Language Selection

பெண்ணின் ஊடாக பெண்ணின் சதையைக்காட்டி, மனித உழைப்பை திருடுவது தான் உலகமயமாதல் என்னும் சந்தைக் கலாச்சாரம். இங்கு பெண்ணின் உடுப்பு, அதற்கேற்ப வடிவமைக்கப்படுகின்றது. 

 

பெண் எப்படிப்பட்ட உடுப்பை, எந்தக் கலாச்சார உள்ளடகத்தில், எப்படி ஏன் அணிய வேண்டும் என்று யார் தீர்மானிக்கின்றார்கள்? நிச்சயமாக பெண் அல்ல. ஆணுமல்ல. அது போல் சமூகமும் அல்ல. மாறாக ஆணாதிக்க நுகர்வுச் சந்தையே அதைத் தீர்மானிக்கின்றது. பெண்ணின் சதைப் பகுதிகள், நுகர்வுக்குரிய ஒரு அடையாளச் சின்னமாகி விடுகின்றது.

 

பெண்ணின் எந்த சதைப்பகுதி, எப்படி எதனூடாக காட்டினால், நுகர்வு அதிகரிக்கும்; என்பதை  இனம் கண்டு சொல்வது தான் வியாபாரத்தின் கலையாகும்;. பெண்ணின் சதையை எப்படிக் காட்டுவது, சொல்வது என்பதை, குறித்த கலாச்சாரத்தின் தன்மைக்கு ஏற்ப நுகர்வுச் சந்தை தீர்மானிக்கின்றது.

 

வேடிக்கை என்னவென்றால், ஒருபுறம் நுகர்வு தேவை மறுக்கப்பட்ட நிலையில், மறுபக்கத்தில் பெண் சதை மூலம் நுகர்வு தூண்டப்படுகின்றது. பெண்ணின் பாலியல் உறுப்பு ஊடாக கட்டப்படும் சதைக் கலாச்சாரம், வாங்கி நுகரக் கூடியவர்களின் கலாச்சாரமாக மாறிவிடுகின்றது. இந்த பண்பாடு பண்பு கெட்ட கலாச்சாரமாக, பெண் உறுப்பு சார்ந்த பாலியல் கூறாக சமூகத்தை ஆக்கிரமிக்கின்றது. சிந்தனை, செயல், நடைமுறை அனைத்தும் இதற்குள்ளான ஒன்றாக மாறிவிடுகின்றது. எதிர்மறையில் பார்த்தால், சந்தையை தீர்மானிக்கும் பெண்ணின் சதை சார்ந்த பண்பாடு சமூகத்தில் இருப்பதால் நுகர்வு சந்தை எங்கும் கோலோசுகின்றது. நுகர்வு, பாலியல் முதல் பொருட்சந்தை வரை மிக இழிவான மட்டத்துக்கு தாழ்ந்து கிடக்கின்றது.

 

சமூகத்தின் நுகர்வை மறுத்து தனிமனித நுகர்வை அடிப்படையாக கொண்ட வாழ்க்;கை முறை, பாலியலின் சமூகக் கூறை மறுத்து தனிமனித நுகர்வுசார் குறுகிய பாலியலை திணிக்கின்றது. இந்த வகையில் பெண்ணின் சதை கூட, சந்தைப் பொருளாகின்றது.

      

இப்படிப்பட்ட நுகர்வுச் சந்தையை தீர்மானிக்கும் உலகமயமாதல், சமூகத்தில் நிலவும் சமூக ஒடுக்குமுறைகளை எல்லாம் உள்வாங்கி, அதற்கு ஏற்றாற் போல் தான் அது செயல்படுகின்றது. சமூக ஒடுக்குமுறைகளையே, சந்தைக்குரிய விற்பனைக் கருவியாக பயன்படுத்துகின்றது. நுகர்வுக் கலாச்சாரத்தை, நுகர்வுப் பண்பாட்டை நோக்கி, அதாவது சந்தைக்கேயுரிய உத்தியை உருவாக்குகின்றது.

 

இந்த வகையில் ஆணாதிக்க ஒடுக்குமுறைக்குள் இருக்கும் நுகர்வு வக்கிரத்தை, உலகமயமாதல், சந்தைக்குரிய வகையில் மாற்றுகின்றது. பெண்ணின் அவயவங்களை (சதையை) கவர்ச்சிக்குரியதாகவும் ஆபாசத்துக்குரியதாவும் ஆக்குகின்றது. உலகமயமாதலுக்கு முன்னமோ, இது அடக்கமும் அழகும் கொண்டு மூடிமறைக்கப்பட்டு, ஒரு ஆணின் தனிப்பட்ட சொத்தாக இருந்தது. அன்று சரி இன்றும் சரி, எதையும் பெண் அல்லது ஆண் தீர்மானிப்பதில்லை, சந்தை தான் தீர்மானிக்கின்றது. யார் நுகர்கின்றனரோ, அவர்கள் தீர்மானிக்கின்றனர். எப்படி நுகரவேண்டும் என்று யார் கருதுகின்றனரோ, அதற்கேற்ப அவர்கள் தீர்மானிக்கின்றனர். 

 

இந்த வகையில் இன்று கவர்ச்சியையும், ஆபாசத்தையும் அடிப்படையாக கொண்டதே, ஆணாதிக்க நுகர்வு வக்கிரம். இதுவே இன்று மனித கலாச்சாரமாகிவிட்டது. இவைகளை ஒருங்கே கொண்ட ஆணாதிக்க சமூகப் போக்கின் சமூக மேலாண்மை சார்ந்தே, பெண்களின் சந்தைக்குரிய கவர்ச்சியான ஆபாசமான உடுப்புகளை சந்தை உற்பத்தி செய்கின்றது. இது அணிந்து தன்னை வெளிப்படுத்துவது தான், பெண்ணின் சுதந்திரம,; உரிமை என்ற அளவுக்கு, இது உலகமயமாதலின் பண்பாடாக கலாச்சாரமாக மாறிவிடுகின்றது.

 

கவர்ச்சியை, ஆபாசத்தை அடிப்படையாக கொண்ட ஆணாதிக்கத்தை வக்கிரமாக்கிக்  கொண்ட உலகமயமாதல் என்ற சந்தைக் கலாச்சாரத்துக்கு முன்பாக, பெண்களின் உடுப்புகள்  எதிரானதாகவே இருந்தது. நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க நோக்கும், முதலாளித்துவ நோக்கும் சார்ந்து காணப்பட்ட பெண்ணின் உடுப்புகள், பெண், பெண் சார்ந்த உறுப்புகளை விளம்பரத்துக்குரிய ஒரு சந்தைப் பொருளாக்கியிருக்கவில்லை. அதாவது ஒரு ஆணின் சொத்து என்ற எல்லைக்குள் காணப்பட்ட பெண்ணும், பெண்ணின் உறுப்புகளும், அவளின் உடுப்புகளும், உலகமயமாதலில் நேரெதிராக மாற்றப்பட்டுள்ளது. பெண், பெண்ணின் உடுப்புகள் வெளிப்படுத்தும் பாலியல் வக்கிரம், சதைக் கவர்ச்சியும், உலகச் சந்தையில் சந்தைக்குரிய பொருளாக்கப்பட்டது. ஆணாதிக்கம் கற்பிக்கும் பெண்ணின் கவர்ச்சியும் ஆபாசமும், அது வெளிப்படுத்தும் வக்கிரத்தின் ஊடாகவே, பெண் சமூகத்தின் முன் பொது விளம்பர மாடலாக்கப்பட்டுள்ளாள். இதற்கு ஏற்ற ஆபாசமான சதைக்கேற்ற கவர்ச்சியான உடுப்பு மூலம், பெண் சதையின் ஊடாக வக்கிரப்படுத்தப்படுகின்றாள். இதுவே பெண்ணுக்குரிய பண்பாக, நடத்தையாக, சுதந்திரமாக ஏற்கவைக்கப்பட்டு இதுவே இன்று கலாச்சாரமாகின்றது.

 

இப்படி இன்றைய சந்தைக் கலாச்சாரத்துக்கு (கவர்ச்சி, ஆபாசம், வக்கிரம்) நேர்மாறாகவே, இதற்கு முந்தைய பெண் வாழ்ந்தாள். இதுவே இன்று சமூகத்தின் உள்ளான முரண்பாடாக மாறுகின்றது. மறுபக்கத்தில் இதைக்காட்டி ஒன்றை நியாயப்படுத்தும் போக்கும் உருவாகின்றது. உண்மையில் நடப்பது கடந்தகால பெண்ணின் வாழ்வையும் அதன் அனுபவத்தையும் வரலாற்று ரீதியாக சந்தை உதறியெறிகின்றது. பெண் கவர்ச்சியாக, ஆபாசமாக, வக்கிரமாக வாழ்வதும், காட்சிப் பொருளாகுவதுமே அவளின் சுதந்திரம் என்று சந்தை தான் மனிதனுக்கு விளக்கம் தருகின்றது. பெண் விடுதலை இதுவேயென்று பெண் விடுதலையின் பெயரில் மயங்குவதுடன், அதை அவர்கள் கூறவும் தயங்குவதில்லை. எப்படிப்பட்ட உலகமயமாதல் என்பதை,  பெண்ணின் உடுப்பினூடாகக் கூட நாம் தெரிந்து கொள்ள முடியும்.

 

பெண் இதை தானாக தெரிவு செய்யவில்லை. ஆணாதிக்க சந்தையை அடிப்படையாக கொண்டே, பெண்ணுக்குரிய உடுப்பை சந்தை பெண் மீது திணிக்கின்றது. இங்கு பெண்ணின் தெரிவு என்பது, எந்தளவுக்கு தான் உடல் தெரிய கவர்ச்சியாக, ஆபாசமாக, வக்கிரமாக இருத்தல் என்ற எல்லைக்குள்ளான ஒரு தெரிவாகின்றது. இதை சந்தை பெண்ணுக்குரிய ஒரு தெரிவாக திணிக்கின்றது. இதை நாம் மேலும் நுட்பமாகவும், தெளிவாகவும் புரிந்து கொள்வது அவசியம். 

 

மனிதன்  தனது இயற்கைச் சூழலைச் சார்ந்து, தனது உடுப்பை தானே உற்பத்தி செய்தான். இதற்குள் நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க சமூக பொருளாதார கூறு புகுந்து கொண்டது. குடும்பம், கிராமம், நாடு சார்ந்து, உடுப்பை எப்படி அணிவது, எதை அணிவது என்று தீர்மானித்த சமூகம், பெண்ணை பொதுவில் சந்தைக்குரிய ஒரு பொருளாக நிறுத்துவதை மறுத்தது. ஆபாசம், வக்கிரம், கவர்ச்சி என்ற எல்லையில், பெண்ணை பொதுவாக காட்டுவதை அது மறுதலித்தது. பெண்ணை தனது சமூக பொருளாதார நோக்குக்கு ஏற்ப, ஒரு ஆணுக்கு ஏற்ப அடிமைப்படுத்தி வைத்திருந்தது.

 

அன்று சமூகத்தில் உறுப்பு சார்ந்து ஒவ்வொருவரும், தனக்கு தானே தெரிவை உள்ளடக்கிய வகையில் உடுப்பைத் தயாரித்தனர். சமூகத்தின் பொது உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டு இருந்தது. அங்கு தெரிவு செய்வதில் இருந்த சுதந்திரம், அதை எப்படி எந்த வகையில் தயாரிப்பது அணிவது என்று இருந்த சுதந்திரம் கூட, இன்றைய சந்தைப் பொருளாதாரத்தில் அறவே கிடையாது. சந்தை எதை எப்படி உற்பத்தி செய்கின்றதோ, அதை அப்படியே கேள்விகளின்றி அணிவதும், தெரிவதும் தான் பெண்ணின் சுதந்திரம் என்ற வக்கிரமே இன்று அரங்கேறியுள்ளது. இது ஆணுக்கும் பொருந்தும். முழு உற்பத்திக்கும் இது பொருந்துகின்றது.

 

இன்று பெண் உடல் அங்கம் வெளித் தெரிய அரைகுறையாக அணிவது தான் பெண்ணின் அழகு என்றும், இதுவே பெண்ணின் பெண் விடுதலை என்று கூட சித்தரிக்கப்படுகின்றது. இந்த வகையில் பெண்ணின் உடல் (சதைகள்) உறுப்புகளை, வெறும் பாலியல் உறுப்புகளாக பார்க்கப்படுகின்ற பண்பாடும் கலாச்சாரமும், சமூகத்தின் கலாச்சாரமாக, சந்தைக் கலாச்சாரமாக உருவாக்கியுள்ளது.

 

பெண்ணைக் கொண்டு உருவாக்கும் கவர்ச்சி, ஆபாசம், வக்கிரம், இதையே உலகமயமாதல் பெண் சார்ந்து ஆணாதிக்க உலகுக்காக உற்பத்தி செய்கின்றது. இந்த வகையில் பெண் அல்லது சமூகம் தனக்குரிய உடுப்பை, தனக்காக உற்பத்தி செய்யவில்லை, ஆணாதிக்க சந்தைக் கலாச்சாரமே, தனக்கு ஏற்ப அதை உற்பத்தி செய்கின்றது. சமூகத்துக்கு வெளியில் இயங்கும் தனிமனித நலன் சார்ந்த சந்தை, பெண்ணின் கலாச்சார பண்பாட்டு சந்தைக்கு ஏற்ப எதுவென்று அதுவே தீர்மானிக்கின்றது. அது பெண்ணின் உடுப்பை தனது ஆணாதிக்க சந்தை வக்கிரத்துக்கு ஏற்ப உற்பத்தி செய்கின்றது. இதை அவர்கள் நவீன உடுப்புக் கலை என்று, கவர்ச்சியாக ஆபாசமாக விளம்பரம் செய்கின்றனர். மக்களை ஏமாற்றி விற்கும் ஆபாச கலைக்கு, இப்படி இவர்கள் பெயரிட்டு அழைக்கின்றனர்.

 

மாறுபட்ட பண்பாடு, கலாச்சாரம் சார்ந்து, சமூக அமைப்பு உருவாக்கிய பாரம்பரிய பண்பாடு சார்ந்த உடுப்புகளில், சந்தையின் ஆபாசமும் கவர்ச்சியும் அதன் வக்கிரமும் புகுத்தப்பட்டது. இதை பெண்ணின் ஊடாக கலாச்சாரமாக்குகின்றது. ஆணின் உடுப்பு சார்ந்த உலகில், இந்த ஆபாசம், வக்கிரம், கவர்ச்சி பெருமளவில் ஏற்படவில்லை. பெண்ணின் உடுப்பு சார்ந்த பண்பாட்டில் சீரழிவையும், கவர்ச்சியையும் அடிப்படையாக கொண்ட, அதை சதை ஆபாசத்தின் ஊடாக புகுத்தப்பட்டுள்ளது.

 

இந்தியப் பெண்ணின் பண்பாடு சார்ந்த சேலை (சாறி) யில் கூட இது புகுத்தப்பட்ட விதமோ, தனித்துவமானது, நுட்பமானது, சதித்தனமானது. சாறிக்கு அணியும் மேல்சட்டை (பிளவுஸ்) ஊடாகவே, அது நவீனமாக இழிவாக புகுத்தப்பட்டது. பெண்ணின் மார்புக் கச்சை மேற்சட்டை ஊடாக வெளித்தெரியும் வண்ணம், ஆபாச கலாச்சாரம் திணிக்கப்பட்டது. சந்தை கோரும் சந்தைக் கவர்ச்சியும் ஆபாசமும் என்ற எல்லைக்குள், பெண்ணின் மேல்சட்டைக்கான துணி உள்ளாடை வெளித் தெரியும் வண்ணம் உற்பத்தி செய்யப்படுகின்றது. பெண்ணின் சதை (உறுப்புகள்) கவர்ச்சிக்குரிய ஒரு பொருள் என்ற சந்தை விதிக்கமைய, பெண்ணின் உறுப்புக்களை ரசிக்கும் ஆணாதிக்க நுகர்வு நோக்கில் பெண்ணின் உடுப்பு தீவிரமாக மாற்றப்பட்டது. இங்கு இதை பெண் தானாக தேர்ந்தெடுக்கவில்லை. ஆணாதிக்க சந்தை இதை பெண்ணுக்கு தேர்ந்தெடுக்கும்படி கட்டாயப்படுத்தி திணித்தது. இதனூடாக சந்தையின் கலாச்சாரம் சார்ந்த பாரம்பரிய பொதுவிதியே மாற்றப்பட்டது. இந்த போக்கில் அனைத்தும் தீவிரமான மாற்றத்துக்குள்ளாகியது. பெண்ணின் உடல் அங்கங்கள், ஆபாசமாக தெரியும் வண்ணம், உடுப்பின் அளவு எங்கும் எதிலும் குறைக்கப்படுகின்றது.

 

இந்த வகையில் ஆணாதிக்க கதாநாயக தன்மை கொண்ட சினிமா மூலம், இவை முதலில் வெளிப்படுகின்றது. விளம்பரத்துக்கு நிகரான சினிமா ரசனைக்குள் இது புளுக்கின்றது. இப்படி வீங்கி வெம்பிய கலாச்சாரமும், பண்பாடும், சமூகத்தில் இயல்பான ஒன்றாக மாற்றப்படுகின்றது.

 

ஆணாதிக்க சந்தை சார்ந்த தனிமனித நுகர்ச்சிச் சுதந்திரம் தான், தனிமனிதனின் தெரிவுக்கான எல்லை. உலகமயமாதலில் நுகர்ச்சி சுதந்திரம் என்பது, ஆணாதிக்கம் நுகருகின்ற சதைச் சுதந்திரம் தான். இந்த சந்தை விதிக்கமைய, பெண்ணின் பாலியல் உறுப்புக்கு ஏற்ற ஆணாதிக்க உடுப்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றது. உண்மையில் இந்த சந்தை விதிகள் என்பது பெண்ணின் சதை (உறுப்பு) சார்ந்த கவர்ச்சி, ஆபாசம், அது வெளிப்படுத்தும் வக்கிரம் என்ற அடிப்படையில் இயங்குகின்றது. பெண்ணின் உறுப்புகள் அதீதமாக வீங்கி வெம்பி வெளியில் தெரியும் வண்ணமே, ஆணாதிக்க உடுப்பு கட்டமைக்கப்படுகின்றது. தேவை, சூழல், காலம், வசதிக்கு (உழைப்புக்கு) ஏற்ற உடுப்புகள் மறுக்கப்பட்டு, பெண்ணின் உறுப்பின் (சதை) கவர்ச்சிக்காக, பெண்ணுக்கு உடுப்பு அணிவிக்கப்படுவதே இன்று சந்தை விதியாகின்றது. பெண் உடுப்பு அணிதல் என்பது, பெண் தனது கவர்ச்சியைக் காட்டுவதற்காக என்றாகிவிட்டது. இதுதான் சந்தைக்கான எடுகோள். இதுவே மனித கலாச்சாரமாகின்றது. இதையே சுதந்திரம் என்கின்றனர்.

 

பெண்ணின் தசைக் (பாலியல்) கவர்ச்சியை வெளிப்படுத்தும் வண்ணம், பெண்ணின் உடல் பாகங்களைக் கூட சந்தை விரும்பியவாறு தானாக தேர்ந்தெடுக்கின்றது. சந்தையின் புத்துணர்ச்சி என்பது, வித்தை காட்டி ஏமாற்றுவது தான். ஆகவே  பெண்ணை விதவிதமாக ஆபாசமாக வெளிப்படுத்தி காட்ட வேண்டியுள்ளது. இதனால் பெண்ணின் சதையை விதவிதமாக, முக்கியத்துவம் கொடுத்து, ஆபாசமாக்குகின்றது. எது கவர்ச்சி, எது அழகு என்று பெண்ணே தடுமாறும் வண்ணம், இவை அடிக்கடி மாற்றுகின்றது.

 

எப்படி எதை வெளிப்படுத்துவது என்ற ஆணாதிக்க ரசனையைத் தூண்டி, அதற்கு ஏற்ப அதை சந்தை உற்பத்தி செய்கின்றது. இதற்கேற்ற ஆணாதிக்க ரசனையும் கூட, ஒரு கலாச்சாரமாக உற்பத்தி செய்கின்றது. பெண் இதற்கு ஏற்ற வண்ணம் உடுப்பை அணிவது தான், பெண்ணின் சுதந்திரம் என்று சந்தை விதந்துரைக்கின்றது. இந்த வகையான ஆபாச உடுப்புகள் உலக நாடுகளின் பொதுச் சந்தையையும், சமூகத்தின் தீர்மானகரமான மேல்மட்ட பண்பாட்டில் முதலில் நுழைகின்றது. மேற்கில் இதுவே சந்தைக் கலாச்சாரமாகவும், மூன்றாம் உலக நாடுகளில் அடி ஆழ கிராமங்கள் தவிர்த்து மேட்டுக்குடிகளின் சந்தைக்குரிய கலாச்சாரமுமாகிவிட்டது.

 

இப்படி பெண்ணின் உடல் பாகங்களை தேர்ந்தெடுத்தும், அடிக்கடி மாற்றியும், நுகர்வுச் சந்தை கவர்ச்சிப்படுத்துவதன் மூலமே சந்தை உயிர்வாழ்கின்றது. இது நுகர்வு சார்ந்த குறுகிய அற்பமான கலாச்சாரத்தையே அடிக்கடி மாற்றுகின்றது. இதுவே விற்பனையில் தீர்க்கமாக பங்களிக்கின்றது. புதிய பொருளை விற்க, பழைய பொருளைத் துறக்க, கலாச்சாரம் மிகத் தீவிரமாக மாற்றப்படுகின்றது. உலகமயமாதல் சந்தை அடிக்கடி தனது சந்தைக்கேற்ற கலாச்சாரத்தை மாற்றாது, சந்தையை இயங்கவைக்க முடிவதில்லை.

 

உலகமயமாதல் என்ற சந்தைக் கலாச்சாரம், வேகமாகவும் துல்லியமாகவும் மனித கலாச்சாரத்தை புரட்டிப்போடுகின்றது. பெண்ணின் உடல்சார்ந்த பாலியல் உறுப்புகள், ஆணாதிக்க கண்ணுக்கு விருந்தளிக்கும் வண்ணம், சந்தை பெண்ணின் உறுப்புக்கு எற்ற மறுபட்ட விதவிதமான உடுப்பை திணிக்கின்றது. அதை நுகரும் வண்ணம், ரசிக்கும் வண்ணம், பண்பாட்டு மற்றும் கலாச்சாரத்தில் அதை நெளிவு சுளிவாகப் புகுத்துகின்றது. இதனால் பெண் அணியும் உடுப்பின் அளவு, படிப்படியாக வெட்டிக் குறைக்கப்படுகின்றது.

 

இந்த எல்லையில் பெண் அல்லது சமூகம் தமது தேவை கருதி உடுப்பு தயாரிக்கும் சொந்த தெரிவையும், சுதந்திரத்தையும் தானகவே இழந்து நிற்கின்றனர். சந்தை எதை எப்படி ஏன், எதற்காக அணியவேண்டும் என்று தீர்மானிக்கின்றதோ, அதற்கு ஏற்ப எதை எப்படி ஏன் உற்பத்தி செய்கின்றதோ, அதை அப்படியே அணியும் வழக்கமே ஒரு பண்பாடாக கலாச்சாரமாக மாறிச் செல்லுகின்றது. இதுவே புதிய சீரழிவு பண்பாட்டு கலாச்சாரத்தை உருவாக்குகின்றது. இது பாலியல் பற்றியும், பெண் பற்றியும், அனைத்து சமூக மதிப்பீட்டையும் வக்கிரப்படுத்தி, மிகத் தீவிரமாக மாற்றுகின்றது. கவர்ச்சி ஆபாசம் ஊடாக பெண்ணை பார்க்கும் வக்கிரமான சமூக மனப்பாங்கை உருவாக்கி, சமூகம் (ஆணும் பெண்ணும் சேர்ந்து ) அதை அனுபவிப்பதாக கூறி சமூகத்தை சந்தை சீரழிக்கின்றது.

 

அனுபவிப்பாக நம்பும் சுய கவர்ச்சி, சுய ஆபாசம் ஊடான வக்கிரத்தை பிரதிபலிக்கும் சமூக அமைப்பில், ஒரு ஆண் தனது உடல் உறுப்பு தெரிய உடுப்பை அணிவதில்லை. ஆண் பெண்ணுக்கு எதிர்மாறாக, இங்கு முரண்ணிலையாகவே இருக்கின்றான். ஆனால் பெண்ணின் முந்தைய தனது நிலைக்கு எதிர்நிலையில், பெண்ணின் உடுப்பு தீவிரமாக மாற்றப்பட்ட போதும், ஆணின் பண்பாட்டில் இந்த மாற்றம் நிகழவில்லை. ஆணாதிக்க அமைப்பில் உடுப்பு சார்ந்த பண்பாட்டில், ஆணின் நிலை மாற்றமின்றி தொடர்ந்தும் தக்க வைக்கப்படுகின்றது.

 

அதாவது ஆணின் கவர்ச்சி ஆபாசம் என்ற விடையம், ஆணாதிக்க சந்தையை தீர்மானிக்காமையால், பெண்ணின் தசை சார்ந்த கவர்ச்சி மட்டும் முதன்மைப் பொருளாக்கி ஆபாசமாக்கப்படுகின்றது. இங்கு பெண்ணே மறுபடியும், இந்த புதிய கலாச்சாரத்தின் காவியாகின்றாள். முன்பு பெண் கலாச்சாரத்தின் பாதுகாவலர் என்ற நிலை இன்று தீவிரமாக மாறிவிட்டது. புதிய ஆணாதிக்க நுகர்வுக் கலாச்சாரத்தில் காவியாக்கப்பட்டுள்ளாள். அதாவது சந்தை தனது தேவைக்காக பழையதைத் தகர்க்கின்றது. பெண் ஊடாக மனித வரலாற்றை தெரிந்து கொள்ள உதவிய பாரம்பரிய மனிதக் கலாச்சாரம் இன்று அழிக்கப்படுகின்றது. அதனிடத்தில் வக்கிரமான ஆணாதிக்க சந்தைக் கலாச்சாரம் புகுத்தப்படுகின்றது. உண்மையில் இந்த மாற்றம் என்பது, பெண்ணை ஆணாதிக்க சந்தை விளம்பர மடலாக்கியது. அவளை ஆணாதிக்க ரசனைக்குள் சீரழிவுக்குள்ளாக்கி, அவளே இதன் காவியாக இருக்க தூண்டப்படுகின்றாள். இவை தனிப்பட்ட பெண் அல்லது பெண்களின் நடத்தைகளல்ல. சந்தையின் நடத்தை விதி தான், பெண்ணை இப்படி இருக்கக் கோருகின்றது. அதற்கு பெண் பலியாகின்றாள். இதையே பெண் விடுதலை என்று சொல்லும் எல்லைவரை இது சீரழிகின்றது.

 

இந்த எதார்த்தத்தை புரிந்து எதிர்வினையாற்றும் சமூக மதிப்பீடுகள் தான், மனித குலத்தின் ஆரோக்கியத்துக்கும் வாழ்வுக்கும் அவசியமானது. உலகமயமாதல் கட்டமைக்கும் ஆணாதிக்க சந்தை அமைப்பில், பெண்ணின் உடல்சார் சதைக் கவர்ச்சி தான், சந்தையின் கவர்ச்சியாகின்றது என்பதை முதலில் உணர்வது முதல்படியாகும்.

 

ஒரு ஆண் தனது உடல் தெரிய உடுப்பு அணிவதில்லை. ஆனால் ஒரு பெண் உடல் தெரிய உடுப்பு அணியவைக்கப்படுகின்றாள். இந்த முரணைப் புரிந்து கொள்வது, எதார்த்தத்தில் மிக இலகுவானது. சந்தையை நியாயப்படுத்தும் இந்த ஆபாசக் சதைக் கூத்தையும், அந்தக் கலாச்சாரத்தையும் தகர்ப்பதற்கு, ஆணின் இந்தநிலை உதவுகின்றது. மனித தேவைகளை மறுத்து, வர்த்தகத்துக்காகவே இயங்கும் உலகமயமாதல் சந்தை, பெண் ஊடாக ஆபாசமாகவே இயங்குகின்றது. எப்படி பெண் அதற்குள் திணிக்கப்படுகின்றாள் என்பதை, நாம் புரிந்து கொள்ளமுடியும். இதற்கு எதிரான சமூக கண்ணோட்டம் நம்மிடம் இல்லாதவரை, சந்தையில் பாலியல் சார்ந்த சதை ஆபாசமே, மானிட ஒழுக்கவியலாகின்றது. பெண், பெண் உறுப்பு என்ற பாலியல் சதையூடாக மட்டும் தான் பார்க்கப்படுவாள், பார்க்கப்படுகின்றாள். இதனால் கலாச்சாரக் கூறு முழுமையும் சிதிலமடைந்து வக்கிரமடைகின்றது. கலாச்சாரம் என்பது, பாலியல் வக்கிரம் கொண்ட லும்பன்;தனமாகி விடுகின்றது. ஆண் பெண் இடையிலான உறவு, சதை ஊடாக அணுகுவதாக மாறிவிடுகின்றது. கவர்ச்சி, ஆபாசம், போலித்தனம், வக்கிரமான பாலியல் நாட்டம் தான், ஆண் பெண் உறவினை தீர்மானிக்கும் ஒரு காரணியாகி விடுகின்றது.

 

இந்த வகையில் கீழைய நாடுகளில் இருந்து, மேற்கு நாடுகள் வரை, சந்தை பெண்ணின் சதை மூலமாய் உற்பத்தி செய்கின்றது. பெண்ணின் சதை சார் பாலியல் கவர்ச்சியே, பண்பாட்டுக் கலாச்சாரத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றது. அவள் அணியும் உடையூடாகவும், இது மிக நுட்பமாக இது வெளிப்படுகின்றது.

 

உலகமயமாதலில் தீவிரமாக புகுத்திய இந்த மாற்றத்தை நாம் எந்தளவில் உணர்ந்துள்ளோம்? இதை நாம் எந்த வகையில் புரிந்துள்ளோம்? எந்த வகையில் இதை எதிர்த்து, எதிர் வினையாற்றுகின்றோம்? எந்த வகையில் மாற்றுக் கண்ணோட்டத்தை இதன் மீது கொண்டுள்ளோம்? இதை எந்த வகையில், சமூகத்தின் முன் எடுத்துச் செல்லுகின்றோம்?

 

இவை எம் முன் தெளிவுபடாத சூக்குமமான ஒரு நிலையில் நாம் வாழ்வோமாயின், அந்த கவர்ச்சியை ஆபாசத்தை ரசிக்கும் வக்கிரம் எமது மனப்பாங்காக எம்மையறியாமல் மாறிவிடுகின்றது.

 

இது எமக்குள்ளான சுயமுரண்பாடு சார்ந்தாக மாறுகின்றது. ஒரு பொருளின் முரண்பட்ட இரண்டு கூறு சார்ந்து, தனக்கு நெருங்கிய பெண்ணுக்கு இதை மறுக்கின்ற கலாச்சார முரண்பாடாக, லும்பன் தனம் கொண்ட ஒரு வன்முறையாக உருவாகின்றது. பொதுத் தளத்தில் இந்த ஆபாசத்தை ரசிக்கும் தீவிர ரசிகர்களாக, அந்த பண்பாட்டில் ஊறியவர்களாக மாறிவிடுவதும், நெருங்கிய உறவில் அதை சகித்துக்கொள்ள முடியாத வக்கிரம் கொண்டவராக நாம் மாறிவிடுவதும் நிகழ்கின்றது. இதன் பொதுத்தன்மையை விமர்சிக்கவும் எதிர்க்கவும் முடியாத மனநிலையில், இது குறிப்பாக மட்டும் புரிந்து குடும்ப வன்முறையாக மாறுகின்றது.

 

தொடரும்

 

பி.இரயாகரன்

 

 1.ஆபாசமும்! கவர்ச்சியும்! அதன் வக்கிரமுமா! மனித கலாச்சாரம்? : (மனித கலாச்சாரம் பாகம் - 1)

 

2.மனித உறவுகளும், அதன் சிதைவுகளும் : (மனித கலாச்சாரம் பாகம் - 02)