Language Selection

மனிதன் தனக்குள் கொண்டுள்ள சமூக உறவுகளின் சிதைவுகள் தான், உலகமயமாதலின் ஊக்க மருந்துகளாகும். மறுபக்கத்திலோ சமூகமாக வாழத் துடிக்கின்ற இயற்கை சார்ந்த பரிணாமச் சூழல்.

இதுவே உலகம் தழுவிய ஒரு சூழல். இயற்கை, செயற்கை எங்கும் இந்த முரணிலை உண்மை, தனிமனித குதர்க்கவாதத்தால் செயலால் மறுதலிக்கப்படுகின்றது. இயற்கைக்கு வெளியில் மனித வாழ்வு கிடையாது என்பதால், மனிதனை பிளக்கும் தனிமனித வாழ்வு சார்ந்த குதர்க்கங்கள் செயல்கள் இயற்கையாகவே மறுதலிக்கப்படுகின்றது. செயற்கையான தனிமனித நலனை தன் சுங்கானாக கொண்ட உலகமயமாதல், தனது சொந்த தனிமனித வக்கிரம் கொண்ட நுகர்வுக் கலாச்சாரத்தை திணிக்கின்றது. சமூகம் சார்ந்த, சமூக நுகர்வு சார்ந்த கலாச்சாரத்தையே அது அழிக்கின்றது. மனிதனின் சமூகத் தேவையை மறுத்து, பணம் கொடுத்து வாங்கும் கும்பலின் தனிமனித தேவையை முதன்மைப்படுத்துகின்றது. இதையொட்டிய சந்தைக் கலாச்சாரமே, மனித கலாச்சாரமாகின்றது. தனது சுயநலம் கொண்ட சொந்த வாழ்வியல் நடைமுறையை, மொத்த சமூகம் மீது திணிக்கின்றது.

 

இது குடும்ப அலகுகளைக் கூட பிய்த்து, அதைப் பிசைந்து போடுகின்றது. இதற்குள் கசங்கி வாழும் குழந்தைகளின் மனித மனப்பாங்கு ஒருபுறம். இதை எதிர்த்து அதை எதிர்கொள்ளும் பெற்றோர்கள் மறுபுறம். கடந்துவந்த மனித வரலாற்றை விட, புதிய அதிரடியான உலகமயமாதல் முரண்பாடுகள், அதாவது இது தலைமுறை முரண்பாடுகளை கூட கடந்து உருவாகின்றது.

 

இது நடைமுறை வாழ்வியல் எதார்த்தத்தில் பலவிதமாக பிரதிபலிக்கின்றது. ஆழம் காணமுடியாத, கலாச்சார முரண்பாட்டின் வடிவில் இது பிரதிபலிக்கின்றது. எது சரி எது பிழை என்று தீர்மானிக்க முடியாத சூனிய நிலை. குறுகிய எதிரெதிரான பிரதிவாதங்களுக்குள்ளும், நடைமுறைக்குள்ளும்,  தானாகவே சொந்த சுழற்சியில் சிக்கிவிடுகின்றது. சமூகத்தில் என்ன மாற்றம் நடக்கின்றது என்பதையும், அது எப்படி எந்த வழியில் நடக்கின்றது என்பதையும் அது கருத்தில் எடுப்பதில்லை. இது குடும்பத்தில் பாரிய முரண்பாட்டை, பிளவை உருவாக்குகின்றது.

 

1.பெற்றோர்கள் தாம் விரும்பியதை ஒற்றைப் பரிணாமத்தில் குழந்தைகள் மீது திணிக்க முனைகின்றனர்.

 

2.பெற்றோர்கள் தாம் விரும்பியதை, குழந்தைகள் அப்படியே பின்பற்றுவதாக மனப்பிரமை கொள்ளுகின்றனர். அதாவது தமது சொந்த இயலாமையை வெளிக்காட்டாத வகையில் முரண்பாடாகவே வாழ்வதுடன், வெளி உலகுக்கு நடிக்கின்றனர்.

 

3.குழந்தைகளின் செயல்களை தாம் விரும்பிய வழிகளில் செல்வதாக கற்பித்துக்கொண்டு, அது தமது கோட்பாட்டுக்கு இசைவாக இருப்பதாக எண்ணி அதை விளக்குவதும், பின் அதற்கு தத்துவ விளக்கமும் வழங்குகின்றனர்.

 

4.குழந்தைகள் தாம் விரும்பியதை ஒற்றைப் பரிணாமத்தில் பெற்றோர் மீது திணித்து விடுகின்றனர்.

 

இந்த வகையிலான நடைமுறைகள், கருத்துகள் அன்றாடம் நாம் சந்திக்கும் வாழ்வியல் விடையமாகின்றது. உலகமயமாதல் உருவாக்கும் பொதுவான தோல்வி மனப்பாங்கை திருத்திசெய்யும் உளவியல் மனப்பாங்கில், பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக காட்சியளிக்கின்றது. போலித்தனமான இணக்கப்பாடு அல்லது வால் பிடித்துச் செல்லுதல் என்ற நிலைக்கு, தானாகவே தரம் தாழ்ந்து விடுவது என்பது இதன் பண்பாகும். இப்படி சமூக ஒட்டத்தின் பிரதான விடையம் கண்டுகொள்ளாது தவிர்க்கப்படுகின்றது. அறிவியல் பூர்வமான விவாதம் தவிர்க்கப்பட்டு, தனிமனித குதர்க்கத்தினால் சமூக இழிவின் எல்லையில் சமூகம் சரிந்து வீழ்கின்றது. இது இயல்பில் தன்னை தக்கவைக்கின்ற சுயநலம் கொண்ட, குத்தலான குதர்க்க வாதமாகின்றது, நடைமுறையாகின்றது.

 

1.இந்த உலகத்தின் அவரவர் நம்புகின்ற வாழ்வியல் முறையை, முரண்பாடின்றி சரி என்று ஏற்றுக்கொள்ளும் மனப்போக்காக அது வெளிப்படுகின்றது. தத்தம் செயலை குதர்க்கமாக நியாயப்படுத்தவும் முனைகின்றது.

 

2.சமூக உறுப்புகளின் செயல் சார்ந்த கோட்பாடுகளும் நடைமுறைகளும், அவை எவ்வளவு தான் சமூக உறவுகளில் முரணாக முரண்பாடாக இருந்தாலும் சரி, முரணற்றதாக இருந்தாலும் சரி, அதை சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்காத மாறாத்தன்மை கொண்டதாக காட்டி நடிக்கின்ற போலித்தனமே, மனித உணர்வாக மாறி அது அரங்கேறுகின்றது. அதாவது மாற்றம் எதுவுமின்றி தாம் வாழ்வதாக காட்டி நடிக்க முனைகின்றனர்.

 

3.சமூக உறுப்புகளின் முரண்பட்ட அல்லது முரண்படாத பொது உலகம் சார்ந்த உலக கண்ணோட்டம் (நோக்கு) தவறாக இருப்பதை காணமறுப்பதன் மூலம், ஒன்றிலிருந்து ஒன்றுக்கு தாவி நியாயப்படுத்துவது காணப்படுகின்றது.

 

4.உலகின் மனித வாழ்வு சார்ந்து அனைத்தும் மாறிக் கொண்டிருக்கின்றது என்பதையும், இவற்றில் சரி பிழைகள் உலகம் தழுவியதாக எங்கும் எதிலும் இருக்கின்றது என்பதையும் ஏற்றுக்கொள்ள மறுப்பது, மனித உறவுகளில் பிரதானமானதும் அடிப்படையானதுமான முரண்பாடாகின்றது.

 

5.உலகம் தளுவியதாக, பொதுமைப்படுத்தி மனித உறவுகளை பார்க்க மறுக்கின்ற குறுகிய உளவியல் மனப்பாங்கு, தனக்கு எதிராகவே அதை நிறுத்துகின்றது.

 

மனித உள்ளடக்கத்தில் உலகைப் புரிதல், பரஸ்பரம் மனிதத்தன்மை என்னும் ஜனநாயக மனப்பாங்கை வளர்த்தல் ஊடாக, சமுதாய நடைமுறைகளின் சரி பிழைகளை கற்றல், கற்றுக்கொடுத்தல் என்பதை மறுப்பதே, சமூகத்தின் பொதுப்புத்தியாகும். இதன் விளைவை சமூகம் தனது சொந்த சீரழிவின் ஊடாக அனுபவிக்கின்றது. வெறும் மந்தைக் கூட்டமாக, நுகர்வுச் சந்தையில் மேய்வதே, அதன் சொந்த சமூக அறிவாக சுருங்கிவிடுகின்றது.

 

இப்படி உலகின் பண்பாடுகளை கலாச்சாரத்தை தீவிரமாக மாற்றுவதில், நுகர்வைத் தூண்டும் சந்தை சார்ந்த நலன்கள் முக்கிய பங்கை இன்று வகிக்கின்றது. அதேநேரம் சந்தைக்கு வெளியில் உழைத்து வாழ்பவனின் உழைப்பு பண்பாட்டுக்கும், சந்தை உருவாக்கும் நுகர்வுப் பண்பாட்டுக்கும் இடையில் பாரிய முரண்பாடு உருவாகி சமுதாயத்தை முடமாக்குகின்றது. நுகர்வுப் பண்பாடு வீங்கி வெம்பி உள்ள சமுதாய உள்ளடக்கத்தில், தனிமனிதன் சார்ந்த குறுகிய நலன்கள் உந்தித் தள்ளப்படுகின்றது. கவர்ச்சியும் ஆபாசமும் நிறைந்த நுகர்வு வக்கிரம், கலாச்சாரமாக பண்பாடாக திட்டமிட்டு உற்பத்தியாகின்றது. ஒரு விளம்பரம் எப்படி எந்த நோக்கில் (உத்தியில்) உருவாக்கப்படுகின்றதோ, அந்த நோக்கில் அதே வகையில் மக்களின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் சந்தை உற்பத்தி செய்கின்றது. உலகமயமாதல் என்ற சமூகப் போக்கில், இது உலகம் தளுவிய சந்தையாகின்றது.

 

இந்த நுகர்வுக் கலாச்சாரத்தின் காவியாக பெண் மாற்றப்பட்டுள்ளாள். சமூக அளவில் இதை பெண் எப்படி உணரவில்லையோ, அப்படி ஆணும் உணரவில்லை. சமூகம் மலடாகிப் போக, அதனிடத்தில் இவையே கோலோச்சுகின்றது.

 

தொடரும்


 
பி.இரயாகரன்

 

1. ஆபாசமும்! கவர்ச்சியும்! அதன் வக்கிரமுமா! மனித கலாச்சாரம்? : (மனித கலாச்சாரம் பாகம் - 1)