மத்திய இந்தியாவில் ஆபரேஷன் கிரீன் ஹண்ட் என்ற பெயரில் மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்! – என்பதை தமிழக மக்களிடையே ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புக்களும் கடந்த இரு மாதங்களாக பிரச்சாரம் செய்து வந்தன. முதற்கட்டமாக பெரும்பாலான மாவட்டத் தலைநகரங்களில் கருத்தரங்கங்கள் நடைபெற்றன.

அடுத்து பேருந்துகள், தொடர் வண்டிகள், தொழிற்சாலைகள், குடியிருப்புகளில் மக்களிடம் நேரடியாக பிரச்சாரம் செய்யப்பட்டன. மக்களுக்கு இந்தப்பிரச்சினை தெரியவில்லை என்றாலும் தெரிந்த பின்னர் உணர்வுப்பூர்வமாக ஆதரித்தனர். நிதி தந்தனர்.

இந்த பிரச்சார இயக்கத்தின் முத்தாய்ப்பாக கடந்த சனிக்கிழமையன்று சென்னை எம்.ஜி.ஆர் நகரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக சென்னை நகரம் முழுவதும் மக்களிடையே பிரச்சாரம் வீச்சாக நடைபெற்றது. பிரபல எழுத்தாளரும் சமூக சேவகியுமான அருந்ததி ராய் எழுதிய ‘இந்தியாவின் இதயத்தின் மீதான போர்’ என்ற கட்டுரையின் தமிழாக்கம் சிறு வெளியீடாய் பல்லாயிரக்கணக்கில் அச்சிட்டு விநியோகம் செய்யப்பட்டன. கீரீன் ஹண்ட் தொடர்பான ஆங்கிலக் கட்டுரைகளும் ஒரு நூலாக வெளியிடப்பட்டு விநியோகிக்கப்பட்டன.

காட்டு வேட்டையின் அரசியல் விவரங்களை எளிமையாகவும் போர்க்குணத்துடனும் அறிமுகம் செய்யும் துண்டுப் பிரசுரம் இலட்சக் கணக்கில் அச்சிடப்பட்டு மக்களிடையே விநியோகம் செய்யப்பட்டன. மேலும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் இந்த துண்டுப் பிரசுரம் மொழிமாற்றம் செய்யப்பட்டு மற்ற மொழி மக்களிடத்தில் விநியோகிக்கப்பட்டன. இவையனைத்தும் வினவிலும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

எம்.ஜி.ஆர் நகர் பொதுக்கூட்டத்திற்கு தமிழகம் முழுவதிலுமிருந்தும் தோழர்கள், பெண்கள் குழந்தைகள் முதியவர்களை உள்ளிட்டு வந்திருந்தனர். சென்னை நகரம் முழுவதிலுமிருந்தும் அரசியல் ஆர்வலர்களும் பகுதிவாழ் மக்களும் கூட பெருந்திரளாக வந்திருந்தனர். எம்.ஜி.ஆர் நகரின் சந்தைத் தெருவின் கோடியில் போடப்பட்டிருந்த மேடையிலிருந்து முக்கிய சாலையின் சந்திப்பு வரைக்கும் மக்கள் வெள்ளம்தான். தெரு முனையிலிருந்த மதுரை தேவர் ஹோட்டலின் உரிமையாளர் இதைப் பார்த்துவிட்டு இது மதுரை சித்திரைத் திருவிழாதான் என்று ஆச்சரியப்பட்டார். தியாகிகளுக்கு வீரவணக்கம் தெரிவித்து கூட்டம் துவங்கியது. தமிழக பு.ஜ.தொ.மு தலைவர் தோழர் முகுந்தன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.

முதலில் பேசிய பெங்களூருவின் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் பாலன் கீரின் ஹண்டிற்கு பின்னே உள்ள பல இலட்சம் கோடி பொருளாதாரக் கொள்ளையினை விரிவான ஆதாரங்கள்,புள்ளிவிவரங்களுடன் விளக்கிப் பேசினார். பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்காக எப்படி பழங்குடி மக்களின் வாழ்விடங்கள் பறிபோகின்றன என்பதை உணர்ச்சியுடன் விவரித்தார்.

அடுத்து ஆந்திர புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தின் தோழர் வரவரராவ் ஆங்கிலத்தில் உரையாற்ற அதை தோழர் மருதையன் மொழிபெயர்த்தார். தோழர் வரவரராவ் தனது உரையில் நக்சல்பரி எழுச்சி, குறிப்பாக அந்த எழுச்சி பழங்குடி மக்களின் பகுதியில் பெற்ற வெற்றிகள், பின்னர் மா.லெ அமைப்பினர் அந்த மக்களிடம் ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக ஆற்றிவரும் களப்பணியினை வரலாறாக விவரித்தார். மன்மோகன் சிங், ப.சிதம்பரம் முதலான பன்னாட்டு நிறுவன அடியாட்களின் உதவியோடு மத்திய இந்தியாவில் பழங்குடி மக்களுக்கெதிரான போர் நடைபெறுவதையும் விளக்கினார். பழங்குடி மக்கள் மாவோயிஸ்ட்டுகளின் தலைமையில் இந்தப் போரை எதிர்த்து போராடி வருவதையும் புரியவைத்தார்.

இறுதியில் பேசிய ம.க.இ.க பொதுச்செயலர் தோழர் மருதையன் இந்தப்போர் என்பது மறுகாலனியாதிக்கத்தின் அங்கமாக நடைபெறுவதையும் இதை அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களும் சேர்ந்து எதிர்க்க வேண்டுமெனவும் அறைகூவி முடித்தார். அதன் பின்னர் எழுச்சியூட்டும் கலைநிகழ்ச்சி ம.க.இ.க மையக் கலைக்குழுத் தோழர்களால் நடத்தப்பட்டது. காட்டுவேட்டையை கண்முன்னிறுத்தும் இசைச்சித்திரம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மாலை 6 மணிக்கு துவங்கிய பொதுக்கூட்டம் பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் இரவு 10.30மணிக்கு முடிவுற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தின் வீடியோப் பதிவு வினவில் வெளியிடப்படும்.

பொதுக்கூட்டம் முடிவுற்றாலும் இந்தப்பிரச்சார இயக்கம் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. காட்டு வேட்டை நிறுத்தப்படும் வரை நமது வேலைகளும் ஓயப்போவதில்லை.

http://www.vinavu.com/2010/02/22/green-hunt-meeting/