இதற்கு இடையில் அங்குமிங்குமாக ஓடிப்பிடிக்கும் வக்கிரம். இது தனிமையில் வக்கிரமடையும் போது, வன்முறை கொண்ட அராஜக கலாச்சாரத்தை கொண்டு, சமூக விரோத கலாச்சாரத்தை கட்டமைக்கின்றது.

3. உலகமயமாதலால் ஏற்படும் சமூக கொந்தளிப்புகளால் ஏற்படும் பாரிய புலம்பெயர்வுகள், கலாச்சார ஏற்றுமதிகளும், கலாச்சாரத்தில் ஒரு சமூக அதிர்வை உருவாக்குகின்றது. குறிப்பாக இரட்டைக் கலாச்சாரம், இரட்டை மொழி சூழல், இதனால் பெற்றோருக்கும் குழந்தைக்குமான கலாச்சார இடைவெளிகள் பாரிய அளவில் அதிகரிக்கின்றது.

உலகமயமாதல் கலாச்சாரத்தில் முழுமையாக வாழத் தொடங்கும் புதிய தலைமுறைக்கும், அதற்கு முந்தைய தலைமுறைக்கும் இடையில் அடிப்படையான முரண்பாடாக இருப்பது, சமூகத்தன்மையை மறுத்தலாகும். உலகமயமாதலுக்குள் பிறந்த புதிய தலைமுறை, மனிதன் என்ற சமூக கலாச்சாரமற்ற தனிமனித நுகர்வு கலாச்சார நிலையில் வாழத் தூண்டுகின்றது. முந்தைய தலைமுறை மனித கலாச்சாரத்தில் சேர்ந்து வாழ்தல் என்ற முரண்பாடு, சரியாக உணரப்படாத ஒன்றாக உள்ளது.

புலம்பெயர்வு முதல் உலகமயமாதல் தரிப்பிடங்கள் எங்கும், இந்தக் கலாச்சார முரண்பாடுகள் விசுவரூபம் எடுக்கின்றது. இடையில் நிற்கும் மத்தியதர வர்க்கத்திடையேயான பாரிய ஒரு சமூக நெருக்கடியை இது உருவாக்குகின்றது. இளம் பருவ சமூக உறுப்புகள் மீதான சமூகக் கட்டுப்பாட்டை இழக்கின்ற ஒரு முரண்பாடாக மாறுகின்றது. இதுவே தலைமுறைக்கு இடையிலான முரண்பாடாகவும் உருவாகின்றது. அவசரம் அவசரமாக தமக்குத் தெரிந்த குறுக்கு வழியை நாடுகின்றனர். இதன் ஒரு அங்கமாக சினிமா ஊடாக கலாச்சாரம், சினிமா ஊடாக மொழி என்று, குறுக்குவழியில் சமூக உறவுக்கு பாலம் அமைக்க முனைகின்றனர். இது எப்படி இருக்கின்றது என்றால், குழந்தைகளைப் பராமரிக்க தொலைக்காட்சியை பயன்படுத்தும் அதே தவறான உத்திதான். இங்கும் பருவவயதுக்கும் உரிய பெற்றோரின் பிரச்சனைகளுக்கு, சினிமாவை தீர்வாக காண்பது சமூக அறியாமையாகும்.

இதையும் மத்தியதர பெற்றோர்கள் என்ற சமூகம் கண்டுபிடித்து வழிகாட்டவில்லை. மாறாக உலகமயமாதல் சந்தை இளைய தலைமுறையை அதற்குள் உள்ளிழுக்க, பெற்றோர் அதற்கு கொள்கை ரீதியில் சுயவிளக்கம் வழங்கி ஊக்குவிக்கின்றனர். பெற்றோர் இதற்கு கலாச்சாரம் மொழி என்று சுய விளக்கம் வழங்க, குழந்தை விரும்பும் ஆபாசத்தில் கவர்ச்சியிலும் அதற்குள் மூழ்கி விடுகின்றனர். இந்த ஒருமைப்பாடு மூலம் பெற்றோர் மற்றும் குழந்தைகளுடன் ஒன்றிணைந்த சமூகமாக இருப்பதாக நம்புகின்றனர். உலகமயமாதல் என்ற நுகர்ச்சிக் கலாச்சாரத்தில், பெற்றோர் சுயமாக குழந்தைகளுக்கு (சமூகத்துக்கு) வழிகாட்டியாக இருக்க முடிவதில்லை என்பதே உண்மை. சுயமாக சிந்திக்கும் பெற்றோர் முன் உள்ள கேள்வி மிக சிக்கலானதே.

1. பருவமடைந்த ஆண்கள் பெண்கள் (சிறுவயதில் அக்கறைப்படாத) சினிமாவை ஏன் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர்?

2. சினிமா பார்ப்பதை தமிழ்க் கலாச்சாரம் என்ற எல்லைக்குள் பெற்றோர் பார்க்க முனையும் போக்கும், பிள்ளையின் கண்ணோட்டத்துக்கும் இடையிலான முரண்பாடுகள் என்ன?

சினிமா விரும்பிப் பார்ப்பதை, குழந்தையின் சீரழிவாகப் பெற்றோரால் பார்க்கப்படுவதில்லை. மாறாக நல்ல அம்சமாக பெற்றோரால் பார்க்கப்படுகின்றது. இந்த வகையில், இது ஏதோ ஒருவகையில் ஊக்குவிக்கப்படுகின்றது.

பொத்தாம் பொதுவிலும், இயல்பான சமூக ஓட்டத்திலும், எதையும் சுயவிமர்சனம் விமர்சனத்துக்குள்ளாக்காத எமது சமூக மனப்பான்மையின் மொத்த விளைவு இது. வெறும் மந்தைகளாக, மந்தை மனப்பாங்கில் வாழமுனையும் அடிமை மனப்பாங்காகும். இதை பாதுகாக்க முனையும் குட்டிபூர்சுவா மனப்பாங்கு. குழந்தைக்கு பின்னால் ஓடி, வால் பிடித்துச் செல்லும் சமூக அறியாமையாகின்றது. குழந்தைக்கு வழிகாட்டிச் செல்லவேண்டிய பெற்றோர்கள், அதை செய்ய முடியாது சிதைகின்றனர். உலகமயமாதல் விதைக்கும் நஞ்சுகளை நுகர்வுச்சந்தையில் இருந்து வேகமாக உள்வாங்கும் குழந்தையும், இந்த குழந்தைக்கு பின்னால் ஒடுகின்ற பெற்றோரின் பரிதாபகரமான நிலைமையையும் உலகமயமாதல் உருவாக்குகின்றது. உண்மையில் பெற்றோரின் பின்தங்கிய அறிவுசார் வளர்ச்சியின்மையை, உலகமயமாதல உருவாக்குகின்றது. சமூகம் சார்ந்த கூட்டுச்செயல் சார்ந்த இயலாமையும், குழந்தையின் நிலைக்கு தத்துவவிளக்கம் காண முயலுகின்ற சுயபெருமை வாதங்களில் மூழ்குகின்றது. இந்த வகையில் கலாச்சார சினிமா பற்றிய பெருமை, சினிமா மொழி பற்றிய பிரமையில், குழந்தையின் நடத்தையை, அதற்கூடாகவே தம்மை குழந்தையுடன் இணைக்க முனைகின்றனர். குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையிலான இணைப்பை, சினிமாவாக கருதுகின்ற எளிமையான இலகுவான எடுகோளாகின்றது.

இந்த தமிழ் சினிமா எதை, எப்படி, எந்த வழியில் சொல்ல முனைகின்றது. இதன் மொழி என்ன? இதன் கலாச்சாரம் என்ன? தமிழ் சினிமா மேற்கு சினிமாவில் இருந்து எப்படி மாறுபடுகின்றது? இப்படி பல கேள்விகளை சுய அறிவுள்ள எவரும் சுயமாக எழுப்ப முடியும். சமூகத்தின் பொதுப்புத்தி மட்டத்தில் அப்படி எழுப்பப்படுவது கூட கிடையாது. மாறாக இதன் பின் வால்பிடித்து ஒடும் குறுகிய ஓட்டமும், இதற்கு சுயவிளக்கம் கண்டுபிடிக்கும் பொது அறிவுமாக, அரைத்த மாவையே அரைக்கின்ற செக்குமாடுகள் நிலையில் மனித குலம் அடிமைப்படுத்தப்படுகின்றது.

தமிழ் சினிமா தமிழ் கலாச்சாரத்தின் ஊடகமா? தமிழ் மொழியின் ஊடகமா? அப்படி நம்புவது, நம்ப வைப்பது அபத்தமாகும். தமிழ் சினிமாவின் பின்னால் உள்ள கட்டமைப்புகள் என்ன? அதன் சாரமே தனிமனித நுகர்வுவெறியும், தனிமனித வன்முறையும், பாலியல் நுகர்ச்சி வக்கிரமும் தான். இவை அனைத்தும், இயற்கையின் பாலியல் சார்ந்த தூண்டுதல் உருவாக்கும் காதலை, கவர்ச்சி கொண்டு ஆபாசமாக்கி புகுத்தப்படுகின்றது. இந்த சினிமாக் கலை, பாலியல் கவர்ச்சியை ஆபாசத்தை தனிமனித நுகர்வாகத் தூண்டும் ஒரு ஊடகவியல். இதுதான் தமிழ் சினிமாவின் ஆன்மா. இதுவின்றி அது உயிர் வாழமுடியாத ஆபாசத்தில் மூழ்கி மிதக்கின்றது. ஒவ்வொரு மனிதனின் உள்ளும் இருக்கின்ற பாலியல் உணர்வைத் தூண்டி, அதை தரம்கெட்ட வகையில் வக்கிரப்படுத்தி வியாபாரம் செய்யும் ஊடகம் தான் சினிமா என்ற வியாபாரக் கலை. அதன் கலாச்சாரம், மொழி என அனைத்தும் இந்த வியாபாரம் என்ற ஆபாசத்துக்கு உட்பட்டதே.

கிட்லர் மக்களின் போராட்டம் மற்றும் மக்களின் எதிர்ப்பை கட்டுப்படுத்துவது பற்றிக் கூறிய போது 'மக்களா? அவர்களுக்கு தேவை ஒரு ரொட்டித் துண்டும், சர்க்கஸ்சும் மட்டுமே" என்றான். இதற்கு மேல் யாரையும் சிந்திக்க அனுமதிப்பதில்லை. ஆள்பவர்களும், அடக்குமுறையை மக்கள் மேல் ஏவுபவர்களும், விதிவிலக்கின்றி இந்த அடிப்படையில் தான் மக்களை மந்தைகளாக வைத்திருகின்றனர். சமூகத்தின் பொதுப்புத்தி மட்டம் இதற்குள் தான் இயங்குகின்றது. தமிழ் சினிமா இதற்கு விதிவிலக்கா? இல்லை. மக்களின் உணர்வுகளை அற்ப இழி உணர்வுகளாக மாற்றுவது, இதன் சாரம். இங்கு எழுவது இழிவான அற்பமான பாலியல் ஆபாச உணர்வு என்பதை, சமூகம் காண மறுக்கின்ற அறியாமை என்னும் அவலமும், இதன் கழிசடைத்தனமுமே சினிமாக் கலையாகின்றது.

தொடரும்


பி.இரயாகரன்

1.ஆபாசமும்! கவர்ச்சியும்! அதன் வக்கிரமுமா! மனித கலாச்சாரம்? : (மனித கலாச்சாரம் பாகம் - 1)

2.மனித உறவுகளும், அதன் சிதைவுகளும் : (மனித கலாச்சாரம் பாகம் - 02)

3. நுகர்வுச் சந்தையின், ஆன்மாவாகிவிட்ட பெண்ணின் சதை : மனித கலாச்சாரம் பாகம் - 03