இந்தியா என்றொரு நாடும், ஒரிசா என்றொரு மாநிலமும்  தோன்றுவதற்கு பன்னெடுங்காலம் முன்பிருந்தே, தற்போதைய  தென் ஒரிசாவிலிருக்கும் அந்த தாழ்ந்த, தட்டையான மலைத்தொடர், டோங்ரியா கோண்டு இன மக்களின் தாயகமாக விளங்கி வருகின்றது.

மலைகள் கோண்டு இன மக்களைக் கவனித்துக் கொண்டன. அம்மக்கள் மலைகளைக் கவனித்துக் கொண்டனர். அவற்றை வாழும் தெய்வங்களாய் வழிபட்டனர்.  இம்மலைகள் அதில் புதைந்திருக்கும் பாக்சைட் கனிம வளத்திற்காக தற்போது விற்கப்பட்டுவிட்டன.  கோண்டு மக்களைப் பொறுத்தவரையில், இச்செயல் கடவுளை விற்பதற்குச் சமமானது. கடவுள் ராமனாகவோ, அல்லாவாகவோ அல்லது ஏசு கிருஸ்துவாகவோ இருந்தால் ”அந்தக் கடவுள் என்ன விலைக்குப் போயிருப்பார்? ” என்று கேட்கின்றார்கள் அம்மக்கள்.

ஒருவேளை, அந்த கோண்டு மக்கள் நன்றியுடையவர்களாய் இருக்க வேண்டுமோ! ஏனென்றால், அவர்களது  பிரபஞ்ச நியதியின் கடவுளாகிய நியம் ராஜாவின் உறைவிடமான நியம்கிரி மலை, வேதாந்தா (அறிவின் எல்லையை உபதேசிக்கும்  இந்துத் தத்துவயியலின் ஒரு கிளை) என்ற பெயர் தாங்கிய கம்பெனியிடம் அல்லவோ விற்கப்பட்டிருக்கிறது! வேதாந்தா- உலகத்தின் மிகப்பெரும் சுரங்கத் தொழில் நிறுவனங்களில் ஒன்று. லண்டனில், முன்னர் ஈரான் மன்னருக்குச் சொந்தமாயிருந்த மாளிகையில் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியக் கோடீஸ்வரரான அனில் அகர்வாலுக்குச் சொந்தமானது அந்நிறுவனம். இன்று ஒரிசாவைச் சுற்றி வளைத்து வருகின்ற பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் வேதாந்தாவும் ஒன்று.

தட்டையான உச்சிகளைக் கொண்ட இம்மலைகள் அழிக்கப்பட்டால், அவற்றைப் போர்த்தியிருக்கும் பசுமையான காடுகளும் சேர்த்து அழிக்கப்படும். அவற்றிலிருந்து ஊற்றெடுத்து வழிந்து, சமவெளிகளை வளப்படுத்தும்  சுனைகளும், ஆறுகளும் அழியும்.  டோங்ரியா கோண்டு இன மக்களும் அழிந்துபடுவார்கள். இதே வகையான தாக்குதலுக்குள்ளாகியிருக்கும், இந்தியாவின் காடுகளடர்ந்த இதயப் பகுதியில், அதனைத் தாயகமாய் கொண்டு வாழும் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்களும் அழிக்கப்படுவார்கள்.

நெரிசலும், புகைநாற்றமும் மண்டிய நமது நகரங்களில் வாழும்  சிலர் இப்படிப் பேசுகிறார்கள், “அதனால் என்ன? முன்னேற்றத்துக்கான விலையை யாராவது கொடுத்துத்தானே ஆகவேண்டும்.” சிலர் இப்படிக்கூடப் பேசுகிறார்கள், “இதையெல்லாம் நாம் சந்திக்கத்தான் வேண்டும். இந்த சனங்களுடைய காலம் முடிந்து விட்டது. ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என எந்த வளர்ந்த நாட்டை வேண்டுமானாலும் பாருங்கள். எல்லோருக்கும் இப்படி ஒரு ‘கடந்த காலம்’ இருக்கத்தான் செய்கிறது.”  என்கிறார்கள். உண்மைதான், அவர்களுக்கெல்லாம் அப்படி ஒரு கடந்த காலம் இருக்கத்தான் செய்கிறது. “அப்படியானால், அத்தகையதொரு கடந்த காலம் ஏன் ‘நமக்கு’ மட்டும் இருக்கக் கூடாது? ” என்பது அவர்களின் கேள்வி.

இத்தகைய சிந்தனைப் போக்கின் அடிப்படையில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருப்பதுதான் காட்டு வேட்டை (Operation Green Hunt) எனும் போர்; மத்திய இந்தியாவின் காடுகளைத் தமது தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ‘மாவோயிஸ்ட்‘ கிளர்ச்சியாளர்களுக்கு எதிரானது என்ற பெயரில் அறிவிக்கப்பட்டிருக்கும் போர். மாவோயிஸ்டுகள் மட்டும்தான் கிளர்ச்சி செய்து கொண்டிருக்கிறார்களா என்ன?  நிலமற்றவர்கள், தலித் மக்கள், வீடற்றவர்கள், தொழிலாளிகள், விவசாயிகள், நெசவாளர்கள் என நாடு முழுவதும் ஒரு பெரும் போராட்டக் களமே விரிந்து கிடக்கிறது.

மக்களுடைய நிலங்களையும், இயற்கை வளங்களையும் மொத்தமாக முதலாளிகள் வாரிச் சுருட்டிக் கொள்வதற்கு வழிவகை செய்யும் கொள்கைகள் உள்ளிட்ட எல்லா அநீதிகளின் உருத்திரண்ட வடிவமாக, தங்களை நசுக்குவதற்கு உருண்டு வந்து கொண்டிருக்கும் பிரம்மாண்டமான அநீதித் தேரின் சக்கரங்களைத் தடுத்து நிறுத்த  அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், மிகப்பெரிய அபாயமென்று மாவோயிஸ்டுகளை மட்டுமே குறி வைத்திருக்கிறது அரசாங்கம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நிலைமைகள் இன்றைய அளவுக்கு மோசமானதாக இல்லாதிருந்த ஒரு சூழலில், ‘தனிப்பெரும் உள்நாட்டுப் பாதுகாப்பு அபாயம்‘ என்று மாவோயிஸ்டுகளைப் பற்றிக் குறிப்பிட்டார்  பிரதமர் மன்மோகன் சிங். அவர் பேசியவற்றிலேயே இந்தக் கருத்துதான் மிகப் பிரபலமானதாகவும், மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுவதாகவும் இருக்கக்கூடும். ஜனவரி 6, 2009 அன்று நடைபெற்ற மாநில முதல்வர்கள் சந்திப்பின்போது, மாவோயிஸ்டுகள் ஒன்றும் அத்தனை பலம் பொருந்தியவர்களல்ல என்று அவர் தெரிவித்த கருத்துக்கு, முந்தைய கூற்றிக்குக் கிடைத்த அளவிலான முரட்டுக் கவர்ச்சி என்ன காரணத்தினாலோ கிடைக்கவில்லை. ஜூன் 18, 2009 அன்று நாடாளுமன்றத்தில் பேசியபோது, அவர் தனது அரசின் உண்மையான கவலையை வெளியிட்டார்; “இயற்கை தாதுவளம் மிக்க பகுதிகளில் இடதுசாரித் தீவிரவாதம் தொடர்ந்து வளருமேயானால், நிச்சயமாக முதலீடுகளுக்கான சூழ்நிலை அதனால் பாதிக்கப்படும்”.

மாவோயிஸ்டுகள் என்பவர்கள் யார்? அவர்கள் தடைசெய்யப்பட்ட இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்டு) இன் உறுப்பினர்கள்; 1967-இல் நக்சல்பாரி எழுச்சியை வழிநடத்தி, பின்னர் இந்திய அரசால் அழித்தொழிக்கப்பட்ட இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) இன் வழி வந்த பல்வேறு பிரிவினரில், ஒரு பிரிவினர். இந்திய சமூகத்தின் உள்ளார்ந்த, கட்டமைப்பு ரீதியான ஏற்றத்தாழ்வை ஒழிக்கவேண்டுமானால், அது இந்திய அரசை வன்முறையாகத் தூக்கியெறிவதன் மூலம் மட்டுமே சாத்தியம் என்று அவர்கள் நம்புகின்றார்கள். முன்னர் பீகார் மற்றும் ஜார்கண்டில் மாவோயிச கம்யூனிச மையமாகவும்1, ஆந்திராவில் மக்கள் யுத்தக் குழுவாகவும் அவர்கள் இயங்கியபோது, மாவோயிஸ்டுகள் மக்களின் ஆதரவைப் பெருமளவில் பெற்றிருந்தார்கள். (2004-இல் தற்காலிகமாக அவர்கள் மீதான தடை நீக்கப்பட்ட போது, வாரங்கல்லில் நடைபெற்ற அவர்களது பேரணியில் 15 இலட்சம் மக்கள் கலந்து கொண்டார்கள்).

எனினும் ஆந்திரத்தில் அவர்களது செயல்பாடு பின்னர் மோசமான முறையில் முடிவுக்கு வந்தது. தங்களது உறுதியான ஆதரவாளர்களில் சிலரையே கடுமையான விமரிசகர்களாக மாற்றும் அளவிற்கு ஒரு வன்முறைப் பாரம்பரியத்தை அவர்கள் விட்டுச்சென்றார்கள். ஆந்திர போலிசும் மாவோயிஸ்டுகளும் நடத்திய கட்டுப்படுத்த முடியாத கொலைகள் மற்றும் போட்டிக் கொலைகளுக்குப் பின்னர் மக்கள் யுத்தக் குழு நிர்மூலமாக்கப்பட்டது. உயிர்  பிழைத்தவர்கள் ஆந்திராவிலிருந்து சத்தீஸ்கருக்கு தப்பியோடினார்கள். அடர்ந்த காடுகளின் இதயப் பகுதியில், ஏற்கெனவே பல பத்தாண்டுகளாக அங்கே பணியாற்றிக் கொண்டிருந்த தங்களது தோழர்களோடு இணைந்து கொண்டார்கள்.

காடுகளில் உள்ள மாவோயிஸ்டு இயக்கத்தின் உண்மையான இயல்பு குறித்த நேரடி அனுபவம்  “வெளியாட்கள்” பலருக்கும் கிடையாது. சமீபத்தில், ‘ஓபன் மேகசின்’ எனும் பத்திரிகையில், மாவோயிஸ்டு உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரான தோழர் கணபதியுடனான நேர்காணல் ஒன்று வெளிவந்தது. ‘மாவோயிஸ்டு கட்சி என்பது எவ்வகை வேறுபாட்டையும் அனுமதிக்க மறுக்கின்ற,  அதிகாரத்துவப் போக்குடைய, மன்னிக்கும் சுபாவமே இல்லாத கட்சி’ என்று கருதுபவர்களின் மனதை மாற்றும் வகையில் அந்தப் பேட்டி அமைந்திருக்கவில்லை. ஒரு வேளை, மாவோயிஸ்டுகள் அதிகாரத்திற்கு வருவார்களேயானால், இந்தியச் சமூக அமைப்பில் சாதிப்பிளவுகள் தோற்றுவித்திருக்கும்  கிறுக்குத்தனமான பன்முகத்தன்மையைக் கையாளும் வல்லமை அவர்களுக்கு இருக்கும்  என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தும் விதத்திலான எதையும் தோழர் கணபதி அப்பேட்டியில் கூறவில்லை.

இலங்கையின் விடுதலைப்புலிகள் அமைப்பை போகிறபோக்கில் அங்கீகரித்து அவர் பேசிய முறையானது, மாவோயிஸ்டுகள் மீது பெரிதும் அனுதாபம் கொண்டிருந்தவர்களின் முதுகெலும்பைக் கூடச் சில்லிடச் செய்வதாக இருந்தது. தாங்கள் தொடுத்த போரில் விடுதலைப் புலிகள் கடைப்பிடித்த கொடூரமான வழிமுறைகள் மட்டுமல்ல இதற்குக் காரணம்;  தான் எந்த இலங்கைத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக புலிகள் இயக்கம் கூறிக் கொண்டதோ,  எந்த மக்கள் விசயத்தில் அது கொஞ்சமாவது பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டுமோ, அந்த தமிழ் மக்கள் மீது இறங்கிய பேரழிவின் துயரமிருக்கிறதே, அதுவும்தான் தோழர் கணபதியின் பேச்சு தோற்றுவித்த நடுக்கத்துக்குக் காரணம்.

தற்போது, மத்திய இந்தியாவில் உள்ள மாவோயிஸ்டுகளின் கொரில்லாப் படை என்பது அநேகமாக, பரம ஏழைகளும் பட்டினியின் கோரப் பிடியில் தவித்துக் கொண்டிருப்பவர்களுமான பழங்குடி மக்களால் ஆன படையாகும். பஞ்சம் பட்டினி என்றவுடனேயே நமது மனக்கண் முன் தோன்றுகின்ற,  சகாரா பாலைவனத்தை ஒட்டிய ஆப்பிரிக்க நாடுகளின் பட்டினி நிலையுடன் ஒப்பிடத்தக்க நிலை அது.

சொல்லிக் கொள்ளப்படும் இந்தச் சுதந்திரம் இந்தியாவுக்குக் கிடைத்து அறுபதாண்டுகளுக்குப் பின்னரும், கல்வி, மருத்துவம் அல்லது சட்டப்படியான நிவாரணங்கள் என எதுவுமே கிடைக்கப்பெறாத மக்கள் அவர்கள். பல்லாண்டுகளாக அவர்கள் ஈவிரக்கமின்றி சுரண்டப்பட்டவர்கள்; கந்து வட்டிக்காரர்களாலும், சிறு வியாபாரிகளாலும்  தொடர்ந்து ஏமாற்றப்பட்டவர்கள்; போலிசும், வனத்துறை அதிகாரிகளும் தமது உரிமை போல் கருதி பழங்குடிப் பெண்களை வல்லுறவு கொண்டனர்.  அப்பழங்குடி மக்கள் தம் கண்ணியத்தை சிறிதளவேனும் மீளப்பெற்றார்கள் என்றால், அதற்குக் காரணம் அவர்களுடன் பல்லாண்டுகளாக வாழ்ந்து, அவர்களுடன் தோளோடு தோள் நின்று போராடிய மாவோயிஸ்டு கட்சியின் அணிகள்தான்.

இதுவரை அம் மக்களுக்கு புறக்கணிப்பையும், வன்முறையையும் தவிர வெறெதையும் வழங்காத அரசாங்கம், இப்போது அவர்களிடம் கடைசியாக எஞ்சியிருக்கும் அவர்களது பூமியையும் பிடுங்க விரும்புகின்றது. பழங்குடி மக்கள் ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இதுதான்.

உங்கள் பகுதிகளை ‘வளர்க்க‘த்தான் நாங்கள் விரும்புகிறோம் என்று அரசாங்கம் சொல்வதை நம்புவதற்கு அவர்கள் திட்டவட்டமாக மறுக்கிறார்கள். தாண்டேவாடாவின்2 காடுகளுக்குக் குறுக்கே  தேசியக் கனிம வளர்ச்சிக் கழகத்தால் அமைக்கப்பட்டுவருகின்ற, விமான ஓடுபாதைக்கு நிகரான மழமழப்பான அகலமான நெடுஞ்சாலைகள்,  தங்களது பிள்ளைகளைப் பள்ளிக்கு நடத்திச் செல்வதற்காகத்தான் அமைக்கப்படுகின்றன என்று அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். தங்கள் நிலங்களுக்காகப் போராடத் தவறினால், தாம் முற்றாக அழித்தொழிக்கப்படுவோம் என்று அவர்கள் நம்புகின்றார்கள். அதனால்தான், அவர்கள் ஆயுதங்களைக் கையிலெடுத்திருக்கின்றார்கள்.

மாவோயிஸ்டு இயக்கத்தின் சித்தாந்தவாதிகள் இந்திய அரசைத் தூக்கி எறிவது என்ற தங்களது அறுதி இலக்குக்காகத்தான் போராடுகிறார்கள் என்றபோதிலும், தற்போதைய நிலையில் கந்தல் அணிந்த,  அரைப் பட்டினி நிலையில் உள்ள தமது படையும், ஒரு ரயிலையோ பேருந்தையோ ஒரு சிறு நகரத்தையோ கண்ணால் கூடப் பார்த்திராத அதன் கணிசமான சிப்பாய்களும், தாங்கள் உயிர் வாழ்வதற்காகத் தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மாவோயிஸ்டுகளும் அறிந்தே இருக்கிறார்கள்.

2008 ஆம் ஆண்டில், இந்திய திட்டக்  கமிசனால் அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழுவொன்று “தீவிரவாதிகளால்  பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னேற்றப் பணிகளுக்கான சவால்கள்” என்ற தலைப்பில்  ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. “நக்சல்பாரி (மாவோயிஸ்டு) இயக்கம் என்பது நிலமற்ற, ஏழை விவசாயிகள், பழங்குடியினர் மத்தியில், உறுதியான அடித்தளத்தைக் கொண்ட ஒரு அரசியல் இயக்கம் என அங்கீகரிக்கப்பட வேண்டும்.  அதன் தோற்றமும் வளர்ச்சியும், அதன் அங்கமாய் உள்ள மக்களின் சமூக வாழ்நிலை மற்றும் அனுபவங்களின் பின்புலத்தில் பொருத்திப் பார்க்கப்பட வேண்டும். அரசின் கொள்கைக்கும், நடைமுறைக்கும் இடையிலான பாரிய இடைவெளி என்பது மேற்கூறிய நிலைமைக்கான காரணக் கூறுகளில் ஒன்றாக இருக்கின்றது. ‘வன்முறை மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது’  என்பது இவ்வியக்கத்தின் அறிவிக்கப்பட்ட நீண்டகாலக் கொள்கையாக இருந்த போதிலும், அதன் அன்றாட நடைமுறைகளின் வெளிப்பாடுகளில், இது சமூக நீதி, சமத்துவம், பாதுகாப்பு மற்றும் தல மட்ட முன்னேற்றத்திற்கான போராட்டம் என்பதாகவே பார்க்கப்பட வேண்டும்.” என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.  ’தனிப்பெரும் உள்நாட்டு பாதுகாப்பு அபாயம்’ எனும் கூற்றிலிருந்து இந்த அறிக்கை வெகு தொலைவில் அல்லவா இருக்கிறது!

இது மாவோயிஸ்டு கிளர்ச்சியையே கவர்ச்சிச் செய்தியாகக் எடுத்துக் கொண்டிருக்கும் ’மாவோயிஸ்டு வாரம்’! எனவே, ‘பல்லாண்டுகளாய் இழைக்கப்பட்ட அநீதிகளின் திரட்சியே இப்பிரச்சினையின் ஆணிவேராக இருக்கிறது’ என்ற கருத்தை ஒப்புக்கொள்வதற்கு, கொழுத்த கோடீசுவரக் கோமான் முதல் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் விற்றுத் தீரும் நாளிதழின்  குரூர மனம் படைத்த ஆசிரியர் வரை, அனைவருமே தயாராக இருப்பது போலத் தோன்றுகின்றனர். ஆனால், பிரச்சினைக்கு முகம் கொடுப்பதற்குப் பதிலாக – அதுதான் அவர்களது நோக்கம் எனும் பட்சத்தில்  இந்த 21-ஆம் நூற்றாண்டின் தங்க வேட்டையை அவர்கள்  தடுத்து நிறுத்த வேண்டிவரும் – விவாதத்தை முற்றிலும் வேறு திசையை நோக்கித் திருப்பும் முயற்சிக்கிறார்கள்; புனிதமான ஆவேசம் பீறிட மாவோயிஸ்டு ‘பயங்கரவாதத்துக்கு‘ எதிராகக் குமுறி வெடிக்கிறார்கள்.  ஆனால், இவையெல்லாமே அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் விவகாரமாகத்தான் அமைந்திருக்கிறது.

ஆயுதமே தீர்வு என்று துணிந்து களத்தில் நிற்பவர்கள், நாள் முழுதும் செய்தித்தாள் படித்துக் கொண்டோ, தொலைக்காட்சி பார்த்துக் கொண்டோ அமர்ந்திருக்கவில்லை; அல்லது தொலைக்காட்சி காமெராக்களுக்காக அவர்கள் ’நடிக்கவும்’ இல்லை. அல்லது “வன்முறை நல்லதா, கெட்டதா? என்ற அன்றைய அறவியல் கேள்விக்கான பதிலை எஸ்.எம்.எஸ் செய்யச்சொல்லி கருத்துக் கணிப்பும் நடத்திக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் களத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமது வீடுகளையும் நிலங்களையும் காப்பாற்றிக் கொள்ளும் உரிமை தங்களுக்கு உண்டு என்று அவர்கள் நம்புகிறார்கள். தாங்கள் நீதி பெறும் தகுதி படைத்தவர்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இத்தகைய அபாயகரமான கூட்டத்திடமிருந்து, சகல சௌபாக்கியங்களும் கிடைக்கப்பெற்ற தனது மேன்மையான குடிமக்களைக் காப்பாற்றும் பொருட்டுத்தான், அரசு அவர்கள் மீது போர்ப் பிரகடனம் செய்திருக்கின்றது.  இப்போரில் வெல்வதற்கு மூன்றிலிருந்து ஐந்தாண்டுகள் பிடிக்கலாம் என ஆரூடமும் சொல்கின்றது.  கொஞ்சம் விசித்திரமாகத் தெரியவில்லை? 26/11 மும்பை தாக்குதலுக்குப் பிறகும்  பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராகவே இருந்தது… சீனத்துடன் பேசுவதற்கும் தயாராய் இருக்கின்றது. ஆனால், ஏழைகளுக்கு எதிரான யுத்தம் என்று வரும்போது மட்டும் அதன் அணுகுமுறை மூர்க்கத்தனமானதாக மாறி விடுகின்றது.

வேட்டை நாய்கள், கருநாகங்கள், தேள்கள் என இன மரபுச் சின்னங்களைத் தம் பெயர்களாக சூட்டிக் கொண்ட சிறப்புக் காவல் படைகள், கொலை செய்யும் உரிமத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஏற்கெனவே அக்காடுகளைச் சுரண்டி எடுத்துக் கொண்டிருக்கின்றன; அது போதாதாம். சி.ஆர்.பி.எஃப், பி.எஸ்.எஃப் படைகளும், கொடூரத்துக்குப் பெயர் போன நாகா பட்டாலியனும் தொலை தூர வனாந்தர கிராமங்களில் மனச்சாட்சியற்ற மிருகத்தனமான கொடூரங்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன; அதுவும் போதாதாம். தாண்டேவாடாவின் காடுகள் நெடுக கொலை, பாலியல் வன்முறை, குடியிருப்புகளைத் தீயிடுதல் எனத் தனது அட்டூழியங்களால் மூன்று இலட்சம் மக்களை வீடற்றவர்களாக்கி ஓடச் செய்திருக்கும் சல்வா ஜுடூம்3 என்ற ‘மக்கள் சேனை’க்கு ஆயுதத்தையும் ஆதரவையும் அரசாங்கமே வழங்கி வருகிறது; அதுவும் போதாதாம். தற்போது, இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையையும், ஆயிரக்கணக்கான துணை ராணுவப் படையினரையும் களத்திலிறக்க முடிவு செய்திருக்கிறது அரசு. பிலாஸ்பூரில் (9 கிராமங்களை அப்புறப்படுத்தி) படைத் தலைமையகத்தையும், ராஜ்நந்த்காவுனில் (7 கிராமங்களை அப்புறப்படுத்தி) விமானத் தளத்தையும் நிறுவுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.  இம்முடிவுகளெல்லாம் முன்னமே எடுக்கப்பட்டவை என்பது தெளிவாகவே தெரிகின்றது. சர்வேக்கள் நடத்தி முடிக்கப் பட்டிருக்கின்றன; குறிப்பான இடங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்தப் போர், இப்போதல்ல, கொஞ்ச காலமாகவே நெருங்கி, நெருங்கி வந்துகொண்டே இருந்திருக்கிறது. சுவாரசியமாக இல்லை? இப்போது இந்திய விமானப்படையின் இராணுவ ஹெலிகாப்டர்களுக்கு ’தற்காப்பின் பொருட்டு சுடுவதற்கான உரிமையை’- எந்த உரிமையைப் பரம  ஏழைகளான தனது குடிமக்களுக்கு வழங்குவதற்கு அரசு மறுக்கிறதோ அந்த உரிமையை – அரசு வழங்கி விட்டது.

அவர்கள் யாரை நோக்கிச்  சுடப் போகிறார்கள்?  காட்டிற்குள் தலைதெறிக்கப் பயந்தோடும் ஒரு சாதாரண மனிதனிடமிருந்து ஒரு மாவோயிஸ்டை பாதுகாப்புப் படை எங்ஙனம் இனம் பிரித்துக் கண்டுபிடிக்கும்? பல நூற்றாண்டுகளாய் வில்லும் அம்பும் ஏந்தி வாழும் பழங்குடி மக்கள், இப்போதும் அவற்றை ஏந்தி நடப்பார்களாயின் அவர்களும் மாவோயிஸ்டுகளாகக் கணக்கில் கொள்ளப்படுவார்களா? ஆயுதம் ஏந்திப் போரிடாத மாவோயிஸ்டு அனுதாபிகளும் கூட  சுட்டுத்தள்ளப்பட வேண்டிய இலக்குகளில் அடங்குவார்களா?  நான் தாண்டேவாடா சென்றிருந்தபோது, தனது ‘பசங்களால்’ கொல்லப்பட்ட 19 மாவோயிஸ்டுகளின் புகைப்படங்களைக் காவல்துறை கண்காணிப்பாளர் என்னிடம் காட்டினார். “இவர்கள் மாவோயிஸ்டுகள்தான் என்று  நான் மற்றவர்களுக்கு எப்படிச் சொல்ல முடியும்” என்று கேட்டேன். “பாருங்க மேடம், இவுங்க கிட்ட மலேரியா மாத்திரை, டெட்டால் பாட்டில் எல்லாம் இருந்துச்சு… இதெல்லாம் வெளியில இருந்து வந்த விசயங்களில்லையா?” என்றார்.

என்ன வகைப்பட்ட போராய் நடக்கப்போகிறது இந்தக் காட்டு வேட்டை? அது எப்பொழுதேனும் நமக்குத் தெரிய வருமா? காட்டுக்குள்ளிருந்து செய்திகளெதுவும் வெளிவருவதில்லை. மேற்கு வங்கத்தின் லால்கர் ஏற்கெனவே சுற்றிவளைத்துத் துண்டிக்கப்பட்டு விட்டது. யாரேனும் உள்ளே செல்ல முயன்றால், அடித்து உதைத்துக் கைது செய்யப்படுகின்றார்கள். அப்புறம் வழக்கம்போல மாவோயிஸ்டுகள் எனப் பட்டம் சூட்டப்படுகிறார்கள். தாண்டேவாடாவில் ஹிமான்ஷு குமார் என்பவரால் நடத்தப்படும் வன்வாசி சேத்னா ஆஸ்ரம் எனும் காந்திய ஆசிரமம், சில மணி நேரங்களில் புல்டோசர்களைக் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.  அந்த ஆசிரமம்தான் போர்க்களப் பகுதி துவங்குமிடத்துக்கு முன்னால் அமைந்திருந்த ஒரே ஒரு நடுநிலைப் புகலிடம். இப்பகுதிக்கு வேலை செய்ய வரும் பத்திரிகையாளர்கள், மனித உரிமைச் செயல் வீரர்கள், ஆய்வாளர்கள், உண்மை அறியும் குழுவினர் ஆகியோர் தங்கிச் செல்வதற்கு எஞ்சியிருந்த ஒரே இடம்.

தனிடையே, இந்தியாவின் ஆளும் நிறுவனம், தனது சர்வ வல்லமை பொருந்திய ஆயுதத்தைக் களமிறக்கியிருக்கின்றது. ஆளும் நிறுவனங்களின் உடன்படுக்கை ஊடகங்கள், இதுகாறும் தொடர்ச்சியாக வழங்கிக் கொண்டிருந்த இசுலாமிய பயங்கரவாதம் குறித்த புனையப்பட்டதும், ஆதாரமற்றதும், வெறியைக் கிளப்பும் தன்மையதுமான கதைகளை ஒரே இரவில் மாற்றி, அதே ரகத்தைச் சார்ந்த ‘சிவப்பு பயங்கரவாதம்’ குறித்த கதைகளை வழங்கத் தொடங்கின. சகிக்கவொண்ணாத இந்தக் கூச்சல்களுக்கிடையே, சிறு ஓசையும்கூடத்  தப்பிக் கசிந்துவிடாத வகையில், போர்க்களப் பகுதி, அமைதியின் வலையால் சுற்றி வளைத்து இறுக்கப்படுகின்றது. ‘இலங்கை வழித் தீர்வு’ தான் அவர்களது திட்டம் போலும்! புலிகளுக்கு எதிரான போரில், “இலங்கை அரசு இழைத்திருக்கும் போர்க்குற்றங்களைப் பற்றிய ஒரு சர்வதேச விசாரணை வேண்டும்” என்ற கோரிக்கையை ஐரோப்பிய அரசுகள்  ஐ.நாவில் முன் வைத்தபோது, அதற்கு இந்திய அரசு முட்டுக்கட்டை போட்டதே, அது நிச்சயமாகக் காரணமின்றி செய்யப்பட்டதல்ல.

இந்தத் திசையில் செய்யப்படும் முதல் காய்நகர்த்தலாக “நீ எங்களோடு இல்லை என்றால் மாவோயிஸ்டுகளுடன் இருக்கிறாய்” என, ஜார்ஜ் புஷ்ஷின் எளிய இருமைக் கோட்பாட்டின் அடிப்படையிலான  தீவிரமானதொரு பிரச்சாரம் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் நாடெங்கும் நடைபெறும் எண்ணற்ற வடிவங்களிலான எதிர்ப்புப் போராட்டங்கள் அனைத்தும் ‘மாவோயிஸ்டு பிரச்சினை’ என்று வேண்டுமென்றே குறுக்கப் படுகின்றன. இவ்வாறு வேண்டுமென்றே அதீதமாய்க் காட்டப்படும் மாவோயிஸ்டு அபாயம் தனது இராணுவமயமாக்கலை நியாயப்படுத்திக் கொள்ள அரசுக்கு உதவுகிறது. (இப்பிரச்சாரம் நிச்சயமாய் மாவோயிஸ்டுகளுக்கு எந்தத் தீங்கையும் விளைவிக்கவில்லை. தன் மீது இத்தகைய தனிப்பட்ட கவனம் குவிக்கப்படுவது குறித்து எந்தக் கட்சிதான் அதிருப்தி கொள்ளும்?) பயங்கரவாதத்துக்கு எதிரான போர் எனும் இந்தப் பொய்மையைத் திரைகிழிப்பதில் நமது சக்தியனைத்தும் உறிஞ்சப்படுகையில், அரசு இத்தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனது இராணுவ நடவடிக்கையின் வீச்சிற்குள்  நூற்றுக்கணக்கான பிற எதிர்ப்பு இயக்கங்களையும் வளைத்து இழுத்து, அவர்கள் மீதும்  ‘மாவோயிஸ்டு அனுதாபிகள்’ என முத்திரை குத்தி துடைத்தெறியும்.

எதிர்காலம் என்று குறிப்பிட்டு நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சிப்போக்கு ஏற்கெனவே அமலுக்கு வந்துவிட்டது.  நந்திகிராமிலும், சிங்கூரிலும் மேற்கு வங்க அரசு இதைத்தான் செய்ய முயன்றது, ஆனால் தோற்றுவிட்டது. தற்போது லால்கரில், போலீசு அட்டூழியங்களுக்கு எதிரான மக்கள் கமிட்டி என்ற அமைப்பினர், மாவோயிஸ்டுகள் மீது அனுதாபம் கொண்டிருந்த போதிலும், தனித்தவொரு மக்கள் இயக்கமாகவே செயல்படுகின்றனர். எனினும், இவ்வமைப்பு மாவோயிஸ்டு அமைப்பினரின் வெளிப்படையான பிரிவு என்றே அழைக்கப்படுகின்றது. தற்போது கைது செய்யப்பட்டு, பிணை மறுக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கும் இந்த அமைப்பின் தலைவர் சத்ரதார் மகாத்தோ, மாவோயிஸ்டு தலைவர் என்று வேண்டுமென்றே அழைக்கப்படுகிறார். மாவோயிஸ்டுகளுக்கு கூரியர் வேலை பார்த்தார் என அற்பமான சோடிக்கப்பட்ட காரணத்துக்காக இரண்டு ஆண்டுகளை சிறையில் கழித்த மருத்துவரும், மனித உரிமைப் போராளியுமான பினாயக் சென்னின் கதையை நாம் அறிவோம். வெளிச்சம் முழுவதும் காட்டு வேட்டையின் மீது பாய்ச்சப்பட்டு, கவனம் இங்கே குவிக்கப்பட்டிருக்கும் சூழலில், போர் நடைபெறும் இந்தக் களத்துக்கு வெளியே, வெகு தொலைவில், நாட்டின் ஏனைய பகுதிகளில், ஏழைகள், தொழிலாளர்கள், நிலமற்றவர்கள் ஆகியோர் மீதான தாக்குதலும், யாருடைய நிலங்களையெல்லாம் ‘பொதுத் தேவைக்காக’ அபகரிக்க அரசு விரும்புகிறதோ, அவர்கள் மீதான தாக்குதலும் தீவிரமடையும். அவர்களுடைய துன்பம் அதிகரிப்பது மட்டுமல்ல, அவர்களுடைய கதறல்களும் முறையீடுகளும் எந்தச் செவியிலும் நுழைய முடியாமல் கேட்பாரின்றி அவிந்தே போகும். .

போர் தொடங்கி விட்டால், மற்றெல்லாப் போர்களையும் போலவே, தனக்குப் பொருத்தமானதொரு இயக்கத்தையும், நியாயங்களையும், தனக்கே உரித்தானதொரு பொருளியலையும் கூட அது வளர்த்துக் கொள்ளும். போகப்போக, இந்தப் போர் என்பது மீண்டு வரவே முடியாத ஒரு வாழ்க்கை முறையாகவும் மாறும். ஈவிரக்கமற்ற கொலைக்கருவியான ராணுவத்தைப் போலவே போலீசும் நடந்துகொள்ளவேண்டுமென இந்தப் போர் எதிர்பார்க்கும். ஊழல் மலிந்த, ஊதிப் பருத்த நிர்வாக எந்திரமான போலிசைப்போலவே துணை ராணுவப் படைகளும் மாறிவிடும் என்பதும் எதிர்பார்க்கப்படவேண்டும். நாகலாந்திலும், மணிப்பூரிலும், காஷ்மீரிலும்  இப்படித்தான் நடந்ததென்பதை நாம் பார்த்திருக்கின்றோம்.

ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், இந்தியாவின் ‘இதயப் பகுதியில்‘ போரிடவிருக்கும் பாதுகாப்புப்படையினருக்கு, தாங்கள் யாரை எதிர்த்துப் போர் நடத்துகிறார்களோ, அந்த மக்களின் பரிதாபத்திற்குரிய நிலைமையிலிருந்து தங்களது நிலைமை பெரிதும் வேறுபட்டதல்ல என்ற உண்மை வெகு விரைவிலேயே புரிந்து விடும். காலப்போக்கில் மக்களையும், அவர்களின் மீது சட்டத்தை நிலைநாட்டும் படையினரையும் பிரித்துக் காட்டுகின்ற தடுப்புச்சுவர் முழுவதிலும் ஓட்டைகள் விழுந்து விடும். துப்பாக்கிகளும், வெடி மருந்துகளும் வாங்கப்படும், விற்கப்படும். சொல்லப்போனால் இது ஏற்கெனவே நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்தப் போரில் கொல்லப்படுபவர்கள் யாராக இருப்பினும் – பாதுகாப்புப் படையினராயினும்,  மாவோயிஸ்டுகளாயினும், சண்டையில் ஈடுபடாத குடிமக்களாக இருப்பினும் – பணக்காரர்களுக்காக நடத்தப்படும் இந்தப் போரில் மடிபவர்கள் அனைவரும் ஏழைகளாகவே இருப்பர். அதே நேரத்தில், இந்தப் போர் தன்னை எந்த விதத்திலும் பாதிக்கப்போவதில்லை என்று யாரேனும் எண்ணிக் கொண்டிருப்பார்களாயின், அவர்கள் தம் எண்ணத்தை மாற்றிக் கொள்ளட்டும்.  இந்தப் போரின் கோரப்பசி விழுங்கப்போகும் தீனி, நாட்டின் பொருளாதாரத்தையே உறிஞ்சி ஊனமாக்கப் போவது நிச்சயம்.

ந்த அலையைத் தடுக்கவும், போரை நிறுத்தவும், என்ன செய்ய முடியும் என்பது குறித்து விவாதிக்க, நாடெங்கிலும் உள்ள பல்வேறு மனித உரிமைக் குழுக்கள்,  சென்ற வாரம் தில்லியில் தொடர்ச்சியான பல கூட்டங்களை நடத்தின. அனைவரும் அறிந்த ஆந்திர மாநில மனித உரிமை செயல் வீரரான முனைவர் பாலகோபால் அங்கே இல்லாமல் போனதால் ஏற்பட்ட வலியை நாம் அனைவருமே உணரமுடிந்தது. நமது சமகால அரசியல் சிந்தனையாளர்களிடையே துணிவும் அறிவுக்கூர்மையும் படைத்தவர்களில் ஒருவரான அவரது தேவை நமக்கு மிகவும் அவசியமாய் இருக்கும் இந்தத் தருணத்தில், அவர் நம்மை விட்டுச் சென்றுவிட்டார்.4. இரண்டு வாரங்களுக்கு முன் அவர் காலமாகிவிட்டார்.

இருந்த போதிலும், இந்தியாவின் குடிமை உரிமைச் சமூகத்தைச் சார்ந்த மனித உரிமை செயல் வீரர்கள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் பல்வேறு துறைகளையும் சார்ந்தவர்கள் அங்கே ஆற்றிய உரைகளில் வெளிப்பட்ட தொலைநோக்கையும், ஆழத்தையும், அனுபவத்தையும், சான்றாண்மையையும், அரசியல் கூர்மையையும், அனைத்துக்கும் மேலாக அவர்களிடம் வெளிப்பட்ட உண்மையான மனிதநேயத்தையும் கேட்டிருந்தால், நிச்சயமாக பாலகோபால் நிம்மதி கொண்டிருப்பார் என்று நான் நம்புகிறேன். இவர்களெல்லோரும் தலைநகரில் கூடிய இந்த நிகழ்வு, நமது தொலைக்காட்சி நிலையங்களில் ஒளியுமிழ் விளக்குகளுக்கு அப்பால், செய்தி ஊடகங்களின் கொட்டுச்சத்தம் கிளப்பும் பரபரப்பிற்கு அப்பால், இந்தியாவின் நடுத்தர வர்க்கங்களுக்குள்ளேயும் ஒரு மனித இதயம் இன்னும் துடித்துக் கொண்டிருப்பதை அடையாளம் காட்டின. “பயங்கரவாதத்திற்கு உகந்ததான  ஒரு அறிவுத்துறைச் சூழலை உருவாக்குகிறார்கள்” என்று மத்திய உள்துறை அமைச்சர் சமீபத்தில் இவர்கள் மீது குற்றம் சாட்டியிருந்ததில் வியப்பதற்கு ஏதுமில்லை. அக்குற்றச்சாட்டு அச்சுறுத்தும் நோக்கில் உரைக்கப்பட்டதாயிருப்பின், அதன் விளைவென்னவோ நேர் எதிரானதாகவே இருந்தது.

அங்கு உரையாற்றியோர் தாராளவாத ஜனநாயகச் சிந்தனை முதல் தீவிர இடதுசாரி சிந்தனை வரையிலான பல்வேறு பட்ட கருத்துக்களையும் பிரதிபலித்தனர். அங்கே பேசியவர்களில் யாரும் தம்மை மாவோயிஸ்டு என்று அழைத்துக் கொள்ளவில்லையெனினும், “அரசு வன்முறைக்கு எதிராகத் தம்மைக் தற்காத்துக் கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு” என்பதைக் கொள்கையளவில் யாரும் எதிர்க்கவில்லை. மாவோயிஸ்டு வன்முறை,  அவர்களது ’மக்கள் நீதிமன்றங்கள்’ வழங்கும் அதிரடித் தீர்ப்புகள், ஆயுதப் போராட்டத்தில் தவிர்க்கவியலாமல் ஊடுருவும் அதிகாரத்துவத்தால் ஆயுதமற்றோர் ஒடுக்கப்படுதல் என்பனவற்றில் பலருக்கும் உடன்பாடில்லை. தமது உடன்பாடின்மையை வெளிப்படுத்திய அதே நேரத்தில், சாமானிய மக்களுக்கு இந்திய நீதிமன்றங்கள் எட்டாக்கனியாக இருக்கின்ற காரணத்தினால்தான் மக்கள் நீதிமன்றங்கள் நீடிக்க முடிகின்றன என்பதையும், இன்று இந்தியாவின் இதயத்தில் வெடித்திருக்கும் இந்த ஆயுதப் போராட்டம் என்பது அழிவின் விளிம்பிற்கே தள்ளப்பட்டு, பற்றிக்கொள்ள ஏதுமின்றித் தவிக்கும் மக்களின் இறுதித் தெரிவே அன்றி, முதல் தெரிவு அல்ல என்பதையும் அவர்கள் அறிந்தே இருந்தனர்.

எனவே நிலவுகின்ற சூழ்நிலைகள் ஒரு போருக்கு நிகரானவையாக ஏற்கெனவே காட்சியளித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஒரு சில தனித்த மோசமான வன்முறை நிகழ்வுகளை எடுத்துக் கொண்டு நியாய விசாரம் செய்து, அவற்றிலிருந்து எளிய அறம் சார்ந்த முடிவுகளுக்கு வருவதில் உள்ள அபாயங்களைப் பேச்சாளர்கள் அனைவரும் உணர்ந்தே இருந்தனர். அரசமைப்பின் நிறுவனமயமாக்கப்பட்ட வன்முறையையும், அதை எதிர்த்த ஆயுத வன்முறையையும் சமநிலையில் வைத்துப் பார்க்கும் கண்ணோட்டத்திலிருந்து நீண்ட காலம் முன்பே எல்லோரும் விடுபட்டு விட்டனர். சொல்லப்போனால், ஓய்வுபெற்ற நீதிபதி பி.பி. சாவந்த், இந்தச் சமூக அமைப்பில் புரையோடிப்போயிருக்கும் அநீதியின் பால் கவனம் செலுத்துமாறு இந்த நாட்டின் ஆளும் நிறுவனங்களுக்கு நிர்ப்பந்தம் கொடுத்ததற்காக மாவோயிஸ்டுகளுக்கு நன்றி சொல்லும் அளவுக்குச் சென்றார்.

ஆந்திர மாநிலத்தில், மாவோயிஸ்டுகளின் குறுகிய செயல்பாட்டு காலகட்டத்தில், ஒரு மனித உரிமைச் செயல்வீரராக தான் பணியாற்றிய அனுபவங்களை ஹரகோபால் பகிர்ந்து கொண்டார். ஆந்திரத்தின் இரத்தக்களறியான காலங்களில்  மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை விடவும், குஜராத்தில் பஜ்ரங் தள் மற்றும் விசுவ இந்து பரிசத் தலைமையிலான இந்து மதவெறிக் கும்பல் 2002-ஆம் ஆண்டின் ஒரு சில நாட்களில்  கொன்றொழித்தோரின் எண்ணிக்கை மிக மிக அதிகம் என்ற உண்மையை, அவர் தமது பேச்சினூடாகக் கூறிச் சென்றார்.

லால்கர், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒரிசா போன்ற போர்ப் பகுதிகளிலிருந்து வந்திருந்தோர், போலிசு அடக்குமுறைகள், கைதுகள், சித்திரவதைகள், கொலைகள் ஊழல்கள் பற்றி விவரித்ததுடன், சில சமயங்களில் போலிசார், நேரடியாக சுரங்க நிறுவன அதிகாரிகளிடமிருந்தே ஆணைகளைப் பெற்று செயல்படுத்துவதாகவும் கூறினர். நிதி உதவி நிறுவனங்களிடமிருந்து (Aid agencies)  காசுவாங்கிக் கொண்டு, கார்ப்பரேட் முதலாளிகளின் முன்னேற்றத்திற்காகவே தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ள சில அரசு சாரா நிறுவனங்கள் ஆற்றுகின்ற சந்தேகத்திற்கிடமான, கேடான பாத்திரத்தை சிலர் விவரித்தனர்.

செயல் வீரர்களோ சாமானிய மக்களோ, எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, ஜார்கண்டிலும், சத்தீஸ்கரிலும் அவர்கள் அனைவரும் மாவோயிஸ்டு என முத்திரை குத்தப்பட்டு சிறை வைக்கப்படுகிறார்கள் என்பது பற்றித்தான் அவர்கள் மீண்டும் மீண்டும் பேசினார்கள். வேறு எதனை விடவும் இதுதான் மக்களை ஆயுதம் ஏந்துமாறும், மாவோயிஸ்டுகளுடன் இணைந்து கொள்ளுமாறும் பிடித்துத் தள்ளிவிடுகிறது என்று கூறினார்கள்.. ‘வளர்ச்சித் திட்டங்கள்‘ என்ற பெயரில் அப்புறப்படுத்தப்பட்ட ஐந்து கோடி மக்களில், ஒரு சிறு பகுதியளவு மக்களை வேறு இடங்களில் மீள் குடியமர்த்துவதற்குக் கூடத் தன்னால் முடியவில்லை என்று கைவிரித்த இந்த அரசாங்கத்தால், 300-க்கும் மேற்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக (பணக்காரர்களின் உள்நாட்டு வரியில்லா சொர்க்கங்கள்) மட்டும், 1,40,000 ஹெக்டேர்கள் வளமான நிலத்தை எப்படி திடீரென்று இனங்கண்டு தொழிலதிபர்களுக்கு வழங்க முடிந்ததென அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

“தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதற்காகத்தான், ‘பொதுத் தேவைக்கு’ என்ற பெயரில், அரசாங்கம் மக்களிடமிருந்து பலவந்தமாக நிலங்களை அபகரிக்கின்றது என்பது நன்கு தெரிந்திருந்தும்,  ‘நிலக் கையகப்படுத்தல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள ‘பொதுத் தேவை‘ என்ற சொல்லை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும்’ என்ற கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதி மன்றம், என்ன வகை நீதியைக் கடைப்பிடிக்கிறது?” என்ற கேள்வியை அவர்கள் எழுப்பினர். ‘அரசின் அதிகாரம் நிலைநாட்டப்பட வேண்டும்‘ 5  என்று அரசாங்கம் கூறும்போது, அதன் பொருள் காவல் நிலையங்கள் முறையாகக் கட்டியமைக்கப்பட வேண்டும் என்பதாக மட்டுமே ஏன் இருக்கிறது என்ற கேள்வியை அவர்கள் எழுப்பினார்கள்.

பள்ளிகளல்ல, மருத்துவமனைகளல்ல, வீட்டு வசதியல்ல, சுத்தமான குடிநீர் அல்ல, வனம்சார் விளை பொருளுக்கு நியாய விலை அல்ல,  குறைந்தபட்சம் போலிசு பயமின்றி நிம்மதியாய் வாழ விடுவதும் அல்ல, மக்களுடைய சிரமங்களைக் குறைத்து வாழ்க்கையைச் சற்றே எளிதாக்க உதவும் எதுவும் அல்ல… ‘அரசின் அதிகாரம்‘ என்பதற்கு ‘நீதி’ என்று ஒருபோதும் பொருள் கொள்ள முடிவதில்லையே அது ஏன், என்று அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

ஒரு காலம் இருந்தது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் என்று சொல்லலாம்.

புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் திணிக்கப்படும் இந்த ‘வளர்ச்சி‘யின் மாதிரி (model) குறித்து இது போன்ற கூட்டங்களில் கலந்து கொள்வோர் அப்போதெல்லாம் விவாதம் நடத்திக் கொண்டிருந்தார்கள். இன்றோ அந்த வளர்ச்சி ‘மாதிரி’ முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதில் மறு பேச்சுக்கே இடமில்லை. காந்தியவாதிகள் முதல் மாவோயிஸ்டுகள் வரை அனைவருமே இதில் உடன்படுகின்றார்கள். இதனைத் தகர்த்தெறியும் திறன் வாய்ந்த வழி எது என்பது மட்டுமே தற்போதைய கேள்வி.

எனது நண்பருடைய பழைய கல்லூரி நண்பரொருவர், கார்ப்பரேட் உலகத்தின் ஒரு பெரும்புள்ளி,  தனக்கு அதிகம் பரிச்சயமில்லாத ஒரு உலகத்தை அறிந்துகொள்ளும் தேவையில்லாத ஆர்வத்தில், இத்தகையதொரு கூட்டத்திற்கு வந்திருந்தார். ஃபேப் இந்தியா 6 குர்தாவுக்குள் தன்னை மறைத்துக் கொண்டிருந்தாலும், அவர் விலைமதிப்பு மிக்கவர் என்பதை அவரது தோற்றமும் வாசமும் காட்டிக் கொடுக்கவே செய்தன. சற்று நேரத்தில் அவர் இருப்புக் கொள்ளாமல் என் பக்கம் சாய்ந்து கிசுகிசுத்தார்: “கவலைப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை என்று யாராவது இவர்களிடம் சொல்ல வேண்டும். இவர்களால் இந்த ஆட்டத்தில் ஜெயிக்கவே முடியாது. எதை எதிர்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதே இவர்களுக்குப் புரியவில்லை. எவ்வளவு பணம் இதில் இறக்கப்பட்டிருக்கிறது தெரியுமா? இதில் பணம் போட்டிருக்கும் கம்பெனிகளால் அமைச்சர்கள், ஊடக முதலாளிகள், கொள்கை வகுப்பாளர்கள்.. என்று யாரையும் விலைக்கு வாங்க முடியும். தங்களுக்கான சொந்த அரசு சாரா நிறுவனங்களையும், கூலிப் படைகளையும் பராமரிக்க முடியும். அவர்களால் மொத்த அரசாங்கங்களையே விலைக்கு வாங்க முடியும். அவ்வளவு ஏன், அவர்கள் மாவோயிஸ்டுகளையே கூட  விலை பேசக்கூடியவர்கள். இவர்களையெல்லாம் பார்த்தால் நல்ல மனிதர்களாகத் தெரிகிறார்கள். இப்படி ஆகாத காரியத்துக்கு மூச்சைக் கொடுப்பதற்கு பதிலாக, இவர்கள் வேறு ஏதாவது உருப்படியான காரியத்தைக் கவனிக்கலாம் ” என்றார்.

மக்கள் காட்டுமிராண்டித்தனமாக  ஒடுக்கப்படும் போது, அதை எதிர்த்துப் போராடுவதைக் காட்டிலும் வேறு என்ன ‘உருப்படியான‘ வேலையை அவர்கள் தெரிவு செய்ய முடியும்? அவ்வாறு தெரிவு செய்வதற்குத்தான் மக்களுக்கு வேறு என்ன வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன, தற்கொலை செய்து கொள்வதைத் தவிர?  கடன் சுழலில் சிக்கிய பல விவசாயிகள் அதைத்தானே தெரிவு செய்தார்கள்?

(நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்படும் ஏழை மக்கள், எதிர்த்துப் போராடவேண்டும் என்று சிந்திப்பதற்குப் பதிலாக, தற்கொலை செய்து மடிந்து விடுவார்களேயானால் அதுதான், இந்தியாவின் ஆளும் நிறுவனங்களுக்கும், ஊடகங்களில் உள்ள அதன் பிரதிநிதிகளுக்கும் பிடித்தமானதாக இருக்கிறதோ என்று எனக்குத் தோன்றுகிறது. எனக்கு மட்டும்தானா அப்படித் தோன்றுகிறது?)

த்தீஸ்கர், ஒரிசா, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காள மக்கள் – அவர்களில் சிலர் மாவோயிஸ்டுகள், பலர் மாவோயிஸ்டுகள் அல்ல – அரும்பாடுபட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் ஆக்கிரமிப்பைக் கடந்த சில ஆண்டுகளாய் தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இந்த ’காட்டு வேட்டை’ நடவடிக்கை அவர்களது போராட்டத்தின் தன்மையை எப்படி மாற்றப் போகிறது என்பதுதான் தற்போதைய கேள்வி. எதிர்த்துப் போராடும் மக்கள் எதிர்கொண்டு நிற்கும் சக்தி எது என்பதுதான் கேள்வி.

வரலாற்று ரீதியாகப் பார்த்தோமானால், உள்ளூர் மக்களுடனான மோதல்கள் பலவற்றிலும் சுரங்கத்தொழில் நிறுவனங்களே வெற்றி பெற்றிருக்கின்றன என்பது ஒரு உண்மை. போர்த்தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனங்களை விட்டுத்தள்ளுங்கள், அநேகமாக எல்லா கார்ப்பரேட் நிறுவனங்களின் கடந்தகாலமும்  ஈவிரக்கமற்றதுதான். கார்ப்பரேட் முதலாளிகள் குரூரமானவர்கள், களம் பல கண்டு இறுகி உரமேறியவர்கள்.  “உயிரைக் கூடத் தருவோம், ஒருபோதும் எமது நிலத்தைத் தர மாட்டோம்”  என்று மக்கள் எழுப்பும் முழக்கம், குண்டு வீச்சைத் தாங்கும் கூடாரத்தின் மீது விழும் மழைத் தூறல் போல, அவர்கள் மீது பட்டுத் தெறிக்கிறது. இந்த முழக்கங்களையெல்லாம் பல காலமாக அவர்கள் கேட்டிருக்கிறார்கள் – ஆயிரக்கணக்கான மொழிகளில், நூற்றுக்கணக்கான நாடுகளில்.

தற்போது இந்தியாவில் வந்திறங்கிய நாள் முதல் விமான நிலையங்களின் முதல் வகுப்பு ஓய்வறைகளில்தான் அவர்களில் பல பேர் இன்னமும் உலவிக் கொண்டிருக்கிறார்கள். மதுவகைகளுக்கு ஆர்டர் கொடுக்கிறார்கள். சோம்பல் மிகுந்த மிருகங்களைப் போல மெதுவாகக் கண்களை இமைக்கிறார்கள். தாங்கள் கையொப்பமிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs)- அவற்றில் சில 2005 ஆம் ஆண்டிலேயே போடப்பட்டவை – உண்மையான பணமாக உருமாறும் நாளுக்காகக் காத்திருக்கிறார்கள். விமான நிலைய ஓய்வறையிலேயே நான்காண்டுகளைத் தள்ளுவது என்பது, மிகவும் சகிப்புத்தன்மை கொண்ட மனிதனைக்கூட சோதிக்கின்ற அளவுக்கான தாமதம் அல்லவா?  ஜனநாயக நடைமுறை கோருகின்ற விரிவான ஆனால் பொருளற்ற சடங்குகள்: மக்கள் கருத்தறிதல்(சில நேரங்களில் இது மோசடியாக நடத்தப்படுவது), சுற்றுச்சூழல் விளைவுகள் பற்றிய மதிப்பீட்டு அறிக்கைகள் (சில நேரங்களில் இவை போலியானவை), பல்வேறு அமைச்சகங்களிடம் பெற வேண்டிய ஒப்புதல்கள் (பெரும்பாலும் இவை விலைக்கு வாங்கப்படுபவை), நீண்ட காலமாய் இழுத்துக் கொண்டு கிடக்கும் நீதிமன்ற வழக்குகள். போலி ஜனநாயகம்தான், இருந்தாலும் கூட காலத்தைத் தின்று விடுகிறதே. காலம் என்றால் வெறும் காலமல்ல, அதுதானே பணம்.

நாம் பேசிக் கொண்டிருக்கும் பணத்தின் அளவு என்ன தெரியுமா? விரைவில் வெளிவர இருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தங்களது நூலில்(Out of This Earth: East India Adivasis and the Aluminium Cartel) சமரேந்திர தாஸ் மற்றும் பெலிக்ஸ் பெடல் ஆகியோர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்கள்.

ஒரிசாவில் மட்டும் உள்ள பாக்சைட் இருப்பின் மதிப்பு 2.27 டிரில்லியன் டாலர்கள் (இந்தியாவுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பைப் போல இது இரண்டு மடங்குக்கும் அதிகம்) எனக் குறிப்பிட்டுள்ளனர். அது 2004 ஆண்டின் விலை நிலவரம். பாக்சைட்டின் இன்றைய விலையில் இதன் மதிப்பு சுமார் 4 டிரில்லியன் டாலர்கள் (சுமார் 200 இலட்சம் கோடி ரூபாய்) இதிலிருந்து அதிகாரப்பூர்வமாக, 7% க்கும் குறைவான தொகையைத்தான் ராயல்டியாக அரசாங்கம் பெறவிருக்கிறது.  ஒரு சுரங்கத் தொழில் நிறுவனம் நன்கு அறிமுகமானதாகவும் அங்கீகரிக்கப்பட்டதாகவும் இருக்கும் பட்சத்தில், தாதுப் பொருள் வெட்டியெடுக்கப்படாமல் மலைக்குள் இருக்கும்போதே, அநேகமாக அது முன்பேரச் சந்தையில் விலைபேசப் பட்டிருக்கும். அதாவது, பழங்குடி மக்களைப் பொருத்தவரை வாழும் தெய்வமாகவும், அவர்களது வாழ்க்கைக்கும் நம்பிக்கைக்குமான ஊற்றுமூலமாகவும், இந்தப் பிராந்தியத்தினுடைய சூழலின் ஆரோக்கியத்துக்கு ஆணிவேராகவும் திகழும் இம்மலைகள், கார்ப்பரேட் முதலாளிகளைப் பொருத்தவரை மிகவும் மலிவான தாதுப்பொருள் கிடங்குகள் – அவ்வளவுதான். கிடங்கு என்றால் அதில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பொருட்கள் விரும்பியவுடன் எளிதாக எடுக்கத் தக்கதாய் இருக்க வேண்டும், அல்லவா? கார்ப்பரேட் முதலாளிகளுடைய கண்ணோட்டத்தில் பார்ப்போமானால், மலைக்குள்ளிருந்து பாக்சைட் வெளியில் வந்தே தீரவேண்டும்.  சுதந்திரச் சந்தையின் அவசரத் தேவைகளும், நிர்ப்பந்தங்களும்  அப்படிப்பட்டவை ஆயிற்றே!

இது ஒரிசாவிலுள்ள பாக்சைட் கனிமத்தின் கதை மட்டும்தான்.  இந்த நான்கு டிரில்லியன் டாலர்களோடு, சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்டில் புதைந்திருக்கும் பல கோடி டன் உயர்தர இரும்புத்தாதுவின் மதிப்பையும், யுரேனியம், சுண்ணாம்புக்கல்,  டாலமைட், நிலக்கரி, வெள்ளீயம், கிரானைட், மார்பிள், செம்பு, வைரம், தங்கம், க்வார்ட்ஸைட், கோரண்டம், பெரில், அலெக்சாண்டரைட், சிலிக்கா, புளூரைட், கார்னெட் போன்ற 28 வகை அரிய கனிமப் பொருட்களின் பல மில்லியன் டாலர் மதிப்பையும் கூட்டிக் கொள்ளுங்கள். அவற்றோடு, கையெழுத்திடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் (ஜார்க்கண்டில் மட்டும் 90 ஒப்பந்தங்கள்) அங்கமாக அம்மாநிலங்களில் கட்டப்படவிருக்கும் மின் உற்பத்தி நிலையங்கள், அணைகள், நெடுஞ்சாலைகள், இரும்பு எஃகு மற்றும் சிமெண்டுத் தொழிற்சாலைகள், அலுமினிய உருக்காலைகள் மற்றும் பிற உள் கட்டுமானத் திட்டங்களின் பண மதிப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இது இவ்வேட்டையின் பிரம்மாண்டத்தையும், முதல் போட்டிருப்பவர்களின் அவசரத்தையும் புரிந்து கொள்ள உதவும் ஒரு கோட்டுச் சித்திரத்தை வழங்கும்.

ஒருகாலத்தில் தண்ட காரண்யா என அழைக்கப்பட்ட இக்காடு, மேற்கு வங்கத்தில் தொடங்கி ஜார்க்கண்ட், ஒரிசா, சத்தீஸ்கர், மற்றும் ஆந்திர – மகாராட்டிர மாநிலங்களின் சில பகுதிகள் எனப் படர்ந்து விரிகின்றது. இது காலங்காலமாய் இந்தியாவின் கோடிக்கணக்கான பழங்குடி மக்களுக்குத் தாயகம். இப்போதெல்லாம் இந்தப் பகுதியை ’சிவப்புத் தாழ்வாரம்’ அல்லது ’மாவோயிஸ்டுத் தாழ்வாரம்’ (Maoist corridor)என செய்தி ஊடகங்கள் அழைக்கத் துவங்கியுள்ளன. இதனை ‘எம்.ஒ.யு.-யிஸ்ட் தாழ்வாரம்’ (MoUist corridor -புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பிரதேசம்) என்று அழைப்பதே சாலப் பொருந்தும். ஏனென்றால் இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் 5-வது பிரிவு பழங்குடி மக்களுக்கு வழங்கியிருக்கும் பாதுகாப்போ, நிலங்களிலிருந்து அவர்களை வெளியேற்றக் கூடாது என்ற வாக்குறுதியோ ஒரு பொருட்டாகவே கருதப்படுவதில்லை. அரசியல் சட்டம் பார்க்க அழகாக இருக்க வேண்டுமென்பதற்காக, ஒரு திரைச்சீலையாக, ஒரு அவசர முகப்பூச்சாகத்தான்  அப்பிரிவு இடம் பெற்றிருக்கின்றது எனத் தோன்றுகிறது.

நூற்றுக்கணக்கான நிறுவனங்கள், ஊர் பேர் தெரியாத நிறுவனங்கள் முதல், உலகின் மாபெரும் சுரங்க மற்றும் இரும்பு நிறுவனங்களான மிட்டல், ஜிண்டால், டாடா, எஸ்ஸார், போஸ்கோ, ரியோ டின்டோ, பிஎச்பி பில்லிடன், வேதாந்தா வரை  அனைவரும் பழங்குடி மக்களின் தாயகத்தை அபகரித்துக் கொள்வதற்குப் போட்டி போட்டுக் கொண்டு பாய்கின்றனர்.

ஒவ்வொரு மலையின் மீதும், ஒவ்வொரு நதியின் மீதும், காட்டின் பசும்புற்திட்டுகள் மீதும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கின்றது. கற்பனைக்கு எட்டாத அளவிலான ஒரு சமூக மற்றும் சூழலியல் மாறாட்டத்தைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆயினும், இவற்றில் பெரும்பாலானவை இரகசியங்கள். இவை குறித்த விவரங்களைப் பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியாது.

உலகின் ஆகப் பரிசுத்தமானதொரு காட்டையும், அதனைச் சார்ந்த சூழலமைப்பையும், அதில் வாழும் மக்களையும் சேர்த்து அழிப்பதற்குத் தீட்டப்பட்டிருக்கும் இந்தத் திட்டம் குறித்து, கோபன் ஹேகனில் நடைபெறவிருக்கும் தட்ப வெப்ப மாற்றம் குறித்த மாநாட்டில் விவாதிக்கக் கூடும் என்று நான்  ஒருக்காலும் நினைக்கவில்லை. நமது 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகள், மாவோயிஸ்டு வன்முறை குறித்த மயிர்க்கூச்செரியும் கதைகளுக்காக அலைந்து திரிகின்றனர். உண்மையான கதை கிடைக்காவிடில் ஒரு கட்டுக்கதையைத் தயாரிக்கின்றனர். ஆனால், கதையின் இந்தப் பக்கம் குறித்து அவர்களுக்கு சிறிதும் நாட்டம் இருப்பதாய் தெரியவில்லை. ஏன் என்று எனக்குப் புரியவில்லை.

அவர்களை பக்திப் பரவசத்துக்கு ஆளாக்கியிருக்கும் ‘வளர்ச்சியாளர் குழுவினர்’ (development lobby), சுரங்கத் தொழிலின் வளர்ச்சியானது,  மொத்த உள்நாட்டு உற்பத்தியை கற்பனைக்கெட்டாத வேகத்தில் முடுக்கி விடுமென்றும், வெளியேற்றப்படும் மக்களுக்கெல்லாம் வேலைவாய்ப்பை வாரி வழங்குமென்றும் கூறி வருகிறார்களே, அதன் தாக்கமாகவும் இருக்கலாம். ஆனால் சுற்றுச்சூழல் நாசம் தோற்றுவிக்க இருக்கும் படுபயங்கரமான பேரழிவின் ‘விலை மதிப்பை’ இவர்கள் தங்கள் கணக்கில் சேர்ப்பதில்லை. அவர்கள் முன்வைக்கும் குறுகிய வரம்புகளுக்கு உட்பட்டே பார்த்தாலும் கூட இந்தக் கூற்று ஒரு அப்பட்டமான பொய்யாகும்.

கிடைக்கும் பணத்தின் பெரும்பகுதி சுரங்கக் கம்பெனிகளின் வங்கிக் கணக்குகளுக்குப் போய் விடும். அரசாங்க கஜானாவுக்கு வருவதோ 10% க்கும் குறைவான தொகை தான். வெள்ளமென வெளியேற்றப்படும் மக்கள் கூட்டத்தில், ஒரு சிறு துளிக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்கும்.  அவர்களும் அடிமைக் கூலியை ஈட்டுவதற்காக, கவுரவமற்ற முதுகெலும்பை முறிக்கும் வேலைகளையே செய்ய வேண்டியிருக்கும். வெறி கொண்டு பொங்கும் இந்தப் பேராசைக்கு வளைந்து கொடுத்ததன் மூலம், நமது சுற்றுச்சூழலை பலி கொடுத்து, பிற நாடுகளின் பொருளாதாரங்களுக்குத்தான் நாம் வலிமை சேர்க்கின்றோம்.

புரளும் பணத்தின் அளவு இத்தனை பிரம்மாண்டமாக இருக்கும்போது, இதில் ஆதாயம் பெறும் பங்குதாரர்களை அடையாளம் காண்பது அத்தனை எளிதல்லவே. சொந்த ஜெட் விமானத்தில் மிதக்கும் சுரங்கக் கம்பெனிகளின் தலைமை நிர்வாக அதிகாரியில் தொடங்கி, மாதம் இரண்டாயிரம் ரூபாய் காசு வாங்கிக்கொண்டு, தம் சொந்த மக்களையே வல்லுறவுக்கு ஆளாக்கி, கொலை செய்து, கிராமங்களைத் தீயிட்டுக் கொளுத்தி சுரங்க வேலை தொடங்குவதற்கு இடத்தை காலி செய்து கொடுக்கின்ற, மக்கள் படையின் (சல்வா ஜுடும்) பழங்குடி இன சிறப்பு காவல் அதிகாரிகள் வரை – முதல் நிலை, இடை நிலை, கடை நிலை எனப் பரந்து விரிந்து கிடக்கிறது இந்தப் பங்குதாரர்களின் உலகம்.

இவர்கள் ஒவ்வொருவரும் தமது நலனையும், தாம் பெறும் ஆதாயங்களையும் பிரகடனம் செய்யத்தேவையில்லை. பதவியையும் அதிகாரத்தையும் பயன்படுத்திக் கொண்டு, தமது நலன்களை மேம்படுத்திக் கொள்ள இவர்கள் அனைவரும் தாராளமாக அனுமதிக்கப்படுகின்றார்கள். எந்த அரசியல் கட்சி, எந்தெந்த அமைச்சர்கள், எம்.பிக்கள், அரசியல்வாதிகள், எந்தெந்த நீதிபதிகள், எந்தெந்த அரசு சாரா நிறுவனங்கள், எந்தெந்த சிறப்பு ஆலோசகர்கள், எந்தெந்த போலிசு அதிகாரிகள் ஆகியோருக்கு இந்தக் கொள்ளையில் நேரடிப் பங்கு இருக்கிறது, அல்லது  மறைமுகப் பங்கு இருக்கிறது என்பதை நாம் எப்படி, எந்தக் காலத்தில் தெரிந்து கொள்ள முடியும்? மாவோயிஸ்டுகளின் சமீபத்திய ‘அட்டூழியம்‘ குறித்த சூடான செய்தியை வெளியிடும் எந்தெந்த பத்திரிகைகள், ‘களத்திலிருந்து நேரடியாகச் செய்தி வழங்குகின்ற‘ – அல்லது தெளிவாகச் சொன்னால், களத்திலிருந்து  செய்தி வழங்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்ற, இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், களத்திலிருந்து அப்பட்டமாகப் புளுகுகின்ற – எந்தெந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்தக் கொள்ளையின் பங்குதாரர்கள் என்பதை நாம் எப்படித் தெரிந்து கொள்ள முடியும்?

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விடவும் பன்மடங்கு அதிகமான தொகையை, பல்லாயிரம் கோடி டாலர்களை இரகசியமாக ஸ்விஸ் வங்கியில் பதுக்கியிருக்கின்றார்களே இந்தியக் குடிமகன்கள்… அந்தப் பணத்தின் ரிஷிமூலம் எது?  எங்கிருந்து வந்தது? சென்ற பொதுத்தேர்தலில் செலவிடப்பட்ட 2 பில்லியன் டாலர் பணம் எங்கிருந்து வந்தது? அல்லது  தேர்தலுக்கு முந்தைய ’கவரேஜுக்கான பேக்கேஜ்களை’ ’மேல் நிலை’, ’கீழ் நிலை’ மற்றும் ’நேரலை’ என்று வகை பிரித்து, ஊடகங்களுக்கு அரசியல்வாதிகளும், கட்சிகளும்  அள்ளிக்கொடுத்ததைப் பற்றி சமீபத்தில் பத்திரிகையாளர் பி. சாய்நாத் எழுதியிருந்தாரே7, அந்த கோடிக்கணக்கான ரூபாய்கள்தான் எங்கிருந்து வந்தன? (குத்துக்கல்லைப் போல அமர்ந்திருக்கும் ஒரு விளங்காத ‘ஸ்டுடியோ விருந்தினரை’க் குடைந்தெடுக்கும் தொலைக்காட்சி செய்தியாளர், ‘மாவோயிஸ்டுகள் ஏன் தேர்தலில் நிற்கக் கூடாது? ஏன் மைய நீரோட்டத்துக்கு வர மறுக்கிறார்கள்?‘ என்று காட்டுக் கூச்சலாகக் கேள்வி எழுப்புவதை அடுத்தமுறை தொலைக்காட்சியில் நீங்கள் பார்க்கும்போது, தவறாமல் அந்தத் தொலைக்காட்சிக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள், ‘ஏனெனில் உங்களுடைய ரேட்டுகள் அவர்களுக்கு கட்டுபடியாகவில்லை‘ என்று.)

லன்களின் முரண்  (conflict of interest) குறித்தும், நெருக்கமானவர்கள்  அடையும் ஆதாயங்கள் (cronyism) குறித்தும் ஏராளமான கேள்விகள் பதிலளிக்கப்படாமலேயே  கிடக்கின்றன. இன்றைய ‘காட்டு வேட்டை’ நடவடிக்கையின் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான ப. சிதம்பரம், கார்ப்பரேட் வழக்கறிஞராகத் தொழில் நடத்தியபோது, பல்வேறு சுரங்க நிறுவனங்களுக்காக வாதாடியவர் என்ற உண்மையிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்ள வேண்டும்? வேதாந்தா நிறுவனத்தில் நிர்வாகம் சாரா இயக்குனர் என்ற பதவியில் இருந்த சிதம்பரம்,  2004-ஆம் ஆண்டில் அவர் நிதியமைச்சராகப் பதவி ஏற்ற நாளில்தான் அந்த இயக்குநர் பதவியிலிருந்து விலகினார் என்ற உண்மையிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்ள வேண்டும்? நிதியமைச்சராக பொறுப்பேற்றவுடனே வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு அவர் அளித்த அனுமதிகளில் முதன்மையானது ‘டிவின்ஸ்டார் ஹோல்டிங்ஸ்’ என்ற மொரிசியஸ் கம்பெனிக்கு வழங்கிய அனுமதிதான் என்பதிலிருந்தும், அந்தக் கம்பெனி வாங்கிய பங்குகள் வேதாந்தா குழுமத்தின் அங்கமான ஸ்டெரிலைட் நிறுவனத்தின் பங்குகளே என்ற உண்மையிலிருந்தும் நாம் என்ன புரிந்து கொள்ள வேண்டும்?

வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக ஒரிசாவைச் சேர்ந்த மனித உரிமை செயல் வீரர்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்து, “அந்நிறுவனம் அரசின் வழிகாட்டு நெறிகளை மீறியிருப்பதைச் சுட்டிக்காட்டியதுடன், சுற்றுச்சூழலை நாசப்படுத்தியதாகவும், மனித உரிமைகளை மீறியதாகவும் வேதாந்தாவின் மீது குற்றம் சாட்டி, நார்வே நாட்டின் ஓய்வூதிய நிதியம் கூட,  அந்நிறுவனத்தில் போட்டிருந்த தனது முதலீட்டைத் திரும்பப் பெற்றுக் கொண்டிருப்பதையும் சான்றாக எடுத்துக் காட்டினார்கள். உடனே, “வேதாந்தாவுக்கு பதில், அதன் துணை நிறுவனமான ஸ்டெர்லைட்டின் பெயருக்கு உரிமத்தை மாற்றிவிடலாம்” என்று நீதிபதி கபாடியா  பரிந்துரைத்தாரே,  இந்த உண்மையிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்ள வேண்டும்? அது மட்டுமல்ல, “நானும்தான் ஸ்டெர்லைட் நிறுவனத்தில் பங்குகள் வைத்திருக்கிறேன்” என்று சர்வ அலட்சியமாக நீதிபதி நாற்காலியில் அமர்ந்தவாறே அவர் அறிவிக்கவும் செய்தார். உச்சநீதி மன்றம் நியமித்த வல்லுநர்கள் குழுவே “சுரங்கம் தோண்டுவது, காடுகளையும், நீர் வளங்களையும், சுற்றுச்சூழலையும் ஆயிரக்கணக்கான பழங்குடியினரின் வாழ்வையும் வாழ்வாதாரங்களையும் அழிக்கும். எனவே அதற்கான அனுமதி மறுக்கப்பட வேண்டும்” எனத் தெளிவாக அறிக்கை கொடுத்திருந்தும், அந்த அறிக்கையின் கூற்றுகளை மறுப்புக் கூறாமலேயே, காடுகளை அழித்து சுரங்கம் தோண்டிக் கொள்ள ஸ்டெர்லைட்டுக்கு பெருந்தன்மையாக அவர் அனுமதி அளித்தார்.

டாடாக்களுடன்  புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான சில  நாட்களிலேயே, 2005 ஆம் ஆண்டில், தாண்டேவாடாவில் ‘தன்னெழுச்சியான’ மக்கள் படை என்ற பெயரில், மூர்க்கத்தனமாக மக்களை விரட்டியடித்து அவர்களது நிலங்களைக் கைப்பற்றித் தரும் ‘சல்வா ஜூடும்’ படை முறையாக துவக்கி வைக்கப்பட்டதே, பஸ்தாரில் கானகப் போருக்கான பயிற்சிப் பள்ளியும் அதே நாட்களில்  தொடங்கி வைக்கப்பட்டதே, இந்த உண்மைகளிலிருந்து நாம் எதைப் புரிந்து கொள்ள வேண்டும்?

இரு வாரங்களுக்கு முன்பு, அக்டோபர் 12 அன்று, தாண்டேவாடாவின்  லோஹந்தி குடாவில் அமையவிருக்கும் டாடா இரும்பு உருக்காலை நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவதற்கு முன் கடைப்பிடிக்க வேண்டிய சட்டபூர்வ நடைமுறையான ’மக்கள் கருத்தறிதல்’ என்ற நிகழ்ச்சிக்கு, பஸ்தாரை  சேர்ந்த இரண்டு கிராமங்களிலிருந்து 50 பழங்குடி மக்கள் அரசாங்க ஜீப்புகளில் கொண்டுவந்து இறக்கப்பட்டு, யாரும் நுழைந்துவிட முடியாமல் பாதுகாப்புப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே, சிறியதொரு அறையில் அந்தப் பழங்குடி மக்களைப் பார்வையாளர்களாக வைத்தே கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டதே (மக்கள் கருத்தறிதல் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக அறிவிக்கப் பட்டது. பஸ்தார் மக்கள் அளித்த ஒத்துழைப்புக்காக மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்) இந்த உண்மையிலிருந்து நாம் எதைப் புரிந்து கொள்ள வேண்டும்?

மாவோயிஸ்டுகளை ‘தனிப்பெரும் உள்நாட்டு பாதுகாப்பு அபாயம்‘ என்று பிரதமர் கூறத் தொடங்கிய தருணம் முதற்கொண்டே (அவர்களை ஒழித்துக் கட்ட அரசு தயாராகி விட்டது என்ற சமிக்ஞை கிடைத்ததுமே) இப்பிராந்தியத்தைச் சேர்ந்த பல சுரங்கத் தொழில் நிறுவனங்களின் பங்கு விலைகள் வானளாவ ஏறினவே, இந்த உண்மையிலிருந்து நாம் எதைப் புரிந்து கொள்ள வேண்டும்?

சுரங்க நிறுவனங்களுக்கு  இந்தப் போர், அவசரமாக, அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது. தங்களை அப்புறப்படுத்துவதற்கான முயற்சிகளனைத்தையும் இதுகாறும் எதிர்த்து நின்று எப்படியோ தாக்குப்பிடித்து வந்த பழங்குடி மக்களை, இந்தப் போரின் விளைவாக வெடிக்கவிருக்கும் வன்முறையின் தாக்கம், அவர்களது வசிப்பிடங்களிலிருந்து விரட்டியடிக்குமானால், சுரங்க நிறுவனங்கள்தான் அதனால் ஆதாயமடைபவர்களாக இருப்பர். விளைவு இப்படித்தான் இருக்குமா, அல்லது இது மாவோயிஸ்டு அணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போகின்றதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

‘மாய எதிரி’ என்ற தனது கட்டுரையில் இதே வாதத்தை திருப்பிப் போடும்மேற்கு வங்க முன்னாள் நிதி அமைச்சர் டாக்டர்  அசோக் மித்ரா, மாவோயிஸ்டுகள் நிகழ்த்தும் ’பயங்கரமான தொடர் கொலைகள்’, கொரில்லாப் போர்முறை பாடப் புத்தகங்களிலிருந்து அவர்கள் கற்றிருக்கும் இலக்கண வகைப்பட்ட தந்திரங்களே என்று வாதிடுகின்றார். “அவர்கள் ஒரு கொரில்லா ராணுவத்தைக் கட்டிப் பயிற்சியளித்திருக்கிறார்கள் என்றும், அது தற்போது இந்திய அரசை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாகவும், மாவோயிஸ்டுகளின் ‘வெறியாட்டம்’, என்பது, இந்திய அரசை ஆத்திரமூட்டுவதற்காகத் தெரிந்தே செய்யப்படும் முயற்சிதான் என்றும், முட்டாள்தனமும், மூர்க்கத்தனமும் நிரம்பிய இந்திய அரசு, பல கொடூரங்களை நிகழ்த்துமென்றும், அச்செயல்கள் பழங்குடியினரின் கோபத்தைக் கிளறுமென்று மாவோயிஸ்டுகள் நம்புவதாகவும், அந்தக் கோபத்தை அறுவடை செய்து அதனை ஒரு ஆயுத எழுச்சியாக உருமாற்றலாம் என்று மாவேயிஸ்டுகள் நம்புவதாகவும் கூறுகிறார்.

மாவோயிஸ்டுகள் குறித்து பல்வேறு இடதுசாரிப் பிரிவினரும், தொடர்ந்து கூறிவரும் ‘சாகச வாதம்’ எனும் குற்றச்சாட்டுத்தான் இது. ‘தம்மை அதிகாரத்தில் அமர்த்தும் ஒரு புரட்சியைக் கொண்டு வருவதற்காக, தாங்கள் பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் மக்களின் மீதே ஒரு அழிவைத் தருவிக்க மாவோயிஸ்டு கொள்கையாளர்கள் தயங்குவதில்லை’ என்று கூறுகிறது இக்குற்றச்சாட்டு. அசோக் மித்ரா, ஒரு பழைய கம்யூனிஸ்டு. மேற்கு வங்கத்தில்  ’60 – ’70 களில் நக்சல்பாரி எழுச்சியின்போது, அதனை வெளியிலிருந்து நெருக்கமாகக் கவனிக்கும் வாய்ப்புப் பெற்றிருந்த அவரது கருத்துக்களை முற்றிலுமாக நிராகரித்து விட முடியாது. அதே வேளையில், அடக்குமுறையை எதிர்த்துப் போராடுவதில் பழங்குடி மக்கள் தமக்கென ஒரு நீண்ட, நெடிய வீரஞ்செறிந்த பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், அந்தப் பாரம்பரியம் மாவோயிசம் பிறப்பதற்கும் முந்தையது  என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது. சில நடுத்தர வர்க்க மாவோயிஸ்டு கொள்கையாளர்களால் ஆட்டுவிக்கப்படக் கூடிய மூளையில்லாத தலையாட்டி பொம்மைகளாக பழங்குடி மக்களை மதிப்பிடுவது, அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகவே இருக்கும்.

ஒருவேளை டாக்டர் மிஸ்ரா லால்கர் நிலைமையிலிருந்து பேசுகிறார் போலும். அங்கே இதுவரையில் கனிம வள இருப்பு  குறித்த பேச்சு ஏதும் அடிபடவில்லை. (ஒன்றை நாம் மறந்து விடலாகாது – தற்போது லால்கரில் தோன்றிய எழுச்சி ஜிண்டால் இரும்பு ஆலையைத் துவக்கி வைக்க முதல்வர் வருகை தந்ததையொட்டித்தான் பற்றிக் கொண்டது; இரும்பு உருக்காலை ஒரு இடத்தில் இருக்கும்போது, இரும்புக் கனிவளம் வெகுதொலைவிலா இருக்கக் கூடும்?)  மக்களை வாட்டி வதைக்கும் வறுமையும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சி.பி.எம். கட்சி ஆண்டு வரும் மேற்கு வங்கத்தில், பல பத்தாண்டுகளாய் போலிசிடமும், மார்க்சிஸ்டு கட்சியின் ஆயுதந்தாங்கிய கும்பலான ஹர்மத்களிடம்8 அவர்கள் பட்ட துயரங்களும்தான் மக்களின் கோபத்துக்கு அடிப்படையாக இருந்திருக்கிறது.

“ஆயிரக்கணக்கான  போலிசுக்காரர்களும், துணை ராணுவத் துருப்புகளும்  லால்கரில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?”என்ற கேள்வியையே எழுப்பாமலிருப்பதென்றும், மாவோயிஸ்டு ‘சாகச வாதம்‘ குறித்தசூத்திரத்தை ஏற்றுக்கொள்வதென்றும் ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும் கூட, இது முழுச் சித்திரத்தின் ஒரு மிகச்சிறிய பகுதியாகவே இருக்கும்.

உண்மையான பிரச்சினை என்னவென்றால், இந்தியாவின் அதிசயிக்கத்தக்க ‘வளர்ச்சிக்’கதையின் பதாகையைத் தாங்கி வந்த கப்பல் தரை தட்டி விட்டது. பாரிய சமூக, சுற்றுச்சூழல் சீர்குலைவை அது விலையாகக் கொடுத்துள்ளது. இப்போது ஆறுகள் வற்றுகின்றன, காடுகள் மறைகின்றன, நிலத்தடி நீர்மட்டம் இறங்குகிறது, தமக்கு இழைக்கப்பட்டிருப்பது என்ன என்பதை மக்கள் உணரத் தலைப்பட்டு விட்டதால், விதைத்த வினைகளுக்கான அறுவடைக் காலம் துவங்கி விட்டது. நாடெங்கிலும் கலகங்கள் வெடிக்கின்றன. மக்கள் தமது நிலங்களையும், இயற்கை வளங்களையும் விட்டுக் கொடுக்க மறுத்து ஆவேசமாகக் கிளர்ச்சி செய்கிறார்கள். இனியும் அவர்கள் பொய் வாக்குறுதிகளை நம்பத் தயாராக இல்லை. பத்து சதவீத வளர்ச்சி விகிதமும், ஜனநாயகமும் ஒன்றுக்கொன்று ஒத்து வராதவையாக தீடீரென்று தோன்றத் தொடங்குகிறது.

அந்த தட்டை உச்சி மலைகளுக்கு உள்ளிருந்து பாக்சைட்டை வெளியே எடுக்க வேண்டுமென்றால், காடுகளின் மடியறுத்து இரும்புக் கனிகளை வெட்டியெடுக்க வேண்டுமென்றால், இந்தியாவின் 85 சதவீத மக்களை அவர் தம் மண்ணிலிருந்து பிய்த்து நகரத்துக்குள் பிடித்துத் தள்ளவேண்டுமென்றால் (அந்தக் காட்சியைத்தான் காண விரும்புவதாய்ச் சொல்கிறார், சிதம்பரம்)9, இந்தியா ஒரு போலிசு ராஜ்யமாக வேண்டும். அரசு தன்னை ராணுவமயமாக்கிக் கொள்ள வேண்டும். அத்தகைய இராணுவமயமாக்கத்தை அரசு நியாயப்படுத்த வேண்டுமென்றால், அதற்கு ஒரு எதிரியைக் காட்டவேண்டும்.  அந்த எதிரிதான் மாவோயிஸ்டுகள். இந்து அடிப்படைவாதிகளுக்கு முசுலிம்கள் எப்படியோ, அப்படித்தான் கார்ப்பரேட் அடிப்படைவாதிகளுக்கு மாவோயிஸ்டுகளும்… (அடிப்படைவாதிகளிடையேயான சகோதரத்துவம் என்று ஏதேனும் நிலவுகிறதோ? அதனால்தான் சிதம்பரத்தை ஆர்.எஸ்.எஸ் வெளிப்படையாக உச்சி மோந்து பாராட்டியிருக்கின்றதோ?)

அரை இராணுவப் படைகள், ராஜ்நந்காவுனில் விமான தளம், பிலாஸ்பூரில் படைத் தலைமையகம், துணை ராணுவப் படைகள்,  சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம், சத்தீஸ்கரின் பொதுப் பாதுகாப்பு சிறப்புச் சட்டம், ‘காட்டு வேட்டை’ நடவடிக்கை .. என்பன போன்ற இந்த எல்லா ஏற்பாடுகளும், சில ஆயிரம் மாவோயிஸ்டுகளை காட்டிலிருந்து துடைத்தெறிவதற்காக மட்டும்தான் என்று எண்ணுவது மாபெரும் பிழையாகும். பல விதமான விளக்கப்படும் இந்தக் ‘காட்டு வேட்டை’ நடவடிக்கை எனும் நிகழ்ச்சிப்போக்கில், சிதம்பரம் இதன் அடுத்த படியை நோக்கி முன் நகர்ந்து ‘பொத்தானை‘ அழுத்தி போரை வெளிப்படையாக அறிவித்தாலும் சரி,  அறிவிக்காவிட்டாலும் சரி, இந்தச் சூழலில் முளை விடக் காத்திருக்கும் ஒரு  ‘அவசர நிலைக் காலத்தை‘ நான் அவதானிக்கிறேன். (ஒரு சிறிய கணிதக் கேள்வி: ஒரு சின்னஞ்சிறு காஷ்மீர் பள்ளத்தாக்கைக் கட்டுக்குள் வைக்க ஆறு லட்சம் சிப்பாய்கள் தேவைப்படுகிறார்கள் என்றால், அடுக்கடுக்காய் அதிகரித்துச் செல்லும் பல நூறு இலட்சம் மக்களின் கோபத்தை எதிர்கொண்டு கட்டுப்படுத்த எத்தனை சிப்பாய்கள் தேவைப்படுவார்கள்?)

சமீபத்தில்  கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டு தலைவர் கோபட் காந்தியை நார்கோ அனாலிசிஸ்10 செய்வதை விடுத்து, அவருடன் பேச முற்படுவது நல்ல யோசனையாக இருக்கும்.

இதனிடையே, இவ்வாண்டின் இறுதியில் கோபன் ஹேகனில் நடக்கவுள்ள தட்பவெப்ப மாற்றம் குறித்த மாநாட்டிற்குச் செல்லவிருக்கும் யாரேனும் ஒருவர்,  கேட்கத்தகுதியான இந்த ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்பீர்களா: பாக்சைட் அந்த மலையிலேயே கிடந்துவிட்டுப்போகட்டுமே, அதை விட்டு வைக்க இயலாதா?

(31 அக்டோபர், 2009  கார்டியன்  இதழில் வெளியான ஆங்கிலக் கட்டுரையின் மொழியாக்கம்)

மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள்:

1. மாவோயிச கம்யூனிச மையம், மக்கள் யுத்தக் குழு என இரு வேறு அமைப்புகளாக இயங்கி வந்த இவ்வமைப்புகள், 2004-இல் இந்திய பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்) என ஒரு கட்சியாக இணைந்தனர்.

2. தாண்டேவாடா – சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள, பழங்குடியினர் அதிகம் வாழும் பின் தங்கிய மாவட்டம்.

3. சல்வா ஜுடூம் – 2005-இல் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்காக, பழங்குடியினரைக் கொண்டே சத்தீஸ்கர் அரசு உருவாக்கிய கூலிப்படை.

4. முனைவர் பாலகோபால் 08.10.2009 அன்று மரணமடைந்தார்.

5. லால்கர் முதலான பகுதிகளில் அரசு அதிகாரிகளை செயல்பட விடாமல் மக்கள் விரட்டியடித்தபோது, அரசு இந்த வாதத்தை முன் வைத்தது.

6. ஃபேப் இந்தியா – மேட்டுக் குடியினர் அணியும் ஆடைகளைத் தயாரிக்கும் நிறுவனம்.

7. 2009- ம் ஆண்டு, மகாராட்டிர மாநிலத்தில் நடந்த பொதுத் தேர்தலில், அரசியல் கட்சிகள் குறித்து செய்திகள் வெளியிடுவதற்கு, பல்வேறு பெயர்களில் கட்டணங்கள் வசூலித்ததை பத்திரிகையாளர் சாய்நாத் அம்பலப்படுத்தினார்.

8. ஹர்மத் வாஹினி – மேற்கு வங்கத்தில் உள்ள சி.பி.எம் கட்சியின் குண்டர் படை.

9. “இந்தியாவின் 85 சதவிகிதம் மக்கள் நகர்ப்புறங்களில் வாழ வேண்டும் என்பதே தமது கனவு” என தெஹல்கா ஏட்டிற்கான ஒரு பேட்டியில் ப. சிதம்பரம் தெரிவித்தார். (தெஹல்கா மே 31, 2008)

10. நார்கோ அனாலிசிஸ் – கைதிகளை விசாரிப்பதற்கு, போதை மருந்தை வலுக்கட்டாயமாக உட்செலுத்தி, அவர்களைப் பேச வைக்க போலிசு பயன்படுத்தும் முறை. இவ்வழிமுறை பல உலக நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

http://www.vinavu.com/2010/02/02/the-heart-of-india-is-under-attack/