07042022தி
Last updateபு, 02 மார் 2022 7pm

தலித் பெண்களுக்கு விமானத்தில் இடமில்லை!!

2006 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தின் ஆதிதிராவிட நலத்துறை தலித்துக்களின் விமோச்சனத்திற்காக ஒரு திட்டத்தை பெரும் விளம்பரத்துடன் அமல்படுத்தியது. வருடத்திற்கு நூறு தலித் மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு விமானப் பணிப்பெண் பயிற்சி கொடுத்து வேலை வாங்கி கொடுப்பதுதான் அந்த விமோச்சனத் திட்டம்.

 இந்தத் திட்டத்தின் பலனை வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறார் அஜிதா கார்த்திகேயன், டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் (5.2.10).

இதற்கென்று சென்னையில் இருக்கும் பிரபலமான கல்லூரியைத் தேர்ந்தெடுத்து வருடத்திற்கு ஒரு கோடி ரூபாயை அரசு செலவழித்திருக்கிறது. ஒரு மாணவிக்கு ஒரு இலட்சமென்று இதுவரை நான்கு வருடங்களில் நானூறு பெண்கள் பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தின் பல்வேறு கிராம, நகரப் பகுதிகளிலிருந்து வந்த தலித் பெண்களுக்கு நடை, உடை, பாவனை, அலங்காரம், உள்ளிட்டு எல்லா எழவுகளும் தீவிரமாகப் பயிற்சி கொடுக்கப்பட்டன. நடுத்தர வர்க்கத்தின் கனவுப் பத்திரிகையான இந்தியா டுடே போன்றவை தலித் பெண்கள் விமானத்தில் பறக்கப் போவதை வைத்து இந்தியா முன்னேறிவிட்டதென்று செய்தி போடவும் தவறவில்லை.


ஆனால் என்ன பலன்? இந்த நான்கு ஆண்டுகளில் ஒரு தலித் பெண் கூட விமானப் பணிப்பெண் வேலைக்கு தேர்வு செய்யப்படவில்லை. இவ்வளவிற்கும் அந்தப் பயிற்சிக் கல்லூரி 60% மாணவிகளுக்கு வேலை வாங்கித்தர வேண்டுமென்பது அரசு செய்துள்ள உடன்பாடாம். இது குறித்து கேட்டதற்கு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் தமிழரசி அந்தக் கல்லூரிக்கு தரவேண்டிய தொகையை நிறுத்தியிருப்பதாகக் கூறியிருக்கிறார். எவ்வளவு நாள் நிறுத்துவார்கள்? கமிஷன் வாங்கிய கைகள் குற்ற உணர்வு இல்லாமல் இருக்குமா என்ன?

வருடத்திற்கு ஒரு கோடியை ஸ்வாகா போட்ட அந்தக் கல்லூரி என்ன சொல்கிறது? மாணவிகள் எவரும் விமான நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதியில் இல்லையாம். அந்த எதிர்பார்ப்பு தகுதிகள் என்ன?

தமிழ் சினிமா இயக்குநர்கள் கதாநாயகிகளுக்காக உசிலம்பட்டி போகிறார்களா, இல்லை மும்பைக்கு பறக்கிறார்களா? வெள்ளையும், சொள்ளையும், வாட்ட சாட்டமாக இருக்கும் அழகிகள்தான் அவர்களது தேவை. இது ஒரு அக்மார்க் தமிழ்ப் பெண்ணிடம் இருக்காதில்லையா?

தமிழ்நாட்டு தலித் பெண்கள் மட்டுமல்ல, பெரும்பாலான தமிழ்ப் பெண்களும் சற்றே குள்ளமாகவும், கருப்பு, மாநிறமாகவும்தான் இருக்கிறார்கள். இந்தத் ‘தகுதிகளோடு’ ஆங்கில மொழி தேர்ச்சியின்மையும் ஒரு யதார்த்தமான பிரச்சினைதானே? விமானத்தில் பறக்கும் மேட்டுக்குடியினருக்கு சேவை செய்யும் பெண்கள் என்றால் சும்மாவா? இது குறித்து கேட்டதற்கு விமான நிறுவனப் பிரதிநிதிகள் தாங்கள் கலரெல்லாம் பார்ப்பதில்லை, பிளீசிங் பெர்சனால்ட்டியைத்தான் பார்க்கிறோம் என்றார்களாம்.

அப்படி ஒரு பெர்சனால்ட்டி வரவேண்டுமென்றால் அது சுண்டி இழுக்கும் வெள்ளையழகில் இருந்துதானே வரும்? பார்ப்பனியம் மட்டுமல்ல முதலாளித்துவம் கூட தலித்துகளை ஓரமாகத்தான் வைத்திருக்க விரும்புகிறது. இட ஒதுக்கீடு என்றால் தகுதி குறைந்து விடும் என்று கூப்பாடு போடும் ஆதிக்க சாதி வெறியர்களுக்கும் இத்தகைய அழகு விதிகளை வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் என்ன வேறுபாடு? அப்படி என்ன விமானத்தில் சேவை செய்து கிழிக்கிறார்கள்? சரக்கு ஊத்தி கொடுப்பது என்ன உலகில் யாரும் செய்ய முடியாத வேலையா என்ன?

“இதுதான் தகுதியென்றால் எங்களுக்கு அப்படி ஒரு பொய்யான நம்பிக்கையை ஊட்டி ஏமாற்றியிருக்க வேண்டியதில்லையே” என அங்கலாய்த்துக் கொள்ளும் அந்த தலித் மாணவிகளில் பெரும்பாலோர் வீட்டிலிருக்க சிலர் மட்டும் ஹவுஸ் கீப்பிங்க முதலான வேலைகளில் சேர்ந்திருக்கிறார்கள்.

உண்மையில் இந்த அரசு செலவிட்ட நான்கு கோடி ரூபாயை ஆதி திராவிட மாணவர் விடுதிகளை மேம்படுத்துவதற்கு ஒதுக்கியிருந்தால் கூட பலனுண்டு. மாட்டுத்தொழுவங்கள் போல பராமரிக்கப்படும் அந்த விடுதிகளிலிருந்துதான் நமது தலித் மாணவர்கள் கல்லூரி படிப்பை மேற்கொண்டு வருகிறார்கள்.

தலித் மக்களை முன்னேற்ற வேண்டுமானால் இந்த அரசு என்ன செய்திருக்க வேண்டும்? தலித் மக்களில் ஆகப் பெரும்பான்மையினர் நிலமற்ற விவசாயிகளாகத்தான் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். அவர்களுக்கு நிலத்தை வழங்கினால் அது அவர்களது வாழ்க்கைப் பொருளாதாரத்தை மட்டுமல்ல ஆதிக்க சாதிகளிடம் சிக்கியிருக்கும் சுயமரியாதையையும் மீட்டு வரும். ஆனால் எல்லா அரசியல் கட்சிகளும் இந்த ஜீவாதாரமான பிரச்சினையை வேண்டுமென்றே தவிர்த்து விட்டு தலித்தை ஜனதிபதியாக்கிவிட்டோம், அமைச்சராக்கி விட்டோம், சில தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறோம் என்று ஏமாற்றி வருகின்றன.

தலித்துக்களில் படித்து முன்னேறியிருக்கும் மிகச் சிறுபான்மையினரான நடுத்தர வர்க்கத்தினை சாட்சியாக வைத்து மற்ற தலித்துகளும் முன்னேறலாம் என்ற மாயையை ஆளும் வர்க்கம் பரப்பி வருகிறது. இந்த செயல்திட்டத்தினை ஏற்றுத்தான் தலித் மக்களின் உரிமை பற்றி பேசும் தலித் அரசியல் கட்சிகளும் செயல்படுகின்றன. அதன் தொடர்ச்சிதான் இந்த விமானப் பணிப்பெண் வேலைத்திட்டம். ஆனாலும் இந்த அற்ப மாயையைக்கூட அமல்படுத்த முடியவில்லை என்பதுதான் இதன் அவலம்.

இத்தகைய கவர்ச்சி தூண்டிலுக்கு இரையாகாமால் தலித் மக்கள் பிற உழைக்கும் மக்களுடன் இணைந்து போராடும் போதுதான் அவர்களுடைய சமத்துவமும், பொருளாதாரமும் மீட்கப்படும். அதுவரை விமானங்களில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் கூட இடம் கிடைக்காமல் போகலாம்.

http://www.vinavu.com/2010/02/08/dalit-air-hostess/


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்