10042023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

காட்டு வேட்டை எதிர்ப்பியக்கம் - மக்களிடைய பிரச்சாரமும், இன்று பொதுக்கூட்டமும்!

இந்திய அரசு தன்னுடைய சொந்த நாட்டு மக்கள் மீது ஒரு உள்நாட்டு போரைத் தொடுத்திருக்கிறது. 

இந்திய தரகு முதலாளிகளுக்கும், தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கும் விசுவாசுவாய் நடந்து வரும் இந்திய அரசு, தன் சொந்த பழங்குடி மக்கள் மீது ஒரு பச்சை வேட்டையை துவங்கி பல மாதங்களாகிவிட்டன.

சுதந்திரம் பெற்றதாக சொல்லப்படும் 60 ஆண்டுகளில் அந்த பழங்குடி மக்களுக்கு அடிப்படை உரிமைகள்... கல்வி, மருத்துவம் என எதுவும் சென்றடையவில்லை. இன்று அவர்கள் வசிக்கும் நிலத்தில் கனிம வளங்கள் கொட்டி கிடக்கிறது என்பதற்காக பழங்குடி மக்களை அங்கிருந்து துரத்துகிறார்கள்.

ஓட்டு கட்சிகள் கட்சி வேறுபாடில்லாமல் ஒத்துழைக்க, ஊடகங்களும் அரசின் ஊது குழலாய் மாற... சத்தமில்லாமல் பழங்குடி மக்களை அகற்றி கொண்டே இருக்கிறார்கள். முகாம்களில் அடைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இன்றைக்கு தன்னிடமுள்ள வில்லையும், அம்பையும் கொண்டு அரசுக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஒரே ஒரே ஆதரவாய் களத்தில் நிற்பவர்கள் மாவோயிஸ்டுகளும், இதர நக்சல்பாரி கட்சிகளும் தான்.

போராடும் மக்களை மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்தி... ஈழத்தில் நடந்தது போல... இனப்படுகொலை நடத்தி கொண்டிருக்கிறார்கள். இந்த நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் பரந்துபட்ட அளவில் போராட்டங்கள் எழுந்திருக்க வேண்டும். எழவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக போராட்டங்கள் நடக்கின்றன. இந்திய அரசுக்கு இந்த அமைதியான நிலை தான் வேண்டும்.

இந்த 'அமைதி நிலையை' தமிழக்கத்தில் உடைக்க மக்கள் கலை இலக்கியமும், அதன் தோழமை அமைப்புகளும் முன்கை எடுத்து தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கத்தை கடந்த மாதத்திலிருந்து துவங்கின.

காட்டு வேட்டையை அம்பலப்படுத்திய புதிய ஜனநாயகம் ஜனவரி, பிப்ரவரி இதழ்கள், துண்டறிக்கைகள், எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய 'இந்தியாவின் இதயத்தின் மீதான போர்" எல்லாவற்றையும் மக்களிடத்தில் கொண்டு போன பொழுது... துவக்கத்தில் என் மனதில் ஒரு தயக்கம் இருந்தது. மத்திய இந்தியாவில் பழங்குடி மக்கள் மீதான தாக்குதலை தமிழக மக்கள் எப்படி எடுத்து கொள்வார்கள்? எப்படிப்பட்ட ஆதரவு இருக்கும்? என்ற கேள்வி இருந்தது.

மெட்ரோ ரயில்களில், பேருந்துகளில், வீடு வீடாக பிரச்சாரம் துவங்கியதும் மக்களிடம் கிடைத்த ஆதரவு இருக்கிறதே! வாய்ப்பே இல்லை. பெரியவர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் என சகலரிடத்திலும் அப்படி ஒரு ஆதரவு. புத்தகங்கள் விறு விறு விற்பனையாயின. தன்னால் இயன்ற அளவு நன்கொடை தந்தார்கள். இது நாள் வரைக்கும் மற்ற இயக்கங்களுக்கு கிடைத்த ஆதரவை விட... அருமையான ஆதரவு கிடைத்தது. 

"மலையையே வித்திட்டாங்களா! அடப்பாவிகளா!" என வாய்விட்டு வியந்தார்கள்.

"உங்கள் பணி யாரும் செய்யாத சிறப்பான பணி. தொடர்ந்து செய்யுங்கள்" என பாராட்டினார்கள்.

மக்களியிடையே நடந்த பிரச்சாரங்களில் அரசுக்கு ஆதரவாக பேசிய யாராவது ஒருவரையும்...பொதுமக்களே பேசி... வாய் மூட வைத்தார்கள்.

இப்படி பொதுப்பிரச்சனைகளுக்கு போராடுகிற அமைப்புகளில் இணைய பலரும் தானாய் முன்வந்து தன் செல்பேசி எண்ணை தந்தார்கள். முகவரி தந்தார்கள். இன்று நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு நிச்சயம் வருகை தருவதாக சொன்னார்கள்.

மக்கள் கலை இலக்கிய கழகமும் அதன் தோழமை அமைப்புகளும் போராட்டத்தை துவக்கி வைத்திருக்கின்றன. இனி மக்கள் போராட்டங்கள் அலை அலையாய் எழும் பொழுது தான் இந்த காட்டு வேட்டையை நிறுத்த முடியும்.

அனைவரும் இன்று நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்திற்கு வருகை தாருங்கள். நன்றி.

மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!

சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்

பிப்.20 சனிக்கிழமை மாலை 6 மணி
எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் (அசோக் பில்லர் அருகில்), சென்னை.

தலைமை: அ. முகுந்தன்
தலைவர், பு.ஜ.தொ.மு., தமிழ்நாடு

உரையாற்றுவோர்:

தோழர் எஸ். பாலன்
உயர்நீதிமன்ற வழக்குரைஞர், பெங்களூரு.

தோழர் மருதையன்
பொதுச்செயலர், ம.க.இ.க., தமிழ்நாடு

தோழர் வரவரராவ்
புரட்சிகர எழுத்தாளர் சங்கம், ஆந்திரப் பிரதேசம்.

ம.க.இ.க மையக் கலைக்குழுவின்
புரட்சிகர கலைநிகழ்ச்சி


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்