Language Selection

நாவலன் பாணியில் தான் ரகுமான் ஜான் கூறுகின்றார், தன் இலட்சியம் பாராளுமன்றமல்ல என்கின்றார். பாரிஸ் தலித் முன்னணி மகிந்தாவின் ஆலோசனையுடன், யாழப்;பாண தேர்தல் களத்தில சுயேட்சையாக களமிறக்கிய "சிறுபான்மைத் தமிழர் மகாசபை"யும், தங்கள் இலட்சியம் பாராளுமன்றமல்ல என்று தான் கூறுகின்றது. எல்லோரும் தங்கள் இறுதி இலட்சியம் பற்றி ஏதோதோ உளறுகின்றனர், கூறுகின்றனர். ஏன் மகிந்தா கூட! சரத் பொன்சேகா கூட! நாவலன் கூடத்தான்! ரகுமான் ஜான் கூடத்தான்! தங்கள் இறுதி இலட்சியத்துக்கு பாராளுமன்றம் உதவும் என்பதுதான், இவர்கள் அனைவரும் சொல்லும் மந்திரம்.

புலிப் பாசிசம் நிலவிய காலத்தில், 15 வருடங்களாக நாவலன் தன் இறுதி இலட்சியத்தை கைவிட்டு, வேறு இலட்சியங்களுடன் ஒடி ஒளித்தவர். ரகுமான் ஜான் தன் இறுதி இலட்சியத்தின் பெயரில் புலிப் பாசிசத்துக்கு உதவியவர், கடந்த 10 வருடமாக தன் இறுதி இலட்சியத்துடன் காணாமல் போனவர்கள். இதுவே எம்மை சுற்றிய கடந்தகால வரலாறு. இதை யாரும் இனி மறுக்க முடியாது. இந்த மூடிமறைப்புகளுடன், தங்கள் திடீர் இறுதி இலட்சியத்தை பேசிக்கொண்டு பாராளுமன்ற கதிரையைக் காட்டுகின்றனர். சமூகம் முட்டாள் தனத்துடன் உள்ள வரை ஏமாற்றி வாழ்வது இலாபம் என்பதை, புலிகளிடம் கற்றுக் கொண்டனர். புலியில்லாத இடத்தில், திடீரென மீண்டும் களமிறங்கியுள்ளனர். தாங்கள் ஒடி ஒளித்த காலம், காணாமல் போன காலத்தில், இந்த இறுதி இலட்சியத்துக்கு என்ன நடந்தது என்பதை கேட்காத மந்தைகளை மேய்க்க தேடுகின்றனர்.

 

இன்று ரகுமான் ஜான் முன்தள்ளும் மே18 இயக்கத்தின் இறுதி இலட்சியம் தமிழீழமா, இலங்கை தழுவிய ஒரு புரட்சியா… அல்லது வேறு ஒன்றா என்று எதுவும் தெரியாது. ஏன் அவரின் பின் நிற்கின்றவர்களுக்கும் கூடத்தான் அது தெரியாது. கடந்த காலத்தை "தன்னியல்பு வாதத்தின்" தோல்வி என்று உளறிக்கொண்டு, ரகுமான் ஜான் தன்னியல்பாக உளறுவதைத்தான் மே18 இயக்கத்தின் பின் செல்லும் மந்தைகளும் மீளச் சொல்லும் அவலநிலை. மே18 இயக்கம் வலதா, இடதா, வர்க்க விடுதலை இயக்கமா என்று, எதுவும் யாருக்கும் தெரியாது. இது அந்த அமைப்பின் உறுப்பினருக்கே தெரியாத நிலை. தனிப்பட்ட விசுவாசமும், கடந்தகால உறவுகளும், ஜானின் தன்னியல்புவாத கொள்கைகளும் தான் அதை உருட்டிப்புரட்டி வழிநடத்துகின்றது. வெளிப்படையாக முன்வைக்கப்பட்ட ஒரு அரசியல் திட்டம் அதனிடமில்லை. ரகுமான் ஜானின் வாயில் இருந்து வருவது தான் மே18 அரசியல். இந்த வகையில் ரகுமான் ஜான் தன் இறுதி இலட்சியம் பற்றிய நம்பிக்கையுடன், பாராளுமன்ற சாக்கடையில் குளிக்கக் கோருகின்றார். இப்படி இறுதி இலட்சியம் பற்றிய நம்பிக்கைகளுடன் உள்ளவர்கள் மூலம், "ஜனநாயகத்தை மறுசீரமைப்பதற்காக" பாராளுமன்றத்தை பயன்படுத்துவதற்கு உதவுவது அவசியம் என்கின்றார் நாவலன்.

 

இதே வகையில்தான் ரகுமான் ஜான் தேர்தலைப் பயன்படுத்தி, நல்லவர் ஆட்சியை கொண்டு வரமுடியும் என்கின்றார். அதையே தான் நாவலன் பொழிப்புரையாக "ஜனநாயகத்தை மறுசீரமைப்பதற்காக, அதன் அடிப்படை ஜனநாயக விழுமியங்களை மறு ஒழுங்கிற்கு உட்படுத்துவதற்காக.." தேர்தலை பயன்படுத்த முடியும் என்கின்றார். இப்படி தத்துவவாதியாக மே18 முதல் புதிய ஜனநாயகக் கட்சி வரை வழிகாட்ட முனைகின்றார். சிவசேகரம் கீழே போட்ட தொப்பி போல், நாவலன் போட்ட தொப்பி எல்லோருக்கும் பொருந்துகின்றது.

 

பாரிஸ் தலித் முன்னணி மகிந்தாவின் ஆலோசனையுடன், யாழ்ப்பாண தேர்தல் களத்தில் "சிறுபான்மைத் தமிழர் மகாசபை"யின் சுயேட்சை வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இங்கு நாவலன் கூற்றுப்படி அவர்களும் உள்ளனர். அவர்கள் நோக்கம் கூட பாராளுமன்றமல்ல "சாதி ஒழிப்பது"தான். குறைந்தபட்சம் சாதிய ஒழுங்கை "மறுசீரமைப்பதற்காக, அதன் அடிப்படை ஜனநாயக விழுமியங்களை மறு ஒழுங்கிற்கு உட்படுத்துவதற்காக.." தான் தேர்தலில் நிற்பதாகக் கூறுகின்றனர். இப்படி சாதியம் முதல் ஜனநாயகம் வரை, ஆளுக்கொரு விளக்கத்துடன் பாராளுமன்ற சாக்கடையில் புளுத்துப் புரளுகின்றது. இதற்கே நாவலனின் அரசியற்கொள்கை விளக்கம் உதவுகின்றது.

 

யாரும் பாராளுமன்றத்தை மட்டும் நம்பி, தங்கள் நலனை அடைவதில்லை. மக்கள் கூட அப்படித்தான். மக்கள் பாராளுமன்றத்துக்கு வெளியில் போராடுகின்றனர். மக்களுடன் நின்று போராடுவதற்கு பதில், புரட்சி பேசுபவர்கள் பாராளுமன்றத்தை திறந்து காட்டுகின்றனர்.

 

மக்களைக் கொள்ளை அடிப்பவன், பாராளுமன்றத்தை மட்டும் நம்பியிருப்பதில்லை. ஏன் சுரண்டுவன் கூடத்தான். பாராளுமன்ற பிரதிநிதிகள் கூட, இதை நம்பி மட்டும் செயல்படுதில்லை. வன்முறைகள், மாபியாத்தனம், சுத்துமாத்துகள், மோசடிகள் என்ற அனைத்தையும் அரசியலாக கொண்டே, மக்களை மோசடி செய்கின்றனர். அவர்கள் இலட்சியம் "பாராளுமன்ற ஜனநாயகத்தை இறுதித் தீர்வாக"க் கொள்ளாது கொள்ளையடித்தல்தான். மக்களை பிளந்து அதில் வாழ்வது தான்.

 

1948 முதல் இலங்கை கம்யூனிசக்கட்சி, திரொட்சியக்கட்சி புரட்சி செய்ய பாராளுமன்றத்தை பயன்படுத்தியவர்கள். சரி என்ன நடந்தது இறுதியில் அவர்கள் பாராளுமன்றவாதிகளாகி, படுபிற்போக்கான அனைத்தையும் கையாண்டவர்கள் தான் இனவாதிகளாகவும் இருந்தனர். இதை நாம் இந்தியா…. முதல் ஜனநாயகப் புரட்சி நடைபெறாத எல்லா நாடுகளிலும் காணமுடியும். அவர்கள் வர்க்கப் புரட்சியைப் பேசித்தான், மார்க்சிய மேற்கோள்களைக் காட்டித்தான், ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தையும் காட்டிக் கொடுத்தனர். இதைத்தான் நாவலனும், ஜானும் வழிகாட்டுகின்றனர். இதில் இருந்து வேறு எந்தவிதத்திலுமல்ல.

 

உலக வரலாற்றில் கிடைத்த அனுபவம் எம் முன் நீண்டு கிடக்கின்றது. அதையெல்லாம் நிராகரித்து, பாராளுமன்றத்துக்கு நல்லவர் வல்லவர் படித்தவர் நேர்மையாளரை தெரிவு செய்தால், மாற்றம் செய்யமுடியம் என்கின்றார் மே18ஜச் சேர்ந்த ரகுமான் ஜான். இயக்கங்கள் தங்கள் இறுதி இலட்சியத்தை எப்படி கைவிட்டது? எப்படிச் சோரம் போனார்கள்?  எப்படி காட்டிக்கொடுக்க முடிந்தது? மக்களை ஓடுக்கியும் அழித்து எப்படி அழிய முடிந்தது? இதுவோ  எம் வரலாறாகிக் கிடக்கின்றது. சரி இது ஏன் நிகழ்ந்தது இது தன்னியல்புவாதத்தின் விளைவல்ல. மாறாக மக்களை அரசியல் ரீதியாக, அவர்களின் சொந்த முரண்பாடுகளை தீர்க்கும்வண்ணம் அணிதிரட்டாததன் விளைவுதான், இதற்கான  அடிப்படைக் காரணம்.

 

இந்த வகையில் அரசியலும், மக்களை அதன்பால் அணிதிரட்டாததன் விளைவுதான், மொத்த சீரழிவாகும். இப்படி அனுபவங்கள் செறிந்து கிடக்க, இறுதி இலட்சியத்தை அடைய பாராளுமன்ற சாக்கடையில் புரளும் பன்றிகளுக்கு வாக்கு போடக் கோருகின்றனர். சரி இவர்கள் யார்? இவர்களின் கடந்த வரவாறு என்ன? கடந்த வரலாற்றில் பாசிசத்தை எதிர்த்து போராடாது, தங்கள் இறுதி இலட்சியத்துடன் ஓடி ஓளித்தவர்கள். இன்று திடீரென வந்து இறுதி இலட்சியத்தை அடைய, பாராளுமன்றத்தை இடைக்கால வழியாக முன்வைக்கின்றனர். நல்லவர் வல்லவர் படித்தவர் நேர்மையாளரை, மறுசீரமைப்பை செய்யக் கூடியவரை தேர்ந்தெடுக்கக் கோருகின்றனர். வேடிக்கைதான் போங்கள்!

 

தொடரும்

 

பி.இரயாகரன்
28.02.2010