வோட்டு கேட்டு வர்க்கப் புரட்சி செய்கின்றது, புதிய ஜனநாயகக் கட்சி

இவர்கள் ஒரு மாதத்துக்கு முன்னம் தேர்தல் பகிஸ்கரிப்பை கோரியவர்கள். எப்படி வாக்குச் சீட்டை செல்லுபடியற்றதாக்குவது என்று உபதேசித்தவர்கள். இன்று வாக்குக் கேட்டு வருகின்றனர். வாக்கை தமக்கு போடுமாறு உபதேசிக்கின்றனர். இப்படி ஒரு மாதத்தில் மாறுபட்ட கொள்கைகள் கோட்பாடுகள்.

மா.லெ.மாவோ சிந்தனையை உருத்திராட்சைக் கொட்டையாக்கி, புரட்சிக்கு வழிகாட்டும்  கூட்டத்தின் பித்தலாட்டம் தான் இது. புரட்சியை காயடித்து, அரசியல் செய்வது தான், இந்த எதிர்ப்புரட்சி அரசியலாகும்;. ம.க.இ.க.வுக்கு புரட்சியை, பம்மிக் காட்டியவர்கள். அவர்கள் ஆதரவாளர்கள் வரலாற்று ரீதியான எதார்த்தத்தை நிராகரித்தபடி அவர்களை அணுகி, எம்மை விமர்சித்தனர். புதிய ஜனநாயகக் கட்சி பற்றிய எம் நிலைப்பாடு மிகமிகச் சரியானது என்பது, இன்று துல்லியமாகியுள்ளது.

 

புதிய ஜனநாயக கட்சி ஜனாதிபதி தேர்தலை நிராகரிப்பதை மறுத்தது. மாறாக தேர்தலை பகிஸ்கரிக்கக் கோரினர். தேர்தலை பகிஸ்கரி என்ற அரசியல் பித்தலாட்டத்தை, அதன் உள்ளடக்கத்தையும் நாம் அம்பலப்படுத்தினோம். வாக்குச்சீட்டை எப்படி பகிஸ்கரிப்பில் பயன்படுத்துவது என்று கூறி, புரட்சியை வாக்குச்சீட்டில் ஒளித்து வைத்தனர். இன்று பகிஸ்கரிப்பை கைவிட்டு, தேர்தலில் நிற்பதுடன் வாக்குச்சீட்டை தமக்கு எப்படி போட்டு புரட்சியை நடத்துவது என்று உளறுகின்றனர்.

 

இப்படி முன்பும் தேர்தலில் நின்றவர்கள் தான். ஒரு நாளும் வர்க்கப் புரட்சிக்காக நின்றது கிடையாது. இதுதான் அவர்கள் முன்னிறுத்திய "மா.லெ.மாவோ சிந்தனையாக" இருந்து வந்துள்ளது. புரட்சிக்காக அவர்கள் மக்களை, தேர்தலுக்கு வெளியில் புரட்சிகரமான வழியில் அணிதிரட்டுவது கிடையாது. இந்த தேர்தல் குதிரைக்குத் தான், சிவசேகரம் போன்றோர் லாடம் அடித்து ஓட்டும் "மார்க்சியத்தை" உளறுகின்றவர்கள்.

 

இவர்கள் மா.லெ.மாவோ சிந்தனையென தங்கள் அறிவை பறைசாற்ற பயன்படுத்துபவர்கள், புரட்சிக்கு அதைப்  பயன்படுத்துவது கிடையாது. புதிய ஜனநாயக கட்சியோ, உருத்திராட்சைக் கொட்டையாக்கி மா.லெ.மாவோ சிந்தனையை உருட்டுகின்றனர். இன்று தேர்தல் சாக்கடையில் மா.லெ.மாவோ சிந்தனையை புதைக்கின்றனர். 

 

சிவசேகரம் "மா.லெ.மாவோ சிந்தனை"யைக் கொண்டு கடந்கால சூழலை ஆய்வு செய்யும் அதே நேரம், நிகழ்காலம் மீது "மா.லெ.மாவோ சிந்தனை"க்கு முரணாக புலம்புபவர். பல திரிபுகளை புகுத்துபவர். (அண்மையில் கீழைக்காற்று ஊடாக வெளிவந்த "தேசிய இனப்பிரச்சனையும் தீர்வுக்கான தேடல்களும்" என்ற நூல் புரட்சிகர வரலாற்றை மூடிமறைத்து, தங்கள் எதிர்புரட்சிக்கு ஏற்ப அதைத் திரிக்கின்றது. நூல் பற்றிய விமர்சனத்தில் அதைப் பாhப்போம்;.) இதே போல் தான் சிவத்தம்பி கடந்த வரலாற்றை மார்க்சிய மூலம்கொண்டு ஆய்வு செய்பவர், நிகழ்காலத்தை வலதுசாரிய பிற்போக்கை அடிப்படையாகக் கொண்டு நியாயப்படுத்துவர்.

 

இப்படிப்பட்ட நிலையில் தான் வலதுசாரி பாசிசப் புலி சிவத்தம்பி மூலம் அருள்பெற்றது என்றால், புரட்சியின் பெயரில் புதிய ஜனநாயகக் கட்சியின் அரசியல் பித்தலாட்டத்தை சிவசேகரம் செங்கம்பளம் விரித்து வழிகாட்டுகின்றார். இப்படி "புத்திஜீவிகள்", "பேராசிரியர்கள்", "மார்க்சிய விமர்சகர்கள்" இருப்பதால் தான், சமூகம் புற்றுநோய்க்குள்ளாகி படுகுழியில் வீழ்ந்து கிடக்கின்றது.

 

பு.ஜ.கட்சி, மக்களை ஒரு புரட்சிகரமாக தேர்தல் நிராகரிப்பு என்று அணிதிரட்ட மறுத்து, எதிர்ப்புரட்சி அரசியலை முன்தள்ளுகின்றது. அந்த வகையில் தேர்தலில் நிற்றலுக்கு ஏற்ப, அதற்கு நியாயம் கற்பிக்கின்றது. அதை நாம் பார்ப்போம். "எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வெறுமனே பாராளுமன்றப் பதவிகளைப் பெறும் குறுகிய பதவி ஆசையில் தனித்தனியே பிரிந்து நின்று போட்டியிடுவதால் ஜனநாயக இடதுசாரி முற்போக்கு சக்திகள் எவ்வித பலாபலன்களையும் பெற்றுக் கொள்ள முடியாது. அதேவேளை மக்களுக்கு மாற்று அரசியல் தெரிவும் இல்லாது போய்விடும். அத்துடன் இது வரையான காலத்தில் வெற்றி பெற முடியாத கொள்கைகளை முன் வைத்து உழைக்கும் மக்களையும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களையும் ஏமாற்றி பாராளுமன்ற ஆதிக்க அரசியல் சுகம் அனுபவித்து வந்த பழைமைவாத பிற்போக்கு மேட்டுக்குடி உயர் வர்க்க சிந்தனை கொண்ட அரசியல் சக்திகளை மக்கள் முன் அம்பலப்படுத்தி முறியடிக்கவும் முடியாது. எனவே மக்களுக்கான புதிய மாற்று அரசியல் கொள்கை வேலைத்திட்டத்துடன் ஐக்கியப்படக் கூடிய அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிடுவதே பயன்தரத்தக்க மக்களுக்குரிய அரசியல் மார்க்கமாக அமைய முடியும். இதனையே யுத்தத்திற்குப் பின்னான இன்றைய சூழலில் புதிய-ஜனநாயக கட்சி வற்புறுத்தி ஜனநாயக இடதுசாரி முற்போக்கு சக்திகளுக்கு அழைப்பு விடுக்கின்றது."

 

இப்படிக் கூறியபடி, புரட்சிகர அரசியலுக்கு முரணாக மக்கள் விரோத அரசியலுடன்  பு.ஜ.கட்சி தேர்தலில் குதித்துள்ளது. புரட்சி பற்றி ஒரு வேடிக்கைதான். மா.லெ.மாவோ சிந்தனையின் பெயரில், புரட்சிக்கு நடக்கும் அவலமும்;, துரோகமுமாகும்.

 

"யுத்தத்திற்குப் பின்னான இன்றைய சூழலில்" என்று தர்க்கம், இவர்கள் அளவில் கூட   அது மோசடித்தனமானது. யுத்தம் நடந்த போது, தேர்தலில் நின்று குலைத்தவர்கள் தான். ஒரு மாதத்துக்கு முன் தேர்தலை பகிஸ்கரித்தவர்கள்.

 

இப்படி காரண காரியங்களைச் சொல்லி, புரட்சிக்கு விரோதமான வழியில் தேர்தலில் நிற்பது இவர்களுக்கு கைவந்த கலை. கடந்த 35 வருடத்துக்கு மேலாக புரட்சியின் பெயரில், புரட்சியையே ஏமாற்றி வந்தவர்கள் தானே இவர்கள்.

 

தாங்கள் தேர்தலில் நிற்காவிட்டால் "மக்களுக்கு மாற்று அரசியல் தெரிவும் இல்லாது போய்விடும்" என்கின்றனர். மாற்றுத் தேர்வு தேர்தலை நிராகரிக்கும் புரட்சிகர அரசியல் இல்லை என்று கூறுகின்ற இவர்களா, மா.லெ.மாவோ சிந்தனையிலான வர்க்கப் போராட்டத்தை நடத்தப் போகிறார்கள்!? புரட்சி பற்றி பேசும், சுத்த ஏமாற்றுப் பேர்வழிகள்.

 

புரட்சிக்கு பதில் தேர்தலை முன்வைக்கும் போது அதை நியாயப்படுத்த கூறுவதைப் பாருங்கள். "..குறுகிய பதவி ஆசையில் தனித்தனியே பிரிந்து நின்று போட்டியிடுவதால் ஜனநாயக இடதுசாரி முற்போக்கு சக்திகள் எவ்வித பலாபலன்களையும் பெற்றுக் கொள்ள முடியாது.."  என்று கூறி, கூடி தேர்தலில் வெல்வதன் மூலம், "புரட்சியையும்" "பலாபலன்களையும்" பெற முடியும் என்று உபதேசிக்கின்றனர். இப்படி பாராளுமன்ற ஆசனத்தை பெறுவது எப்படி என்று கூறி, "புரட்சி"க்கு மாமா வேலை பார்க்கின்றனர். இதைச் செய்யத் தவறினால் "மக்களுக்கு மாற்று அரசியல் தெரிவும் இல்லாது போய்விடும்" என்கின்றனர்.

 

இதன் மூலம் தேர்தலை நிராகரித்து, புரட்சி செய்யக் கற்றுக்கொள்வது மாற்றுத் தேர்வல்ல என்கின்றனர். மக்களின் தேர்வு என்பது மக்களை வாக்கு போடப்பண்ணி, தாங்கள் வெல்வது தான் என்கின்றனர். இதை செய்பவர்கள், புரட்சிக்கு விரோதமாக புரட்சி பேசும் போக்கிரிகள் தான்.

 

தங்கள் வாக்குச் சீட்டு மூலம் புதிய சுகங்களை அனுபவிக்க, வாக்கு கேட்டு சுகங்கள் கூறுவதைப் பாருங்கள். "..இதுவரையான காலத்தில் வெற்றி பெற முடியாத கொள்கைகளை முன் வைத்து உழைக்கும் மக்களையும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களையும் ஏமாற்றி பாராளுமன்ற ஆதிக்க அரசியல் சுகம் அனுபவித்து வந்த பழைமைவாத பிற்போக்கு மேட்டுக்குடி உயர் வர்க்க சிந்தனை கொண்ட அரசியல் சக்திகளை மக்கள் முன் அம்பலப்படுத்தி முறியடிக்கவும் முடியாது. எனவே மக்களுக்கான புதிய மாற்று அரசியல் கொள்கை வேலைத்திட்டத்துடன் ஐக்கியப்படக் கூடிய அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிடுவதே பயன் தரத்தக்க மக்களுக்குரிய அரசியல் மார்க்கமாக அமைய முடியும்." இப்படி கூறி வாக்கு கேட்கின்றனர்.

 

"பயன் தரத்தக்க" என்பது, மக்கள் தமக்கு வாக்கு போடுவதுதான் என்கின்றனர். தேர்தலில் மற்றவர்கள் "வெற்றி பெற முடியாத" கொள்கைகளை முன்வைத்து நிற்கின்றனராம். தாங்கள் வெற்றி பெறக் கூடிய கொள்கையைக் கொண்டு தேர்தலில் தாம் வாக்கு கேட்பதால், தமக்கு வாக்குப் போடக் கூறுகின்றனர். இப்படி அரசியல் பித்தலாட்டம். பாராளுமன்ற பன்றித் தொழுவத்தில், "பயன் தரத்தக்க" வெற்றி பெறக் கூடிய ஒன்றை, இடதுசாரியத்தை வெல்ல வைப்பதன் மூலம் மக்கள் அடைய முடியும் என்கின்றனர். 

 

63 வருடமாக பாராளுமன்றத்தில் சுயநல அரசியலே நிலவியதாம். அதை மாற்ற தமக்கு வாக்குப் போடக் கோருகின்றனர். பித்தலாட்ட இடதுசாரியம், எப்படி மாமா அரசியல் செய்கின்றது என்று பாருங்கள். "இன்றைய சூழலில் கடந்த அறுபத்தி மூன்று வருடகால முதலாளித்துவ பாராளுமன்ற ஆட்சி முறையின் கீழ் உழைக்கும் மக்களும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களும் எவற்றை அனுபவித்து வந்தார்கள் என்பது சிந்தித்துப்பார்க்கப்பட வேண்டியதாகும். வடக்கு கிழக்கிலும் மலையகத்திலும் பாராளுமன்றப் பதவிகளைப் பெறுவதிலும் அதன் மூலமான சுயநல சுக போகங்களை அனுபவிப்பதிலும் தமிழ் முஸ்லிம் மலையகத் தலைமைகள் முன்னின்ற அளவிற்கு மக்களின் அடிப்படை வாழ்வில் எவ்வித மாற்றங்களையும் பெற்றுத்தரவில்லை. அதற்குக் காரணம் ஆதிக்க அரசியலை முன்னெடுத்த பழைமைவாத பிற்போக்கு கொள்கைகளைக் கொண்ட கட்சிகளினதும் தலைமைகளினதும் செயற்பாடேயாகும்." என்று கூறி, இதை மாற்ற தமக்கு வாக்களிக்குமாறு கேட்கின்றனர். பாராளுமன்ற சாக்கடையில் உழன்ற இடதுசாரிகள் கடந்தகாலத்தில், இதில் இருந்து தப்பிக்கவில்லை. நீங்கள் மட்டும் எப்படி இந்த சாக்கடையில் இருந்து புனிதமானவர்களாக மாறிவிடுவீர்கள்.

 

நீங்கள் கூறுகின்றீர்கள் "சுயநல சுக போகங்களை அனுபவிப்பதிலும் தமிழ் முஸ்லிம் மலையகத் தலைமைகள் முன்னின்ற அளவிற்கு மக்களின் அடிப்படை வாழ்வில் எவ்வித மாற்றங்களையும் பெற்றுத்தரவில்லை." என்று. நாங்கள் வென்றால், சுக போகமற்ற வழியில், மாற்றங்களைப் பெற்றுத்தருவோம் என்பது கடைந்தெடுத்த பொறுக்கித்தனமான தேர்தல் வாக்குறுதி. மா.லெ.மாவோ சிந்தனையின் பெயரில் இப்படி வாதிடுவதோ பச்சைத் துரோகம்.

 

மா.லெ.மாவோ சிந்தனையின் பெயரில் தொடர்ந்து புலம்புவதைப் பாருங்கள். "குறிப்பாக வடக்குக் கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த தவறான அரசியல் மார்க்கமே இன்றைய அவலங்களுக்கும் மக்கள் தவித்து நிற்பதற்கும் காரணமாகும். அத்தகைய பழைமைவாத பிற்போக்குத் தமிழ்த் தேசியவாதத் தலைமைகளின் தவறான தலைமையையும் வழிகாட்டலையும் மக்கள் இவ்வேளை உற்று நோக்க வேண்டும். அதனாலேயே பாராளுமன்றப் பாதையாலும் போராட்டப் பாதையாலும் மக்களுக்கு விமோசனம் பெறும் வழிகளைக் காட்ட முடியவில்லை. அதே பழைமைவாத பிற்போக்குத் தமிழ்த் தேசியவாத சக்திகளே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் ஊடாக மீண்டும் தமது ஆதிக்க அரசியலை முன்னெடுக்க முனைந்து நிற்கின்றன. இதனை இத் தேர்தலில் முறியடிக்கவும் புதிய மாற்று அரசியல் கொள்கையையும் வேலைத்திட்டத்தையும் முன் வைக்கவுள்ள ஒரே வழி மக்கள் சார்பு மிக்க ஜனநாயக, இடதுசாரி, முற்போக்கு சக்திகள் ஐக்கியப்பட்டு ஒரே அணியாகி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டு நிற்பதேயாகும். அதன் மூலம் பழைமைவாத பிற்போக்கு சக்திகளையும் அவர்களது குறுகிய ஆதிக்க அரசியல் நிலைப்பாட்டையும் அம்பலப்படுத்தி எதிர்க்க முடியும். அத்துடன் புதிய மாற்று அரசியலை மக்கள் மத்திக்குக் கொண்டு செல்லவும் மக்களை ஒரு வெகுஜனப் போராட்ட அரசியல் மார்க்கத்தில் அணிதிரளச் செய்வதற்கும். இது நல்ல ஒரு சந்தர்ப்பமாகும்."

 

"பழைமைவாத பிற்போக்குத் தமிழ்த் தேசியவாதத் தலைமை" க்கு பதில், புதுமையான புரட்சிகர தமிழ் தேசிய தலைமையை வெல்ல வைப்பதன் மூலம் தான், தமிழ்மக்கள் விமோசனத்தைப் பெறும் அரசியல் வழியாகும் என்கின்றனர். மக்கள் புரட்சி செய்ய "புதிய மாற்று அரசியல் கொள்கையையும் வேலைத்திட்டத்தையும் முன் வைக்கவுள்ள ஒரே வழி மக்கள் சார்பு மிக்க ஜனநாயக, இடதுசாரி, முற்போக்கு சக்திகள் ஐக்கியப்பட்டு ஒரே அணியாகி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டு நிற்பதேயாகும்." என்கின்றனர். இதன் மூலம் பாராளுமன்றம் செல்வதன் மூலம், காரியமாற்ற முடியும் என்கின்றனர். கேடுகெட்ட இடதுசாரி பிழைப்புவாதம் தான், புதிய ஜனநாயகக்கட்சியின் அரசியலாகும்.

 

வோட்டு வேட்டைக்கு இறங்கியவர்கள் இடதுசாரியத்தை கொண்டு மக்களை மேய்க்க முனைகின்றனர். வலதுசாரிய நடத்தையை முன்னிறுத்தி தமக்கு வாக்கு கேட்கின்றனர். அதை அவர்கள் விபரிக்கையில் "தமிழ் முஸ்லீம் மலையக மக்களைப் பிளவுபடுத்தி குறுக்கு வழிகளையும் இனவாத உணர்ச்சிகளையும் குறுகிய சாதிவாதத்தையும்  கிளறிவிட்டு வெறும் பாராளுமன்ற  ஆசனங்களைப் பெறும் சுயநல நோக்கங்களை தமிழ் முஸ்லீம் மலையகத் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும். அதன் மூலம் புதிய மாற்று அரசியலை முன்னெடுக்க முன்வரல் வேண்டும். அதுவே தமிழ் சிங்கள முஸ்லீம் மலையகத் தமிழ் உழைக்கும் மக்களை ஓரணியில் அணிதிரட்ட வல்லதுமாகும். அதனாலேயே ஜனநாயக இடதுசாரி முற்போக்கு சக்திகளும் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரே அணியாக நின்று இத்தேர்தலில் பங்கு கொள்ள வேண்டும். அதன் மூலமே பேரினவாத ஆளும் வர்க்க முதலாளித்துவ சக்திகளையும் அவற்றின் இன, வர்க்க, சாதிய, பால் ஒடுக்கு முறைகளையும் அவற்றுக்கு துணை நிற்கும் ஏமாற்றுத் தலைமைகளையும் நிராகரித்து ஒரங்கட்டி உழைக்கும் மக்களுக்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கும் விடுதலை பெறக் கூடிய புதிய மாற்று அரசியல் திசை மார்க்கத்தில் பயணிக்க முடியும் என்பதை எமது கட்சி வற்புறுத்தி நிற்கிறது." வலதுசாரிய வக்கிரமான பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி, இடதுசாரிய பிழைப்புவாதத்தை முன்தள்ளுகின்றனர். நாங்கள் அப்படியல்ல, எனவே வோட்டு போடுங்கள் என்கின்றனர்." பாராளுமன்ற ஆசனங்களை" நாங்கள் சுயநல நோக்கத்துக்காக பயன்படுத்தமாட்டோம் என்கின்றனர்.

 

ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாடுகளில் பாராளுமன்றம் என்பது பன்றித்தொழுவம்; தான். இதில் பன்றிகள் தான் இருக்க முடியும். புதிய ஜனநாயகக் கட்சி 40 வருடமாக செய்யும் வர்க்கப் புரட்சி எவ்வளவு பொய்யானதோ, அதேயளவுக்கு பாராளுமன்ற இடதுசாரிய புரட்டும் பொய்யானது. 40 வருடமாக புரட்சியின் பெயரில் புரட்சியைக் காட்டிக்கொடுத்தவர்கள்,   தங்கள் சுயநலத்துடன் தான் வாக்குக் கேட்டு மக்களை பாராளுமன்ற கனவில் மிதக்கவிடுகின்றனர்.     

 

தேர்தல் மூலம் புரட்சியை காட்டும் கூட்டம், 40 வருடமாக மக்களின் அவலத்திற்கு வழிகாட்டாதவர்கள். இந்த வரலாற்று அனுபவத்தை நிராகரித்து, ம.க.இ;.க ஆதரவு இணையவாதிகள் அவர்கள் தலைமையை ஏற்று அவர்களின் ஆதரவாக எம்மை செயல்படக்கோரினர். இதை ஏற்று இருந்தால், நாங்களும் தேர்தல் பிரச்சாரம் செய்வது மட்டுமின்றி, தேர்தலில் நிற்கவேண்டியது தான் பாக்கி.

 

ஜனாதிபதி தேர்தலின் போது ம.க.இ.க ஆதரவாளர்களின் இணையத்தில், வாக்குச்சீட்டை பயன்படுத்துவது எப்படி என்ற சிவசேகரம் புலம்பியதை, புரட்சிக் கவிதையாக பிரசுரித்தனர். தவறு செய்யாத இணைய தளபதிகள் என்று சிவசேகரம் மாத்தையா எமக்கு எதிராக பாட, அதைக்கொண்டு ம.க.இ.க ஆதரவாளர்கள் எம்மைத் தனிமைப்படுத்தினர். மற்றொரு தரப்பினர் எம்மை அவர்களின் தலைமையை ஏற்று, அவர்களுக்கு ஆதரவாக பின்னால் செல்லக் கோரினர். நாங்கள் இவர்களை விமர்சிப்பதன் மூலம், கலைப்புவாதத்தைச் செய்வதாகக் கூட கூறினர். இப்படி ஒருபுறம் ம.க.இ.க ஆதரவாளர்கள் எம் முதுகில் குத்தினர்.

 

இன்று புதிய ஜனநாயகக் கட்சி பாராளுமன்ற தேர்தலில் குதித்துள்ளது. ம.க.இ.க ஆதரவாளர்களின் இணையத்தில் அவை இன்னமும் பிரசுரமாகவில்லை. சிவசேகரம் இனி இதற்கும், கவிதை எழுதி, அதுவும் வெளிவருமோ தெரியாது. தொப்பிக் கதையும் சொல்வாரோ தெரியாது. தேர்தல் பகிஸ்கரிப்பு, தேர்தல் பங்குபற்றல் என்று பற்பல தொப்பிகளையே சிவசேகரம் கவிதையாக்கின்றவர் தானே. எப்படி வாக்குச்சீட்டை பயன்படுத்துவது என்று தீவிரமாக சிந்தித்து, கவிதை எழுதுவார் படியுங்கள். அதுவும் ம.க.இ.க ஆதரவாளர்களின் இணையத்தில் தான் வெளிவருமோ தெரியாது.

 

கடந்தகாலத்தை அரசியல் ரீதியாக உள்வாங்கி பார்க்காத, அணுகாத அரசியல் மேடையில், "திடீர் புரட்சியாளர்களைக்" கொண்டு, நாம் கொச்சைப்படுத்தப்பட்டோம். நடந்து முடிந்த தமிழ்மக்கள் அவலத்திற்குக் எதிராக, நாம் மட்டும் போராடினோம். இருந்தும் அக்கருத்துகள் அனைத்துத்தரப்பாலும் இருட்டடிப்பு செய்யப்பட்டது, புறக்கணிக்கப்பட்டது.

 

மறுபக்கத்தில் திடீர் திடீரென புரட்சியாளராக சிலரை கொண்டு வந்து, எம்முன்னம் மக்கள் முன்னும் நிறுத்தப்பட்டனர். அவர்கள் கடந்தகாலத்தில் என்ன செய்தனர் என்ற கேள்வி இன்றி, எம்மை தனிமைப்படுத்தினர். இப்படி எமக்கு எதிராக முன்நிறுத்தப்பட்டவர்கள், இன்று தங்கள் எதிர்ப்புரட்சி அரசியலைக் கக்குகின்றனர்.

 

புதிய ஜனநாயகக் கட்சி அணிகளிடம் நாம் விடுக்கும் வேண்டுகோள்,

 

1. உங்கள் தலைமையை நிராகரித்து புரட்சிகர அரசியலை முன்னெடுங்கள்!

 

2. தேர்தலை நிராகரித்து, மக்களை புரட்சிகரமாக போராடக் கற்றுக்கொடுங்கள்!

 

3. தேர்தல் பாதை திருடர் பாதை என்பதை அம்பலப்படுத்துங்கள்!

பி.இரயாகரன்
18.02.2010