Language Selection

ஆபாசமும்! கவர்ச்சியுமா! அதன் வக்கிரமுமா! மனித கலாச்சாரம்? இதுவல்ல என்று பலமாக நம்பும் நாம், இப்படித் தான், இதற்குள் தான், நாம் எம்மையறியாமல் இதை நியாயப்படுத்தியும் வாழ்கின்றோம். இந்த உண்மையை நாம் தெரிந்து கொள்வது அவசியம். எம்மிடம் எஞ்சியிருந்த மனித கலாச்சாரங்களை எல்லாம், நாம் இழந்து வருகின்றோம். சமூகத் தன்மை கொண்ட, மனித நலன் கொண்ட, இயற்கையாகவே எம்முடன் இருந்த மனித கலாச்சாரம் அனைத்தும், எம்மிடமிருந்து படிப்படியாகவே அகற்றப்படுகின்றது.

இவையெல்லாம் ஏன் ஏதற்கு என்று நாம் அறியாத வகையில், நாம் ஒரு மந்தைகளாக வாழ வைக்கப்படுகின்றோம். மனித கலாச்சாரம் பற்றி பொது அறிவுத்தளமோ மிகக் குறுகியதாகவும், ஆணாதிக்க நோக்கில் பெண்ணை மையப்படுத்தியும், அறியாமையை அடிப்படையாக கொண்டதாகவும் காணப்படுகின்றது. 

 

கலாச்சாரங்கள் எங்கிருந்து எப்படி உருவாகின்றது? இவை மனிதக் கற்பனைகளில் இருந்தல்ல. மாறாக மனித வாழ்வியல் முறைகளில் இருந்து உருவாகின்றது. இந்த மனித வாழ்வியல் முறைகள், பொதுவாக பிளவுபட்ட இரு பிரதான சமூகப் போக்கில் இருந்து உருவாகின்றது. அதாவது சமூகம் இரண்டாக உள்ளது. உழைப்பில் ஈடுபடும் மக்கள் ஒருபுறம், உழைப்பில் ஈடுபடாது உழைப்பவனின் உழைப்பைத் திருடி வாழும் கூட்டம் மறுபுறமாக உள்ளது. இதுவே இரண்டு பிரதான கலாச்சாரத்தின் ஊற்று மூலமாகவுள்ளது. உழைப்பை திருடி வாழ்பவன், தனது திருட்டை நியாயப்படுத்தும் ஒரு கலாச்சாரமே ஆதிக்கம் பெற்றது. இந்த சமூக ஓழுங்கு தான் ஜனநாயகம் என்னும் கலாச்சாரமாக உள்ளது. மற்றவன் உழைப்பை திருடுவது மனித சுதந்திரமாகவும், அதை அங்கீகரிப்பது ஜனநாயகமுமாகின்றது. இதையொட்டியே சமூகக் கலாச்சாரங்கள் உருவாகின்றது.

 

இப்படி சக மனிதனின் உழைப்பை அவனின் கண்ணுக்கே புலப்படாத வகையில் சூக்குமமாக திருடுவது, கலாச்சாரத்தின் ஊடாக மூடிமறைக்கப்படுகின்றது. இந்த சுதந்திரத்தை, ஜனநாயகப்படுத்துகின்ற சமூக அமைப்பு ஒழுங்குகள், சமூக சட்டங்களாகின்றது. அவையே இணக்கமான கலாச்சாரமாகின்றது. இது மனித உழைப்பை மட்டுமல்ல, மனித வாழ்வியலையே சுரண்டும் கட்டமைப்பையே, நுகர்வு கலாச்சாரமாக்குகின்றது. இவை(களைத்) தான் உலகமயமாதல் த(h)ங்கி நிற்கின்றது. இப்படிப்பட்ட நுகர்வுக் கலாச்சாரத்தின் சொந்த அசிங்கம் என்னவென்றால், அது தனது கவர்ச்சியான ஆபாசமான கிறுக்குத்தனத்தையே, மொத்த மக்களினது கலாச்சாரமாக்குகின்றது.

 

இப்படிப்பட்ட நுகர்வுக் கலாச்சாரத்துடன், அதாவது அதன் கவர்ச்சி ஆபாசத்துடன் மனிதன் இணங்கிப் போவதா இல்லையா என்ற விவாதம் ஒருபுறம். ஆனால் எம்மை அறியாமல் இந்த அசிங்கமான சாக்கடைக்குள் மூழ்கி வாழ்வது மறுபுறம். இதற்குள்ளான வாழ்வியல் முரண்பாடுகள், சமூகத் தீர்வுகளற்ற, தனிமனித உளவியல் நெருக்கடிகளாகிவிடுகின்றது.

 

உண்மையில் இந்த நுகர்வுக் கலாச்சாரம் தனிமனித மன உளைச்சல்களை உற்பத்தி செய்து, அதை அந்தரத்தில் அனாதையாகவே தவிக்கவிடுகின்றது. பதற்றம், பீதியும், வாழ்வு பற்றி நிலையற்ற கோட்பாடுகளுடாக, அராஜகவாத உணர்ச்சியில் மனிதமே மரணித்துப் போகின்றது.

 

இந்த நுகர்வுக் கலாச்சாரத்தின் நெருக்கடி சார்ந்த விவாதமோ, பழமைக்கும் புதுமைக்குமானதாக, மாற்றத்துக்கும் மாற்றத்தை மறுப்பதற்கும் இடையிலானதாக சுருக்கி பார்க்கின்ற, சமூக அறியாமைக்குள் புகைந்து புதைந்து போகின்றது. இது அல்லது அது என்று, மனித சிந்தனையே ஓடுகாலித்தனமாகி விடுகின்றது. சமூகத்தில் நிலவும், எதிரெதிரான பொருளாதார முரண்பாடுகள் மீது சார்ந்து நிற்கின்ற சுயநலம், மனித அற்பத்தனமாக அரங்கேறுகின்றது. சமூகத்தையே தாம் புரிந்து கொண்டதாக நம்புகின்ற தனிமனித முட்டாள்தனங்களே, மனித உணர்வாகின்றது. இதுவே சிந்தனைத் தளத்தில் இன்று ஆதிக்கம் செலுத்துகின்றது.

 

இந்த வகையில் இயற்கையில் மனிதனின் வாழ்வு உருவாக்கிய வாழ்வதற்கான மனிதத் தன்மைகளை, நாம் ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்துகின்றோம். சமூக வாழ்வு என்பது, தனிமனித நுகர்வுக்கு எதிரானதாக கட்டமைக்கும் உலகமயமாதல் கலாச்சாரமே, இன்று எங்கும் எதிலும் கோலோச்சுகின்றது. சமூகத்தை இழிவாக்குகின்றதும், இழிவுபடுத்துகின்றதுமான, தனிமனித வக்கிரங்கள் சமூக ஒழுக்கங்களாகின்றது. இந்த வகையில் முடிவுகள், நடைமுறைகள், தொழில் நுட்பங்கள், விஞ்ஞான நடைமுறைகள் என அனைத்தும் சுருங்கிப் போகின்றது. இப்படி உலகமயமாதல் முடிவுகள் முதல் தனிமனித முடிவுகள் வரை, இதற்குள் தான் சுற்றிச்சுற்றி, குட்டி போடுகின்றது.

 

மனிதன் வாழ்வு சார்ந்து இயற்கை ஏற்படுத்திய முரண்பாட்டை, மனிதர்களுக்கு இடையிலான முரண்பாடாக முதன்மைப்படுத்தி மோதவைக்கப்படுகின்றோம். சுய மனிதத்தன்மை இழத்தலே, இவற்றுக்கான அடிப்படையாகும். மனித உழைப்பும், உழைப்புப் பிரிவினையும் ஏற்படுத்திய இடைவெளியை எல்லாம், மனித பிளவாக்குகின்றோம். இந்த வகையில் நாம், எமது சொந்த மனிதத் தன்மையை, எல்லாத் தளத்திலிலும் மிகக் கேவலமாகவே இழக்கின்றோம். இனம், நிறம், மொழி, சாதி, மதம், பால், கலாச்சாரம், பண்பாடு, உழைப்பின் வகை என எங்கும், இன்னும் ஏதேதோ வகையில் இதற்குள் பிளவைத் தேடி ஒடும் எமது குறுகிய மனப்பாங்கு, எமது மனிதத் தன்மைக்கே எதிரானது.

 

சரி இவை எல்லாம் ஏன்? எதற்காக? மற்றவனை விட என்னையும், என்னைச் சுற்றியும் மேம்படுத்த, மேம்படுத்திக் காட்ட நினைப்பது ஏன்? சக மனிதர்களையே, எமது எதிரியாக எம்முன் நிறுத்துவது ஏன்? நிறுத்தப்படுவது ஏன்?

 

இப்படி மனிதர்களையே இழிவுபடுத்தி, அவர்கள் உழைப்பைத் திருடி வாழும் வாழ்வையே சுதந்திரமாக, ஜனநாயகமாக காட்டுவது தான் உண்மை. பொதுவாகவே சமூகத்தின் பரிதாபகரமான நிலை இதுவென்றால், அதன் எல்லைக்குள் தான் மனித உறவுகள் கூட நலமடிக்கப்படுகின்து.

 

தொடரும்

பி.இரயாகரன்