மாதங்கள்
உருண்டோடிவிட்டன
ரணங்களை இன்னும்
அழிக்கமுடியவில்லை என்னால் ……
கர்ப்பிணி பெண்களின் வயிற்றினை
கிழித்து சூக்குமம் தேடின
குண்டுகள்
செத்த தமிழரின்
உடலையும் துளைத்தன சிங்கள
வெறி வண்டுகள்….
தலையில் கட்டு போட்டபடி
அம்மாவும் மகளும்
அழுது கொண்டிருந்த
அக்காட்சி போய்விட்டதா மனதில்
பிணத்தோடு பிணமாய்
பிணமாவதற்கு தயாராகிக்
கொண்டிருக்கும் அவரின்
கண்களில் கேள்விகள் தெறிக்கின்றன
என்ன பாவம் செய்தோம்…..
அவர் வருவார், இல்லையில்லை
இவர் வருவார் ஒரே நாளில்
அதிசயம் நடக்கும் – கனவுகள்
தான் நடப்பதில்லையே
வந்த படங்களைவிட வராதபடங்கள்
வராதவையாகவே இருக்கட்டும்
இருபதினாயிரம் பேர்
இன்னும் ஐம்பதாயிரம் பேர்
எண்ணிக்கைகளுக்கு
எண்ணத்தெரியவில்லை……
அப்பன், மாமன், மனைவி, கணவன்,
மச்சான் எல்லோரையும் இழந்து
விசத்தை கேட்கும் அந்த மனம் இனி
யாரை நம்பும்,
நம்பிக்கையாய்
இருக்க என்ன செய்தோம்
ரெட்டை இலைக்கு ஓட்டு கேட்பதைத்தவிர…..
கம்பிதாண்டி போனவர்கள்
கருகிப்போய் கிடக்கிறார்கள்
வாழ்க்கையில் உதிக்காது
சோத்துக்கு நிற்கயில்
உள்ளங்காலில் சூரியன் தகிக்க
அதை விட சுடுமா
துப்பாக்கியின் ரவைகள்….
விடுதலையின் வெப்பம்
குறைந்திடுமா என்ன
தெறிக்கும் ரத்தத்தில்
மரண சத்தத்தில்
ஜீவிப்பார்கள் நாளைய புதல்வர்கள்
இது என்ன ஜோசியமா
இல்லை-வரலாறு
ஆம் ஜாலியன் வாலாபாக்
பகத்சிங்கை பெற்றெடுத்தது
பூங்காவில் சுற்றிவளைக்க
பரங்கியர் தலையுடைத்து சரித்திரம்
சொன்னான் எங்கள் தோழன் ஆசாத்…..
தேடுதல் வேட்டைகள் தேடத்தேட
விழுந்த பிணங்களோ ஆயிரமாயிரம்
தியாகம் அள்ள அள்ள வற்றாத நதி
எங்கள் நக்சல் பரி
பாரிஸ் புரட்சி தோல்வி தான்
ஆனால் முடிந்து விட்டதா
போராட்டம் ?
செத்த பின்னும்
பிணங்களை கண்டு நடுங்கிக்கொண்டிருக்கிறது
ஆளும் வர்க்கம் - இன்று வரை
அது பயந்தோடுகின்ற
சொல் எது தெரியுமா?
மக்கள்………
ஆம்
கைகோர்ப்போம் இங்கு
வர்க்கம் ஒன்றே பதில் சொல்லும் !
கண்ணீரைதுடைத்து
கட்டியமைப்போம் மக்கட் படைகளை
உரத்து முழங்குவோம்
ஏகாதிபத்தியம் ஒழிக !
இந்திய மேலாதிக்கம் ஒழிக ! !
சிங்களபேரினவாதம் ஒழிக ! ! !
சிவப்பு பயங்கரவாதத்தில்
மூழ்கிப்போகட்டும் பேரினவாதம்,
சின்னாபின்னமாகட்டும் மேலாதிக்கம்
ஏகாதிபத்தியத்தை பிணமாய்
ஏற்றுமதி செய்வோம்….
சிவப்பு அது பட்டு போகாது
சுத்தியலும் அரிவாளும்
இனி அறுவை சிகிச்சையின்
கருவிகளாகட்டும்.