Language Selection

தீபச்செல்வன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நாங்கள் ஆதியிலேயே தோற்றுப்போயிருந்தோம்.
தன் அதிகாரம் மிகுந்த செயல்களுக்காக
நிராகரித்த சிறு மக்களை 
அரசன் 
தோற்கடித்து அரியனையில் ஏறியிருக்கிறான்.

 

 

 

 

 

மோசடிகளிலிருந்து அவன் பரிபூரண உருவத்தைப் பெற்றிருக்கிறான்.
நிரந்தராமாக முகங்கள் கருகிவிட்டன.
யார் வென்றார்கள்
யார் வீழ்ந்தார்கள் என்பதை
குழந்தைகள் அறிவிக்கத் தொடங்குகிறார்கள்.
எல்லா அரசர்களின் முன்பாகவும்
எல்லா வெற்றிகளின் முன்பாகவும்
முடிவுகளுக்கு முன்பாகவே நாம் தோற்றுப்போயிருக்கிறோம்.
எங்கள் வானம் வீழ்ந்து படுகிறது.

மோசடிகளால் செய்யப்பட்ட கதிரையில்
அரசன் அமர்ந்திருக்க
அஞ்சும் காலங்களிலிருந்து 
மிக அஞ்சி ஒடுங்கி தீர்ந்துபோகும் நெருக்கடியான காலத்திற்குள்
கலைக்கப்படுகிறோம்.
இதுவும் சபிக்கப்பட்ட மாலையாக பதிந்திருக்கிறது.
வாக்குறுதிகளால் அழித்து முடிக்கப்பட்ட
ஒப்பந்தங்களால் கையாண்டு ஏமாற்றப்பட்ட 
அதிகாரத்தின் போட்டியில்
வாழ்வு கிழித்தெறியப்பட்டிருக்கிறது.

எல்லாவற்றுக்காகவும் அவனிடம்
மண்டியிடப்போகிறோம்.
குரல்களை தின்றவன் எங்களுக்காக பாடுகிறான்.
சொற்களை செவிமடுக்க மறுத்தவன்
நாளை சொற்களை அள்ளி வீசப்போகிறான்.
திரும்பவும் புன்னகைக்கப்போகிறான்.
நமது மொழியிலேயே நம்மைச் சபிக்கப்போகிறான்.
முளைக்க வேண்டிய பயிர்கள் பறிபோய்விட்டன.
விளையும் காலம் அவனால் தின்னப்பட்டிருக்கிறது.

சனங்கள் ஆதியிலிருந்து தோற்று வருகிறார்கள்.
வீழ்ந்த சந்ததியிலிருந்து
எதைத் தன்னும் நேர்மையுடன் செய்ய சின்ன இடைவெளியுமில்லை.
நமது தெருவுக்கும் முற்றத்திற்கும்
அவனிடம் கெஞ்ச வேண்டியிருக்கிறது.
நாம் வாழ அவனுக்கு பிரதிபலனளிக்க வேண்டியிருக்கிறது.
முதலில் நாங்கள் எங்களுக்குள்
பெரிய தோல்வியைச் சந்திருந்தோம்.
அதன் பிறகு தொடர்ந்து அவர்களிடம் தோற்றுக்கொண்டிருக்கிறோம்.
திசைகளும் கணங்களும் சொற்களும் மனங்களும் 
வெளிகளும் துளைகளும் 
வேறுவேறாக பலியிடப்படுகின்றன.

அவனால் தீர்மானிக்கப்படுகிறது காலம்.
அரசனின் மேய்ச்சல் வெளியில்
திசைகளற்றதும் பட்டியகளற்றதுமான 
ஆடுகளாக அலைந்துகொண்டிருக்கிறோம்.
சொற்களைத் தடுத்து வாயைக் கட்டி விட்டிருக்கிறான்.
இன்று யாரே வென்றிருக்கிறார்கள்
யாரோ தோற்றிருக்கிறார்கள்.
காலத்தை நிரந்தரமாய் இழந்து குழந்தைகள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள்.
தோல்வி நம்மிடம் ஆதியிலிருந்து வருகிறது.

 

o தீபச்செல்வன் -------------------------

http://deebam.blogspot.com/2010/02/blog-post.html