முறைகேடாகவே ஒரு தேர்தலை நடத்தி, தாமே அதில் வென்றவர்களாக இந்த அரசு தம்மைத்தாம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையாளரின் "மனச்சாட்சிக்கு விரோதமாக" மோசடியை தமது வெற்றியாக தமது பாசிசம் மூலம் அறிவிக்க வைத்துள்ளது.

இந்த அரசு. தமது வெற்றியை மோசடி செய்ய தெரிவு செய்த இடம், மக்கள் அளித்த வாக்கினை தமக்கு ஏற்ப எண்ணிக்கையில் திருத்தியது தான்.   தேர்தலை  எண்ணுவதையும், அதை அறிவிப்பதையும் தமது சொந்த பாசிசக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அதை மோசடி செய்தனர். இங்கு என்ன நடந்தது என்பது, இன்னும் மர்மமாக உள்ளது. எதிர்க் கட்சியினரும், ஊடகவியலும் இதைச் சுயாதீனமாக சரிபார்க்கும் அனைத்து சுதந்திரத்தையும், தொடர்ந்தும் அரசு பாசிசம் மூலம் ஒடுக்கி வருகின்றது. தேர்தல் வாக்களிப்பை பொதுவாக அமைதியாக நடந்ததாக கூறுகின்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் அறிக்கைகள், வாக்கு எண்ணுதல் மற்றும் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு எப்படி நடந்தது என்பதுபற்றி, இது வரை எதையும் அது முன்வைக்கவில்லை. தேர்தல் ஆணையாளர் முதல் தேர்தல் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மிரட்டப்பட்டு அடிபணிய வைக்கப்பட்டனர். தேர்தல் எண்ணுவதை கண்காணித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விரட்டப்பட்டனர். தேர்தலின் பின் எதிர்க்கட்சியினர், அவர்களின் ஆதரவாளர்கள் திட்டமிட்டு தாக்கப்படுகின்றனர். சொத்துகள் சூறையாடப்படுகின்றது.  

 

இந்தத் தேர்தலை சட்டத்தின் எல்லைக்குள், தேர்தல் ஆணையகம் சுதந்திரமாக நடத்த முடியவில்லை. சட்டவிரோதமான வழிகளில், இந்த அரசே தன் முடிவுக்கு ஏற்ப தேர்தலை நடத்தியது. அரச பாசிசம் தன் துப்பாக்கி முனையில், தேர்தல் சட்டங்களை, அதன் விதிகளை, அதைக் கண்காணித்த அதிகாரிகளை ஒடுக்கியது. தேர்தல் ஆணையாளரின் அதிகாரத்தை மறுத்து, அவர்களை ஓடுக்கி, அவர்களின் மனச்சாட்சிக்கு புறம்பான, தமக்கு ஏற்ற தேர்தல் முடிவுகளை இந்த அரசு பெற்றுக் கொண்டது.

 

இந்தத் தேர்தலை நடத்திய தேர்தல் ஆணையாளர் முன்வைத்த கூற்றைப் பாருங்கள்.

 

"அரசியல்சாசனத்தின் 17 வது திருத்தப் பிரகாரம் தந்த அதிகாரத்தின்படி நான் சில வரையறைகளை அரச ஊடகங்களுக்கு ஏற்படுத்தியிருந்தேன். அவையெல்லாம் உதாசீனப்படுத்தப்பட்டன. அதன் பின்பு அரச ஊடகங்களை வழி நடாத்துவதற்கென்று ஒரு பொறுப்பதிகாரியை நியமித்தேன். அவர் பூரணமாக உதாசீனப் படுத்தப்பட்டார். அரச ஊடகங்களின் தலைவர்களோடு கலந்துரையாடிப் பார்த்தேன். அதனாலும் பலன் ஏதும் ஏற்படவில்லை. ஈற்றில் இது ஓர் அர்த்தமற்ற வேலையென்பதை உணர்ந்து பொறுப்பதிகாரியையும் மீள எடுத்துக் கொண்டேன் .. பல அரச ஸ்தாபனங்கள் அரச ஸ்தாபனங்கள்போல் தேர்தற்காலத்தில் நடக்கவில்லை என்பதைக் கண்டுகொண்டேன்…

எனது வேலை வாக்குப்பெட்டிகளைப் பாதுகாப்பதும் தேர்தல் வாக்குச்சீட்டுகளைச் சரியாக எண்ணுவதுமேயொழிய வேறுவிடயங்களில் தலையிடக் கூடாது என்று எனக்குப் பலர் சொன்னார்கள். நான் இன்று முகங்கொடுக்கும் சூழலானது என்னால் வாக்குப் பெட்டிகளைக் கூடப் பாதுகாக்க முடியாததாகும். எனது வேலையை பெரிய நிர்ப்பந்தத்தின் மத்தியிலும் மனஅழுத்தத்தின் மத்தியிலுமே செய்தேன். .. சூழலும் ஆபத்தும் எனது சக்திக்கு அப்பாலேயே சென்றிருந்தது. எனக்கு வயதும் அதிகமாகி விட்டது. இந்த வயதான காலத்தில் தொடர்ந்து 8 வருடங்கள் சேவையாற்றி விட்டேன். ஆதலால் நன்றிகிடைக்காத இந்த வேலையிலிருந்து என்னை விடுவிக்கும்படி கேட்கிறேன்….

இப்படியான சூழலில் நிம்மதியாக வேலை செய்ய முடியாது. நான் தொடர்ந்து அழுத்தப்பட்டேன். நான் நோய்வாய்ப்படுவேன்போல் உணர்ந்தேன். அப்படியான நோய்களை அதன் பின்விளைவுகளை எதிர்பார்த்திருந்தேன்… பிரதேசத் தலைவர்கள் எனது பணியாளர்களை ஒடுக்கினார்கள். புத்தளம், அனுராதபுரம், மாத்தளை மாவட்டங்களில் வாக்கு எண்ணுமிடங்களை கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. இது ஒரு நல்ல போக்கல்ல. அது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வளர்ந்து வாக்குச்சாவடித் தலைமைப் பொறுப்பாளர்களையும் உதவித்தேர்தல் ஆணையாளர்களையும் திட்டித்தீர்க்கும் மட்டத்திற்குச் சென்றிருந்தது….

என்னுடைய கடமையைச் செய்யும்பொழுது ஒரு கட்சியினருக்கு ஒரவஞ்சகமாக நான் நடப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டேன். இப்படியான மரியாதைக் கேட்டையும் வேதனையையும் என்னால் தொடர்ந்து தாங்கிக் கொள்ள முடியாது. எனது உடல் வலிமையும் உள வலிமையும் அதற்கு இடம் தரமறுக்கிறது. … தனது மனச்சாட்சி ஏற்காத விதத்திலேயே மிகுந்த நிர்ப்பந்தத்தின் மத்தியிலேயே தான் தேர்தல் முடிவை அறிவித்தேன்…." (நன்றி இலங்கைநெற்)

 

மகிந்த வென்ற தேர்தல் முடிவுகள் எப்படி பெறப்பட்டது என்பதை, தேர்தலை நடத்தியவர் மிகத் தெளிவாக நாசூக்காக கூறியுள்ளார். இதை அவர் மீறினால் மரணம், தேசத் துரோகி பட்டத்தை இந்த அரசு வழங்கும். இதை இன்று தாமல்லாத அனைவருக்கும்  வழங்குகின்றது.

 

தேர்தல் ஆணையாளர் மிகத்தெளிவாக கூறுகின்றார் "சூழலும் ஆபத்தும் எனது சக்திக்கு அப்பாலேயே சென்றிருந்தது" என்கின்றார். உயிருக்கு அஞ்சி ஒரு முடிவை அறிவிக்கின்றார். பல "ஜனநாயக" பக்தர்கள் இதைத்தான் ஜனநாயகம் என்றும், வென்றவர்கள் என்றும் வக்கரித்து பாசிசத்தை தொழுது மற்றவன் முகத்தி அதைக் காறி உமிழுகின்றனர்.

 

தேர்தல் ஆணையாளர் சொல்லுகின்றார் "என்னால் வாக்குப் பெட்டிகளைக் கூடப் பாதுகாக்க முடியாது" போனது என்கின்றார். ஆகவே இங்கு வாக்கு அளிப்பு என்பது கண்துடைப்பு நாடகம். மக்களை வாக்கின் பின் ஏமாற்றிய மோசடிகள். மக்கள் வாக்கு போட்டு, வாக்குப் பெட்டிகளில் உள்ளவை அல்ல வெளிவந்த முடிவுகள் என்பது மிகத் தெளிவானது. இப்படி இருக்க "தனது மனச்சாட்சி ஏற்காத விதத்திலேயே மிகுந்த நிர்ப்பந்தத்தின் மத்தியிலேயே தான் தேர்தல் முடிவை அறிவித்தேன்…." என்கின்றார் அவர். பாசிட்டுகள் இதுதான் தேர்தல் முடிவு என்று சொன்னதை, "மனச்சாட்சி ஏற்காத விதத்திலேயே மிகுந்த நிர்ப்பந்தத்தின் மத்தியில்" தேர்தல் முடிவாக அறிவித்துள்ளார்.

 

இப்படி இந்தத் தேர்தல் முடிவு மோசடியானது. தேர்தல் ஆணையாளர் தன் மனச்சாட்சிக்கு விரோதமாக அறிவித்ததாக கூறும் முடிவு, துப்பாக்கி முனையில் பெறப்பட்டது. "சூழலும் ஆபத்தும் எனது சக்திக்கு அப்பாலேயே சென்றிருந்தது" என்று கூறுகின்ற தேர்தல் ஆணையாளரின், மனச்சாட்சியில் இருந்த நேர்மை அனைத்தும் புறக்கணிக்கப்பட்டு, எம்மைச் சுற்றிய பாசிச சித்தாந்தம் இதை நியாயப்படுத்துகின்றது.   

 

இது பலவிதமாக திரிக்கின்றது. சரத் பொன்சேகா இந்த நிர்ப்பந்தத்தை செய்ததாகக் கூட திரிக்கின்றது. சரத் பொன்சேகா வென்று இருந்தால், இந்த அரசு இன்று செய்வதையே செய்து இருக்கும் என்று கூறி, மகிந்தா பாசிசத்துக்கு நியாயவாதம் பேசுகின்றது. இப்படி பற்பல.

 

இந்த நாட்டில் புலிப் பாசிசம் மட்டும் இருந்திருக்கவில்லை. அரச பாசிசமும் இருந்தது. அதைப்பற்றி பேசாதவர்கள், இன்று அரச பாசிசத்தை நியாயப்படுத்துகின்ற எல்லைக்குள், பாசிச சித்தாந்தம் குதர்க்கமான எதிர் நிலை தர்க்கத்தை கட்டமைக்கின்றது. இதைத்தான் முன்பு புலிசெய்தது.

 

தேர்தல் ஆணையாளர் மனச்சாட்சியுடன் போராடிய விடையத்தை, அவர் தன் உயிர் அச்சுறுத்தலுக்குள் நின்று சொன்ன விடையத்தை, இன்று தங்கள் மனச்சாட்சியுடன் எத்தனையோ பேர் சிந்தித்துப் பார்த்தனர், பார்க்கின்றனர். மாறாக இதைப் புறக்கணித்து பாசிசத்தை கக்கியபடி, பாசிசப் பிரச்சாரத்தை முன்வைக்கின்றனர். அதைத் தூக்கி வைத்து விவாதிப்பதையும், இடைச்செருகல் போட்டு நியாயப்படுத்துவதையும் நாம் காண்கின்றோம். புலியெதிர்ப்பு இணையங்கள், இந்தப் பாசிச நஞ்சை சமூகத்தின் மேல் பீச்சியடிக்கின்றது.

 

தேர்தல் ஆணையாளர் மனச்சாட்சியுடன் சொன்ன "என்னால் வாக்குப் பெட்டிகளைக் கூடப் பாதுகாக்க முடியாது" என்ற விடையத்தை, எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் வெளிக்கொண்டு வருவதை தடுக்க, அதன் மேல் தன் பாசிசத்தை தொடர்ச்சியாக ஏவிவிட்டுள்ளது.

 

வாக்கு எண்ணப்பட்ட நாளில், அவர்களின் சுதந்திரமான செயற்பாட்டை இராணுவம் மூலம் கட்டுப்படுத்தி தமக்கு ஏற்ற முடிவை அறிவித்தவர்கள் பாசிட்டுகள். இது எப்படி எந்த வகையில் கையாளப்பட்டது என்பதை, மக்கள் முன் கொண்டு செல்வதைத் தடுக்க அவர்கள் மேல் ஒரு தொடர் தாக்குதலை இன்று தொடுத்துள்ளது.

            

தம்  பாசிசத்தை நியாயப்படுத்தி அதை சரி என்று சொல்லும் அரசியல் மற்றும்  ஊடகவியலை மட்டும் இந்த அரசு "சுதந்திரமாக" இயங்க அனுமதிக்கின்றது. இதற்காக இலங்கை தளுவிய ஒரு வன்முறை மூலம், தன்னை நிறுவி வருகின்றது.

 

வரும் பாராளுமன்ற தேர்தலில் இதே மோசடி மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவது என்பது, இன்று முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. இன்றைய ஜனாதிபதித் தேர்தலில் மோசடிகள் மூலம் பெற்ற முடிவின்படி, மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஒருநாளும் பெறமுடியாது. பாராளுமன்ற தேர்தல் முடிவு என்பது, முன் கூட்டிய மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறும் வண்ணம் மோசடி செய்யப்பட்டு வெல்லப்படும். இதைத்தான் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று வெல்;வோம் என்று, பாசிசத்தை பிரச்சாரம் செய்யும் மகிந்தா பீரங்கிகள் இன்றே கூறத் தொடங்கிவிட்டனர்.

 

இலங்கை என்றுமில்லாத வண்ணம் பாசிசமயமாகின்றது. இது, தான் அல்லாத எதையும் இனி இலங்கையில் அனுமதிக்கப் போவதில்லை. ஒரு இராணுவ ஆட்சியை, ஒரு போலியான தேர்தல் வடிவங்கள் மூலம் மோசடி செய்து நிறுவி வருகின்றது. கொலைகார குற்றக் கும்பல், இதைத் தலைமை தாங்குகின்றது. தம் அதிகாரத்தை கேள்விக்குள்ளாகும் எதையும், அது உயிருடன் விட்டுவைக்காது. இன்று இலங்கையில் எதார்த்தம் இதுதான்.

 

இன்று இதை இலங்கையில் இருந்து, யாரும் சுதந்திரமாக எழுத முடியாது. இதை யாரும் பிரச்சாரமும் செய்ய முடியாது. தலைமறைவான புரட்சிகர வடிவங்களும், பிரச்சாரங்களும் இன்றி எதையும் மக்களுடன் இன்று சுதந்திரமாக உரையாட முடியாது.  போலி "ஜனநாயக" வடிவங்கள் மூலம், சுதந்திரமாக மக்களிடம் செல்லவோ செயல்படவோ முடியாது. புரட்சிகர சக்திகள் இந்த நிலைமையை மிக உன்னிப்பாக புரிந்து செயல்படுவது, இன்று மிக அவசியமான அரசியல் முன் நிபந்தனையாகும்.

 

பி.இரயாகரன்
30.01.2010