Language Selection

சுதேகு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் முதல் தடவையாக ஒரே நாளிலும், இரண்டு வருடத்துக்கு முதலாகவும் இவ் ஜனாதிபதித் தேர்தல் நடக்கிறது. இத் தேர்தலில் ஒரு கோடியே 40 இலட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 11ஆயிரத்து 98 வாக்களிப்பு நிலையங்களையும், இதற்கான காவற் கடமையில் 68 ஆயிரத்து 800 பொலீசாரும் தயாரான நிலையில் இருந்தது.

 

இத் தேர்தலைக் கண்காணிப்பதற்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆயத்தமாக இருக்கின்றனர். தேசிய வாக்களிப்பு கண்காணிப்பு நிலையம், தேர்தல் கண்காணிப்புக்கான வலையமைப்பு, வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம், பெப்ரல், கபே போன்றவைகளும் வேறு சில தனியார் தேர்தல் கண்காணிப்பு நிலையங்களும், கண்காணிப்பில் ஈடுபடத் தயாராக இருப்பதாக தேர்தல் திணைக்களம் தெரிவிக்கிறது.

 

 

பொது நலவாய மற்றும் தொற்காசிய பிராந்திய நாடுகளில் இருந்து 85 க்கு மேற்பட்ட வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் வந்திருந்தனர். தெற்காசிய பிராந்தியத்தில் இருந்து 40 பேரும் பொது நலவாயத்தில் இருந்து 10 பேரும் வரவழைக்கப் பட்டிருப்பதாக தேர்தல் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கிறது.

 

பெப்ரல் அமைப்பு 17 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை வரவழைத்துள்ளது. ஆசிய நாடுகளில் இருந்தும் குறிப்பாக ஜப்பான், நோர்வே, சுவீடன் மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் இப் 17 பேரும், யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, கண்டி, மற்றும் கொழும்பில் காண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். இவர்களோடு இவ்வமைப்பானது சுமார் 6 ஆயிரம் உள்நாட்டவர்களையும் இணைத்து கண்காணிப்பில் ஈடுபடுகிறது. இவர்கள் 352 வாகனங்களைப் பயன்படுத்தி நடமாடும் சேவையிலும் ஈடுபட இருக்கின்றனர்.

 

சி எம் இ வி இனர் 18 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை வரவழைத்துள்ளனர். ஆசிய நாடுகளில் இருந்தும் குறிப்பாக கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா,கிரீஸ், துருக்கி மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் இப் 18 பேரில், கூடுதலாக நேபாளத்தில் இருந்து 10 பேர் வந்திருந்தனர். இவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, பொலனறுவை, புத்தளம், கண்டி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் காண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். இவர்களோடு இவ்வமைப்பானது சுமார் 3 ஆயிரத்து 500 உள்நாட்டவர்களையும் இணைத்து கண்காணிப்பில் ஈடுபடுகிறது. இவர்கள் 80 வாகனங்களைப் பயன்படுத்தி நடமாடும் சேவையிலும் ஈடுபட இருக்கின்றனர்.

 

ஜ.எவ்.எச்.ஆர் அமைப்பினர் நாடடங்கலாக 5 ஆயிரத்து 872 பேரையும் 08 வாகனங்களையும் கண்காணிப்பில் ஈடுபடுத்துகிறது. கபே அமைப்பினர் நாடுதழுவிய ரீதியில் 6 ஆயிரத்து 563 பேரையும் 300 வாகனங்களையும் கண்காணிப்பில் ஈடுபடுத்துகிறது. தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் ஆயிரத்து 200 பேரையும் 150 வாகனங்களையும் கண்காணிப்பில் ஈடுபடுத்துகிறது. 737 வாக்குகள் எண்ணப்படும் நிலையமும், 139 தபால் மூலமான வாக்குகளை எண்ணும் நிலையமும், 12 இடம் பெயர்ந்தோருக்கான வாக்குகள் எண்ணும் நிலையமுமாக மொத்தம் 888 நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 22 வேட்பாளரும் 11 ஆயிரத்து 98 வாக்களிப்பு நிலையமும் 2 ஆயிரத்து 523 நடமாடும் சேவகர்களும் தயாராக இருக்க:

 

தேர்தலுக்கான காலைப் பொழுதும் புலர்கிறது…

 

வாக்காளர்கள் தாமதிக்காமல் வாக்குகளைப் போடுமாறு ஜனாதிபதியும், தேர்தல் ஆணையளாளரும் வாக்காளளரைக் கேட்டுக் கொண்டனர். குடாநாட்டில் 26ம் திகதி வெள்ளாப்புத் தொடங்கி (2 மணியில் இருந்து) அதிகாலை 4 மணிவரை, நான்கு விதமான -13 குண்டுவெடிப்புக்கள் நிகழ்கின்றன. மக்கள் கலவரத்துக்கு உள்ளாகினர். இக் குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்டதாக எவரும் இதுவரை குடாநாட்டு மருத்துவ மனைகளில் பதிந்திருக்கவில்லை.

 

பொழுது போய்க் கொண்டிருக்கிறது…

 

இக் குண்டுவெடிப்புத் தொடர்பாக பலவிதமான மொட்டாக்குப் போட்ட செய்திகள் மக்களிடையே கால்கொண்டு நடந்து திரிகிறது. சுரேஸ் பிரேமச்சந்திரனதும் மற்றும் அவரது சாரதியினதும்(உடுப்பிட்டி) வீட்டின் மீது இக் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக ஒரு வகைச் செய்தியும், குடாநாட்டிலுள்ள சுதந்திரக்கட்சி (உடுப்பிட்டி அமைப்பாளர்) ஆதரவாளர் ஒருவரின் வீட்டின் மீது இக் குண்டுத்தாக்குதல் நிகழ்ந்ததாக வேறொரு செய்தியுமாக இவை உலாவத் தொடங்கியது. இராணுவத்தரப்பு செய்திகளின் படி: வல்வெட்டித்துறைக்கு அண்மித்த உடுப்பிட்டி யாழ்ப்பாணம் வீதியில் இரு வெவ்வேறு பெற்றோல் குண்டுகள் வெடித்துள்ளதாகவும் எவருக்கும் எவ்வித சேதமுமில்லை என அது உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மணோ கணேசனின் கருத்துப்படி: யாழில் குண்டுகள் வெடிக்கவைத்து மக்களை வாக்களிக்க விடாமல் பயமுறுத்தியதாகவும், பல பஸ்கள் சேதமாக்கப் பட்டதாகவும் அவரின் கருத்து அமைந்திருந்தது.

 

பொழுது மதியவேளையைக் கடந்தபோது, மக்கள் வாக்குச் சாவடி நோக்கி நகர்வதில் சுறுசுறுப்புக் காணப்பட்டது. இதுவரை இலங்கை பூராகவும் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் (தேர்தலுக்கு 9 தினங்களுக்கு முன்னர்: புத்தளம் மாவட்டத்தில்  ‘முந்தல்’ பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட மதுரங்குளி நகரில் -ஆளும் மற்றும் எதிர் அணிகளுக்கு இடையே நடந்த மோதலில் – அருண சமன்குமார என்ற 19 வயது வாலிபன் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், 5 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 3 வர் புத்தளம் வைத்திய சாலையிலும், 2 வர் குருணாகல் தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப் பட்டிருந்தனர். முதலாவது சம்பவமாக சரத்தின் பிரச்சாரக் கூட்டத்துக்கு பஸ்சில் பணயம் செய்த ஒரு வயோதிபப் பெண் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகி இருந்தார்), 40 வன்முறைச் சம்பவங்களும் பதிவாகி இருக்கின்றன. இதேவேளை கெராகரல்ல என்னும் இடத்தில் வன்முறைக்குத் தயாராக இருந்த 20 பேர் கைது செய்யப்பட்டதாகவும், இவர்களுக்குள் முன்னாள் ‘கொமாண்டோக்’களும் அடங்குவதாகவும் பொலீஸ்தரப்புச் செய்திகள் வெளியாகுகின்றது.

 

தேர்தலுக்கு முதல் நாள் பின்நேரம் (25ம் திகதி) குடாநாட்டில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் காரியாலயத்துக்கு முகமூடி அணிந்த சிலரால் கற்கள் வீசப்பட்டதாக உறுதிப்படுத்தாத உள்ளுர் தகவல்கள் அடிபட்டன. 24ம் திகதி மாத்திரம் 225 அசம்பாவிதங்கள் நிகழ்ந்தன! 25ம் திகதி 501 தேர்தல் வன்முறைகள் பிரதானம் பெற்றிருந்தன. இதில் 257 சம்பவங்களில் யூ.என்.பியும் ஜே.வி.பி யும் இணைந்த சம்பவங்களாக 34 சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

 

கண்டி மடவள தெல்தெனிய வீதியிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர் வீட்டின் மீதும் குண்டும் வீசப்பட்டுள்ளது. எம்.எஸ்.எம் ரிஸ்மியின் வீட்டின் மீது வீசப்பட்ட இக் குண்டால் அவரது வீட்டுக்கு சிறிது சேதம் ஏற்பட்டதாகவும், உயிச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் செய்திகள் வெளிவந்தன. இச்சம்பவத்தை வந்துகாமம் பொலீசார் விசாரித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

 

தேர்தல் தினத்தன்று வவுனியாவில் வெறும் காணி ஒன்றில் கைக்குண்டு வீசப்பட்டதாக செய்திகள் வந்திருந்தன. மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்கள் கைக்குண்டை வீசியதாகவும், இதனால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்றும் பொலீஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி வாக்களிப்பு நிலையங்களுக்கு ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் தனது முகவர்களை அழைத்துச் சென்றபோது வவுனியாவில் பொலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்காரா: பாராளுமன்ற உறுப்பினரான விஜித கேரத் இராணுவத்தில் இருந்து தப்பி ஓடிய 20 பேருடன் கிளிநொச்சிக்குச் சொன்றதாகக் கூறியிருந்தார். இதை சம்மந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மறுத்ததோடு, தம்மை 3 மணித்தியாளங்கள் இராணுவத்தினர் தமதப்படுத்தியதால் தமது தேர்தல் பணிகள் தமதப்பட்டதாக கூறியுள்ளார்

 

‘மெனிக் பாம்’ இடைத்தங்கல் முகாமிலிருக்கும் மக்கள் யாழ்ப்பாணத்துக்கு வாக்களிக்கச் செல்வதற்கான பஸ் போக்குவரத்து வசதிகள் உறுதிப்படுத்தப்பட்ட போதிலும், வேண்டுமென்று திட்டமிட்ட முறையில் அரசு பஸ் சேவையை நிறுத்தியுள்ளதாக ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் உவிஜித கேரத் தெரிவித்தார். மன்னார் பிரதேச மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்வதற்கான பஸ் போக்குவரத்துச் சேவைகள் குறைபாடுகளைக் கொண்டிருப்பதாக ‘பவ்வரல்’ அமைப்பு தெரிவித்தது. மன்னார், வவுனியா, மதவாச்சியை இணைக்கும் பஸ் போக்குவரத்துக்கள் இன்று நிறுத்தப்பட்டுள்ளதாகவும், வாக்களிப்பை உறுதிப்படுத்தும் முகமாக பஸ் போக்குவரத்தை உடனடியாகச் சீராக ஆரம்பிக்குமாறு இவ் அமைப்பு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.

 

இன்று மதிய வேளைக்குப் பின்னர் மக்கள் சுறுசுறுப்பாக வாக்களிப்பில் ஈடுபட, அரச – எதிர் அரசியல் இராணுவத் தளங்கள் முறுகல் நிலைக்குச் சென்று கொண்டும் இருந்தன. பிற்பகலின் பின்னர் ‘லீவில்’ இருந்த இராணுவத்தினர் அனைவரும் உடனடியாகக் கடமைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். கேந்திர மற்றும் முக்கிய இடங்களின் பாதுகாப்புகள் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு மேலும் பலப்படுத்தப்பட்டன. காலை 7 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நடைபெற்ற வாக்களிப்பு நிறைவு பெற்றிருந்தது.

 

இன்றைய தினம் சுமார் 40 வெளிநாடுகளைச் சேர்ந்த உடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பதற்காக இலங்கையில் காத்திருக்கின்றனர்…

 

இவ்வளவு தேர்தல் கண்காணிப்புக்கள் இருந்தும், தேர்தல் வாக்கு மோசடிகளைப் தடுப்பதற்காக யூ.என்.பி கூட்டு சம்மாந்துறையில் கூடியது! அம்பாறை மாவட்டத்திலுள்ள நாவிதன்வெளி, கல்முனை, காரைதீவு, ஆலையடிவேம்பு, கோமாரி, திருக்கோவில் வாக்கு நிலையங்களில் மோசடிகளை முன்கூட்டியே தடுப்பதற்காக முஸ்லீம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜ.தே.க, ஜே.வி.பி கூட்டாக முடிவு செய்தன. தேர்தலுக்கு முதல்நாள் கூடிய இக்கூட்டத்தில் (றவூப்பின் சம்மாந்துறை அலுவலகத்தில்) கசன் அலி, நெளஷாத் ஜோசப் தங்கதுரை, ஜே.வி.பியின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான தயாகமகே, மஜுட்டும் மற்றும்  கல்முனை மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர் கென்றி மகேந்திரன் குழு வாக்களிப்பு நிலையங்களில் பணிபுரிய முடிவாகியது. இவ் வாக்குச் சாவடிகளில் ஏதாவது மோசடி முறைகேடுகள் நடந்தால், கையடக்கத் தொலைபேசி மூலமாக அம்பாறை மாவட்டத் தமிழ் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பொதுக் கூட்டணியின் பிரதேச செயலகங்களுக்கு அறிவித்து தடுப்பதாகத் திட்டமிடப்பட்டது.

 

இத் தேர்தலின் போது சட்டத்தை மீறி வன்முறையில் ஈடுபடுவோர் மீது முதல் எச்சரிக்கை மேல் வெடியும் தொடர்ந்து மீறும் பட்சத்தில் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய பொலீசார் பணிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இத்தேர்தல் வன்முறை குறைந்த ஒரு தேர்தலாகவும், அமைதியாகவும் நடந்ததாக தேர்தல் கண்காணிப்பு வட்டாரத்தினர் திருப்திப்பட்டுக் கொண்டனர்!

 

இரவு 7 மணியின் பின்னர் வாக்குகள் எண்ணத் தொடங்கும் ஆரவாரங்கள் களைகட்டத் தொடங்குகிறது…

 

காலை யாழ்ப்பாணத்தில் நடந்த வன்முறைகளால் தேர்தல் முடிந்த பின் – இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் நள்ளிரவை நெருங்கும் நேரம் வெளிவரத் தொடங்குகிறது..

 

யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு தபால் வாக்களிப்பு முடிவுகள் வெளிவரத் தொடங்கும் போது

‘ராண்ஸ் ஏசியா’ உல்லாசவிடுதி அரச இராணுவத்தால் (200 இராணுவத்தினர்) சுற்றி வளைக்கப்பட்டிருந்தது. இச் செய்தி வெளிவரும் போது மகிந்தா 40 ஆயிரம் தபால் வாக்களிப்பில் முன்னணியில் இருந்தார். ரணில் மற்றும் சரத் உட்பட 20 அறைகள் வாடகைக்கு அமர்த்தப்பட்ட நபர்கள் அங்கு குழுமியிருந்தனர். யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு தபால் வாக்களிப்பு முடிவுகள் சரத் அதிக வாக்கைப் பெற்றதாக வெளிவருகிறது. தொடர்ந்து திருகோணமலையில் (தபால் மூலமான வாக்களிப்பில்) மகிந்தா முதலிடத்தில் இருந்தார்.

சரத் சுற்றி வளைக்கப் பட்டிருப்பதாகவும், தனக்கு உயிராபத்து இருப்பதாகவும் சரத் ஊடகங்களுக்கும் வெளிநாட்டுத் தூதரகத்துக்கும் அறிவித்துள்ளார்.

 

அரசு தரப்பு தாம் சரத்தை கைது செய்வதற்காக சுற்றி வளைக்கவில்லை என்றும், இராணுவத்தில் இருந்து தப்பி ஓடிய 400 இராணுவ வீரர்கள் பதுங்கி இருப்பதாகவும், இவ் உல்லாச விடுதி உயர் பாதுகாப்புப் பிரதேசத்தில் இருப்பதாலும் உல்லாசப் பிரயாணிகள் தங்கியிருப்பதாலும் இது சாதாரண நடவடிக்கை என்று அரசு கூறுகிறது. மேலும் 9 இராணுவ உயர்மட்ட உறுப்பினர் (இராணுவத்தை விட்டத் தப்பி ஓடியவர்கள்) இங்கே கைது செய்யப்பட்டதாகவும் இவர்களின் வாகனங்களில் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் இருந்ததாகவும் ‘வீடியோ செய்தியை’ அது வெளியிட்டது.

 

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் முற்றாக வெளிவரும் வரை இச் சுற்றிவளைப்பு தொடர்து இருந்தது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் இரவு 9 மணியளவில் இராணுவம் அகற்றப்பட்டது! தேர்தல் முடிவுகள்: 19 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் மகிந்தா இத் தேர்தலில் வெற்றி பெற்றும் இருந்தார். இராணுவம் அகற்றப்பட்டபின் வீடு திரும்பிய சரத் தான் வெளிநாடு செல்ல இருப்பதாக அறிவித்தார் (உயிர் அச்சம் காரணமாக). ரணில் இத் தேர்தல் அமைதியாக நடக்க உதவிய மக்களுக்கு நன்றி தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது!

 

தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தி இருக்கும் சர்ச்சைகள்!

மகிந்தா இத் தேர்தலில் 57.88 வீத வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார். இத் தேர்தலில் 22 மாவட்டங்களில்16 மாவட்டங்களில் முன்னிலையில் வெற்றியீட்டி, சிறுபான்மை மக்களின் மாவட்டங்கள் உட்பட 06 மாவட்டங்களில் தோற்றுள்ளார்.

 

இத் தேர்தல் முடிவுகளின் படி: மகிந்தா ‘சிங்கள தேசிய இனத்தின் ஜனாதிபதி’யாகவும், சரத் ‘சிறுபான்மை தமிழ் பேசும் மக்களின் ஜனாதிபதி’யாகவும் இன்று பேசப்படுகிறது. இத் தேர்தலின் முடிவுகள் இலங்கையில் இனரீதியாக பிளவுபட்ட வாக்குகளாகக் கருதப்படுகிறது.

 

இத்தேர்தலில் தபால் வாக்களிப்பு முடிவுகள் இதற்கு எதிராகவே இருக்கின்றன. தபால் வாக்களிப்பின் பின்னர் ‘ஈ நியூஸ்’ செய்தியாளர் காணமாற் போனதாக அவரது மனைவி பொலீசில் புகார் செய்திருந்தார். அரச இராணுவம் கடத்தியதாக எதிர்தரப்பும், எதிர் தரப்பினர் மறைத்து வைத்திருப்பதாகவும் அரசு தரப்பினரும் குற்றம் சாட்டினர். இவ் மர்ம மறைவு ஊடகங்களுக்கு எரிச்சலை ஊட்டியது.

 

இது சுமார் 35 ஆயிரம் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இருந்த ஒரு தலைநகரத்தில் இது நிகழ்ந்தது! இச் செய்தியாளரின் மர்மத்தின் பின்னர், ஓர் ஆட்சி மாற்றம் தேவை என்ற கருத்து ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. இவ் ஆதிக்கக் கருத்தியல் வெளிப்பட்ட காலத்தில் சரத்தால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை மிக மேசமான இனவாதத்தையும், இராணுவ வடிவிலான அரசியல் அமைப்பு வடிவத்தையும் பகிரங்கமாகவே கோரப்பட்டும் இருந்தது. புலிகளுக்கு தான் நியாயம் கோரப் போவதாக கூறிய கூற்றுக்கு தலைகீழகவும் இது இருந்தது.

 

  • ”இறுதி நாட்களில் ஜனாதிபதி சர்வதேசத்திற்கு பயந்து புலித்தலைவர்களை உயிருடன் பிடிக்க ஆலோசனை வழங்கினார். பிரபாகரனை பிடித்து அவருடன் பேசவும் அவருக்குத் தேவைப்பட்டது. அப்படியாகிவிட்டால் பிள்ளையான், கருணா அம்மான் போல் பிரபாகரனுக்கும் முதலமைச்சர் பதவி கிடைத்திருக்கும். சரணடைந்த பிரபாகரனையும் ஏனைய தலைவர்களையும் கொல்ல கட்டளையிட்டது நான் .”
  • ”இந்த கொடூரமான கொலையாளியுடைய சாவின் உரிமையை ஜனாதிபதிக்கு அல்லது பாதுகாப்புச் செயலாளருக்கு என்னிடமிருந்து பறிக்க முடியவில்லை. வெளி நாடுகளின் தாளத்திற்கு ஜனாதிபதி ஆடினார். ஆனால் ஆயிரக் கணக்கான பயங்கரவாதிகளை இன்னும் முகாம்களில் பாதுகாக்க அரசுக்கு வேண்டியதாக இருக்கும். இப்பிரச்சினை அப்போது நான் எடுத்த தீர்மானத்தால் முடிவடைந்து விட்டது. யுத்தத்தின் பின் ஜனாதிபதி பாதுகாப்புச் செயலாளர் என்னுடன் கோபமுற்றனர். ஏன்? நீண்டகாலமாக எமது நாட்டில் பாதுகாப்புக்கு தடை ஏற்பட்ட காரணங்களுக்கு நான் சம்மதிக்கவில்லை .”

 

 

சரத்தின் ‘உத்தேசக் கணக்கு’ சிங்கள மக்களிடம் பொய்து விட்டது. தென் இந்திய சீன இடையூறுகளுக்கு முகம் கொடுக்க 4 இலட்சம்வரை இராணுவத்தை பெருக்க வேண்டுமென சரத் ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறார்.

 

இலங்கையில் இன்று நடந்த இந்தத் தேர்தலில் சரத், மகிந்தா ஆகிய இருவருக்கு மிடையே பலத்த போட்டி காணப்பட்டது. ஏனைய 20 பேரும் வாக்குக்களைச் சிதறடிப்பதையே உள்நோக்கமாகக் கொண்டு போட்டியிட்டனர். இது ஏதோ ஒரு விதத்தில் இருவரில் ஒருவருக்கு சாதகத்தை உருவாக்கும் பக்கபலமான போட்டியே. இம் முறை பிரதான எதிரணி வேட்பாளர் கட்சி நபராக அமைந்திருக்கவில்லை. ஒரு பொது வேட்பாளரை எதிர் கட்சியினரும், ஜே.வி.பியும், சிறுபான்மை புலிசார்பான மற்றும் கடந்தகாலத்தில் புலிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட கட்சியினரும் இணைந்து நிறுத்தியிருந்தனர். அதுவும் ஒர் இராணுவ தலைமை அதிகாரியை (புலியை தோற்கடித்த யுத்தத்தில்).

 

சரத்தின் தேர்தல் அறிக்கைகள் தமிழ், முஸ்லிம், மலையக மற்றும் சிறுபான்மைப் பிரிவினருக்கு மிக விரோதமானதும், பச்சை இனவாதமானதுமாகும். தமிழ், முஸ்லிம் மீனவர்களின் மீன்பிடித் தொழில் எல்லைக் கடலில் கூட இராணுவ கண்காணிப்பு முகாம்களை நிறுவ வேண்டுமென்பது எவ்வளவு மூர்க்கத்தனமானது. இந்த விரோதங்களில் கூட சிறுபான்மை கட்சிகள் எவ்வாறு கூட்டுக்குள் கிடக்க முடிந்தது! வடக்கும் கிழக்கும் இணைவதை தான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் எனக் கூறும் சரத்துக்கு வாக்குப் போடும் படி கும்பிடு போட்ட பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் சரத்துக்குப் போட்ட வாக்குக்கள், ”வடக்குக் கிழக்கு இணைந்த – ‘தாயகப் பிரதேசத்துக்கு’ – வழங்கப்பட்ட வாக்காக ‘பிழைப்பு நடத்துவது’ எவ்வளவு அயோக்கியத் தனமான அரசியல்!

 

இன்று நடத்தப்பட்ட இத் தேர்தல் அப்பட்டமாக மேற்குலகத்துக்கும், பிராந்திய வல்லரசுகளுக்கும் இலங்கை நாட்டைத் தாரை வார்க்கும் இரண்டு வீரியமான ‘தரகர்களுக்கு’ இடையில்: தரகைத் தக்கவைப்பதற்கும், வீழ்திப் பெறுவதற்குமான ஒரு தேர்தலே இது ஆகும்! இந்தப் போட்டி இராணுவத் தளத்தில், தலைமையைக் கைப்பற்றும் – தக்கவைக்கும் சந்தர்பங்களுக்கான அனைத்து விதமான சாத்தியக் கூறுகளையும் முன்னெடுக்க இரு தரப்பினரும் ஆயத்தமாகவே இருந்தனர். இத் தேர்தலில் அப்பாவி மக்களை இன ரீதியாக மருட்டி, இனங்களின் ஐக்கிய மென்னும் (இலங்கை மக்கள்) பச்சைக் குருத்தை பக்கவாட்டால் கிளித்தும் உள்ளனர்.

 

இத் தேர்தலில் மகிந்தாவையும், அதே அரசில் இருந்து புலிகளை யுத்தத்தால் வெற்றி கொண்ட இராணுவத் தலைமை அதிகாரி சரத்தையும் நிறுத்தி, மேற்குலகமும், தெற்கு ஆசியாவும் போட்டியாக இழுத்த ‘கயிறிழுப்புப்’ போட்டியில்: மேற்குலகம் மீண்டும் தோல்வியைக் கண்டுள்ளது. சமீபத்தில் இலங்கைத் தேர்தல் முடிவுகள் பற்றி நோர்வே எரிக்சூல்கைம் கருத்துத் தெரிவித்த போது: மகிந்தா பெரும்பான்மை -சிங்கள மக்களின்- ஜனாதிபதி என்று சொன்னது ஆச்சரியத்தைக் கொடுத்தது. (சிறுபான்மை இனத்தவரின் ஜனாதிபதி சரத் என்று கூறும் கருத்தியலும் ஏாதிபத்தியத்தின் இழுவைக் குரலே!)இலங்கையின் இனப் பிரச்சனையில் நடுவராகத் தொழிற்பட்ட ஒரு நபர் வெளிப்படையாக இவ்வாறு தெரிவிப்பதை வேறு என்னென்று சொல்லுவது?

 

சிறுபான்மையினர் மீது காட்டும் பாகுபாட்டைத் தடுக்கவும் அவர்களைப் பாதுகாக்க அமைக்கப் பட்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழு ‘சிறுான்மை’யினருக்கான வரைவிகக்கணமாக பின்வருவனவற்றைச் சொல்கிறது. ” தங்களது இன, மத, மொழி பாரப்பரியங்களை நிலையாகப் பாதுகாக்க விரும்பும் அவற்றைக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தில் உள்ள அதிகாரமற்ற மக்களே சிறுபான்மையினராவர். அல்லது ஏனைய மக்களை விட வித்தியாசமான பண்புகளையும் சிறப்பியல்புகளையும் கொண்ட மக்களாவர் ”. (இவை கூட 1993 க்கு முன்பிருந்த தென்னாபிரிக்க வெள்ளையர்களை உள்ளடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).

 

இதன்படி பார்த்தால்: இலங்கையிலுள்ள இல.தமிழர். மலையக மக்கள், முஸ்லிம் மக்கள், பறங்கியர், சிங்கள கிறிஸ்தவர், உரிமையற்று நசுக்கப்பட்டு வாழும் பெண்கள், ஒழுங்கு படுத்தப்படாத விவசாயிகள் – மீனவர்கள், கூலி வேலை செய்வோர், அடிமட்ட தொழிலாளர்கள்…. என அனைவரையும் இது உள்ளடக்குகிறது.

 

ஆம், இவ் இரு பக்கத் தரகுகளின் எடுபிடிகளுக்கு வெளியே, நாளாந்த சீவியத்துக்காக நசுக்கப்பட்டு ஒடுக்கப்படும் அனைத்து இலங்கை மக்களும், இன்றைய உலக ஒழுங்கமைப்புப் போட்டா போட்டிக்குள் அமிழ்ந்து கிடக்கும் சிறுபான்மை மக்களே! இவர்களின் ஏகாதிபத்திய, பிரந்திய எதிர்ப்புக்குரலை தலைமைதாங்கும் பேராற்றல் மிக்க போராட்டத் தலைமை இலங்கையில் இல்லை! இவற்றை ஒன்றுக் கொன்று எதிராக கால் மிதித்து துவாலம் குத்தி சேற்று அரசியலாக (ஏகாதிபத்திய மற்றும் பிராந்திய வல்லரசு நலன்களுக்காக) சன்னதம் ஆடுகின்றது சமூக அதிகார வர்கம் தான் தேர்தல் காவடியைத் தூக்கி உருவெடுத்து ஆடுகிறது!

 

குடாநாட்டில் 75 வீதத்துக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்கவில்லை. யாழ்.மாவட்டத் தேர்தல் தொகுதி யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கியது. யாழ்ப்பாணத்தில் 6 இலட்சத்து 30 ஆயிரத்து 548 வாக்காளர்கள் உள்ளனர். கிளிநொச்சியில் 90 ஆயிரத்து 811 வாக்காளரும் உள்ளனர். யாழ்ப்பாணத்தில் 72.9 வீத வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப் பட்டுமிருந்தன. கிளிநொச்சியில் 10.82 வீதமான வீத வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப் பட்டுமிருந்தன. யாழ்ப்பாணத்தில் 529 வாக்களிப்பு நிலையங்களும், கிளிநொச்சியில் 95 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டன. இரண்டு மாவட்டங்களிலும் மேலதிகமாக 76 கொத்தணி வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

 

5 ஆயிரத்து 795 தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு, இதில் 4 ஆயிரத்து 737 வாக்களிப்புக்கள் தேர்தலுக்கு முதல் நாளே பெறப்பட்டும் இருந்தன. வன்னிக்கு இடம் பெயர்ந்து யாழ் திரும்பியவர்களுக்காக தெல்லிப்பளை நலன்புரி நிலையமும் யாழ்.மத்திய கல்லூரியும் கைதடி பனை அபிவிருத்தி சபை நலன்புரி நிலையமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெளி மாவட்டங்களில் தங்கியிருந்து தேர்தல் ஆணையகத்துக்கு விண்ணப்பித்த 15 ஆயிரதது 597 வாக்காளர்கள் அவர்கள் இருக்கும் மாவட்டத்தில் வாக்களிக்க ஏற்பாடாகியும் இருந்தது.

 

இந்த நிலையிலேயே குடாநாட்டில் கிட்டத்தட்ட 75 வீதமான மக்கள் தேர்தலைப் புறக்கணித்திருந்தனர். தேர்தல் அன்று உன்மையான தமிழ் கூட்டமைப்பு என்று ஒரு துண்டுப் பிரசுரமும் வெளியிடப்பட்டது (கூட்டமைப்பின் ஆயிரத்தொட்டு முரண்பாடுகளும் இதில் பூந்து விளையாடியுள்ளது) யாழ்ப்பாணத்தில் ஒரு வாக்குச் சாவடியில் மகிந்தாவுக்கு 2 வாக்குக்களும், சாத்துக்கு 8 வாக்குக்களுமாக மொத்தமாக 10 வாக்களிப்பே நடந்துள்ளது. நீண்ட காலமாக புலிகளின் நிர்வாகத்தின் கீழிருந்த தேர்தல் மாவட்டங்களில் கணிசமான வாக்களிப்புகளும், 15 வருடங்களாக அரசின் கீழிருந்த யாழ்.குடாநாட்டில் மிகவும் மந்தமான வாக்களிப்பும் (புறக்கணிப்பும்) நடந்துள்ளது.

 

இங்கு தபால் மூல வாக்களிப்பு காணிசமாக நடந்திருந்தது. சரத்துக்கு கூடுதலான வாக்காக இருந்தபோதும், மகிந்தாவுக்கும் கணிசமான அளவு பங்கிடப்பட்ட நிலையே காணப்பட்டது. தேர்தல் நெருங்கும் போது ஊடகங்களின் நிலை சரத்துக்கு ஆதரவாகும் பலத்தையே பெற்றிருந்தது. இதற்கு ஈ நியூஸ் செய்தியாளரின் நிலை ஒரு திருப்பத்தைக் கொடுத்திருந்தது. வெளி நாடுகளில் தமிழ் மற்றும் சிங்கள ஊடகங்கள் சரத்தை சார்ந்து, அல்லது மறைமுகமாக ஆதரித்து ஒரு கருத்தமைவை ஏற்படுத்தின. (ஓர் அரசியல் மாற்றம் தேவை! – ஓர் ஆள்மாறாட்டம் தேவை -. மறைமுகமாக மேற்குலக அடிமைத்தனம் தேவை ) சிறுபான்மை மக்களின் வாக்குக்கள் தீர்கமான சக்தி என்று பரப்புரை செய்தன. இதற்கு மேற்குலக அழுத்தங்களும் உள்ளுர ‘ஏஜமான் நேசங்களும்’ உந்துதல் ஆகின.

 

மொத்தத்தில் பிராந்திய வல்லரசுகள் இத் தேர்தலில் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. அவர்கள் இராணுவ மற்றும் அரசியல் பலத்துடன் இலங்கையில் தமது கால்களை ஊன்றி இருந்தனர். மகிந்தாவின் மீள் வருகைக்காக அவர்கள் என்ன விலையைக் கொடுக்கவும் தயாராவே இருந்தனர். இது பிராந்திய வல்லரசுகளின் யுகம்! மேற்குலகின் குள்ள வேலைகள் சரத்தின் தோல்வியுடன், இன்றைய இலங்கை இராணுவத்தின் ‘பற்டாலியன்’ – புலிகளை வெற்றி கொண்ட திறன், – அதன் தளபதியான சரத்தை சுற்றிவளைக்கும் தயக்கமற்ற களத்தில் நிறுத்தியும் காட்டியது.

 

முடிவாக ஏகாதிபத்திய மற்றும் பிராந்திய வல்லாதிக்க எதிர்ப்பற்ற (சுயாதிபத்தியம் அற்ற) இலங்கை மக்களை ஏகாதிபத்திய மற்றும் பிராந்திய நலன்களுக்காக சூதாடி இருக்கிறார்கள், இந்த ஓட்டுக் கட்சிக் கூத்தாடிகள். இத் தேர்தல் முடிவுகளை இனப்பிளவாக திரைச் சீலைபோல கிழிக்கவும் முற்படுகின்றனர். மகிந்தாவும், சரத்தும் பெரும்பான்மை இனத்தையும், இனவாதக் கருத்தியலையும் சாந்தவர்களாக இருந்தபோதும், இருவேறு உலகத்துருவத்தின் ஆதிக்கத்துக்காக நடந்த தேர்தல் முடிவுகள், எவ்வாறு சிறுபான்மைப் பிரிவினரின் சொந்த இரத்தமும் சதையுமான பிரச்சனையின் ( இன) முடிவாக இருக்க முடியும்?

 

சிறுபான்மை மக்களான தமிழ், மலையக, முஸ்லிம் மக்களின்…. வாக்குரிமை வெளிப்பாடு, புலிகளுக்குப் பின்னான சிறுபான்மை மக்களின் வாழ்வாதரப் பிரச்சனைகளின் துருத்தாலாகவே வெளிப்பட்டுள்ளது. தமது சமுகத்தின் ஆளும் அதிகார சொந்தக் கட்சிகளின் அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிராகவும் இது அமைந்துள்ளது. (அரசு சர்ர்பு _ எதிப்பு) இவ் முரண்பாட்டின் முன்னிலை குடாநாட்டில் புறக்கணிப்பாகவும் வெளிப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் மிகப் பெரிய சொத்து அந்நாட்டு மக்கள் தான் என்பதை ஏற்றுக் கொள்ளாத, அவர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்காத தரகு சந்தர்ப்ப வாதங்கள் நீண்டகாலங்களுக்கு சொந்த நடைமுறை முரண்பாட்டை அடக்கி ஆளவும் முடியாது. அது தேர்தலிலும் திமிரும், பேராற்றல் மிக்க மக்கள் தலைமை கிடைத்தால் இது மக்கள் புரட்சியாகவும் மாறும்…

 

சுதேகு

310110