“ஆஸ்திரேலியாவுக்குப் படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் மீதான வெள்ளை நிறவெறித் தாக்குதல்” சென்ற மாதம் முழுவதும் இந்திய ஊடகங்களில் முக்கியச் செய்தியாகத் தொடர்ந்து இடம் பெற்றிருந்தது.

நிதின் கார்க் கொலையைத் தொடர்ந்து, இது நிறவெறித்தாக்குதலாக இருக்க வாப்பு இருக்கிறது என்று முதன் முறையாக விக்டோரியா மாகாணத்தின் தலைமை போலீசு கமிசனரே ஒப்புக் கொண்டிருக்கிறார். எனினும் இவையனைத்தும் வழிப்பறி, ரவுடித்தனம் போன்ற வழமையான குற்றங்களேயன்றி நிறவெறித் தாக்குதல்கள் அல்ல என்கிறது ஆஸ்திரேலிய அரசு.

பஞ்சாபைச் சேர்ந்த நிதின் கார்க் என்ற 21 வயது வணிகவியல் பட்டதாரி மாணவர், அவர் பகுதி நேரமாக வேலை செய்து வந்த உணவு விடுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பலால் வழிமறித்துக் குத்திக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் யார் என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

நிதின் கார்க் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கண்டனங்கள் எழுந்த போதிலும், அடுத்த ஒரு வாரத்திலேயே ஜஸ்பிரீத் சிங் என்ற டாக்சி ஓட்டுனரைத் தீ வைத்துக் கொளுத்த ஒரு கும்பல் முயன்றிருக்கிறது. தீக்காயங்களுடன் அவர் உயிர் தப்பியிருக்கிறார். இந்தியர்கள் மீதான தாக்குதலுக்காக சென்ற ஆண்டில் மட்டும் 1400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. தாக்கப்படும் பலர் போலீசில் புகார் கொடுப்பதில்லை என்பதால், தாக்குதலின் எண்ணிக்கை உண்மையில் இதை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்று ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய மாணவர்கள் கூறுகின்றனர்.

 

ஆஸ்திரேலியாவுக்குப் பிழைக்கப்போன டாக்சி டிரைவர்கள் போன்ற அடித்தட்டு வர்க்கங்களைச் சேர்ந்த இந்தியர்களின் மீது இத்தகைய தாக்குதல்கள் நடக்கும்போதும், வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியாவில் இதைவிடக் கொடூரமாக இந்தியத் தொழிலாளிகள் நடத்தப்படும்போதும் அவற்றைக் கண்டு கொள்வதற்குக் கூட மறுக்கும் இந்திய அரசும், இந்திய ஊடகங்களும் சமீபகாலமாகக் குமுறிக் கொந்தளிப்பதற்குக் காரணம், அடி வாங்குபவர்களின் வர்க்கமும் சாதியும்தான். தற்போது தாக்கப்படுபவர்கள், இலட்சக்கணக்கில் பணம் கட்டி அங்கே படித்து விட்டு, பின்னர் ஆஸ்திரேலியக் குடியுரிமை வாங்கி அங்கேயே “செட்டில்” ஆக விரும்பும், உயர் நடுத்தர வர்க்க, உயர்சாதி இந்தியர்கள் என்பதனால், ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகங்கள் அளவுக்கு அதிகமாகச் சாமியாடுகின்றன. பாலிவுட் திரைப்பட இயக்குநர் மொகித் சூரி, இந்தத் தாக்குதல்களை மையமாக வைத்துப் படமெடுப்பதற்குத் திரைக்கதையே தயாரித்து விட்டார்.

இத்தகைய சூழ்நிலையில் “கடுமையான” கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விட்டது இந்திய அரசு. சில மாதங்களுக்கு முன் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சாதாரணக் கண்டனத்தைக் கூடத் தெரிவிக்க மறுத்த இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா, “இது அப்பாவி இந்தியர்கள் மீது நடத்தப்பட்டுள்ள கொடூரத் தாக்குதல் மட்டுமல்ல, மனித குலத்தின் மீது இழைக்கப்பட்டுள்ள கொடுங்குற்றமும் ஆகும்” என்று வருணித்தார். பார்ப்பதற்குக் கடும் கண்டனம் போலத் தெரிந்தாலும், நிறவெறித் தாக்குதல் என்று குற்றம் சாட்டுவதற்குக் கூடப் பயப்படுகின்ற இந்திய அரசு, கண்டனம் என்ற பெயரில் உதிர்த்துள்ள நகைச்சுவைத் துணுக்குதான் இது .

இத்தாக்குதல்களைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை கொடுத்துள்ள வழிகாட்டுதலே இதனை நிரூபிக்கிறது; “தீவிரமான குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய அரசு மேற்கொண்ட போதிலும் தாக்குதல்கள் தொடர்கின்றன. ஆஸ்திரேலியாவில் ஆகப்பெரும்பான்மையான இந்தியர்களுடைய அனுபவம் நேர்மறையானதே என்றபோதிலும், கீழ்க்கண்ட தற்காப்பு நடவடிக்கைகளை இந்தியர்கள் மேற்கொள்வது நல்லது. மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத பகுதிகளுக்குத் தனியாக செல்லாதீர்கள். எங்கே போகிறீர்கள், எப்போது திரும்புவீர்கள் என்பதை யாரிடமாவது சோல்லாமல் வெளியே போகாதீர்கள். மடிக்கணினி போன்ற விலை உயர்ந்த பொருட்களை மற்றவர்களுக்குத் தெரிவது போல எடுத்துச் செல்லாதீர்கள். ஆபத்து என்றால் யாருக்குத் தகவல் சொல்லவேண்டும் என்பதை எழுதி சட்டைப் பையில் வைத்திருங்கள்” என்று நீள்கின்றன, இந்திய அரசின் வழிகாட்டுதல்கள்.

நிலைமை இவ்வளவு மோசமாக இருந்தபோதிலும், ஆஸ்திரேலிய அரசிடம் இந்திய அரசு அடக்கி வாசிப்பதற்குக் காரணம் இருக்கிறது. அமெரிக்கா அமைத்துள்ள ஆசிய-பசிபிக் பிராந்தியத்துக்கான இராணுவக் கூட்டணியில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியாவும் அங்கம் வகிக்கிறது என்பதுடன், அணு ஆயுதப் பரவல் தடையில் கையெழுத்திடாமலேயே, யுரேனியத்தைப் பெறுவதற்கும் இந்திய அரசு, ஆஸ்திரேலியாவைத் தாஜா செய்து வருகிறது. மேலும், ஆஸ்திரேலியாவில் கல்வி நிறுவனங்களைத் தொடங்கும் வாய்ப்பு இந்தியக் கல்வி வியாபாரிகளுக்கு இப்போது கிடைத்துள்ள சூழலில், சவடாலுக்காகக் கூட நிறவெறி எதிர்ப்பு பேசி வருமானத்தைக் கெடுத்துக் கொள்ள இந்திய ஆளும் வர்க்கங்கள் விரும்பவில்லை.

இந்திய ஊடகங்கள் சாமியாடுவதை ஆஸ்திரேலிய அரசு சகித்துக் கொள்வதற்கும் காரணம் உள்ளது. அந்நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் சரக்குகளில் நான்காவது இடத்தில் இருக்கிறது கல்வி. ஆண்டொன்றுக்கு 15.4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான வருமானத்தை கல்வி வியாபாரத்தின் மூலம் ஈட்டுகிறது ஆஸ்திரேலியா. இதில் இந்திய மாணவர்களின் பங்கு 2 பில்லியன் டாலர்கள். தற்போது இந்தியாவிலும் தனது கல்வி வியாபாரத்தைத் தொடங்கவிருக்கிறது. வெள்ளைக் கனவான்கள் கண்ணியம் காப்பதற்குக் காரணம் இதுதான். மற்றபடி, ஆஸ்திரேலிய ஆளும் வர்க்கத்தின் வெள்ளை நிறவெறியை நிரூபிப்பதற்கு அதிகம் சிரமப்படவேண்டிய அவசியமில்லை.

ஆஸ்திரேலியப் பழங்குடிகளைத் துப்புரவாக வேட்டையாடி ஒழித்து அந்த கண்டத்தையே கைப்பற்றிக் கொண்டது மட்டுமின்றி, பழங்குடி மக்களின் மொழி மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளையும் தடை செய்தது அரசு. அம்மக்களின் குழந்தைகள் மூலம் அந்தப் பண்பாட்டின் எச்சங்கள் கூட மிஞ்சி இருக்கக் கூடாது என்பதற்காக, 5 வயதுக்கு உட்பட்ட பழங்குடியின குழந்தைகளை அவர்களுடைய பெற்றோரிடமிருந்து பலவந்தமாகப் பறித்தது. இந்த நடவடிக்கைகளில் நேரடியாகப் போலீசாரே ஈடுபடுத்தப்பட்டனர். இந்தப் பிள்ளை பிடிக்கும் கொடுமை 1970-ஆம் ஆண்டு வரை தொடர்ந்திருக்கிறது என்பது ஆஸ்திரேலிய ஆளும் வர்க்கத்தின் யோக்கியதைக்குச் சான்று.

இந்திய ஆளும் வர்க்கத்தைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. தீண்டாமைப் படுகொலைகள் கூட சாதாரணக் கொலைக்குற்ற வழக்குகளாகவே இங்கு பதியப்படுகின்றன. தீண்டாமையோ இந்துக் கலாச்சாரத்தின் அங்கமாகவே கருதப்படுகிறது. இந்நிலையில் வெள்ளை நிறவெறியைப் பற்றி வரம்பு மீறிப் பேசினால், தீண்டாமையும் சர்வதேசப் பிரச்சினையாகச் சந்திக்கு வந்துவிடும் என்ற அச்சமும் இந்திய அரசுக்கு இருக்கிறது.

உள்நாட்டில் வேலை தர வக்கில்லாததால் வெளிநாடு செல்ல இந்தியர்களை ஊக்குவிப்பதும், அந்த அந்நியச் செலாவணிக்காசை அண்டி நிற்பதும் இந்திய ஆளும் வர்க்கங்களின் பொருளாதாரத் தேவை. மக்கள் தொகை அதிகரிக்காத ஆஸ்திரேலியாவுக்கோ, ஆசிய நாடுகளிலிருந்து மலிவான கூலிக்கு ஆட்கள் தேவை. இந்தியாவில் வர்க்க முரண்பாடுகளைத் திசை திருப்புவதற்கு இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு சாதி எப்படிப் பயன்படுகிறதோ, அப்படித்தான் நிறவெறியும் அங்கே பயன்படுகிறது. முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி காரணமாக கல்வி, வேலை வாய்ப்புகளை இழந்து வரும் வெள்ளை இளைஞர்களின் கோபம் தனக்கெதிராகத் திரும்பாமல், ஆசிய நாட்டினருக்கும், கருப்பினத்தவருக்கும் எதிராகத் திரும்பும் அளவில், வெள்ளை நிறவெறி ஆஸ்திரேலிய முதலாளி வர்க்கத்துக்கும் பயன்படுகிறது. சாதிவெறியாகட்டும், நிறவெறியாகட்டும் எல்லாமே தமது தேவைக்கு உகந்த அளவில் தொடரவேண்டும் என்பதே முதலாளி வர்க்கத்தின் விருப்பம்.

கடந்த 3 ஆண்டுகளில் இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே வருவது பற்றிக் கேட்டபோது, “கடந்த மூன்றாண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு வரவிரும்பும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் 30,000 இலிருந்து 1,00,000 ஆக உயர்ந்திருக்கிறதே” என்று பதிலளித்தார் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய ஹை கமிசனர் பீட்டர் வர்கீஸ். நிதின் கார்க்கிற்கு விழுந்த கத்திக்குத்தை விடவும் வலிமையானது இந்தக் குத்து. இருப்பினும் இந்தக் குத்தெல்லாம் என்.ஆர்.ஐ. அம்பிகளின் தோலைக்கூடத் துளைக்க முடியாது.

- புதிய ஜனநாயகம், பிப்ரவரி – 2010