07042022தி
Last updateபு, 02 மார் 2022 7pm

வரதட்சணைக்காக நிர்வாணப்படத்தை வைத்து மிரட்டிய வக்கிரக் கணவன்!!

ஞாயிற்றுக் கிழமை (14.02.10) டைம்ஸ் ஆஃப் இந்தியாவைப் புரட்டிக் கொண்டிருந்த போது அந்தச் செய்தி கண்ணில் தென்பட்டது. செல்பேசி செக்ஸ் முறைகேடுகள் மலிந்து விட்ட நாட்டில் அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக சொந்த மனைவியை நிர்வாணப் படமெடுத்து வரதட்சணைக்காக மிரட்டியிருக்கிறான் ஒரு சென்னைக் கணவன்.

6வயது சதீஷ் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) டிசம்பர் 2008இல் திருமணம் செய்து கொண்டான். பொன்னும், பொருளும், பணமுமாய் 20 இலட்சம் வரை வரதட்சணையாக பெண் வீட்டிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகும் வரதட்சணை வெறியடங்காத சதீஷ் வீட்டார் அந்தப் பெண்ணை மேலும் கொண்டு வருமாறு வற்புறுத்தியிருக்கின்றனர். இதற்காகவே அந்தப்பெண்ணுடன் தாம்பத்ய உறவு கூட வைக்காமல் இருந்திருக்கிறான் அந்தக் கணவன்.

பொறுமையிழந்த அந்தப்பெண் தனது பெற்றோரிடம் இந்தக் கொடுமைகளை சொல்லி அழுதிருக்கிறாள். அவர்களும் இது குறித்து சதீஷ் வீட்டில் நியாயம் கேட்டிருக்கின்றனர். இதற்குப் பிறகு கொடுமை அதிகரித்ததே தவிர குறையவில்லை. சதீஷும் அவனது சகோதரர்களும் அந்தப் பெண்ணை சித்திரவதை செய்திருக்கின்றனர். சதீஷின் அப்பா மருமகளிடம் எல்லை மீறி நடக்க முயற்சித்திருக்கிறார். இதை கணவனிடம் புகாராகச் சொல்லியும் அவன் அதை சட்டை செய்யவில்லை.

 

இறுதியாக அந்தப் பெண்ணை தனியறையில் அடைத்து சன்னல் வழியாக உணவு மட்டும் கொடுத்து, அவளது நிர்வாணப் படங்களை நண்பர்கள் மூலம் வெளியிட்டு நாசப்படுத்துவேன் என்று சதீஷ் மிரட்டியிருக்கிறான். இதற்கு மேலும் பொறுமை காப்பதில் பலனில்லை என்று அந்தப் பெண் அந்தச் சிறையிலிருந்து எப்படியோ தப்பிவிட்டு தனது வீட்டுக்குக் கூட போகாமல் நேராக போலீசிடம் போய் புகார் செய்திருக்கிறாள். போலீசும் வரதட்சணை பிரிவு, பெண்ணை அடித்து துன்புறுத்துதல் முதலான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் சதீஷையும் அவனது உறவினர்களையும் தேடிவருகிறார்கள்.

 

இதுவரை இந்தச்செய்தியை படித்துவிட்டு செல்லும் ஆண்கள் சதீஷின் வக்கிரத்தை எல்லோரையும் போல் கண்டித்துவிட்டு மறந்துவிடக் கூடும். ஆனால் தம்முள்ளும் சதீஷ் அளவுக்கு வக்கிரமாயில்லையென்றாலும் சற்று மென்மையான ஒரு சதீஷ் இருப்பான் என்பதை எத்தனை பேர் மறுக்க முடியும்?

 

ஊடகங்களில் சிறப்புத் தள்ளுபடி விற்பனை மூலம் காதலர் தினம் தனது பொருளாதார முக்கியத்துவத்தை உணர்த்தி விட்டுச் சென்று விட்டது. இந்து மதவெறியர்கள் வழக்கம் போல தாலிகளை வைத்து காதல் என்றால் ஆபாசம், மேலைநாட்டு வக்கிரமென்ற உதார்களும் நம்மில் பலர் பார்த்திருக்கக் கூடும். சாதிக்குள்ளே மணம் முடித்து இந்து மதத்தின் மேன்மையை காப்பாற்றுவது அவர்களது நோக்கம். ஆனால் அவர்களது நோக்கத்திற்குப் பங்கம் வராமல் பெற்றோர் பார்த்து முடிக்கும் சம்பிரதாய திருமணங்கள்தான் நாட்டில் அதிகம்.

 

காதலும் கூட சாதி மறுப்பு என்பதை விட சம தரத்திலான சாதி, வர்க்கம், அந்தஸ்து, பணம், வேலை எல்லாம் பார்த்துத்தான் நடக்கிறது என்பது வேறு விசயம். இதையே சாதிக்குள் நடத்தினால் அது நிச்சயிக்கப்பட்ட திருமணம். இந்த எழவுகளை பொருத்தம் பார்த்து எப்படியோ திருமணம் செய்து கொண்டு ஒழியட்டும். ஆனால் எனக்கு வரதட்சணை வேண்டாமென்று இத்தகைய திருமணங்களில் கூட செய்து காட்டலாமே?

 

தன்னை முற்போக்காளன், நல்லவன், புரட்சிக்காரனென்று அற்ப விசயங்களுக்காக சித்தரித்துக் கொள்ளும் இளைஞர்கள் கூட இந்த வரதட்சணையை வேண்டாமென்று மறுப்பதில்லை. அல்லது நாசுக்காக மொக்கையான காரணங்களைச் சொல்லி சமாளிக்கிறார்கள்.

 

மணம் முடிக்கும் பெண்களை ஆண்கள் ஆயுசு வரைக்கும் காப்பாற்றுவதற்காகத்தான் இந்த வரதட்சணையை பெண்ணின் தந்தை தரவேண்டுமென்று பாரம்பரிய விளக்கத்தை முதலில் சொல்வார்கள். இதன்படி பெண்ணென்பவள் சுமை. அல்லது மாடு. அந்த மாட்டிற்கு தீனியும், தண்ணீரும் கொடுத்து தொழுவத்தில் கட்டிவைப்பதற்குத்தான் அந்த தட்சணை. பதிலுக்கு அந்த மாட்டுப்பெண் சமையல், துவையல், இல்லப் பராமரிப்பு, விருந்தினர் உபசரிப்பு, குழந்தைகள் வளர்ப்பு, செவிலியர் வேலை, இரவில் தாசி வேலை எல்லாம் நேரத்திற்கு செய்யவேண்டும்.

 

இப்படி எல்லாவகையிலும் பெண்ணின் இரத்தத்தை அட்டைகள் போல உறிஞ்சிக்கொள்ளும் ஆணிணத்து புண்ணியவான்கள் என்றைக்காவது இந்த வேலைகளை செய்வதற்கு முன்வந்தது உண்டா? கிடையாது. போகட்டும். செய்யாத, செய்ய முடியாத, விரும்பாதா இந்த வேலைக்கு ஊதியம் கணக்கிட்டு பார்த்தால் ஒவ்வொரு கணவனும் முழு ஆயுளில் பல இலட்சங்களை செலவிட வேண்டியிருக்கும்.  குடும்பத்து வேலையை எல்லாம் பணத்தால் மதிப்பிட முடியாது என்று நொள்ளை பேசும் வீட்டின் பெருசுகள் திருமண நேரத்தில் வாங்கும் வரதட்சிணையின் மதிப்பை வைத்தே அந்தப் பெண்ணை அளவிடுவார்கள். கூடவே இந்த மதிப்பிட முடியாத வேலை செய்வதற்கு ஒரு பெண்ணோடு வரதட்சணையாக பெரும் சொத்தையும் பிடுங்குகிறோமே என்று எள்ளளவும் குற்ற உணர்வு கிடையாது.

 

அடுத்து இந்த வரதட்சணையை அந்த பெண்ணின் நன்மைக்காகத்தானே வாங்குகிறோம் என்று அளப்பார்கள். விசேசங்களுக்கு குடும்பத்தின் அந்தஸ்தை நிலைநாட்டும் அலங்காரக்கடை பொம்மையாக மருமகள் அவதரிக்க உதவும் நகைகள் மற்ற நேரத்தில் பீரோவில் தூங்கும். பெரும் செலவுகள் வரும்போது கணவனுக்கு கைகொடுப்பது அந்த நகைகள்தான். பின்னர் பெண் குழந்தை ஆளாகி மணமகளாக செல்லும்போது அந்த நகைகளும் புதிய தட்சணையாக செல்ல நேரிடும். இதைத் தவிர அந்த நகைகள் அந்தப் பெண்ணுக்கு ஒரு மயிரும் பலனளிப்பதில்லை.

 

“பையனை செலவு செய்து படிக்க வைத்திருக்கிறோம், அதனால் கை நிறைய சம்பளம் வாங்குகிறான், அப்படி உயர்ந்த இடத்திற்கு வாக்கப்பட வேண்டுமென்றால் வரதட்சணை கொடுப்பதுதானே முறை” என்று வியாபாரக் கணக்கு பேசுவார்கள். இல்லையென்றால் ஏழை பாழைகளைக் கல்யாணம் செய்யலாம் என்றும் உபதேசிப்பார்கள். காசுக்கேற்ற தோசை மாதிரி ஏழைகளும் ஏதாவது செலவழித்துத்தானே திருமணங்கள் செய்யவேண்டியிருக்கிறது. சமூகத்தில் வரதட்சணை என்பது அழிக்க முடியாத விதி என்று ஆகிவிட்டபோது ஏழை மட்டும் அதை மீறுவது எப்படி சாத்தியம்?

 

ஏற்கனவே கை நிறைய சம்பளம் வாங்கும் கபோதிகள் அத்தோடு திருப்தி அடையவேண்டியதுதானே? நியாயமான உழைப்பில் கல்விச் செலவை செய்திருந்தால் இந்த அநியாயமான தட்சணையை எதிர்பார்க்கத் தோன்றாது. ஊரைக் கொள்ளையடித்தோ, லஞ்சம் வாங்கியோ, முறைகேடுகள் செய்தோ செலவழித்திருந்தால் கண்டிப்பாக தட்சணை மூலம் எவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்றுதான் தோன்றும். சுயநிதிக் கல்லூரிகளில் சில பல இலட்சங்கள் கொடுத்து சீட்டு வாங்கி டாக்டராகவோ, இன்ஜினியராகவோ குதிப்பவர்கள் திருமண வியாபாரம் மூலமே அதை சரிக்கட்டுகிறார்கள்.

 

இத்தகைய உயர் குடி ஆண் குதிரைகள் அதிகம் விலைபோகும் என்பது பெண்கள் விற்கபடும் சந்தையை வைத்தே உருவாக்கப்படுகிறது. மணமகளின் தந்தையும் ஊரைக் கொள்ளையடித்து வந்திருந்தால் தட்சணையை கணக்கு பார்க்காமல் கொடுப்பான். நேர்மையானவானாக இருந்தால் இருக்கும் சொத்துபத்துக்களை விற்றுவிட்டோ இல்லை கந்து வட்டிக்கு கடன்வாங்கியோ வரதட்சணை கொடுப்பதற்கு தயாராக இருப்பான். இதன் மூலம் அந்த தந்தை தனது எஞ்சிய வாழ்நாட்களை ஆயுள்கைதி போல கழிப்பதற்கு தயாராவார்.

 

இதில் 100பவுனுக்கு ஒரு பவுன் குறைந்தால் கூட போதும், பையன் வீட்டார் அந்தப் பெண்ணை ஏமாற்றுக்காரியாகவே நடத்துவார்கள். தமிழகத்தின் ஏழை மாவட்டங்களில் பெண் சிசுக் கொலை என்பது இந்த வரதட்சணை அநீதியின் காரணமாகத்தான் நடக்கிறது என்பது உண்மை. அந்த வகையில் வரதட்சணை வாங்கும் ஒவ்வொருவரும் தருமபுரியிலோ, உசிலம்பட்டியிலோ கொல்லப்படும் பெண் சிசுக் கொலைக்கு காரணமாகத்தான் இருக்கிறார்கள்.

 

சமீபத்திய வரவான ஐ.டிதுறை மற்றும் அமெரிக்க மாப்பிள்ளைகள் என்பது மேட்டுக்குடியின் வரதட்சணையை ராக்கெட் வேகத்தில் எகிற வைத்திருக்கிறது. தனது பெண் அமெரிக்காவில் சீரும் சிறப்புமாக வாழ்வாள் என்று நம்பி மொத்த வாழ்க்கை சம்பாத்தியத்தையும் மகளுடன் அனுப்பி வைக்கும் தந்தைமார்கள் அதன்பிறகாவது நிம்மதியாக வாழ்கிறார்களா? இல்லை காரில் இருந்து தள்ளப்பட்டு குற்றுயிரும் கொலையுயிருமாக வரும் மகளுக்காக விமான நிலையத்தில் காத்திருக்கிறார்களா?

 

வாரிசுகளில் இருபாலாரும் இருந்தால் வரதட்சணை கொடுப்பதற்காக வரதட்சணை வாங்குவதாக நியாயம் பேசுவார்கள். ஏன் வரதட்சணை வாங்காதவனுக்குத்தான் எனது மகள் என்று முடிவெடுக்க வேண்டியதுதானே? அப்படி முடிவெடுத்து விட்டு திருமணம் செய்ய நினைக்கும் இளைஞர்களை சமூகம் பைத்தியக்காரன், பிழைக்கத் தெரியாதவன் என்று வைத்திருக்கிறது என்பதால் எந்தத் தந்தையும் தனது மகளின் வாழ்வில் ரிஸ்க் அல்லது நல்ல முடிவு எடுப்பதில்லை.

 

இன்னும் விதவையாக இருந்தால் மனிதாபிமானம் அதிகம் இருக்கும் என்று எண்ணாதீர்கள். விதவையைக் கல்யாணம் செய்யும் ‘தியாக’ உள்ளங்களுக்கு பிரதிபலனாக லஞ்சம் அதிகம் கொடுக்க வேண்டும். அதுவும் குழந்தை உள்ள பெண்ணாக இருந்தால் ரேட் இன்னும் அதிகம். இரண்டாம் மணம் என்றாலும் அங்கே முதல் மணம் ஏன் தோல்வியுற்றது என்று பாடம் கற்காமால் அதே போல தட்சணை கொடுத்துத்தான் அடுத்த மணமும் நிறைவேறும்.

 

இறுதியாக “வரதட்சணையை நாங்களாக ஏதும் கேட்கவில்லை, நீங்களாக பார்த்து செய்தால் போதும்” என்று நல்லவர்கள் போல பேசுவார்கள். உறவினர்களை விட்டு குடும்பத்தின் மேன்மை, சமீபத்தில் நடந்த திருமணங்களில் கொடுக்கப்பட்ட வரதட்சணையின் அளவு எல்லாம் சொல்லி மறைமுகமாக ரேட்டை நிர்ணயம் செய்வார்கள். நேரடியாக கேட்பதை விட இரகசியமாக கேட்பது மகா கேவலமானது. இதன்மூலம்தான் பெண் வீட்டார் தங்கள் தகுதிக்கும் மேல் சீர்வரிசை செய்வது நடக்கிறது. வரதட்சணையில் நல்லது கெட்டது என்று ஏதும் இருக்க முடியுமா என்ன?

 

இப்படி எல்லா வழிகளிலும், வகைகளிலும் கண்கொத்திப் பாம்பாக பெண்களை குதறக் காத்திருக்கிறது வரதட்சணை.

 

இந்தக் கயமைத்தனத்தை ஜீன்ஸ் பேண்டிலும், செல்பேசியிலும் நவீனத்தை தேடும் இளைஞர்கள் நேரடியாகவும், நாசுக்காகவும், மறைமுகமாகவும் செய்தே வருகிறார்கள். ரொம்ப இறுக்கிப் பிடித்துக் கேட்டால் “நான் வாங்க மாட்டேன், என் பெற்றோர் விரும்பினால் என்ன செய்வது” என்று வாகாய் நழுவுவார்கள். சாதி பார்த்து, ஜாதகம் பார்த்து, அந்தஸ்து பார்த்து எல்லா எழவும் பார்த்துக்கூட தொலையட்டும். குறைந்த பட்சம் வரதட்சணையாவது வாங்க மாட்டேன் என்று முடிவெடுப்பதற்குக்கூட நேர்மையற்ற இந்த இளைஞர்களை வைத்துத்தான் அப்துல் கலாம் 2020இல் இந்தியாவை வல்லரசாக்கப் போகிறாராம்.

 

குழந்தைகள் உழைப்பை எதிர்ப்பார்கள், சுற்றுச்சூழலுக்காக குரல் கொடுப்பார்கள், சுயமுன்னேற்ற நூலென்றால் விழுந்து விழுந்து படிப்பார்கள், ரோட்டோரத்துப் பிச்சைக்காரனுக்காக சில்லறைகளையும் கொடுப்பார்கள்…இப்படியெல்லாம் நல்லது செய்வதாக கற்பித்துக் கொண்டிருக்கும் இந்த இளைய சமூகம்தான் இந்த வரதட்சணைப் பேயை இன்னும் வீரியமாக வாழவைத்துக் கொண்டிருக்கிறது. குறுக்கு வழியில் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதன் சமூக அங்கீகாரத்தில்தான் வரதட்சணையும் சாகாவரம் பெற்று ஜம்மென்று உயிர் வாழ்கிறது.

 

வட இந்தியாவில் கேஸ் அடுப்பு வெடித்து கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடிக்கொண்டுதான் இருக்கிறது. தென்னிந்தியாவில் படித்தவர்கள் அதிகம் என்பதால் இந்த வரதட்சணை கொடுமைகள் சதீஷ் போல நாகரீக கனவான்களின் நவீன தொழில்நுட்ப சித்திரவதையாக பரிணாமம் பெற்றிருக்கிறது. சதீஷைப் பொறுத்தவரை அவனது மனைவி என்பவள் வெறும் உடம்பு மட்டும்தான். அந்த உடம்பிற்கு மானமிருக்கிறது என்பதனால்தான் அவன் அவளது நிர்வாண படங்களை வெளியில் விடுவேன் என்று பயமுறுத்த முடிகிறது. உடல் மானம் மட்டுமல்ல குடும்ப மானமும் போனால் கூடப் பரவாயில்லை என்று துணிந்து அந்தப் பெண் போலீசுக்கு வரவேண்டுமென்றால் அவள் எவ்வளவு துன்பம் அடைந்திருக்க வேண்டும்?

 

வரதட்சணைக் கொடுமைகளை நிறுத்துவது பெண்களிடம் இருந்துதான் துவங்க வேண்டும். இப்படி பொன்னும், பொருளும் வாங்கிக் கொண்டு திருமணம் செய்ய விரும்பும் இளைஞர்களை காறித்துப்புவதற்கு பெண்கள் முன்வரவேண்டும். வரதட்சணை மறுப்பதுதான் ஆண்மையின் தகுதி, விரைக்கும் ஆண் குறியில் அல்ல எனுமளவுக்கு அந்தப் போர் நடைபெற வேண்டும். காதலோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ வரதட்சணை மறுப்புத்தான் முதல் தகுதி என்றாக்கப்படவேண்டும். ஊழலால் சூழ வாழும் இந்த சமூக அமைப்பில் வரதட்சணைக்கெதிரான போராட்டம் துவங்கினால் அது ஏனைய பிணிகளை எதிர்த்து விரியும் போராட்டமாகக்கூட மாறும்.

எதெல்லாம் வரதட்சணை?

 1. பவுன் கணக்கில் கொட்டப்படும் நகையோடு பெண் திருமணமாவது – தங்க தட்சணை!
 2. பணம் வாங்குவது, திருமணச்செலவு முழுமையும் பெண் வீட்டார் செய்வது – ரொக்க தட்சணை!
 3. வரதட்சணைப் பணத்தை வைத்து வேலை வாங்குவது, அமெரிக்கா செல்வது – வேலை தட்சணை!
 4. வீடு, வாகனங்கள், இதர சொத்துக்கள் பெறுவது – சொத்து தட்சணை!
 5. தீபாவளி, பொங்கள் இதர நாட்களை வைத்து பெண் வீட்டாருக்கு செலவு வைப்பது – பண்டிகை தட்சிணை!
 6. முக்கியமாக பிரசவ செலவை மாமனார் வீட்டிற்குத் தள்ளிவிடுவது – பிரசவ தட்சணை!
 7. குழந்தை பிறந்தால் அதற்கும் காது  குத்து, மொட்டையடிப்பது என்ற பெயரில் பெண் வீட்டாருக்கு செலவு வைப்பது – குழந்தை தட்சணை!
 8. மனைவியை வீட்டுவேலைகளுக்கு மட்டும் பயன்படுத்துவது, அதில் பங்கேற்காமல் இருப்பது – வேலைக்காரி தட்சணை!
 9. மனைவியை இருட்டுக்கு மட்டும் இலவசமாய் பயன்படும் பொருளாய் பார்ப்பது – தாசி தட்சணை
 10. எந்த முக்கியமான விசயங்களிலும் மனைவியோடு கலந்தாலோசிக்காமல் இருப்பது – அடிமை தட்சணை!
 11. மனைவியை அடிப்பது, சித்திரவதை செய்தவது – டார்ச்சர் தட்சணை!

……… மொத்தத்தில் முடிவு பெறாது இந்த வரதட்சணை!

இப்போது சொல்லுங்கள் உங்களில் யார் சதீஷை கண்டிக்கிறீர்கள்?

http://www.vinavu.com/2010/02/16/dowry/


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்