சினிமா சொல்லும் பாலியல் கவர்ச்சியும், ஆபாசமும், உடல்சார் வக்கிரத்தை முதன்மைப்படுத்தி தூண்டுகின்றது. இதன் மூலம், மனித உணர்வை அதற்குள்ளாக வக்கிரப்படுத்துகின்றனர். தனிமனித வன்முறை, வன்முறை மீதான சட்டம் என்ற எல்லைக்குள் கதை சொல்கின்ற ஒரு சினிமா, மக்களின் வாழ்வியல் சார்ந்த உணர்வை நலமடிக்கின்றது.
இந்த உண்மையை புறக்கணித்து, இந்தியக் கலாச்சாரம் அல்லது தமிழ்க் கலாச்சாரம் என்று சினிமாவை நம்புவது அறியாமையின் மொத்த விளைவாகும். எமது வாழ்வியல் சார்ந்த சமூக கூறுகளை, சினிமா எந்த இடத்திலும் பிரதிபலிப்பதில்லை. தமிழர் பண்பாடு, தமிழர் கலாச்சாரம் என்ற சமூகக் கூறுகளை விட்டு விலகி, நுகர்வுச் சந்தைக்கான தனது சொந்தச் சந்தைக்குள் தான் ஆபாசத்தை சினிமாவாக உற்பத்தி செய்கின்றது. காட்சிகள், படிமங்கள் என அனைத்தும், உலகமயமாதலின் விறுவிறுப்பான சீரழிவை உள்வாங்கித் தான் பிரதிபலிக்கின்றது. உலகமயமாதலின் சந்தைக்கு ஏற்ற சதைக் கவர்ச்சி, நுகர்வுக்கு ஏற்ற அற்ப கிளர்ச்சியை உருவாக்குகின்றது.
கலை என்ற பெயரில் உலகமயமாதல் நுகர்வுப் பண்பாட்டை பரப்பும் சமூக விரோத புல்லுருவிகள், இதை மக்களின் ரசனை என்கின்றனர். மக்கள் கோருவதைத் தான் தாம் படைப்பதாகவும், இதனால் தான் மக்கள் விரும்பிப் பார்க்கின்றனர் என்கின்றனர். வேடிக்கையான வியாபாரிகளுக்கே உரிய கிழட்டு வாதம். இது எப்படி இருக்கின்றது என்றால், விபச்சாரம் செய்பவனின் ரசனைக்கும், ஆபாசத்துக்கு ஏற்ப, பெண்ணைக் கொண்டு வருவதே தரகனின் கடமை என்ற தர்க்கத்துக்கு ஒத்தது.
இது உள்ளடக்கத்தில் கடவுள் தான் ஏழை பணக்காரனை உருவாக்கியதாக கூறுவதற்கு ஒத்தது. இல்லாத கடவுளை மனிதன் தனது அறியாமையால் கற்பித்தான் என்றால், அவனே ஏழை பணக்காரனை படைத்ததாக கூறுவது எப்படிப்பட்ட மோசடித்தனமோ அப்படிப்பட்டது. மனிதன் தான் கற்பித்த கடவுள் எப்படிப்பட்டவர் என்பது, அவனுக்கே தெரியாத அறியாமை. உண்மையில் அவன் கற்பித்த கடவுள் ஏழையையோ பணக்காரனையோ உருவாக்கியதில்லை. ஆனால் அந்த கடவுள் தான் ஏழை பணக்காரனை உருவாக்கியதாக சொல்லி, கடவுளை தனக்கு பக்கபலமாக பணக்காரன் வைத்துக் கொள்ளவில்லையா! இந்த அசிங்கமான தனிமனித சொத்துரிமை சமூக அமைப்பு போல் தான், இந்த சினிமா ஆபாச கலை வியாபாரிகளின் தர்க்கங்களும் அமைகின்றது.
இப்படி இவர்கள் அள்ளிக் கொட்டும் வக்கிரத்தைப் பருகவே, பருவ வயதினர் சினிமாவை அதிகளவில்; ரசிக்கத் தொடங்குகின்றார்கள். அதற்குள் மூழ்குகின்றார்கள். இந்த ரசனை தமிழ் பண்பாடு கலாச்சாரத்துக்கு புறம்பாகவே நிகழ்கின்றது என்பதே, இதில் உள்ள சூக்குமமாகும். எமது கலாச்சாரத்தை தேடியே, சினிமாவை நாடுவதாக நம்புவது பொய்மையாகும். உண்மையில் சினிமா மீதான அதிதமான நாட்டம், சினிமா வெளிப்படுத்தும் ஆபாசம் கவர்ச்சி மீதான பாலியல் உந்துதல் என்பதே, அதிர்ச்சிகரமான உண்மையாகும்.
அவர்களின் பருவ வயது என்பது, இயல்பாகவே பாலியல் நாட்டம் கொண்டது. இதை அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்ளவும், அதனடிப்படையில் வாழ்வை வழிகாட்டவும் வேண்டிய பெற்றோர் சினிமாவுக்குள் அதை வடியவிடுகின்றனர். பருவ வயதில் ஏற்படும் பாலியல் உந்துதல், சினிமாவின் வக்கிரமான அற்ப உணர்வுக்குள், அவர்களை அற்பத்தனமாக வாழவைக்கின்றது. பாலியல் பற்றிய பிழற்சி பெற்ற ஒரு உணர்வில், இயல்பான பாலியல் வாழ்க்கை முறையையே இழந்து விடுகின்ற, அற்பமான பாலியல் நடத்தைக்கே சினிமா வழிகாட்டுகின்றது. இந்தியக் கலாச்சாரத்தில் தான் அதீதமான பாலியல் மனநோயாளிகளை உற்பத்தி செய்வதில், சினிமா வக்கிரப்படுத்தும் பாலியல் கூறு முக்கிய காரணம். சிறுவயதில் இருந்து சினிமா மீதான நாட்டத்தை விட, இடையில் வரும் தீவிர நாட்டம் தான், இளமையை சீரழிக்குமளவுக்கு மிகவும் ஆபத்தானது.
பருவ வயதில் பால் ரீதியான அதீதமான கவர்ச்சி, அதீதமான வக்கிரம், அதீதமான வன்முறை மீதான நாட்டம், இதையொட்டி அதிகரிக்கின்ற மனக்கிளர்ச்சி தான், இயல்பாக தமிழ் சினிமா மீதான தீவிர நாட்டத்தைத் தூண்டுகின்றது. மேற்கத்தைய சினிமா இந்தளவுக்கு, பாலியல் கவர்ச்சியையும் வன்முறையையும் தூண்டுவதில்லை. மேற்கு சினிமாவில் நிர்வாணமான ஒரு படுக்கையறைக் காட்சி, பருவ வயது குழந்தைக்கு வக்கிரமான உணர்வை தூண்டுவது ஒப்பீட்டளவில் குறைவு. தமிழ் சினிமா தூண்டுதலுக்காக கையாளும் கவர்ச்சியும் ஆபாசமான வக்கிரமும், குழந்தையின் பாலியல் பற்றிய அறிவையே இழிவாக்கி வக்கிரத்தை பல மடங்காக்குகின்றது.
இயற்கையான பாலியல் மனப்பாங்கை கடந்த வக்கிரமான பாலியல் தேர்வு, கல்வி முதல் முழு வாழ்க்கையையுமே சிதைக்கின்றது. இந்த ரசனைக்குள் அடிமையாகிவிடும் போது, குழந்தைகளுக்கு அதீதமான வக்கிரமான காட்சிகளை காண்பதில் மேலும் மேலும் நாட்டம் அதிகரிக்கின்றது.
தமிழ்க்; கலாச்சாரத்தை தேடுதல், எமது சமூகத்தை நோக்கிச் செல்லுதலே குழந்தையின் தேர்வாக இருந்தால், தமிழ் சினிமாவை அது நாடாது. மாறாக அது நோக்கிய ஒரு கல்வி முறையிலான தேடுதலாக இருக்கும். கலாச்சாரம் தொடர்பான நூல்களை தேடிப் படித்தல், புலம்பெயர் நாட்டில் பெற்றோரின் மொழியைக் கற்றுக்கொள்ளல், அதன் ஊடாக கற்றுக் கொள்வதாக இருக்கும். இதற்குள் பொதுவாக நடக்காமல், சினிமாவில் நாட்டம் என்பது ஒரு சமூக விலகலாகும். பருவ வயதின் தேவையை, அது ஏதோ ஒரு வகையில் அற்ப உணர்ச்சியில் பூர்த்தி செய்கின்றது.
தொடரும்
பி.இரயாகரன்
6.குடும்பத்தை சிதைக்கக் கோரும் சின்னத்திரை நாடகங்கள்? : மனித கலாச்சாரம் பாகம் - 06