Language Selection

புதிய ஜனநாயகம் 2010

அன்றாட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவதற்குச் சந்தைக்கு வரும் ஏழை-எளிய மக்கள் விலைவாசியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தும் கொதித்துப் போயும் கிடக்கிறார்கள். அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், சர்க்கரை, பால், காய்கறிகள் முதலிய இன்றியமையாப் பொருட்களின் விலைகள் செங்குத்தாக எகிறிக் கொண்டே போகிறது. சந்தையில் கிலோ 13 ரூபாயாக இருந்த அரிசி 28 ரூபாயாக, அதாவது இரண்டு மடங்குக்கு மேலாகி விட்டது. 8 ரூபாயாக இருந்த கோதுமை 15 ரூபாயாகி விட்டது. 17 ரூபாயாக இருந்த சர்க்கரை 47 ரூபாயாகிக் கசக்கிறது.

கடந்த 11 ஆண்டுகளிலேயே மிக அதிக அளவாக 2009 டிசம்பர் கணக்குப்படி உணவுப் பொருட்களின் பணவீக்கம் 19.75 சதவீதத்தை எட்டிய பிறகு, எதிர்க்கட்சிகளும் செய்தி ஊடகங்களும் புலம்பத் தொடங்கின. நாடாளுமன்றத்துக்குள்ளேயும் வெளியேயும் நடத்தும் வழக்கமான பம்மாத்துக்களால் மக்கள் ஆதரவைப் பெற்றுவிடலாம் என்று எதிர்க்கட்சிகள் நம்புகின்றன.

நாட்டின் பொருளாதாரத்தை நாலுகால் பாச்சலில் முன்னேற்ற விரும்பி ஆட்சியாளர்கள் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகள் ஏதோ எதிர்பாராத காரணங்களால் தற்செயலாகவோ, தானாகவோ பணவீக்கம், விலைவாசி உயர்வு என்ற நெருக்கடிக்குள் பொருளாதாரத்தைச் சிக்க வைத்து விட்டன என்பதாகச் செய்தி ஊடகங்கள் புலம்புகின்றன. அதேசமயம், மன்மோகன் சிங் – மாண்டேக் சிங் கும்பலின் தலைமையிலான பொருளாதாரப் புலிகள் தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலைமையைச் சரி செய்து விடுவார்கள் என்று செயற்கையான நம்பிக்கையூட்டப்படுகின்றன.

தற்போது நிலவும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பணவீக்கம் – விலைவாசி உயர்வு என்ற நெருக்கடி எதிர்பாராத காரணங்களால் தானாகவோ, தற்செயலாகவோ ஏற்பட்டுவிட்ட பிரச்சினை அல்ல. பொருட்களின் விலையைக் கேட்டவுடன் தெருமுனையில் உள்ள சில்லரை விற்பனையாளர் வேண்டுமென்றே திடீரென்று அதிக விலை வைத்து விற்கிறார் என்று பாமர மக்கள் கருதுவதைப் போன்று இது நடக்கவில்லை. உண்மையில் விலைவாசி உயர்வு என்பது தமது ஆட்சியையோ, தாம் கட்டியமைக்கத் திட்டமிட்டுள்ள பொருளாதாரத்தையோ, தாம் அக்கறைப்படும் மக்கள் பிரிவினரின் நலத்தையோ பாதிக்கும் ஒரு பிரச்சினையாகக் கருதி ஆட்சியாளர்கள் அஞ்சிவிடவில்லை. குட்டையில் நீந்திக் களிக்கும் எருமை மாடுகளை, சாக்கடையில் படுத்துப் புரளும் பன்றிகளைப் போலத்தான் மன்மோகன் – மாண்டேக் சிங் கும்பலுக்கு விலைவாசிஉயர்வு என்பது ஒரு பிரச்சினையே இல்லை. விலைவாசி உயர்வு என்பது தமது எஜமானர்களுக்கும் தமக்கும் ஆதாயம் தரத்தக்கதாகவே இவர்கள் கருதுகிறார்கள்.

எனவேதான், உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வால் ஏழை, எளிய மக்கள் பரிதவிக்கையில் கூட 30 இலட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்வதற்கு மன்மோகன் சிங் அரசு அனுமதித்திருக்கிறது. இந்த ஏற்றுமதிக்கான சலுகையாக பல கோடி ரூபாய்களை மத்திய அரசு பெருமுதலாளிகளுக்கு மானியமாக வழங்கியிருக்கிறது. அதேசமயம், விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்காக என்று சொல்லிக் கொண்டு, அதைவிடக் கூடுதலான விலையில் சர்க்கரை இறக்குமதிக்கும் ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு தனிநபரும் 50,000 டன் வரை உணவு தானியத்தை இருப்பு வைத்துக் கொள்ள அனுமதி அளித்திருப்பதன் மூலம், உணவுப் பொருட்களைப் பதுக்கி வைப்பதற்கும், சந்தையில் விலையை ஏற்றுவதற்கும் சட்டப்படி அனுமதி அளித்துள்ளது. அம்பானி, பிர்லா போன்ற முதலாளிகள் சில்லரை விற்பனையில் நுழைந்த பிறகு இந்த சலுகையின் மூலம் கொள்ளை இலாபமடிப்பதற்குச் சட்டபூர்வ அனுமதி அளித்துள்ளது.

அம்பானி, பிர்லா போன்ற தரகு முதலாளிகள் பெருமளவு சில்லரை வணிகத்தில் நுழைந்து ஏகபோக ஆதிக்கத்தை நிறுவத் தொடங்கிய பிறகு, உணவு தானியங்கள், பருப்பு வகைகளில் மட்டுமல்லாது, சமையல் எண்ணெய், சர்க்கரை, காய்கறி-பழம் ஆகியவற்றிலும் உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடிக் கொள்முதல் செய்வது, புறநகர்ப் பகுதிகளில் குளிர்பதன வசதிகளுடன் பிரம்மாண்டக் கிடங்குகளில் சேமித்து வைத்து ஏகபோகமாக்கிக் கொள்ளையடிக்கின்றனர்.

இதைத் தடுக்காத அரசு, விவசாய உற்பத்தியாளர்கள் பல ஆண்டுகளாகக் கோரியும் உணவுப் பொருட்கள் சேமிப்புக் கிடங்குகளை அமைத்துக் கொடுக்க மறுத்தே வருகிறது. ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும் 70,000 டன்கள் உணவு தானியங்கள் வீணாகிப் போகின்றன. சென்னை கோயம்பேடு மையக் காய்கறி-பழச்சந்தையில் மட்டும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான டன்கள் அழுகி நாறிக் குப்பையில் கொட்டப்படுகின்றன. சில்லரை வணிகத்தில் ஈடுபட்டுள்ள ஏகபோக தரகு முதலாளிகள் மட்டுமல்ல, விவசாய விளைபொருட்களை சந்தைக்குக் கொண்டு வந்து குவிக்கும் சரக்கு உந்து, (லாரி) ஏகபோக முதலாளிகள், தரகு பெரு வணிகர்கள் ஆகியோரின் பகற்கொள்ளைக்குப் பிறகு, எல்லாச் சுமையும் நுகர்வோர்களாகிய ஏழை-எளிய மக்கள் மீதுதான் சுமத்தப்படுகிறது.

“இனி அரசு ஆதரவுகள், மானியங்கள், நியாயவிலை விற்பனைகள் என்று எதுவும் இருக்கக் கூடாது; சந்தைகளே எல்லாவற்றையும் தீர்மானிக்க வேண்டும், சந்தைக்கான தொழில் போட்டி, உற்பத்தி, விநியோகம்தான் ஆட்சி நடத்தவேண்டும்; இதுதான் இந்த நாட்டின் தொழிலையும், உற்பத்தி-விற்பனையையும் உலகத் தரத்துக்கு உயர்த்துவதற்கான பாதை” என்று மன்மோகன் – மாண்டேக் சிங் ஆகிய ஆளும் கும்பல் மட்டுமல்ல, எல்லா எதிர்க்கட்சிகளும் ஒருமனதாக நம்புகின்றன. மொத்தத்தில், அமெரிக்காவின் வால் மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் முழு மூச்சில் புகுந்துவிட்டால் போதும் எல்லாம் சரியாகிவிடும் என்பதுதான் இவர்களின் எண்ணம்!

மத்தியிலோ, மாநிலங்களிலோ எங்கு, எந்தக் கட்சி  ஆட்சிக்கு வந்தாலும் இந்தக் கொள்கையைத்தான் கடைப்பிடிக்கின்றன. குறிப்பாக, காங்கிரசு மற்றும் பா.ஜ.க. ஆகிய இரண்டு கட்சிகளும் இந்தக் கொள்கையை உறுதியுடன், இன்னும் சொல்வதானால் “வெறி”யுடன் அமல்படுத்துகிறார்கள். இந்தப் பாதையிலிருந்து தாங்கள் விலகிப் போவிடமாட்டோம் என்று இவர்கள் தங்கள் எஜமானர்களுக்கு மீண்டும் மீண்டும் உறுதியளிக்கிறார்கள். அவர்களது சிந்தனை, செயல், அறிவிப்பு எல்லாவற்றிலும் இதுதான் வெளிப்படுகிறது.

இப்படிச் செய்வதற்காக ஆட்சியாளர்கள் ஒருபோதும் கூச்சப்படுவதோ, தயங்குவதோ கிடையாது. தங்களுக்கு வாக்களித்து ஆட்சிக்குக் கொண்டு வருபவர்கள் என்ன எண்ணுவார்களோ என்று அஞ்சுவதும் கிடையாது. ஏனென்றால், ஆட்சியாளர்கள் எப்போதும் எண்ணுவதும் பேசுவதும் உலகச் சந்தையில் போட்டி, உலகத் தரத்துக்கு தொழில் – உற்பத்தி! உலகத்தரம், உலகச் சந்தையில் போட்டி எனும்போது, உலகிலுள்ள பெரும்பாலான ஆசிய, ஆப்பிரிக்க, தென்அமெரிக்க ஏழை நாடுகளை மனதில் கொள்வதில்லை.

மிகமிக முன்னேறிய, பணக்கார நாடுகளாகச் சொல்லப்படும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைத்தான்! இதன் பொருள் என்ன? தொழிலும் உற்பத்தியிலும் மட்டுமல்ல, சந்தையிலும் நுகர்விலும் கூட உலகத் தரத்தை எட்டவேண்டும் என்பதுதான்! இதெல்லாம் உலகத் தரம் என்கிறபோது, சந்தையிலும் நுகர்விலும் மட்டும் இந்தியத் தரம் என்பதை ஆட்சியாளர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? இந்த நாட்டின் மக்கள் தொகை 100 கோடி என்றால், அவர்களில் 10 கோடிப் பேரையாவது உலகத் தரம், உலகச் சந்தை பொருட்களைப் பாவிப்பதற்கான நுகர்வாளர்களாக்கு என்பது மட்டும்தான் ஆட்சியாளர்களின் குறிக்கோளாக உள்ளது.

எனவேதான், கடந்த சில ஆண்டுகளில் மட்டும், 10 கோடி “இந்திய மக்களின்” வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு, அவர்களின் வாங்கும் சக்தியைப் பன்மடங்கு அதிகரிக்கும் நடவடிக்கையில் இந்திய ஆட்சியாளர்கள் முக்கியக் கவனம் செலுத்தினர். ஏற்கெனவே கூட்டுப் பங்கு நிறுவனங்களின் பணியாளர்களின் ஊதியம் சராசரி இந்தியரின் வருமானத்தைவிட ஆயிரம் மடங்கு அதிகம். அரசு மற்றும் அரசுத் துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு விலைவாசி-வீட்டு வாடகை போன்ற சந்தை விலையேற்றத்துக்கு ஈடாக அவ்வப்போது கிரமமாக ஊதியம் உயர்த்தப்பட்டு வந்தது. இது போதாதென்று, இப்போது அரசு மற்றும் அரசுத் துறை தொழில்-வர்த்தக நிறுவனங்களின் ஊழியர்களது ஊதியம் பன்மடங்கு உயர்த்தப்பட்டு விட்டது.

ஆகக் கூட்டிப்பாருங்கள். கூட்டுப்பங்கு நிறுவன அதிகாரிகள், பணியாளர்கள்; அரசு மற்றும் அரசுத்துறை தொழில்-வர்த்தக நிறுவன அதிகாரிகள், “ஊழியர்கள்”; ஏற்கெனவே கொழுத்துப் போயுள்ள தரகு முதலாளிகள் – தரகு வர்த்தகர்கள், கிராமப்புற முதலாளிய விவசாய உற்பத்தியாளர்கள், மற்றும் ஏற்றுமதி-இறக்குமதிக்கான உற்பத்தி வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ள முதலாளிகள், அவர்களின் பணியாளர்கள்; பல்வேறு சேவைத்துறை முதலாளிகள், பணியாளர்கள்; தொழில்முறை அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், கிரிமினல் குற்றக் கும்பல்கள் இவர்கள் அனைவருமாக, இவர்களின் குடும்பத்தோடு ஒரு 10 கோடிப் பேராவது உலகத்தர வாழ்க்கையும், வாங்கும் வசதியும் படைத்தவர்களாக இந்த நாட்டில் இருக்கிறார்கள். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு இந்தப் பிரிவினரைப் பாதிப்பதே இல்லை. அம்பானி, பிர்லாக்களின் “சூப்பர் மார்க்கெட்”களில் என்ன விலை வைத்தாலும், உலகத் தரத்திற்கு டப்பாக்களில், பெட்டிகளில் அடைக்கப்பட்ட பன்னாட்டு நிறுவனப் பொருட்களையே பாவிக்கிறார்கள்.

இந்த 10 கோடி இந்திய மேட்டுக்குடியினருக்கான சந்தையைப் பற்றி மட்டுமே மன்மோகன் சிங் – மாண்டேக் சிங் கும்பல் அக்கறைப்படுகிறது. எனவேதான், அது மிகவும் திமிரோடு பேசுகிறது. விலைவாசி உயர்வு என்பது “தவிர்க்கமுடியாதது”; “நிச்சயமான ஒன்று” என்று நாடாளுமன்றக் கூட்டத்தில் அரசுத் தலைவர் ஆற்றிய உரையில் பகிரங்கமாகவே பிரகடனப்படுத்தியிருக்கிறது. இந்தியச் சந்தையை உலகச் சந்தையுடன் இணைப்பது, சந்தையே அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட அனைத்து நுகர்பொருட்களின் விலையைத் தீர்மானிப்பது என்றான பிறகு, விலைவாசி உயர்வு என்பது தவிர்க்க முடியாதது, எதிர்பார்க்க வேண்டியதுதான்.

10 கோடி இந்திய மேட்டுக் குடியினரின் வருவாயைப் பெருக்கி, வாங்கும் சக்தியை உயர்த்திய மன்மோகன் சிங் – மாண்டேக் சிங் கும்பல் மீதி விவசாயிகள், தனியார்துறைத் தொழிலாளர்கள், அமைப்புசாரா உழைப்பாளர்கள் மற்றும் நடுத்தர வகுப்பினரை உள்ளடக்கிய 90 கோடி இந்திய மக்களுக்கு என்ன செய்தது? இவர்களின் மலிவான உழைப்புச் சக்தியை மட்டுமல்ல, இம்மக்களடங்கிய பரந்து விரிந்த சந்தையிலும் கொள்ளையிடுவதற்கான சகல வசதிகளையும் ஏகாதிபத்திய ஏகபோக பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இந்திய ஏகபோகத் தரகு முதலாளிகளுக்கும் செய்து கொடுத்துள்ளது.

2008 ஆம் ஆண்டு 30 கோடி ரூபாய் இலாபம் ஈட்டிய 33 சர்க்கரை உற்பத்தி முதலாளிகள் 2009-ஆம் ஆண்டு மட்டும் 900 கோடி ரூபாய் இலாபம் ஈட்டியிருக்கின்றனர்; அவர்களின் இலாபம் 2,900 சதவீதம்அதிகரித்திருக்கிறது. 2007 மற்றும் 2008 ஆகிய இரண்டு ஆண்டுகளில் நமது நாட்டிலிருந்து சர்க்கரையை ஏற்றுமதி செய்யச் சொல்லி டன்னுக்கு 2350 ரூபாய் மத்திய மற்றும் மராட்டிய அரசுகள் மானியமாக வழங்கின. 2008 டிசம்பரில் ஏற்றுமதிக்குத் தடைவிதித்த மத்திய அரசு, அதன்பிறகு சர்க்கரை பற்றாக்குறை ஏற்பட்டபோது சர்க்கரை இறக்குமதி செய்யச் சொல்லி பல ஆயிரம் கோடி ரூபாய் இறக்குமதி செய்வதற்கு சுங்க வரி தள்ளுபடி செய்தது. ஆக, இரண்டு வகையிலும் மத்திய வேளாண் மற்றும் உணவு அமைச்சர் சரத்பவார் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்க்கரை ஆலை கும்பல் ஆதாயம் அடைந்து கொள்ளையடித்தது.

மிகை உற்பத்தியின் போது அரசே கிடங்குகளில் சேமித்து வைப்பது, பற்றாக்குறையின் போது சேமிப்பை விடுவித்து விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது என்ற “பொது நலப் பொறுப்பு” எதையும் அரசு மேற்கொள்ள வேண்டியதில்லை; எல்லாம் தனியார் கவனித்துக் கொள்வார்கள் என்பதுதான் அரசின் புதிய பொருளாதாரக் கொள்கை. இந்தக் கொள்கை வருவதற்கு முன்பிருந்தே தனியார்-பெரு வர்த்தக முதலாளிகள் மிகை உற்பத்தியின்போது பதுக்கி வைப்பதையும், பற்றாக்குறையின் போது பன்மடங்கு விலைவைத்து விற்பதையும் செய்து வந்தார்கள். முன்பு சட்டவிரோதமாகக் கருதப்பட்ட இந்த நடவடிக்கைகளை இப்பொழுது அரசே துணை செய்து ஊக்குவிக்கிறது.

சந்தையில் “நிலவும்” போட்டியே விலைவாசியைக் கட்டுப்படுத்திவிடும் என்ற முதலாளிய பொருளாதாரவாதிகளின் வாதத்தை இத்தகைய நடவடிக்கைகளும் ஏகபோக நிலையும் பொப்பித்து விடுகின்றன. இவ்வளவு விலைவாசி உயர்வுக்கு மத்தியில் கூட பெட்ரோலிய பொருட்களின் விலையை அரசு அவ்வப்போது உயர்த்தியதோடு, இனி சந்தைப் பெருமுதலாளிகளே தீர்மானித்துக் கொள்வதற்கு விட்டு விடுவது; அரசு கட்டுப்பாட்டில் இருந்து உரவிலையையும் விற்பனையாளர்களே தீர்மானிப்பது என்றும் முடிவு செய்து விட்டது. அதற்கு முன்பாக அரசே விலையையும் உயர்த்திவிட்டது. அரசு நிறுவனங்கள் உட்பட ஒருசில நிறுவனங்கள் ஏகபோக நிலையில் உள்ள இந்தத் தொழில்களில் வரைமுறையற்ற கொள்ளைக்குத்தான் இது வழிவகுக்கும்.

உலக சராசரிக்கும் குறைவாக இந்தியாவில் விளைபொருட்கள் கிடைக்கும் நிலையை மாற்றி, உலகச் சந்தையின் நிலைக்கு விலைவாசியை ஏற்றி விடுவது என்பது தான் ஆட்சியாளர்களின் நோக்கமாக உள்ளது. கடும் எதிர்ப்பின்றி அதை எப்படிச் சாதிப்பது என்பதற்குத்தான் பல்வேறு நாடகமாடுகிறார்கள். இதுதவிர, தொழில் துறையும், சேவைத்துறையும் மட்டுமல்ல, பங்குச் சந்தையிலும் நிதி ஆதிக்கத்துக்கு வசதி செய்து கொடுத்துள்ள இந்திய அரசு, சமீப ஆண்டுகளில் விவசாய விளைபொருட்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்களிலும் ஊகவணிகம், முன்பேர வணிகம், ஆன்-லைன் வணிகம் ஆகியவற்றிலும் சூதாட்டம் மற்றும் நிதி ஆதிக்கம் செலுத்துவதற்கும் எல்லாவசதிகளையும் செய்து கொடுத்துள்ளது.

ஆகவே, விலைவாசி உயர்வு என்பது பல்வேறு வகையிலும் அரசே ஊக்குவித்து வரும் திட்டமிட்ட சமூகவிரோதச் செயலாகும். ஆனால், அதுபற்றித் தாமும் கவலைப்படுவதாக அனைத்துக் கட்சி ஆட்சியாளர்களும் பித்தலாட்டம் செய்கிறார்கள் என்பதுதான் உண்மை!

-          புதிய ஜனநாயகம், மார்ச் – 2010