மன்னித்து விடு தாயே! - வன்னி அகதி முகாமில் இருந்து கண்மணி

முகம் தெரியாத தாயே!
உனது வயிற்றில்
உருவான
முதற் கருவின்
கண்ணீர் வரிகளம்மா!
வன்னி அவலத்தின்
கண்ணீர் வாழ்கையில்

எனது வருகையை – நீ
அறியவில்லை
கொடியவர்களின்
கோரத் தாக்குதலில்
எத்தனை முறை – முகம்
குப்புற விழ்ந்து
குழறி அழுதாய்
கந்தகப் புகையிலும் - நான்
கசங்கி விடவில்லை.
நிவாரணக் கிராமங்கள் - என்று
வெளிப்பூச்சு பூசிய
முட்கம்பி சிறையினுள்
வந்தும்
எனது வருகையை
அறியமுடியாத பாவியாக
உணவுக்கும்
தண்ணீரிற்கும்
ஓடி ஓடித் திரிந்தாய் - தெரு
நாயை விடக் கேவலமாக
நீ மட்டுமல்ல
எங்கள் இனமே திரிந்தது
முட்கம்பிச் சிறையின்
தெரு வழியே  

உள்ளமும் உடலும்
களைத்து விடும் உனக்கு
உனது தாய்
உன்னை ஏசுவாள்
வேண்டாம் உணவு
விடு மகளே என்று
கொளுத்ததும் வெயிலில்
கூடாரத்திலும் - இருக்கமுடியாது
கும்பியும் பொறுக்காது
மீண்டும் திரிவாய்
மனித அவலம் என்பது
இது தானாம்மா?
நீ வாழும்
அவல வாழ்வை
பார்க்கும் போது – மனம்
பதறித் துடிக்கின்றது
மன்னித்து விடு தாயே!
அதனால் தான் - நீ
அறியும் முன்பேயே
கர்பத்திலேயே கரைந்து
கொண்டு இருக்கிறேன்.
நான் மட்டுமல்ல
என்னைப் போன்று
ஏராளமான கருக்கள்
முட்கம்பி வேலிக்குள்
முகவரி இன்றி கருகி விட்டன.
அதனால் நானும்
உன்னிடமிருந்து
விடைபொறுகின்றேன்
மன்னித்து விடு தாயே!