Language Selection

தாயகன் ரவி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா வெற்றி பெற்றால் தமிழ் மக்களை உண்மையாகவே கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என எழுதியவர்கள் இருந்தனர்@ தற்கொலைத் தாக்குதலிலிருந்து தற்செயலாகத் தப்பிப்பிழைத்த சரத் மரண விளிம்பைத் தொட்டு மீண்டவர், இதன் வன்மத்தைத் தமிழர்மீது காட்டத்தயங்காத குணமுடையவர் என்று கூறப்பட்டது.

மனிதன் ஒன்றை நினைக்க கடவுள் வேறென்றை நினைக்குமாம். இன்று தமிழ் மக்களை மட்டுமன்றி சரத்தையும், ஏன் – வெற்றிபெற்ற மகிந்த உட்பட இலங்கைமக்கள் அனைவரையுமே உண்மையிலும் கடவுள் மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற கட்டத்தில் இலங்கை நிலவரம் உள்ளாக்கப்பட்டுள்ளது.


“தமிழ் மக்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்பது எழுபதாம் ஆண்டுத் தேர்தல் முடிவை அறிந்தவுடன் தந்தை செல்வா அருளிச்சொன்னது. எந்த முகூர்த்தத்தில் சொன்னாரோ, நாற்பது ஆண்டுகளின் போக்கில் இப்படி முழுநாட்டையும் கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாத நிலை ஆட்டிப்படைக்கிறது.


பிரித்தானிய அரசின் பிரித்தாளும் சதியுடன் கைமாற்றப்பட்ட ஆட்சியதிகாரத்தைக் கையேற்ற இலங்கையின் அதிகார வர்க்கப் பிரதிநிதிகள் இலங்கையை இந்த நிலைக்கு வளர்த்துள்ளார்கள். முதல் ஆட்சியாளர்களாக தரகு முதலாளித்துவ ஐக்கிய தேசியக் கட்சியும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் நடுக்கடலில் மூழ்கும் நிலையில் நாட்டை இட்டுச்சென்றனர். அவ்விரு கட்சிகளையும் பிளந்து வெளிப்பட்ட தேசிய முதலாளித்துவக் கட்சிகளான சிறீலங்கா (சிங்கள) சுதந்திரக் கட்சி, தமிழரசுக்கட்சி என்பன 1956 இல் வெற்றியைப்பெற்றன@ 1960 இல் ஐ.தே.க., காங்கிரஸ் மீண்டும் தோற்கடிக்கப்பட்டன (இவை தரகு முதலாளிவர்க்கக் குணாம்சத்திலிருந்து பெரு முதலாளிவர்க்க மாற்றப் போக்கையும் பெற்றன).


சுதந்திரக் கட்சியோடான பேரப்பேச்சை மேற்கொள்ள வாய்ப்பாக 60 இன் முதல் தேர்தலின் ஆட்சிபீடமேறிய ஐ.தே.க. அரசை வீழ்த்தி ஒரிரு மாதங்களில் புதிய வெற்றியை சு.க. பெற ஏற்ற நடத்தையை தமிழரசுக் கட்சி வெளிப்படுத்தியிருந்தது. அறுபதுகளின் முற்பாதியில் சிறீமாவோ அரசு தமிழ்த் தேசிய முதலாளித்துவ சக்தியைச் சரியாக கையாளத நிலையில் 1965 இன் பின் அது ஐ.தே.க. அரசில் அங்கம் பெற ஏற்ற சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.


இப்படிச் சொல்வது ஒரு பகுதியே உண்மை. தமிழரசுக்கட்சிக்குள் தொடர்ந்து தமிழ்தேசிய முதலாளித்துவ சத்திகள் இருந்த போதிலும், அறுபதுகளின் பிற்கூறில் தமிழ்க் காங்கிரஸ் தோற்றுப்போக பெருமுதலாளித்துவ சக்திகளின் கூடாரமாயும் தமிழரசுக் கட்சி மாறியதன் பேறே அது ஐ.தே.கவுடன் கூட்டுச் சேர்ந்தமையாகும்.


எழுபதின் தேர்தலில் ஐந்தில் நான்கு அறுதிப்பெரும்பான்மையோடு சிறீமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு ஆட்சிப்பீடமேறியபோது, இருகட்சிகளோடும் பேரப்பேச்சை மேற்கொள்ளும் அரசியலைத் தமிழ்த் தலைமைக்கு மேற்கொள்ள முடியாநிலை ஏற்பட்டிருந்தது. படவும், தமிழ்மக்களது நியாயமான கோரிக்கைகளுக்கு ஏற்ற போராட்டவடிவங்களை முன்னெடுக்க முடியாத தமிழரசுக்கட்சியும் தமிழ்க்காங்கிரசும் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியானது, இப்போது ஆயுத மோகத்தில் மூழ்கிய சிறு முதலாளித்துவ அவசரக்காரர்களும் இந்தக் கூட்டணிக்குள் முனைப்புற முடிந்தது.


இவ்வகையில் பெருமுதலாளித்துவத் தலைமையின்வாலாக ஏனைய, பிரிவினர் இழுபடும் தமிழ்த்தேசியம் முதற்கோணலும் முற்றும் கோணலுமாய் வளர்ந்தபோது விடுதலை எப்படிச் சாத்தியமாகும்? சிங்களத் தலைமைகள் பெருமுதலாளித்துவ ஐ.தே.க., தேசிய முதலாளித்துவ சு.க. தலைமையிலான கூட்டுகளிடம் நாட்டைக் கைமாற்றும் போது நாடு இனக்குரோதங்களே மேலோங்குவதாயன்றி வேறென்ன நேரும்? புதிதாய் அரங்கேறிய முஸ்லிம், மலையகத் தேசியங்களுக்கும் அதிகார வர்க்கங்களே தலைமையேற்கும் போது நாடு நாசமாகப் போய்விடாமல் தடுத்துவிடமுடியுமா?


இந்த மக்கள் பிரிவினர் மத்தியில் தொழிலாளர் – விவசாயிகள் பிரதிநிதிகளாய் உழைக்கும் மக்களின் அரசியல் சக்தியான மார்க்சியர்கள் இனி என்ன செய்ய வேண்டும் – எங்கிருந்து தொடங்கவேண்டும், மக்கள் விடுதலையை வென்றெடுத்து வரலாறு படைப்பது எப்படி?


முதலில் இன்றைய நெருக்கடியின் தாற்பரியத்தைப் புரிந்து கொள்வது அவசியம். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ்த் தேசிய சக்திகள் சரத்துக்கு வாக்களிக்க விருப்புக் கொண்டனர். அவர் வென்றால் வன்மம் தீர்ப்பார் என்ற பேச்செல்லாம் தமிழ் மக்களிடம் எடுபட்டதில்லை@ வந்தபிறகு அதைப் பார்த்தால் போகிறது!


சரத் என்னவும் செய்யட்டும், மகிந்தவுக்குப் பாடம்படிப்பிக்க வேண்டும்@ மூக்கென்ன, மூஞ்சையே போகுமென்றாலும் எதிரிக்கு சகுனப் பிழை வேண்டும். மக்கள் எவ்வழி, தலைமை அவ்வழி என்ற மகத்;தான அரசியல் அறம் பூண்ட தமிழ்க்கூட்டமைப்பு எனும் வாராதது போலவந்து வாய்த்துள்ள ‘தமிழர் தலைமை’ சரத்துக்கு மக்களை வாக்களிக்கும்படி ஆணையிட்டது. இந்தக் கிளிசை கேட்டுக்;கு ‘ஒப்பந்தம்’ வேறு.


அடிச்சுது மகிந்தவுக்கு லொத்தர்! ஐயோ, ஒப்பந்தம் பண்ணிப்போட்டாங்கள், புலி வரப்போகுது, தமிழரும்  - முஸ்லிங்களும் – தோட்டக்காட்டாருமோ நாட்டுத்தலைமையை தீர்மானிக்கிறது எண்டு அரசாங்க வளங்கள் எல்லாம் குய்யொ முறையோ என ஓலமிட்டன.


இது தபால் வாக்களிக்க முன்னரே ஏற்பட்ட மாற்றம், அதற்கும் முன்னரே அதிநாகரிகச் சிங்களக் கனவானுகள் சீமாட்டிகளான ‘அறிவு(?)சீவிகள்’ பெருமுழக்கங்கள் செய்திருந் தார்கள்@ ஜனநாயகம் தொலைகிறது, குடும்ப ஆட்சி வலுக்கிறது, பேச்சுச்சுதந்திரம் பறிபோகிறது – ஆட்சி மாற்றமே ஒரே வழி!


புள்ளடி போட எடுத்தபோது ஜனநாயகத்தைவிடவும் சிங்களப் பேரினவாத மேலாண்மை பிரதானமென்று  ‘அறிவு (?) சீவி’ களுக்குப்பட்டுவிட்டது. தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் கம்யூட்டர் மோசடி என்றன எதிர்க்கட்சிகள். அந்தளவுக்கு ஜனநாயக மீட்சி, ஆட்சிமாற்றம் என்பனபற்றி இந்தச் சீவிகள் வாய்ச்சவடால்கள் விட்டுக்கொண்டு இருந்தார்கள். எங்கடை தமிழ் ஜேர்ணலிஸ்ட்டுகளும் ஆசிரிய தலையங்கம் எழுதுகினம், “தேர்தல் மோசடிகளை வெளிப்படுத்த ஏற்றவகையில் மக்களை அணி திரட்டுவதற்கு எதிர்க்கட்சிகள் தவறிவிட்டன!”


எப்படி மக்கள் அணி திரள்வார்கள்? அவர்களுக்கு மனச்சாட்சியுமா இல்லாமல் போகும்? அறிவுகெட்டு சீவிக்கும் அந்தக் கனவானுகள் சீமாட்டிகள் பேரினவாதத்தைக் காவாந்து பண்ணப் போட்ட புள்ளடி மறக்குமா என்ன? ஊர்ப்பொதுக் கஞ்சியில் தன்பங்குக்கு ஊத்தின செம்புத்தண்ணிபற்றி அறிந்தவர் மேலும் பால் பொங்காததுக்குக் குமைய முடியுமா? (மீறிவிழுந்த வாக்குகள் ஐ.தே.கவுக்குரிய வாக்குவங்கிச் சொத்து).


தேர்தல் முடிவைத் தீர்மானிக்க இருந்த இந்த ஊசலாடிகளான சீவிகள் தவிர்த்து, ஆளுந்தரப்புக்கு உறிதியாக முன்னதாக இருந்த வாக்குவங்கி சரத்துக்கான ‘ஜனநாயகப் பாதுகாப்பு அலை’ மேலெழுந்த போதே போட்டியைக் கடுமையானது எனக் கூறத்தக்க வகையில் வறுமையானதாக ஆக்கிவைத்து இருந்தது. அத்தகைய பெரும்பான்மையினரான சிங்கள மக்களை ஊசலாடிச்சீவிகள் போன்ற பேரினவாத அபிலாசை கொண்டவர்கள் எனத்தவறாகக் கருதிவிடக்கூடாது (வழக்கமான தமிழ்த் தேசியர்கள் அந்த உழைக்கும் சிங்கள மக்களை இனவாதிகளாக எப்போதும் கருதிவந்துள்ளார்கள்).


ஐ.தே.க. அரசு விவசாயிகளதும் உழைக்கும் மக்களதும் நிவாரணங்களை அழித்து வாழ்வை நாசமாக்குவது தொடர்பாக அதற்கு எதிராகத் தவிர்க்க முடியாமல் தேசிய முதலாளித்துவக் கட்சியாக உள்ள ஆளும் தரப்புக்கு வாக்களிக்க வேண்டிய நிர்ப்பந்தத் திலுள்ளவர்கள் அந்த மக்கள், அதிகாரபீடத்தில் இன்று தேசிய முதலாளித்துவம் வலுவிழந்து பேரின வெறியைப் பயன்படுத்தும் அவலத்துக்கு உள்ளாவதில் மோசடி செய்வது அந்த மக்களது வாழ்வாதாரங்களையும் வற்றடிக்கவே வழிகோலும். அத்தகைய அவலத்துக்கு எதிராக அந்தமக்கள் கிளர்ந்தெழுவதற்கு நாம் எவ்வகையில் உதவ முடியும்?


அந்த மக்கள், கையாலாகாத எங்கடை ஆண்ட பரம்பரைத் தமிழ்த் தலைமையிலிருந்து நாங்கள் விடுபட்டு எமக்கான விடுதலையை வென்றெடுக்க எவ்வகையில் உதவமுடியும்?


வரப்போகும் தேர்தலிலும் வெறும் வாய்ச்சவடால் பச்சோந்திகளான தமிழ்க் கூட்டமைப்பே பெரும்பான்மை பெறப்போகிறது. வேறு வழியில்லை. சிறீலங்கா (சிங்கள) சுதந்திரக் கட்சி யாழ்ப்பாணத்திலும் சண்டித்தனத்தோடு வாக்குக்கேட்கக் களமிறங்க முயலும்போது, மூஞ்சைபோனாலும் போகட்டும் என்று தமது கோபத்தைக்காட்ட கூட்டமைப்புக்கு வாக்களிக்கப் போகிறார்கள் தமிழ்த் தேசியர்கள்!


வாக்குப்பெற்று புலம் பெயர்ந்துள்ள உறவுகளோடு குலாவப் பறக்கப்போகிற இந்தப் பச்சோந்திகள் தமிழர்களுக்காக ஒரு துரும்பையும் நகர்த்துவதில்லையே? எதுவும் செய்யாதவர்களுக்குத் தமிழ் மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்?


ஏதாவது செய்வதற்காக தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை. எதையாவது செய்ய வேண்டும் என்றால் அரசோடு சேர்ந்து இயங்கும் ‘துரோகிகளிடம்’ அதைச் செய்து தொலைக்கச் சொல்வார்கள். வெளியுலகுக்கு அரசை எதிர்ப்பதாக வேசம்போடும் தமிழ்த்தேசியத்தின் எதிர்ப்புக் குரலுக்கான செயலற்ற வாக்குத்தான் தமிழ் மக்களுடையது (தமிழ்க் கூத்தாடிகள் தமக்கான இரத்த பந்தங்களுக்கு அவசியமான எல்லாம் அரசோடு பேசிப்பெறுவதை தமிழ் அறிவு ‘சீவி’ கள் அறியாமல் இல்லை).


தமிழ் மக்களின் செயல்பூர்வமான எதிர்ப்புக்குரலைக் கிளர்ந்தெழச் செய்யவும் வடிவப்படுத்தவும் ஸ்தாபன மயப்படுத்தவும் இன்னமும் முயற்சிக்காத தவறு எமக்குரியது. மக்களைப் பிழை சொல்ல நாங்கள் யார்?

 http://www.psminaiyam.com/?p=1599