Language Selection

சுதேகு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தேர்தலுக்குப் பின்னரான வன்முறைகளை தடுப்பதற்காக நாடங்கலாக பொலிஸாரை உசார்ப்படுத்தப்பட்ட நிலையில் தாம் வைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட அத்தியட்சகர் ஐ. எம். கருணாரத்ன தெரிவித்துமிருந்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் முழுதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் கழிந்து சென்ற 36 மணித்தியாளங்களுக்குள் 33 வன்முறைகள் நடந்திருந்தன! இது மணித்தியாலத்துக்கு சராசரியாக ஒரு வன்முறையாக வராலாற்றுப் பதிவுகளை ஏற்படுத்திச் செல்கிறது.

பாரதூரமான வன்செயல்களாக 18 சம்பவங்களும், தீ மூட்டல் சம்பவங்களாக 07 சம்பவங்களும் போக, மீதி 15 வன்முறைகளாக இருக்கிறது. இதில் 02 கொலைகள் உட்பட துக்கமான அல்லது பாரதூரமான 04 ன்கு சமபவங்களும், ‘தீ' நடவடிக்கைள் மற்றும் ஒரு கொள்ளை உட்பட: இந்த 33 வன்முறைகளும் பதிவாகியுள்ளது. இவற்றை சி.எம்.ஈ.வி உம் : இதனூடாக 1997 ல் உருவான கபே, மற்றும் எவ்.எம்..எம் (FreeMedia Movement) இணைந்து உருவாக்கிய ‘இன்போர்ஃம்' (HumanRights Documentation Centre.) செய்திகளாக வெளியிட்டும் உள்ளது.

 

தேர்தலின் மறுநாள் அதிகாலையானது மனித வேட்டையோடுதான் விடிந்தும் இருக்கிறது!

 

தேர்தல் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த அதிகாலை வேளையும், சரத் சுற்றிவளைக்கப்பட்ட நிலையிலும்: கம்பளை பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட தெம்பிலிகலிவிலுள்ள புவுத்த விகாரையின் மீது மேற் கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில், பவுத்த பிக்கு ஒருவரும் வேறொருவரும் காயமடைந்த நிலையில், அவசர கிகிச்சைக்காக கம்பளை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் பயனின்றி இருவரும் இறந்துள்ளனர்.

 

இச்சம்பவத்தைத் தொடர்ந்து நபகல் 12 மணிக்குப் பின்னர், கம்பளை நாவலப்பிட்டி பிரதேசத்தில் ஊரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இத் தேர்தல் நியமன காலத்தில் இருந்து ஆயிரத்து 80 வன்முறை சம்பவங்கள் நடந்திருந்ததாகவும் தேர்தல் தினத்தில் மாத்திரம் 50சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் பொலீஸ் தரப்புச் செய்திகள் தெரிவிக்கிறது. தமிழ் பகுதிகளில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் இன்னும் சரிவரப் பதியப்படவில்லைப் போல் தெரிகிறது. வன்முறைக்கு எதிராகத் தமிழ் மக்கள் தரப்பினரின் அசமந்தப் போக்கு தொடர்ந்தும் கவலைகளைத் தருகிறது. ஆயுதக் குழுக்களின் அட்டகாசத்துக்குப் பயந்து மக்கள் மவுனமாக பீதிக்குள் வாழும் நிர்பந்தத்தை, வாக்குக் கட்சிகள் தமது பகுதிக் கொள்கையாய் கடைப்பிடித்தும் வருகின்றனர்.

 

தேர்தலுக்கு முதல்நாள் மாலை கிளிநொச்சி ஆனந்தபுரம் ‘கலைகடல்' வியாபார நிலைய உரிமையாளரான வேலுப்பிள்ளை சிவரூபன் (சுதன்), அவரது சகோதரனின் வீட்டுப் படலைக்கு முன்பாக அடித்துக் கொல்லப்பட்டிருந்தார். இவர் கிளிநொச்சியில் தங்கி நிற்பதற்காக சிவில் இராணுவப் பிரிவில் அனுமதியினையும் பெற்றிருந்தார் என்றும் பேசப்பட்டுகிறது. அடித்துக் கொல்லப்பட்ட சுதன் அணிந்திருந்த பெனியனால் கல்லோடு பிணைக்கப்பட்டு அருகிலிருந்த கிணறொன்றில் தூக்கி வீசப்பட்டு பிணமாகக் கிடந்தார்.

 

கிழக்கு மாகாணசபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான யூ.எல்.எம்.என். முபீனினும் அவரது ஆதரவாளர்களும் பயணித்த வாகனமொன்று கோஷ்டி ஒன்றினால் அடித்துச் சேதமாக்கப்பட்டது. புதிய காத்தான்குடி மத்திய வீதியில் நடந்த இச் சம்பவத்தில், எம்.ஐ.எம். றசாக் என்பவர் காயமடைந்து காத்தான்குடி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வாக்களிப்பு நிலைய முகவர்களுக்கு உணவு எடுத்துச் சென்ற இவர்கள் தாக்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

காத்தான்குடி அல் அமீன் வீதியில் அமைந்துள்ள கிழக்கு மாகாணசபை உறுப்பினரின் செயலாளர் யாஸீர் அரபாத்தினுடைய வீட்டின்மீதும், கிழக்கு மாகாண சுகாதாரஅமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் இணைப்பாளரின் வீட்டின் மீதும் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக காத்தான்குடி பொலீஸ் செய்திகள் தெரிவிக்கிறது. செவ்வாய்க்கிழமை (260110)அதிகாலை காத்தான்குடி 6ம் குறிச்சி பாவா வீதியிலுள்ள கே.எல்.எம்.பரீட் என்பவரின் வீட்டின்மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப் பட்டிருந்தது. பரீட்டின் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டியும் தீப்பிடித்து எரிந்தபோது, மோட்டார் சைக்கிள் முற்றாகவே எரிந்து சாம்பராகின. கூடவே வீட்டின் முன்பகுதியும் சேதமாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

27ம் திகதி அதிகாலை, குருநாகல் மாவட்ட ஐ.தே.கட்சி எம்.பி அகிலவிராஜ் காரியவசம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. குருநாகல் மாநகரசபை உறுப்பினர் ஒருவர் வீட்டில் இரவு தேர்தல் முடிவுகளைக் கேட்டுக் கொண்டிருந்த போது , வாகனத்தில் வந்த ஆயுததாரிகள் சிலர் வீட்டின்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். காரியவசம் மயிரிழையில் உயிர்தப்பியும் உள்ளார். இருப்பினும் இத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அத்தோடு இவ்வீட்டுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்களும் துப்பாக்கிச் சன்னத்தால் சேதமடைந்தும் உள்ளன. இச்சம்பவம் குறித்து குருநாகல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டு இருந்தது.

 

இதன் பின் இரவு 10 மணியளவில், குருநாகல் கொக்கரல்ல நகரை அண்மித்த மெல்சிறிபுர பகுதி வர்த்தகக் கட்டிடத் தொகுதியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பத்து வர்த்தக நிலையங்கள் இயங்கி வந்த இக் கட்டிடத் தொகுதியிலேயே தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றது. இந்த பத்து வர்த்தக நிலையங்களும் தீக்கு இரையாகி உள்ளதாகவும், இதற்கு மின் ஒழுக்கே காரணமென்றும் தெரிவிக்கும் பொலீஸ் தரப்பு, மேலதிக விசாரணையிலும் ஈடுபட்டிருப்பதாகவும் இச் செய்திகள் தெரிவிக்கின்றது.

 

28ம் திகதி அதிகாலை 2 மணியளவில் மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் கடையொன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெறுமதியான பொருட்களுடன் இக்கடை முற்றாக எரியுண்டுள்ளதாக பொலீஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். தேர்தலன்று கடையின் உரிமையாளரின் மகன் கட்சியொன்றுக்கு முகவராக செயற்பட்ட நிலையில் ஏற்பட்ட முன் குரோதமே இத் தீச்சம்பவத்திற்கு காரணமென்றும் அரசல் புரசலாகப் பேச்சடிபடுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் கடையின் உரிமையாளர் ஏறாவூர் பொலீசில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், இதுபற்றி ஏறாவூர் பொலீசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

சரத்பொன்சேகாவை ஆதரித்து பிரசாரம் செய்த மட்டக்களப்பு மாநகரசபை மேயர் சிவகீதா பிரபாகரனின் உத்தியோகபூர்வ இல்லத்தின்மீதும் சிலர் கைக்குண்டை வீசியிருந்தனர். இக் குண்டுவீச்சு சம்பவத்தினால் மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் கதவு மற்றும் முன்பகுதி என்பன சேதத்துக்கு உள்ளானது. மேயருக்கு சொந்தமான வீடும் மற்றும் அவரின் கணவனின் வர்த்தகநிலையம் என்பனவும் உடைத்து சேதப்படுத்தப்பட்டும் உள்ளன. இச்சம்பவங்கள் இடம்பெற்றபோது மேயர் சிவகீதாவோ அல்லது அவரின் குடும்பமோ அங்கு தங்கியிருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல் முடிவுகள் வெளியானதும் உயிரச்சம் காரணமாக இவர்கள் தலைமறைவாகி இருப்பதாவும் செய்திகள் அடிபடுகின்றன. இவ் வன்முறைச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகிறது.

 

28ம் திகதி பிற்பகல் 5 மணியளவில் யாழ் தீவுப்பகுதிக்குள் வானொன்றில் ஆயுதங்கள் கொட்டன் பொலுகளுடன் நுழைந்த ஈபிடிபி யினர் காடைத்தனத்தில் ஈடுபட்டனர். அம்பிகை நகர், செட்டிபுலம், வேலணை 4ன்காம் வட்டாரம், புளியங்கூடல், துறையூர் ஆகிய வறிய கிராமமக்கள் மீது தமது கைவரிசையைக் காண்பித்துள்ளனர். பெண்கள் சிறுவர் முதியோரென எந்த வேறுபாடுமின்றி கண்மூடித்தனமான அட்டகாசத்தைப் புரிந்துள்ளனர். மகிந்தாவுக்கு வாக்குப் போடவில்லை என்ற ஆத்திரத்தில் அடிதடியில் இறங்கியுமுள்ளனர். அடிகாயங்களுக்கு மருந்தோ அல்லது இந்த அக்கிரமங்களுக்கு நீதி கேட்கவோ, முறைப்பாடு செய்யவோ முற்பட்டால் மீண்டும் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் அம் மக்களோ மவுனமாகியுள்ளனர். இச் செய்தியை கண்டனமாக ‘சோசலிச சமத்துவக் கட்சி' தனது உத்தியோகபூர்வ இணையவலையில் முதலில் வெளிக் கொணர்ந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

தேர்தலுக்குப் பிந்திய 48 மணித்தியாலங்களுக்குள் சில ஆயுதக் கோஷ்டிகளுக்கு இடையே மோதல்களும் தலைதூக்கி இருந்தது. கோஷ்டி மோதல்களைக் கட்டுப்படுத்தச் சென்ற பொலீசார் மீதும் இவர்கள் திருப்பித் தாக்கியுமுள்ளனர். இதில் ஒரு பொலீசார் காயமடைந்துமுள்ளார். இது இவ்வாறு இருக்க மகிந்தா குடும்பத்தை கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டியதாக எதிர் தரப்பினரில் 37 பேர்வரை கைது செய்யப்பட்டும் இருந்தனர். சரத்தின் அலுவலகத்தில் 22 பேரைக் கைது செய்ததாகக் கூறும் இராணுவத் தரப்பினர், இதில் 19 பேர் இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர்கள் என்றும் கூறியுள்ளது. இவற்றை அடுத்து மட்டக்களப்பில் ஒர் இராணுவ வீரரும் திருகோணமலையில் இன்னோர் இராணுவ வீரரும் தம்மைத் தாமே சுட்டும் தற்கொலை செய்திருந்தனர். திருகோணமலையில் இருந்த இராணுவ வீரர் ஏற்கனவே இராணுவத்திலிருந்து தப்பியவர் எனவும் செய்திகள் கசிந்திருந்தன.

 

ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகளை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் அரசியல் கட்சிகளின் சுமார் 1000 ஆதரவாளர்களை தாம் கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் அரசாங்க மற்றும் எதிர்கட்சி ஆதரவாளர்களும், பாதாள உலகக்குழுவினர் மற்றும் இராணுவத்தில் இருந்து தப்பி வந்தோரும் அடங்குவதாக தேர்தலுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி காமினி நவரட்ன தெரிவித்துமுள்ளார்.

 

மனித வேட்டையாடும்: ‘அரசியல்‘ விளையாட்டு!

 

1978ம் ஆண்டு பெப். மாதம் 4ன்காம் திகதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா (அன்றைய பிரதம மந்திரி) தன்னைத் தானே ஜனாதிபதியாக பிரகடனம் செய்தார். இதுபற்றி அன்றைய உலக அரசியல் வல்லுனர்கள்: " பிரான்ஸ் வரலாற்றில் நெப்போலியன் பாப்பரசர் வந்து முடிசூட்டுவதற்கு காத்திருக்காமல் முன்பே, தன்னைத் தானே சர்வாதிகாரியாக பிரகடனப்படுத்தி, தனது தலையில் கிரீடத்தை தானே சூடிய கதையாக இதை உவமைப் படுத்தியும் இருந்தனர்."

 

1977ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற (8 ஆவது) தேர்தல் விஞ்ஞாபனத்தில், ஐ.தே.க ‘ஜனாதிபதி முறை பற்றி' எதுவுமே கூறியிருக்கவில்லை. ஆனால் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று மட்டுமே கூறியிருந்தது!

 

77 தேர்தல் முடிவுகள் வரலாற்றில் முதல் முதலாக சிறுபான்மையினரின் கட்சி ‘எதிர்க் கட்சியாக' அமையும் வாய்ப்பைப் பெற்றுமிருந்தது. இது மறுதலையாக ஐ.தே.க ஆறில் ஐந்து பெரும்பான்மையையும் கொண்டுமிருந்தது. சிறுபான்மையினரின் எதிர் நிலையை செயலிழக்கச் செய்வதும், பெரும்பான்மையின் அதிகூடிய அதிகாரத்தை நிலைநிறுத்தும் நோக்கில் (அன்றைய யாதார்த்தத்தில்) கொண்டுவரப்பட்டதே ‘நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதி முறை!'

 

இந்த ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரச் சூத்திரமானது, பாராளுமன்றத்தில் துர்ரதிஷ்டவசமாக சாதிக்க முடியாததை நிலையானதும், " தெரிவு செய்யப்பட்ட சபையினரால் மாற்றி அமைக்க முடியாத ஒன்றை மாற்றி அமைக்க நிறைவேற்று அதிகாரமுறை இலங்கைக்கு அவசியம்" என்பதுவே அன்றைய அரசின் தரகுத் தேவையாக இருந்தது. இது இருப்பிலிருந்து வருகிற 2ஆம், 3ன்றாம், 4ன்காம் அரசியல் அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் இதற்கு சரியான உதாரணங்களாக அமைகிறது.

 

பாராளுமன்றத்தில் பிரதம மந்திரியோ, அல்லது அமைச்சரவையோ சுதந்திரமாக இயங்க முடியாது! யாவும் ஜனாதிபதியின் சொந்த விருப்பு வெறுப்பு (சர்வாதிகார தரகு ஆளுமை) ஆளுமைக்கு ஏற்பவே நடைபெற்றது. இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு எதிராக இருந்த ஒரே ஒரு சிக்கலான அரசியல் அம்சம் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையாகும். இது ஆளும் கட்சிக்கு பாரளுமன்றத்தில் எதிர் தரப்பினது பலத்தை எவ்வாறு இழக்கச் செய்வது எனற வேட்டையில் போய் முடிகிறது!

 

இங்கேதான் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் பட்டை தீட்டப்பட்டு ஒளிக்க விடப்படுகிறது! எப்பொழுதும் ஆளும் கட்சியினர் கையிருப்பிலுள்ள பெரும்பான்மையைத் தக்கவைக்க இந்த அதிகாரத்தை அங்குசமாகப் பாவிக்கின்றனர்.

 

முதலாவது ஜனாதிபதித் தேர்தல் 20 10 1982 இல் நடந்தது. இதில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் எதிரணியில் கொப்பேக்கடுவாவும் போட்டியிட்டனர். சிறீமாவின் குடியுரிமை ஏலவே பறிக்கப்பட்டும் இருந்தது. இத்தேர்தலில் ஜே.ஆர் வெற்றி பெற்றார். அன்று கொப்பேகடுவாவுக்கு ஆதரவு அளித்தவர்களை ‘நக்சலைட்'கள் எனப் பழிசுமத்தி இந்த அதிகாரம் வேட்டையாடலைத் தொடங்கி வைத்தது. அன்று ஜே.ஆரையும் அவரது மந்திரி சபை மற்றும் நிர்வாகத் தலைவர்களையும் கொப்பேக்கடுவ குறிவைத்து படுகொலை செய்ய முயற்சித்தார் என்று பயங்கரமான வன்முறை ஏவியது இந்த அதிகாரம்.

 

இதே அதிகாரம் இன்று கைமாறி மகிந்தாவிடம் இருக்கும் போது: அது தன்னையும் தனகு குடும்பத்தையும் சரத் படுகொலை செய்யத் திட்டமிட்டதாக திருப்பி வேட்டையாடுகிறது. அன்று எதிர் கட்சியினரையும் குறிப்பாக கம்யூனிஸ் கட்சி அங்கத்தவர்கள் பலரை சீ.ஐ.டி தலைமையகத்துக்கு அழைத்து விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்தி நிந்தித்தும் இருந்தது. இன்று இதே போல மகிந்தாவால் சரத்தின் தரப்பினருக்குச் செய்யப்படுகிறது.

 

அன்று சுதந்திரக் கட்சி, கன்யூனிஸ்ட் கட்சி முதலாவது ஜனாதிபதித் தேர்தலின் போது போலிக் கூப்பன்களை மக்களுக்கு வினியோகித்து பிரச்சாரம் செய்ததாகக் குற்றம் சாட்டி 36 பேரைக் கைது செய்தது ஜே.ஆரின் அதிகாரம். இன்று மகிந்தாவையும் அவரது குடும்பத்தினரையும் கொல்லச் சதித் திட்டம் போட்டதாக மகிந்தா அதிகாரம் இதுவரை 37 பேரை கைது செய்துள்ளது.

 

அன்று பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடிப்பதற்கு ஜே.ஆர் அரசியல் அமைப்பின் நான்காவது திருத்தத்தை கையில் எடுத்தார். இது நவம்பர் மாதம் 14ம் திகதி (1982) ஒரு பெரும்பான்மை வாக்கால் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பாகியது. அன்று உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வீ.டி.எம் . சமரக்கோன் மட்டும் இதை எதிர்க்க ஏனைய இரு நீதிபதிகளும் ஆதரித்து வாக்களித்தனர். இது தொடர்பாக சமரக்கோன் ஜே.ஆருக்கு எமுதிய கடிதத்தின் முடிவில் காணப்பட்ட வாசகம்: " நான் தொடர்ந்து கொஞ்சக்காலம் இந்த அவமானத்தை தாங்கித்தானாகவேண்டும்".

 

இன்று தேர்தல் ஆணையாளர் : "ஜனாதிபதித் தேர்தல் பிரசார காலத்தில் அரச ஊடகங்கள் செயற்பட்ட விதம் குறித்து நான் ஏமாற்றமடைந்துள்ளேன். எனது அறிவுறுத்தல்களை அரச நிறுவனங்களின் தலைவர்கள் புறக்கணித்த விதமும் ஏமாற்றமளித்தது. 2010ம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரும் பதவியில் இருப்பது பொருத்தமானது என நான் கருதவில்லை. தேர்தல் ஆணையாளராகப் பணியாற்றும் வேளை பலதரப்பாலும் தரப்பட்ட அழுத்தங்களை என்னால் தாங்க முடியவில்லை." என்று கூறுகிறார்.

 

அன்று நீதிபதியின் மனச்சாட்சி பேசியது. இன்று தேர்தல் ஆணையாளரின் மனச்சாட்சி பேசியிருக்கிறது. நாளை மக்கள் பேசுவார்களா? இந்த அதிகாரத்தை தூக்கி எறியும் படி!

 

அன்று அவசரக்காலச் சட்டத்தின் கீழ் எதிரணியினரின் பத்திரிகைகள், அச்சுக் கூடங்கள் சீல் வைக்கப்பட்டன. இன்றும் ‘நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்' எனச் சொல்லி இந்த அதிகாரம் ஊடகங்களையும், ஊடகவியலாளர்கள் மீதும் வன்முறையை ஏவுகிறது. அன்றும் இன்றும் எந்த ஒரு பிரச்சனைக்கும் எதிரணியினருக்கு நீதி கிடைக்கவில்லை! எப்பொழுதும் எதிர் அணியினர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இவ்வதிகாரத்தால் வேட்டையாடப்பட்டும் வருகின்றனர்.

 

32 வருடங்களாக மனித வேட்டையாடி வருகிற இந்த ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம், முதல் 17 வருடங்கள் தொடர்ச்சியாக யு.என்.பியின் கையில் இருந்தது. 1994ம் ஆண்டு மூன்றாவது ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் கைகளுக்கு வந்தது. இலஞ்சமும், கொலைக் கலாச்சாரமும், ஊழலும் வன்முறையும் மலிந்து கிடந்த அந்தக் காலத்தில் 94 நவம்பரில் ஜனாதிபதித் தேர்தலையும், 95 முற்பகுதியில் பொதுத்தேர்தலும் நடைபெற வேண்டும். ஆனால் ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்தினால் தாம் தோல்வியடையலாம் எனப் பயந்த ஜனாதிபதி விஜேதுங்கா 94 யூன் மாத இறுதியில் பாராளுமன்றத்தைத் திடீரெனக் கலைத்து, பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார்.

 

இந்தத் தேர்தலில் யூஎன்பிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. மீண்டும் பதவியைக் கைப்பற்ற சிறுபான்மையினரின் ஆதரவைப் பெற (ஆளிழுப்புச் செய்ய) தலைகீழாக நின்றும் தோற்றுப் போயிருந்தனர். இக்காலத்தில் புலிகள் பூநகரித் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுமிருந்தனர்! யூன்பியின் ஆளிழுப்புத் தோல்வியடைந்ததால் அன்று பிரதமராக இருந்த ரணில் பதவி விலகி சந்திரிகாவிடம் பதவியைக் கையளித்தார். முறைப்படி அன்று ரணில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்றிருக்க வேண்டும்! ஆனால், அப்படி நடக்கவில்லை. அது அவரால் முடியாத காரணமாகவும் யதார்தத்தில் இருந்தது. இது அன்றிருந்த யூஎன்பியின் ஜனாதிபதி அதிகாரத்துக்கு வந்த சோதனை!

 

1991ம் ஆண்டு ஐ.தே.க இருந்து விலகிய சிலர் லலித், காமினி தலைமையில் பிரிந்து சென்றனர். இவர்கள் ‘ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி' ஐ ஆரம்பித்தனர். தாம் இனி ஒருபோதும் ஐ.தே.க இணையமாட்டோம் என வீராப்பாகப் பேசியும் திரிந்தனர். பிரேமதாசா புலிகளால் கொல்லப்பட்டதும் திரும்பி ஓடிவந்து ஐ.தே.க புகுந்து கொண்டார். இவரது மனைவி தொடர்ந்தும் ஐ.ஐ.தே. முன்னணியிலேயே இருந்து வந்தார்.

 

காமினி வந்ததும் எதிர்க்கட்சி தலைமைப் பதவிக்கான போட்டி ஐ.தே.கட்சிக்குள் தலைதூக்கியது. அன்று ஜனாதிபதியாகவும், கட்சித் தலைவருமாக இருந்த விஜேதுங்காவுக்கு இது பெரிய நெருக்கடியாக இருந்தது. முதல் முறையாக இரகசிய வாக்கெடுப்பை நடத்தவேண்டிய சூழலையும் இது உருவாக்கியும் இருந்தது. வாக்கெடுப்பில் காமினி 45 வாக்குகளையும், ரணில் 42 வாக்குக்களையும் பெற்று, காமினி எதிர்க்கட்சி தலைவரானார். பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவிலும் இப்போட்டி மீண்டும் தலையை நீட்டியது. ரணிலை பெரும்பான்மையோர் கட்சிக்குள் விரும்பியபோதும், காமினி தனது தந்திரோபாயத்தால் தனது நிலையை உறுதிப்படுத்தினார். இது உள்ளுக்குள் புகைச்சல் நிலையை உருவாக்கியது.

 

‘ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி' யான காமினியின் கை யூ.என்.பிக்குள் ஓங்கியும் இருந்தது. இதனால் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் விஜயதுங்கா ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொண்டார். ரணில் யூஎன்பியை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று மட்டும் சொல்லிவிட்டு, காமினியுடன் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபடாமல் ஒதுங்கிக் கொண்டார். ஆனால், காமினியும் அவரது சகாக்களும் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். பதவி ஆசைக்காக யூஎன்பியில் இருந்து விலகி, அதே பதவிக்காக ஆசையோடு யூஎன்பியில் இணைந்த காமினி குண்டுத் தாக்குதலால் கொல்லப்பட்டார். ஒட்டோபர் மாதம் 24ம் திகதி அதிகாலை பாலத்துறையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், வெடிகுண்டொன்று இவரைப் பலி கொண்டது!

 

அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் இறக்கும் பட்சத்தில், அவருக்குப் பதிலாக 3 நாட்களுக்குள் அக்கட்சியானது புதிய வேட்பாளரை அறிவிக்க வேண்டும்! இந்தத் திடீர் திருப்ப வேளையில் யூஎன்பி புதிய வேட்பாளரைத் தெரிவு செய்வதற்காக தனது கட்சிக் காரியாலயத்தில் கூடியது. இக் கூட்டத்தின் போது வெளியே திரண்ட ஒரு கோஷ்டியினர், காமினியின் மனைவியான திருமதி திசாநாயக்காவை நிறுத்த வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின் காமினியின் மனைவி தேர்தலில் நின்றார். ரணில் தேர்தலில் நிற்கவேண்டுமென பலர் விரும்பியபோதும், யூஎன்பி கட்சி உறுப்பினரல்லாத ‘ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி'யின் மத்திய மாகாணசபை உறுப்பினரான காமினியின் மனைவி தேர்தலில் நிறுத்தப்பட்டார்.

 

இந் நெருக்கடிக்குள்ளும் யூஎன்பி கட்சியானது ஜனாதிபதி அதிகாரத்தை கட்சி ரீதியாகத் தக்கவைக்க அரும் பாடுபட்டது. ‘சந்திரிக்காவுக்குப் போடப்படும் ஒவ்வொரு வாக்கும் புலிகளுக்கப் போடப்படும் வாக்கு' என்றும், ‘கதிரைக்கு வாக்கைப் போடுவோம், பிரபாகரனை ஜனாதிபதியாக்குவோம்' என இனவாதத்தைக் கொப்பளிக்கும் சுவரொட்டிகளையும், பிரசுரங்களையும் வெளியிட்டனர்.

 

ஆனால் சிங்கள மக்களோ, அமைதியாகவும் ஆரவாரமின்றியும் நிதானமாக தமது வாக்குகளைப் பதிவு செய்தனர்!

 

ஆனால் யாழ்ப்பாண இராணுவ முற்றுகையை ‘கக்கத்ததுக்குள்' மறைத்து வைத்திருந்த சந்திரிக்கா ‘சமாதானத் தேவதை' அரசு ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத் ஒழிக்கப் போவதாகச் சொல்லியே இவ்வதிகாரத் துப்பாக்கியை இலாபகமாகக் கையில் எடுத்தது! சுருங்கச் சொன்னால், யூஎன்பியால் முன்னெடுக்கப்பட்ட இனக்கலவரக் கருத்தியலுக்கு, யாழ். முற்றுகையை அது தீர்வாகவும் வைத்தது.

 

இவ்வாறு சு. கட்சியால் முன்னெடுக்கப்பட்ட வெற்றி கொள்ளும் இனவாத அரசியல் 21 வருடகால நிறைவேற்று அதிகாரத்தை வழங்கியும் விட்டது! புலிகளை தாம் தாம் வெற்றிகொண்டோம் என்ற இனவாத சந்தடியில் இவ் ஜனாதிபதி அதிகாரத்தை கைப்பற்ற யூஎன்பி தனது இறுதி மூச்சுவரை சரத்தை வைத்துப் போராடுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தை யூஎன்பியினர் இழக்கத் தயாரில்லை. அதனால் தான் இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புகள் வெளிவந்த பின்னரும், மகிந்தாவும் , சரத்தும் தாம் தாம் ஜனாதிபதி என்றும் கர்ச்சித்தும் வருகின்றனர்!

 

இந்நிலையில் நாட்டில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர, இவ்வதிகாரத்தைக் கொண்டு மனிதவேட்டையாடும் அரசியலை நிறுத்த இரு தரப்பினரம் தயாரற்ற நிலையிலேயே செயற்படுகின்றனர்.

 

முதலாவது ஜனாதிபதித் தேர்தலின் (20.10.1982)

 

பின்னர் அமுக்கக் குழுக்களாகச் செயற்பட்டு வந்த குறிப்பிடத்தக்க குழுக்களான, ‘ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் இயக்கம்', ‘சமூக சமய நிலை இயக்கம்', ‘உமனி உரிமை இயக்கம்', ‘மதகுருமார் குரல்' மற்றும் தொழிற் சங்கங்கள் போன்றவற்றின் மீது இவ்வதிகாரம் வன்முறையை ஏவியது. இதில் குற்றவாளியாகக் காணப்பட்ட காவற்துறை கண்காணிப்பாளருக்கு உயர்நீதி மன்றம் 10 ஆயிரம் ரூபாவை அபராதமாக விதித்தது. இவ் அபராதத் தொகையை அரசே கட்டியதுடன், மந்திரி சபை இக்காவல் அதிகாரிக்கு உயர்பதவியையும் வழங்கியிருந்தது.

 

இரண்டாவது ஜனாதிபதி தேர்தல்( 19.12.1988)

 

நடந்த 1988 டிசம்பர் 19 திகதி, புலிகளும் ஜேவியினரும் தேர்தலை பகிஸ்கரித்த நிலையில் 20 வாக்களிப்பு நிலையங்களும், 10 படுகொலைகளும் தேர்தல் தினத்தன்று நிகழ்ந்தது.

 

மூன்றாவது ஜனாதிபதித் தேர்தலின் (09.11.1994) போது,

 

காமினி மீதான படுகொலையும் அதன் உயிர்ச்சேதமும் (கிட்டத்தட்ட 150 பேர்) இதை அரசியலாக்கி, நாட்டில் இனக் குழப்பத்தை ஏற்படுத்தத் துடித்த யூஎன்பி, 83 இனக்கலவரம் போன்ற ஒரு இருண்ட இரத்தக்களறியை மீண்டும் உருவாக்கத் துடித்தது! ஆனால் ஜேவிபியின் மீதான ‘பச்சைப் புலிகள்' போன்றவற்றின் மிலேச்சத்தனமான அழிவுகளும், ‘பரா' அமைப்புப் போன்றவற்றின் கொரூரமும், சிங்கள மக்களை வன்முறைமீது வழிநடத்த முடியாது போயிற்று. சிங்கள மக்கள் தேசத்தின் அமைதியை விரும்பினர். இந்த அரணின் முன் யூஎன்பியின் ‘ஜனாதிபதி சர்வாதிகாரம்' அன்று தோற்றுப் போய்விட்டது என்பதே உண்மையாகும்.

 

நான்காவது ஜனாதிபதித் தேர்தலின் போது (21.12.1999)

 

நாடு சாவுத்தொழிச்சாலையாகவும் மாறியிருந்தது. தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் சந்திரிக்காவின் மீதான கொலை முயற்சியில் அவர் தப்பியுமிருந்தார்.

 

இதில் 21 பேர் கொல்லப்பட்டும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்நும் இருந்தனர்.

 

ஐந்தாவது ஜனாதிபதித் தேர்தல் (15.11.2005)

 

புலிகள் அரசுக்கு இடையிலான ‘சமாதான'க் காலத்தில் இத் தேர்தல் நிகழ்ந்தது. 2004ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் வரை ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரமும், பாராளுமன்ற பெரும்பான்மையும் இரண்டு கட்சிகளிடமிருந்த ‘இரட்டை ஆட்சி' இழுபறி ‘கசமுசா' அரசியலில் ஓடியது. ஆயினும் நாடு சாவுத் தொழிற்சாலையாகவே காணப்பட்டது.

 

ஆறாவது ஜனாதிபதித் தேர்தல் (26.01.2010)

 

மனித வேட்டையைத் தொடர்வதை நீங்கள் இன்று நாளாந்தம் அனுபவித்தும் வருகிறீர்ள். இத் தேர்தலில் மிகக் குறைந்த நேரத்தில் ( 2 மணித்தியாலத்துக்குள்) அதிகளவு குண்டுகள் (13) வெடித்த பிரதேசமாகவும், தேர்தல் வாக்களிப்பில் ஒரு தொகுதி மக்கள் மீது பழிவாங்கும் வன்முறையைப் பிரயோகித்த ஆளும் அரசியல் (ஈபிடிபி) வன்முறைப் பிரதேசமாக யாழ் மாவட்டத் தொகுதி இலங்கை வரலாற்றில் கறைபடிந்த வரலாறு ஒன்றை எழுதியும் செல்கிறது.

சுதேகு

06 . பெப் . 2010

படம்: நன்றி அதிரடி